Monthly Archives: April 2018

வேதார்த்த ஸங்க்ரஹம் 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

பகுதி 4

வேதங்களின் உட்பொருள் அறிதல்

மாறுபட்ட விளக்கங்கள்

வேதாந்தத்தின் உட்பொருளைச் சுருக்கமாக விளக்கியபின், ஸ்வாமி க்ரந்தத்தின் மீதியை இரு பகுதிகளாகப் பிரிக்கிறார்: (1) பிற விளக்கங்களை ஆய்வது (2) தம் கருத்தை எடுத்துரைப்பது.

6 முதல் 8 வரையுள்ள பத்திகள் பிற கோட்பாடுகளை சுருக்கமாகக் கூறி அவற்றிலுள்ள முரண்பாடுகளைக் காட்டுகின்றன,

பத்தி 6

1.முதலில் ஸ்ரீ சங்கரர் உள்பட வேறுபல அத்வைதிகளின் ஸித்தாந்தங்கள் கூறப்படுகின்றன,

2.இக்கோட்பாடுடையவர்கள், மேலுக்கு சப்பைக்கட்டாகச் சில கூறி ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்கும் வேறுபாடுகள் பேசும் வாக்யங்களை முற்றாக விட்டு, ஒற்றுமை கூறும் ஸாமாநாதிகரண்ய ச்ருதிகளை மட்டும் தங்களுக்கு ஆதரவாக காட்டுகிறார்கள்.   

3.அவர்களுடைய முடிவுகள் இவ்வாறுள்ளன:

 1. ப்ரஹ்மம் வெறும்  ஞானமே. ப்ரஹ்மத்துக்கு குணங்கள் கிடையாது.
 2. ப்ரஹ்மம் எக்காலத்தும் விடுதலை பெற்றிருக்கும், பிறிதொன்றைச் சாராமல் தானே தோன்றக்கூடியது (ஸ்வயம் ப்ரகாசம்). ஆகிலும், தத்த்வமஸி போன்ற வாக்யங்களால் ப்ரஹ்மம் என்பது ஆத்மாவே (ஜீவாத்மா) என  உணர வேண்டும்.
 3. வேறு ஒரு வஸ்து இல்லாததால், அஞ்ஞானம், பந்தம், மோக்ஷம் யாவுமே இந்த ப்ரஹ்மத்தையே சாரும்.
 4. சுத்த ஞான ஸ்வரூபமான ப்ரஹ்மம் மட்டுமே ஸத்யம். பிற யாவும் – ஆள்பவன் ஆளப்படுபவன் என உள்ள வேறுபாடுகள் – பொய்.  
 5. சில ஆத்மாக்கள் மோக்ஷமடைகின்றன, சில பந்தப்பட்டுள்ளன என்கிற அமைப்பு ஏற்கத்தக்கதன்று.
 6. சில ஆத்மாக்கள் ஏற்கெனவே மோக்ஷமடைந்து விட்டன என்பது தவறு.
 7. ஒரே ஒரு சரீரத்துக்கு மட்டுமே ஆத்மா உண்டு  ஆனால் அது எந்த சரீரத்தில் உள்ளது என்பது எவருக்கும் தெரியாது.
 8. வேத தாத்பர்யம் போதிக்கும் ஆசார்யர் மாயை, வேத அதிகாரி மாயை, வேதம் மாயை. வேதத்தால் அறியப்படும் வஸ்து மாயை.
 9. மாயையாகிய வேதத்தை அறிந்தால் இவ்விஷயம் புலப்படும்.

கருத்துரை

அத்வைதிகள் ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாவுக்கும் ஐக்கியம் பேசும் வாக்யங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். வேதாந்தம் முதலில் வேற்றுமையை உபதேசித்து விட்டு மறுப்பதாக கொள்கிறார்கள்.  ஆனால் ஏற்கெனவே அனுபவத்தால் நமக்குத் தெரிந்துள்ள வேறுபாட்டை மறுபடியும் கூறி மறுக்க வேண்டிய நிர்பந்தம் வேதாந்தத்துக்கில்லை. நேர்பட மறுத்திருக்கலாம், அவ்வாறு மறுக்கவில்லை.

ப்ரஹ்மத்துக்கு குணங்கள், இயல்புகள் இல்லை, அது வெறும் உணர்வு மட்டுமே என அத்வைதிகள் நினைக்கிறார்கள். வேதாந்தம் ப்ரஹ்மத்தை ஸகுணமாகவும் நிர்குணமாகவும் பிரித்து அறிந்து கொள்ளக் கற்பிக்கவில்லை. மேலும் இவர்கள் சொல்லும் வெறும் உணர்வு ரூபமாக அது ப்ரஹ்மத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

குணமற்ற ப்ரஹ்மத்தை எல்லா உறவுகளுக்கும் வெளியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். அது எப்போதும் ஸ்வதந்த்ரமாகவும், ஸ்வயம் ப்ரகாசமாயும் உள்ளது. ஒரு ஆத்மாவின் முற்றிலும் அப்பழுக்கற்ற நிலையே ப்ரஹ்மம். ப்ரஹ்மம் தவிர வேறில்லாததால், பந்தம் மோக்ஷம் என்பன எல்லாவற்றையுமே அந்த ப்ரஹ்மம் ஒன்றே அநுபவிக்கிறது. ப்ரஹ்மம் தவிர வேறொன்றில்லாததால் ஒரு ஆத்மா கட்டுண்டுள்ளது, மற்றொன்று மோக்ஷம் அடைந்துள்ளது, அல்லது சில பெருமுனிவர்கள் மோக்ஷம் பெற்றனர் என்றெல்லாம் சொல்ல முடியாது. அத்வைத ப்ரஹ்மத்துக்கு குணங்கள் இல்லை, மோக்ஷ தசையில் அது ஒன்றைத்  தவிர வேறில்லை என்பதால் எவருக்கும் மோக்ஷம் இல்லை. அல்லது ப்ரஹ்மமே ஏதோ ஒரு வடிவில் கட்டுண்டிருந்தது, பிறகு மோக்ஷமடைந்தது எனல் ஆகும். ப்ரஹ்மத்தை நாம் நோக்கும் கோணத்தைப் பொறுத்தது இது.

