த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 9

நாராயணன், ஸர்வ நியந்தா

பகவத் ராமாநுஜர்  சேதனா சேதனங்கள் அனைத்தையும் உள்நின்று நியமிப்பவனான பரம்பொருளாகத் திருவரங்கம் பெரிய பெருமாளைக் கண்டார்.

எம்பெருமானாரின் ஸ்ரீரங்க கத்யம், “ஸ்வாதீநத்ரிவித சேதனா சேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்” என்று தொடங்குகிறது. நாராயணனே ஸகல ஆத்மாக்கள்(சேதனர்) மற்றும் பொருள்கள் (அசேதனம்) யாவற்றையும் நியமிப்பவன்

எம்பெருமானின் இருப்பினாலேயே ஆத்மாக்கள் ஆத்மாக்களாகவும், இவ்வுலகம் உலகமாகவும் உள்ளது. அவற்றின் இருப்பும் இயற்கையும் (ஸ்வரூபம்) அவனிட்ட வழக்காயுள்ளன. அவனது ரக்ஷணத்தாலேயே இந்த ஜகத்தும் ஆத்மாக்களும் தம் ஸ்திதி(இருப்பு)யினைப் பெற்று தற்போதுள்ள உருவில் திகழ்கின்றன. இந்த பிரவ்ருத்தி நிவ்ருத்திகளாகிற செயல்பாடுகளும் அவனது திருவுள்ளக் கருத்துக்கொப்பவே நடைபெறுகின்றன.  இந்த உலகம் மற்றும் மாந்தர் இருப்பும், அவற்றின் செயல்பாடுகள் யாவும் அவனாலேயே ஆளப்படுகின்றன.

இக்கருத்து வேதங்களிலும், குறிப்பாக உபநிஷதங்களிலும் , முனிவர்களின் நூல்களிலும் பல இடங்களிலும் காட்டப்பட்டுள்ளன. ஸ்வாமியின் இக்கருத்து பல்வேறிடங்களிலும்  காணப்பட்டாலும், அவரது திருவாக்கிற்போல இவ்விஷயம் வேறெங்கும் காணப்பட முடியாது.

ஸகல சேதன அசேதனங்களின் இருப்பு, இயற்கை, செயல்பாடு (ஸ்வரூப, ஸ்திதி, ப்ரவ்ருத்தி) யாவும் அவன் ஸங்கல்பமே என்பது ஸ்வாமி காட்டியருளிய அதே க்ரமத்தில் திருவாய்மொழியில் காணப்படுகிறது.

இந்தப்ரகரணத்துக்குச் சேரும் திருவாய்மொழிப் பகுதி முதல் பத்தின் முதல் பதிகம் (முதல் திருவாய்மொழி) ஆகும்.
ஸ்வரூபம் (இயற்கை)

நாலாம் பாசுரம்

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவையுவை அவை நலம் தீங்கவை
ஆம் அவை ஆய் அவை ஆய் நின்ற அவரே

இவ்வண்டத்தில்  நான்,அவன்,அவள்,அது,அவர்கள்,இவை,அவை, என நாமறிந்த பொருள்களும் நபர்களும் பெற்ற இருப்பும் இயல்பும் எம்பெருமான் தந்தனவே.

திருக்குருகைப் பிரான் பிள்ளான் இதை,”விவித நிர்தேசங்களாலே நிர்திஷ்யமான ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் பகவத் அதீனம் என்று சொல்லுகிறது” என்று இதை விளக்கியருளுகிறார். இதனால் நாமறிந்த ஸமஸ்த விஷயங்களும் அவன் ஸங்கல்பத்துக்குட்பட்டனவே என்பது பல இடங்களிலும் காட்டப்பட்டதாகிறது.

ஸ்திதி (இருப்பு)

ஐந்தாம் பாசுரம்

அவரவர் தமதமது அறிவறிவறி வகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே

ஒவ்வொருவரும் மெய்ப்பொருளைத் தத்தம் உணர்வுக்குத் தக்கவாறு உண்மையை அறிந்து வெவ்வேறு புருஷார்த்தங்களை அடைய வெவேறு தெய்வங்களை வணங்குகிறார்கள். அவர்கள் தத்தம் கர்மங்களுக்குத் தக்கவாறு அவசியம் அப்பளங்களைப் பெற்றே தீர்வர். என் எனில் அவ்வொவ்வொரு  தெய்வத்தினுள்ளும் நாராயணனே அந்தர்யாமியாய் இருந்து அவர்களின் உபாஸனைக்குரிய பலனைத் தருகிறான். அவன் அவர்கள் வழிபடும் அவ்வவ தெய்வத்தின் மூலமாக அப்பலனைத்தருகிறான்.

பிள்ளான், “ஸர்வ கர்ம ஸமாராத்யனாய் ஸகல பலப்ரதனாயிருக்கையாலே ஜகத்ரக்ஷணமும் தததீனம் என்கிறது” என்று அருளிச் செய்கிறார். எல்லாக் கருமங்களாலும் அவனே வழிபடப் படுவதாலும்,  அவனே எல்லாப் பலன்களையும் தருவதாலும் ஜகத் ரக்ஷணமும் அவன் திவ்ய ஸங்கல்பத்தாலேயே அமைகிறது.

ப்ரவ்ருத்தி

ஆறாம் பாசுரம்

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நினைவரியவ்ர்
என்றும் ஓர் இயல்வொடு நின்றவெம் திடரே,

வேத வேதாந்தங்களால் உணர்த்தப்படும் எம்பெருமான் மனம், உணர்வுகளைக் கடந்துள்ளான்.அவனே அனைத்துக் கருமங்களையும் கருமமற்ற நிலையாயும் உள்ளான்.

பிள்ளான் இப்பாசுரத்தை, “சேதனா சேதனாத்மக ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸமஸ்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் பரமபுருஷ ஸங்கல்பாதீனம் என்று சொல்லுகிறது” என விளக்குகிறார். உயிருள்ள, உயிரற்ற அனைத்து சேதன அசேதனங்களினுடையவும்  செயல்பாடு அல்லது செயலற்ற தன்மை ஈஸ்வரனின் சங்கல்பமே என்பதே விஷயம்.

இம்மூன்று பாசுரங்களும் சேதன அசேதனங்கள் அனைத்தின் இயல்பு, இருப்பு, செயல்பாடுகள் யாவும் நாராயணனின் சங்கல்பத்தாலே எனும் இராமானுசரின் கோட்பாட்டின் அடித்தளம் மட்டுமன்று, அதை அவர் விளக்கும் வரிசைக்கிரமத்திலும் ஆழ்வார் திருவுள்ளக் கருத்தே வெளிப்படுகிறது என்பது தெளிவு.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/02/08/dramidopanishat-prabhava-sarvasvam-10/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s