மோக்ஷத்துக்கு வழியும் மாயையே

ப்ரபஞ்சம் முழுதும் மாயை. எனவே உண்மையில் வேறுபாடுகளில்லை, கற்கும் மாணவன் மாயை, வேதமும் அதன் பொருளும் மாயை, கேட்பவன் கேள்வி ஞானம் மாயை, கற்பிப்பது கேட்பது கல்வியின் கருத்து யாவும் மாயை, அத்வைதம் உணர்ந்த ஆசார்யருக்குக் கற்பிக்க ஏதுமில்லை ஏனெனில் அவருடைய ஆத்மாவைத் தவிர வேறில்லையே! வேறுபாட்டைத் தவிர்க்க எல்லாக் கர்மங்களிலிருந்தும் ஸந்யஸித்தவர், இனி வாழ்நாள் முழுதும் குரு சிஷ்யன் எனும் த்வைதத்தையே (வேறுபாட்டையே) நினைத்து  இருக்கவேண்டும்!

ஒருமையில் இறங்குதல்

அத்வைதத்தை முறையாகக் கற்றபின், தனது அனுபவத்துக்கு வெளிப்படும் எல்லா சேதன அசேதன பொருட்களும் மாயை எனும் நிலையில் வாழவேண்டும். அப்போது தன்னுடைய சரீரம் மட்டுமே உணர்வோடுள்ளதாயும் பிற யாவும் உணர்வற்றன என்றும் தோன்றும். ஒவ்வொரு அத்வைத சீடர்க்கும் இதே நிலை என்பதால் ஒருவருக்கும் தம்மைத் தவிர பிறர்க்கு உணர்வுண்டு எனத்தோன்றாது.  எனக்கு நீ மாயை, உனக்கு நான் மாயை என்கிற வேடிக்கையான நிலைதான்.

பலபடிப்பட்ட ஸத்யத்தின் முரண்

இக்கால அத்வைதிகள் இம்முரண்பாட்டை ஒருவாறாக நிர்வஹிக்க எண்ணி, ஸத்யத்தை ‘வ்யாவஹாரிகம்’, ‘பாரமார்த்திகம்’  என்று இரு நிலைகளில் எப்போதும் வழங்குகிறார்கள். இது வெறும் சொல் விளையாட்டே. குணங்கள் ஏதும் இல்லாத வஸ்து  ஸத்யமாகக் கூட இருக்க முடியாது. ஸத்யம் என்பதே அனுபவத்தால் உணரப்படும் ஒரு பண்பு தான். அது ஸத்யம்-பொய் என்கிற இரட்டையைச் சேர்ந்தது தானே! குணங்கள், வேறுபாடுகள், இரட்டைகள் – இவற்றைக் கடந்த தத்துவம் ஸத்யத்தையும் கடந்து ஸத்யமாகக்  கூட விளங்க முடியாது.

ஸத்யத்தின் நிலைகள் எவ்வாறு தாங்கப்படுகின்றன? வ்யாவஹாரிக நிலையில் தான் தாங்கப்படுகின்றனவாயின், அந்த நிலையைப் பொய்யென்னும் போது ப்ரஹ்மமும் பொய் என்று வழங்க வேண்டி வரும். பாரமார்த்திக நிலையிலும் பொருந்தாது; அங்கு தான் வேறுபாடுகளே இல்லையே! அப்போது, இவ்விரு சாத்தியங்களைத் தாங்க வேறொரு ஸத்யம் தேவைப்படுகிறது.  இது முரண்.

இதே போல், அறிவு என்பதும் அறிவு-அறியாமை என்னும் இரட்டையைச் சார்ந்ததே. எல்லையின்மையும் எல்லையுடைமை-எல்லையின்மை என்னும் இரட்டையைச் சார்ந்தது. எல்லா வேறுபாடுகளையும் கடந்த தத்துவம் அறிவாகவும் எல்லையற்றதாகவும் இருக்க முடியாது. அத்வைதிகள் குணங்களை மறுத்து விட்டு, ஒரு சில வேறுபாடுகளை மட்டும் இசைகிறார்கள். இதுவும் முரண். அறிவில்லாத பொருளல்லாதது அறிவுள்ள பொருள் தான். எல்லைப்படும் பொருளல்லாதது, எல்லையில்லாதது தான்.  ஒன்றை இல்லை செய்வதால், இரட்டையின் மற்றொன்றே நிலைநிறுத்தப் படுகிறது. குணமில்லாத ப்ரஹ்மம் யார் அறிவுக்கும் எட்டாத ஒரு கற்பனைப்பொருள் ஆகிறது. அத்வைத ப்ரஹ்மமே மிகப்பெரிய மாயை.

பத்தி 7

 1. பாஸ்கரரின் பேதாபேதம் சுருக்கமாகச் சொல்லப் படுகிறது.
 2. ப்ரஹ்மம் குறைகளற்றதாய்ச் சொல்லபட்டாலும், ஆத்மாவோடு ஒற்றுமை ‘தத்வமஸி’ போன்ற வாக்கியங்கள் சொல்வதால், ப்ரஹ்மமே சில காரணங்களால் ஆத்மாவாக மாறி மாற்றமும் துன்பமும் அடைகிறது. அதனால் பந்த மோக்ஷங்களுக்கு ஆளாகிறது.

கருத்துரை

அத்வைத மாயை ஸித்தாந்தத்தில் உள்ள முரண்களை பாஸ்கரர் நன்குணர்ந்திருந்தார். ஆகையால் உண்மையான காரணங்களால் ப்ரஹ்மத்தின் மாறுதலை விளக்கினார். இவர் கொள்கையில் மாயையால் வரும் குறைகள் இல்லையே ஆகிலும், ப்ரஹ்மத்துக்கு தோஷங்களை நிரூபிக்கும் குறை  உண்டு.

பத்தி 8

 1. யாதவப்ரகாசர் மதம் விவரிக்கப்படுகிறது,
 2. இவரும் மேற்சொன்ன பிறரைப்போல் ஐக்கியம் பேசும் சொற்களால் மயங்குகிறார்.  இவர் கொள்கையில், ப்ரஹ்மம் உயர்பண்புகளுடையது ஆகிலும், ஆத்மாவாகி தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரமாகி ஸ்வர்க்க நரகாதிகளை அநுபவித்து பின் மோக்ஷமடைவதாகச் சொல்லப் படுகிறது.
 3. ப்ரஹ்மத்தின் ஸ்வபாவமே மற்றத்தினின்றும் வேறுபட்டும்,  ஒருபடிப்பட்டும் இருப்பதாகும்.
 4. ப்ரஹ்மம் ஆகாசம் போன்றவற்றுக்குத் தக்க விகாரம் அடையும்.

கருத்துரை

பாஸ்கரரின் மதத்தில் ப்ரஹ்மம் சில காரணிகளால் பாதிக்கப் படுகிறது. இவை ப்ரஹ்மத்துக்குப் புறம்பானவையா? அல்லது உட்பட்டவையா? என்னும் கேள்வி பிறக்கிறது. புறம்பானவை என்றே கொள்ள வேண்டும். ஆயின், ப்ரஹ்மத்தைக்காட்டிலும் வேறுபட்ட, அதைவிட உயர்வான தத்துவம் உண்டு என்றாகி விடுகிறது. இக்குறையைக் களைய  யாதவப்பிரகாசர், ப்ரஹ்மம் தன் ஸ்வபாவத்தாலேயே மாறுதலுறுகிறது, வெளிக்காரணிகளால் அல்ல என்று கூறுகிறார்.

அத்வைதக் கொள்கை முதல் யாதவப்பிரகாசர் கொள்கை வரை சிந்தனையின் ஒரு விதமான போக்கு உணரமுடிகிறது. ப்ரஹ்மத்தைக் குறைகளினின்றும் காப்பாற்ற அத்வைதிகள் மாயையைப் பயன்  படுத்துகிறார்கள். ஆனால் இது பல முரண்பாடுகளுக்கு இடமளிக்கிறது. பாஸ்கரர் முரணில்லாத கொள்கை வகுக்க, ப்ரஹ்மத்துக்கு வெளியில் சில காரணங்களைக் கொள்கிறார். இதனால், உண்மையில் ப்ரஹ்மம் சிறிது மாசுபடுகிறது. யாதவபிரகாசர் பாஸ்கரரின் கொள்கையில் உள்ள சில முரண்பாடுகளைக் களைய  அக்காரணங்களும் ப்ரஹ்மத்தின் ஸ்வபாவத்திலேயே இருப்பதாகக் கல்பித்து, ப்ரஹ்மத்தைக் குறைகளுக்கு இருப்பிடமாகவே மாற்றி விடுகிறார்! முரண் பிறவாமல் கொள்கை வகுத்தலும், வேதாந்தங்களுக்கு இசைந்த ப்ரஹ்மத்தின் பெருமை உரைத்தலும் மிகக்கடினமான காரியங்களாக தோன்றுகின்றன.

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/03/04/vedartha-sangraham-5/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வேதார்த்த ஸங்க்ரஹம் 4

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

பகுதி 3

 

வேதங்களின் உட்பொருள் அறிதல்

ஆத்மா, பரமாத்மாவின் உண்மை இயல்பு

வேதங்களின் தாத்பர்யம் இன்னதென எடுத்தியம்பியாயிற்றெனக் கூறியபின், பகவத் ராமாநுஜர் அடுத்த இரு பத்திகளில் ஆத்மா, பரமாத்மாக்களின் உண்மை இயல்பைக் கூறுகிறார்,

நான்காம் பத்தி

 1. ஒரு தனி ஆத்மா, தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள் என்னும் பிரகிருதியின் வெவ்வேறு பரிணாமங்களின் வெவ்வேறு மாறுபாடுகளைப் பெற்றிருப்பதில்லை,
 2. தனி ஆத்மாவானது ஞானம், ஆநந்தம் எனும் இரு குணங்களை  மட்டுமே பெற்றுத் திகழ்கிறது.
 3. சரீரத்தாலாகும் பேதங்கள் அழிந்தபின், ஓர் ஆத்மாவுக்கும் மற்றொரு ஆத்மாவுக்கும் உள்ள வேறுபாடு சொல்லால் விளக்கமுடியாது, அந்தந்த ஆத்மாவின் ஸ்வாநுபவத்தாலேயே வேறுபாடு அறிய முடியும்.
 4. ஞானம் அல்லது உணர்வு என்பதே எல்லா ஆத்மாக்களுக்கும் அடிப்படை. இது எல்லா ஆத்மாக்களுக்கும் ஸமமானதே,

ஆசார்யர், ஆத்மா உடலினின்றும் வேறுபட்டது அதைவிட மேலானது என்கிறார். உடலையும் மற்றப் பொருள்களையும் செய்யும் பொருளால் ஆனதன்று ஆத்மா என்பதால் அதைப்போல் எப்போதும் மாற்றமும் சிதைவும் அடையாதது. உணர்வே ஆத்மாவின் அடிப்படை, உணர்வும் ஆனந்தமுமே அதன் இயல்புகள். இந்த அடிப்படை ஞானம்/உணர்வு எல்லா ஆத்மாக்களுக்கும் ஸமமானது. பந்தம் இந்த ஞான உணர்வை சுருக்கம் அல்லது விரிவு அடையச் செய்கிறது. இதனால் ஒரு தாற்காலிக மாறுபாடு எழுகிறது. சரீரத்தாலுண்டான வேறுபாடுகள் அழிந்தபின் ஒன்றனுக்கும் மற்றதனுக்கும் ஒரு வேறுபாடும் சொல்ல முடியாது. அவை யாவும் ஒரே மாதிரியான ஆத்மாக்களே, அவரவர் தத்தம் அனுபவத்தாலேயே தம்மை உணரமுடியும்.

இந்த விவரணத்தால் சரீரமே நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆத்மா எனும் நாஸ்திக வாதம் மறுக்கப்பட்டது. அடிப்படை ஞானம்/உணர்வு (ஸ்வருப/தர்மி ஞானம்), குணம் சார்ந்த உணர்வு/ஞானம் (தர்மபூத ஞானம்) இவற்றின் வேறுபாடு விளக்கப்படுவதால் ஆத்மா குணங்களற்ற ஞானம் மட்டுமே எனும் அத்வைதக் கோட்பாடு மறுக்கப்பட்டது, ஆத்மாக்களில் அவற்றை வேறுபடுத்தும் அடிப்படை குணங்களுண்டென்பதும் மறுக்கப்பட்டது.   

ஐந்தாம் பத்தி

 1. இவ்வண்டம் உணர்வுள்ள ஆத்மாக்கள், உணர்வற்ற பிரகிருதி இரண்டாலும் உருவாகியுள்ளது.
 2. பகவான் அந்தர்யாமியாய் ஒவ்வொன்றினுள்ளும் உறைந்து நியமித்து நடத்துகிறான்.
 3. பகவான் ஒருவனே அனைத்தையும் ஸ்ருஷ்டித்து, ரக்ஷித்து, லயம் அடைவித்து பந்தங்களிலிருந்து மோக்ஷம் தருகிறான்.
 4. இறைவன் அளப்பரிய மங்கள குணங்களுடையவன், குறைகளுக்கு எதிர்த்தட்டானவன்,
 5. இறைவனின் உண்மை இயல்பு தனித்வம் வாய்ந்தது, எத்தொடும் ஒப்பிடமுடியாதது.
 6. அவன் எண்ணற்ற மிக உயர்ந்த மங்கள குணங்களை உடையவன்.
 7. வேதாந்தத்தில் அவன் ஸர்வாத்மா, பரம்ப்ரஹ்ம, பரம் ஜ்யோதி, பர தத்வம், பரமாத்மா, ஸத் எனப்படுகிறான்.  
 8. அவனே எல்லார்க்கும் மேலான பரமாத்மா நாராயணன்,
 9. வேதங்களின் லக்ஷ்யம் அவன் புகழ் பாடுவதே,
 10. பேத ச்ருதி அவன் தனி தனி ஆத்மாக்களில் உள்ளுறை நியந்தாவாக எல்லா அறிவுள்ள அறிவற்ற பொருள்களில் இருப்பதைப் பாடுகிறது,
 11. அபேத ச்ருதியும் அவன் புகழைப் பாடுகிறது, ஸாமானாதிகரண்ய நியாயத்தால் அறிவுள்ளன, அறிவற்றன என்று வேறுபடுத்திப் பாடுகிறது,

கருத்துரை

பகவத் ராமாநுஜர் வேதாந்தத்தின் நோக்கம் எல்லார்க்கும் மிகப் பெரியனான எம்பெருமான் நாராயணனின் பெருமையைப் பேசுதலே என்று வலியுறுத்துகிறார், “ப்ரஹ்மம்” என்ற சொல் தான் மிக உயர்ந்ததாய்  இருந்துகொண்டு, மிக்க உயர்வினை மற்றோர்க்கும் தர வல்லது எனும் பொருளை உடையது,

பகவான் எல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டுத் திகழ்கிறான். மாயாவாதிகள் ப்ரஹ்மம் அடிப்படையில் ஆத்மா போன்றோனே என்கின்றனர், இக்கருத்து இங்கு மறுக்கப்படுகிறது. பகவானின் உண்மை இயல்பு ஜீவாத்மா உட்பட எல்லாவற்றையும் கடந்தே நிற்கிறது. கர்மத்தால் பிறப்பு இறப்பில் சிக்கியுள்ள ஆத்மா போலன்றி பகவானின் இயல்பு முற்றிலும் இக்குறைகள் ஒன்றுமின்றி உயர்ந்துள்ளது, பகவான் கருணை, அழகு, பலம், முதலியவற்றால் எல்லை இல்லாதவனாக உள்ளான். வேதாந்தம் அவனை எல்லாரினும் மேம்பட்ட “பரம் ப்ரஹ்மம்” என்றும், எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மா என்பதால் “ஸர்வாத்மன்” என்றும், மிக மேலான ஒளி  என்பதால் “பரம் ஜ்யோதி” என்றும், மேம்பட்ட உண்மை என்பதால் “பரம் தத்வம்” என்றும், “ஸத்” என்றும் பேசுகிறது.

வேதாந்தத்தில் உள்ள பாடல்கள் பேதம் அபேதம் என இருவகை ஆகும். பேத வாக்யங்கள் பகவானுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் கூறும். அவை அவனே உள்ளே எல்லார்க்கும் நியந்தா என்னும். மற்றவற்றை அவனது சக்திகள், வடிவங்கள், இயல்புகள், மனோ நிலைகள் ஐச்வர்யங்கள், உடல் என்னும். இவ்வாறாக, அவை அவன் எல்லாவற்றையும் நடத்தும், ஆளும் பெருமையைப் பேசுகின்றன. மற்றவை யாவும் அவனுக்குப் பரதந்த்ரமானவை அடங்கியவை, ஆளுகைக்குட்பட்டவை. அவனே ஸ்ருஷ்டிக்கிறான், ரக்ஷிக்கிறான், சித் அசித் உருவான ப்ரபஞ்சம் முழுதும் தன் விருப்பப்படியே நடத்தி ஆத்மாக்களைத் தளைகளிலிருந்து விடுவிப்பதும் செய்கிறான். வேதாந்திகளுக்கு இந்த மோக்ஷ ப்ரதத்வம் ஒரு முக்யமான விஷயம், இதுவும் அவன் கல்யாண குணம் ஆதலால்.

அபேத ச்ருதி வாக்யங்கள் ஆத்மாவை இறைவனிடமிருந்து பிரிக்க முடியாதவைகளாகக் காட்டும். இறைவனைப் பற்றிப் பேசும்போது அவை மற்றப் பொருள்களைக் குறிப்பிடும்போது ஸாமாநாதிகரண்யத்தைப் பயன்படுத்துகின்றன. ஸாமாநாதிகரண்யமாவது சொற்களைப் பயன்படுத்தும் ஒரு விதம். எடுத்துக்காட்டாக, “இந்தப் பறவை நீலமாக இருக்கிறது” என்பதில் நீலம் என்பது நிறத்தை மட்டுமே குறிக்கிறது  ஆனால், நீலப் பறவை என்பதில் நீலம் என்பது பறவையைக் குறிப்பதாகாது. அச்சொல், நீலமாய் உள்ள ஒரு பறவையைக் குறிக்கிறது. நீலம் என்பது ஒரு இயல்பு, அதைக் குறிக்கிறது, இதேபோலத்தான் வேதாந்தமும், இந்த உலகமே இறைவன், இறைவனே ஒவ்வோர் ஆத்மாவும் என்கிறது, அப்படிச் சொல்கையில், இவ்வுலகம் தானே இறைவன் என்றோ ஒவ்வோர் ஆத்மாவும் தானே இறைவன் என்றோ சொல்லாமல், அவற்றைத் தன் சரீரமாக இறைவன் கொண்டுள்ளான் என்றே உணர்த்துகிறது. பறவையும் நீலமும் பிரிக்க முடியாதாப் போலே இவையும் இறைவனோடு உள்ளன. ஒன்றைச் சொல்லப் பயன்படும் சொல் மற்றதையும் குறிக்கும்.

இறைவன் எல்லாங்கடந்து நிற்கும் ப்ரபாவத்தைச் சொல்வதே பேத ச்ருதியின் நோக்கமாகும். ஒவ்வொரு விஷயமும் இந்த மஹா தத்வத்தையே உள்ளடக்கியுள்ளது என்று விளக்குவதே அபேத ச்ருதியின் நோக்கமாகும்.

இவ்வாறாக இவ்விரண்டு வகைப்பட்ட வாக்யங்களும் ப்ரபஞ்சத்தை விளக்குவதில் ஒன்றுக்கொன்று சார்புள்ளனவாய் இருக்கின்றன.

ஒரு வகை வாக்யங்களை மட்டுமே கைக்கொண்டு அவையே முக்கியம் எனும் சிந்தனைப் போக்கு இவ்விஷயத்தை முற்றிலும் மறந்துவிட்டது, வேதாந்தத்திலேயே ஒரு வகை வாக்யங்களை மட்டும் ஏற்று மற்றதைக் கைவிடும் போக்கே இல்லை. அறிஞர்கள் சிலர் தமக்கு விருப்பமான சில வாக்யங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, மிக அல்ப அறிவு தருவன எனப் பிறவற்றைத் தள்ளி விட்டார்கள். பகவத் ராமாநுஜரோ வேதாந்தக் கோட்பாடுகளை முற்றிலும் உணர்ந்து அநுபவிக்க இருவகை வாக்யங்களும் தேவையே, அவை முரண்பட்டவை அன்று. மாறாகத் தொடர்ச்சியான எல்லா வாக்யங்களையும் கோட்பாடுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுவன என்று நிறுவியருளினார்,  

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/03/03/vedartha-sangraham-4/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வேதார்த்த ஸங்க்ரஹம் 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

பகுதி 2

வேதங்களின் உட்பொருள் அறிதல்

இவ்விரிவுரை இங்குத் தொடங்குகிறது. இனி ஒவ்வொரு பத்தியையும் வ்யாக்யானத்தோடு நோக்குவோம். ஸ்வாமி வேதங்களின் ஸாரமான பொருளைச் சுருக்கமாக அருளிச் செய்கிறார்.

மூன்றாம் பத்தியின் சுருக்கம்:

வேதங்களும்  அவற்றின் இறுதியான வேதாந்தமும்  உலகம் யாவும் நன்றாய் இருக்க அவச்யமான ஒழுக்க நெறியைப் போதிக்கின்றன.

இதன் மூலம், ஸ்வாமி அனைத்து வேதங்களின் நோக்கமே முழு சமுதாயத்தின் மங்களமே என அறுதியிடுகிறார்.

வேதாந்தத்தைக் கற்பதன் மூலம் ஒரு சரியான பொருளைப புரிந்துகொள்ள முடியும்.

வேதாந்தத்தைப் பல்வேறு வழிகளில் புரிந்து கொள்ளமுடியும் என்பதை ஸ்வாமி மறுக்கிறார்.

ஒரு தனிப்பட்ட ஆத்மா, பரமாத்மா இரண்டுமே துல்யமாகப் புரிந்துகொள்ளப் படவேண்டும். அதன்பின், ஆத்மா, பரமாத்மா இரண்டைப் பற்றிய அறிவோடு ஒவ்வொருவரும் தந்தமக்குள்ள ஸமூஹ நிலை, வகுப்புக்கேற்ப மனோபாவத்தோடு செயல் முறையில் ஈடுபடவேண்டும். இந்தச் செயல்பாடே பக்திக்கு வழி வகுக்கும்.

உலகம் முழுதுக்கும் மங்கள ஹேதுவானதால் வேதாந்தம் மக்களை முற்றும் துறத்தல் போன்ற தீவிர துறவு நிலைகளை ஏற்கச் சொல்வதாக நினைக்கவில்லை. ப்ரத்யக்ஷ வாழ்வுக்கு ஒரு அர்த்தமும் இலக்குமுண்டு என்பதை மறக்கலாகாது. ஒரு துறவிகூட, உலகியலில் உள்ள பிறர் வாழ்வோடு இயையாமல் இருக்க முடியாது. சங்கரர் போன்றோர்  உலகியல் ஜீவனத்துக்கு ஒரு ப்ரத்யக்ஷ வாழ்முறையும், ஆத்மோஜ்ஜீவனத்துக்கு பந்தங்கள் அறுபட்ட இன்னொரு முறையையும் இருவேறு வாழ்வுகளாகக் கண்டனர். இதில் முன்னது தாழ்ந்த நிலை, பின்னது உயரிய நிலை என்று அபிப்ராயம். 

ஸ்வாமி வாழ்க்கையை இப்படி இரு கோடுகள் போட்டுப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. மாறாக, ப்ரத்யக்ஷ உலகியல் வாழ்வும், உஜ்ஜீவனம் தேடும் ஆன்மீக வாழ்வும் ஒன்றெனக் கருதினார் பந்தங்களினின்று விடுபட ப்ரத்யக்ஷ வாழ்வை அவச்யம்  விடவேண்டும் என்று அவர் கருதவில்லை. மாறாக, இவ்வாழ்க்கையை வாழ்ந்தபடியே நம் லக்ஷ்யத்துக்குச் செயல்படவேண்டும். ஒரு வேதாந்திக்கும் ஒரு ஞானமற்றவனுக்கும் உள்ள வேறுபாடு, மனத்தளவில் ஆனதே. ஒரு வேதாந்தி ஆத்மா பரமாத்மா இரண்டையும் புரிந்துகொண்டு செயல்படுகிறார், ஒரு ஸாமான்யர் வெறும் உணர்ச்சிகள், ஆசைகள், குழப்பத்தோடு செயல்படுகிறார்.  ஆத்மா பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த சிந்தையோடு தார்மீகமாக லக்கில் வாழ்க்கையை நடத்துபவர்க்கு தெய்வீகக் காதல், பக்தி தானே ஏற்பட்டு அவரை எம்பெருமானிடம் அழைத்துச் செல்கிறது. பக்தியே வேதாந்தத்தின் இறுதிச் செய்தி. எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் வைக்கும் ஈவிர உறுதியான அன்பே பக்தி. இதுவே த்யானம், தொழுகை, ஸ்மரணம், கீர்த்தனம் என வெவ்வேறு நிலை அடைகிறது.

ஸ்வாமியின் திருவுளத்தில் அறியப்படாத் ஒன்றின்மேல் அறிவுணர்வின்றிச் செய்வது பக்தி அன்று. ஞானியர் சிலர் பக்தி ஞானம் இரண்டும் வெவ்வேறு பாதைகள் போலக் காட்டினர்.  சிலர் தம் ப்ரத்யக்ஷ அநுபவத்திலிருந்து பக்தியைவிட ஞாநமே உயர்ந்தது என்றும் கருதுவர். ஆனால் ஸ்வாமிக்கு பக்தி ஞானம் இரண்டும் ஒன்றே. ஞானமே பக்தியாக முதிர்கிறது, அன்பே மேலும் அறிந்துகொள்ள உதவுகிறது.  ஆழ்ந்த அன்பு முதிர்ந்து தளைகளிலிருந்து விடுவித்து எம்பெருமானுடன் பிணைக்கிறது.

எம்பெருமானின் இணையடித் தாமரைகளை அடைவிக்கும் மங்கலமே வேதாந்தம் சொல்லித்தரும் பாடம்.

“இணையடித் தாமரைகள்” என்பதால் ஸ்வாமி ஆத்மா எம்பெருமானுக்கு சேஷப்பட்டவன் என உணர்த்துகிறார். எத்தடையுமின்றி எல்லா வகையிலும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வதே  பந்தத்திலிருந்து விடுதலை. அன்பின் மகிழ்ச்சி கைங்கர்யத்தில் உள்ளது. உகப்பைத் தருவது ஒன்றே நோக்காய், பிரதிபலன் எதிர்பாராமல் பிறர் மகிழ்ச்சிக்காகவே செய்யப்படும் பணியே கைங்கர்யம்.

ஈச்வரானுபவமானது அவனுக்கு அவன் உகக்கக் கைங்கர்யம் செய்யும் அவா மிகுதலே. கைங்கர்யம் என்பது கட்டாயத்தின் பேரிலன்று, ஈச்வரானுபவத்தினாலே தானே கிளர்ந்தெழும் அவா. இக்கருத்துகளின் மூலம் ஸ்வாமி செயல்பாடு ஆன்மிகம் இரண்டையும் வெகு எளிதாகப் பிணைக்கிறார்.  ஒருவரின் செயல்பாடு அவரது ஞானம், அநுபவம் இரண்டினாலேயே அமைகிறது ஒருவரின் ஞானம் பிழையற வளர்க்கப்பட்டால், அவரது அநுபவமும் முழுக்க ஈச்வராநுபவமாயின் செயல்பாட்டுக்கு அஞ்சவோ அதைத் தள்ளவோ வேண்டா. ஆகவே ஸ்வாமியின் திருவுள்ளப்படி பந்த ஜீவனத்தில் செயல்பாடோ அல்லது மோக்ஷமோ இரண்டிலுமே (கைங்கர்யமாகிற) செயல்பாடு இருக்கவே செய்கிறது. கர்மம் இல்லாமல் இல்லை, செயல் இன்றி இருப்பதுமில்லை.

இந்த ஆரம்ப வாக்யங்களால் ஸ்வாமி ஆத்மா, இறைவன், பந்தம், மோக்ஷம், அன்பு, ஞானம், கர்மம் (செயல்பாடு), கைங்கர்யம் ஆகிய யாவற்றையும் ஒரு கோப்புக்குள் கொணர்ந்து அவை ஒன்றுக்கொன்று இயல்பாகத் தொடர்புடையவை என்பதை அழகாகக் காட்டுகிறார்.

ஆத்மாக்கள் சரீர பயத்தில் உள்ளன. தேவர், மனிதர், என்பன போன்ற உயிர் வாழிகளாய் சரீரத்தில் அவை படும் துயர்களால் சரீரத்தை ஆத்மா என்று மயங்கியுள்ளன. இம்மயக்கமே எல்லாத் துன்பத்துக்கும் காரணம்.

சரீரத்தை ஆத்மா என்று மயங்குவதே சரீரம் எடுக்கவும் துயரப்படவும் ஹேது. துயரத்தால் பயம்.

வேதாந்த வாக்யங்கள் இவ்வச்சத்தைப் போக்குவதிலேயே உத்பத்தி ஆகின்றன. அவை ஆத்மாவின் உண்மை சாரம், இறைவனின் உண்மை நிலை, ஈச்வரனை வணங்கும் வகை, ப்ரஹ்மத்தை உணர்வதின் பேரின்பம் இவற்றை அறிவுறுத்தி இவ்வச்சத்தைப் போக்குகின்றன.

ஸ்வாமி தொடங்கும்போதே வேதாந்தத்தின் நோக்கம் ஸர்வஜன சுகம் என்பதை விளக்கினார். வேதாந்தம் ஆத்ம ஞானத்தைப் போதித்து சரீர பயத்தையும் துயரத்தையும் நீக்குகிறது. துயரத்தை மறுப்பதுமட்டுமன்று, பேரின்பத்தை அநுபவிப்பதும் வேதாந்தத்தின் பயனாகும்.

வேதாந்த வாக்யங்கள் யாவைக்கும் இதே நோக்கம்தான்.  “தத்வமஸி”, “அயமாத்மா ப்ரஹ்ம”, “ய ஆத்மனி திஷ்டன் நாத்மனோந்தரோ யமாத்மா ந வேத, யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மாநமந்தரோ யமயதி ஸ  த ஆத்மா அந்தர்யாம்யம்ருத:”, “ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா அபஹதப் பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண:”, “தமேதம் வேதா நு வசநேன ப்ராஹ்மணா விவிதிச்யந்தி யஞ்ஞேன தானேன தபஸா நாசகேன”, “ப்ரஹ்ம விதாப்நோதி பரம்”, “தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்யப் பந்தா அயநாய வித்யதே” என்பன சில இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.

இம்மேற்கோள்கள் வேதாந்தத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டு, எந்த இடம்தொட்டாலும் இந்த தொனி வருமாறு அமைத்துள்ளார். சில பகுதிகள் எம்பெருமானும் ஆத்மாவும் ஒன்றென்னும், சில வேற்றுமையைப் பேசும், ஆனால் எம்பெருமானும் ஆத்மாவும் பரஸ்பரம் உறவுபட்டுள்ளதையே யாவும் காட்டும். யாவுமே இவ்வுலகியலில் மாறுவதுபோலத் தோன்றினும், ப்ரஹ்மத்தை உபாஸித்து வழிபட்டவனுக்கு முடிவிலாப் பேரின்பம் என்றே காட்டும்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/03/02/vedartha-sangraham-3/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வேதார்த்த ஸங்க்ரஹம் 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

பகுதி 1

வேதார்த்த ஸங்க்ரஹம்

வேதங்களின் உட்பொருள் அறிதல்

தொடக்க ச்லோகம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II

இந்த ச்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.  அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்துகொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில் அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது. வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம்  மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ச்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார். இம்மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார். இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

பரம்” எனும் சொல் எல்லாவகையிலும் மேன்மையைக் குறிக்கும். வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது. ப்ரஹ்மம் எல்லா  மங்கலங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது. ஆகவேதான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது, அறியப்படவேண்டியது என ஓதப்படுகிறது. தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி, அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன – (i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மைதான் யாது? (ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது (ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய உணர்வுபூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும். ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை, பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது. ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின்பாற்பட்டனவே. மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும். முதலில் தான் ச்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.

மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின்  அம்மாயை முன்பே இருக்க வேண்டும். ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாகவேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது. தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை/அவித்யை எவ்வாறோ குழப்புகிறது என்பதை நிலைநிறுத்துவதில் உள்ள ச்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார். “பர” என்றதால் இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது. இவ்வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை. இவற்றால் தளையுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ்விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும் துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன/அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும், ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும்  கருதினார். அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதாலும், நிலைநில்லாமையாலும் ஏற்படுகிறது. அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிகொள்வதாலும் அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது. வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம் “ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும், அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது. ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக, ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள்  இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும். அதாவது எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும் எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்  ஆனந்த ஸ்வரூபமானதும் குறைகளே அற்றதும் எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ்விளக்கங்களால் அறிந்துகொள்வது தவறான அறிவும், அறியாமையும் ஆகும். “இதம் தம:” என்றது இதையே.

இத்தகைய புரிந்துகொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது. வேதங்களைப் புரிந்துகொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை, வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன, பலரும் இக்கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே. இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே! நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப்பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழிதவறிப் போவர். இக்கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை. ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ்விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கியருளுகிறார். வேதங்களுக்குத்  தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார். ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப்படுத்துவது கடமையாகும். ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி: = இச்சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம் ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார். தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜயகோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும். தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டியுள்ளதாக்கியுள்ளார்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/03/01/vedartha-sangraham-2/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 28

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 27

சந்தமிகு தமிழ் மறையோன், வேதாந்த குரு

(த்ரமிடோபநிஷத் ப்ரபாவ  ஸர்வஸ்வம் , இறுதிப் பகுதி)

ஸம்ஸ்க்ருத வேதங்களைப் பயில அருளிச்செயலை அறிந்துகொள்வது அத்தியாவசியம் என வேதாந்த தேசிகன் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார். வேதாப்யாசம் செய்யாதவர்களுக்கு மட்டும் அருளிச்செயல் மற்றொரு வாய்ப்பு மட்டுமன்று. வேதங்களை பயில விரும்புமவர்களுக்கு அருளிச்செயல் அறிவின்றி வேதங்களின் பொருள்  அறிவதென்பது எளிதன்று.

தேசிகன் வடமொழியில் பெரும்புலமை உள்ளவரென்பது மறுக்க முடியாதது, அதற்கு அவரது ஸ்ரீ கோசங்களே சாக்ஷி. ஆகிலும், தமக்கிருந்த அளவற்ற வேதாந்த ஞானமோ ஸம்ஸ்க்ருதப் புலமையோ அருளிச் செயலை விளக்கிவிட ஓரு ஹேது என அவர் திருவுள்ளம் பற்றினாரல்லர்.

அதிகார ஸங்க்ரஹத்தில்  அவர், “செய்ய தமிழ் மறைகளை நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!” என இதைத் தெளிவாகக் கூறியருளினார்.

இச்செய்யுளில் தேசிகன், ஸம்ஸ்க்ருத வேதங்களைத் “தெளியாத மறை நிலங்கள்” என, மருட்டும் பகுதிகளையுடையதாக வேதங்களைச் சொன்னது மட்டுமன்றி, “தமிழ் மாலைகளைத் தெளிய ஓதி” என்று என்று தமிழ் மறைகளைத் தெளிய ஒத்த வேண்டிய ஆவச்யகதையையும் வலியுறுத்துகிறார். இது அவர் பிறர்க்குச் சொன்னது மட்டுமின்றி, தாமும் அனுஷ்டானத்தில் கொண்டிருந்தார் என்பதே “நாம் தெளிய ஓதி” என்றதன் மருமமாம்.

இக்கருத்தை அவர், த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி நாலாம் ச்லோகத்தில், “யத் தத் க்ருத்யம் ச்ருதீநாம் முநிகண விஹிதைஸ் ஸேதிஹாசை: புராணை: தத்ராஸு ஸத்வ ஸீம்னா:  சட மதா நாமுநேஸ் ஸம்ஹிதா ஸார்வ பௌமி“ என வலியுறுத்துகிறார்.

முனிவர்களருளிய இதிஹாச புராணங்களால் வேதங்களின் பொருள் அறிய எளிதாகிறது. ஆகிலும் இவற்றில் சில போதுகளில் இவ்வர்த்தங்கள் ரஜஸ்ஸும் தமஸ்ஸும் கலந்தே வரும். மாறாக ஆழ்வார் திருவாக்குகளோ சுத்த ஸத்வமே வடிவெடுத்து வேதப்பொருள் விளக்குவன. இதையே ஸத்வ ஸீம்னா என்றார். ஆகவே சடகோப ஸம்ஹிதையே சாலச் சிறந்தது என்றபடி.

ஆளவந்தார்  ஸ்தோத்ர ரத்னம் நாலாம் ச்லோகத்தின் பொருள் விரிக்கையில் ஸ்ரீ தேசிகன் “மாதா பிதா”வுக்கு விளக்கம் அருள்வது காணீர் – ”அத பராசர ப்ரபந்தாதபி வேதாந்த ரஹஸ்ய வைசாத்யாதிசய  ஹேதுபூதை: சாத்ய பரமாத்மனி சித்த ரஞ்சக தமை: ஸர்வோபஜீவ்யை: மதுரகவி ப்ரப்ருதி ஸம்ப்ரதாய பரம்பரயா நாதமுநேரபி உபகர்த்தாரம் காலவிப்ரகர்ஷேபி பரமபுருஷ ஸங்கல்பாத் கதாசித் ப்ராதுர்பூய ஸாக்ஷாதபி ஸார்வோபநிஷத் ஸாரோபதேசதரம் பராங்குசமுநிம் “மாதா பிதா ப்ராதேத்யாதி உபநிஷத் ப்ரசித்த பகவத் ஸ்வபாவ த்ருஷ்ட்யா ப்ரணமதி மாதேதி”.

இங்கு ஸ்ரீ தேசிகன் வேத விஷயங்களை ஆழ்வார் பராசராதி ரிஷிகளையுங்காட்டில் வெகு நன்றாக விளக்குவதாகக் காட்டியருளுகிறார். மேலும் ஆழ்வார் பாசுரங்கள் எல்லார்க்கும் ஏற்புடையனவாயும். ரசகனமாயும் உள்ளன. ஆகவே எம்பெருமானைப் போன்றே ஆழ்வாரும் தாய், தந்தை என எல்லா உறவு முறையிலும் கொண்டாடப் படுகிறார்.

யதிராஜ ஸப்ததியில் ஸ்ரீ தேசிகன், “யஸ்ய ஸாரஸ்வதம் ச்ரோதோ வகுளாமோதவாசிதம் ச்ருதீநாம் விஸ்ரயாமாசம் சடாரிம் தம் உபாஸ்மஹே”

என்று ஸாதிக்கிறார். வேதங்கள் வலுவிழந்து தெம்பிழந்து தவித்த வேளையில் ஆழ்வாரின் ஸ்ரீ ஸூக்திகளே அவற்றின் தளர்வை நீக்கிப் புத்துயிரளித்தன என்பதாம்.

பாதுகா ஸஹஸ்ரத்தில் ஸ்ரீ தேசிகன் ஆழ்வாரையும் அருளிச்செயலையும் பற்றிப் பலபடச் சொல்லுகிறார். 22ம் ஸ்லோகத்தில் ஸ்ரீ தேசிகன், உய்ய வழி ஆழ்வாரின் அருளிச்செயலைக் கற்பதும், எம்பெருமான் திருவடி நிலைகளின் பெயர் தாங்கிய அந்நிலையைத் தலையில் தரிப்பதுமன்றி  வேறில்லை என்கிறார்.

அம்ருதவாதினி ப்ரபந்தத்தில் ஸ்ரீ தேசிகன்  நம்மாழ்வாரே உயர்ந்த ஆசார்யன் பக்தர்களைக் கரையேற்றவல்லவர் என 28ம் பாட்டில் கூறுகிறார்.

இறுதியாக ஸ்ரீ தேசிகன் தம்மையே “திராவிட வேதாந்த வித்வான்” என்று கூறிக்கொள்கிறார். “சந்தமிகு தமிழ் மறையோன் தூப்பில் தோன்றும் வேதாந்தகுரு” என்பது அவர் திருவாக்கு,

இவ்வாறாக, நம் ஆசார்யர்கள் ஆழ்வார்களையும் அருளிச்செயலையும் மிக உயர்ந்த நிலையில் கொண்டனர் என்று கண்டோம். ஆசார்யர்கள் ஆழ்வார்களை அனுபவித்ததில் ஒரு திவலையே இவ்விருபத்தெட்டு பகுதிகளில் கண்டோம். இதனால் ஆழ்வார்களின் அருளிச்செயலையும், பிள்ளான், நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை, தெள்ளார் வடக்குத்திருவீதிப் பிள்ளை, அழகிய மணவாள ஜீயர், பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் போன்றோரின் வ்யாக்யானங்களையும் ஊன்றி வாசிக்க ஆவல் எழுமாயின் அதுவே பெரும் பேறாகும். ஆழ்வார்களின் திருவாக்கே வடமொழி நூல்களுக்கும் வழிகாட்டி எனத் தெள்ளென நமக்கு விளக்கியுள்ள காஞ்சீ ஸ்வாமி மஹாவித்வான் ஸ்ரீ உ வே அண்ணங்கராசார்ய ஸ்வாமிக்கு நாம் தலையல்லால் கைமாறிலோம்.

ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்த்து

இன்பம் என்னும் பனிமூட்டத்திலும், இருள் என்னும் துன்பத்திலும், அருளிச்செயல் என்னும் ஒளி நம் மனத்தில் ப்ரகாசமாக எப்பொழுதும் மலரட்டும்.

எம்பெருமானாரே! இதை மட்டும் அளித்து அருள்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/02/26/dramidopanishat-prabhava-sarvasvam-28/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வேதார்த்த ஸங்க்ரஹம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

 

தொடக்கப் பாசுரங்கள்

ஆசார்யர்கள் தம் உபதேச  ஸ்ரீகோசங்களை எம்பெருமான் மீதும் ஸ்வாசார்யர் மீதும் துதிகளோடே தொடங்குவது மரபு. ஸ்வாமியும் தம் நூலை முதல் ச்லோகம் எம்பெருமானைப் பற்றியும், இரண்டாவது ச்லோகம் தம் ஆசார்யரான யாமுநாசார்யர் பற்றியுமாக இரண்டு ச்லோகங்களோடே தொடங்குகிறார்.

[1] அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI

நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I    

ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின்  உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக்கொள்கிறார். கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:” (எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான். வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும்போதே அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக்கொள்கிறார். இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார். சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே  வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.

விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப்படுத்தப் பட்டிருக்கிறார்:

(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷின்

அவனே ஒன்றுவிடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி. அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன. அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன. நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம். அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை. அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன. அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன. அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன. இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.

ii) சேஷ சாயின்

அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.  ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான். இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.  ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள்  எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது. இதுவே சேஷ / சேஷி ஸம்பந்தம்.

முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும்  விஷ்ணுவுக்கும் உடையவன்/அடிமை என்றார். இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன்  என்கிறார்.

ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?  ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?

இதற்கு விடையாவது, இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது. மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே. இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.

[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:

விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன். நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர். உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன. ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான். அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன். ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .

அவன் குற்றமற்றவன், நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு, ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது. அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது. ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள். ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது. விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.

அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது. அவன் ஸ்வாமித்வத்திலும்கூட அபூர்ணனல்லன். அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.

அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன். அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச்சொல்லின் பொருளுமாகும். எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை. சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான். சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!

நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/02/28/vedartha-sangraham-1/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 27

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 26

பட்டரும் ஆழ்வார்களும்

ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீவைஷ்ணவ மரபில் ஈடிணையற்ற மஹா மேதாவியாவார். ஸம்ப்ரதாயம் பற்றிய அவரது தெளிவு இணையற்றது, ஸித்தாந்தத்தில் அவரது ஞானம் ஸ்வாமியுடையதோடு மட்டுமே ஒப்பிடப்படக் கூடியது. ஆகவேதான் ஸ்வாமி ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு அவரைக்கொண்டு பாஷ்யம் இடுவித்தது. இந்த பாஷ்யத்துக்கு பகவத் குண தர்ப்பணம் என்று பெயர். இவ்வுரை முழவதும் ஆழ்வார்களின் திருவாக்குகளையே அடிப்படையாகக் கொண்டது. அதன் விரிவு கருதி இவ்விரண்டுக்குமுள்ள ஒப்புமையை இங்கு விவரித்துள்ளோம். ஆகவே நாம் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்தில் சில உதாஹரணங்களை மட்டுமே நோக்குவோம்.

பட்டர் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் தொடக்க ச்லோகங்களில் ஆழ்வாரை இங்ஙனம் போற்றுகிறார்:

ருஷிம்  ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் I
ஸ ஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் I I

பட்டர் இதில் ஆழ்வாரை ஒரு ருஷி  என்கிறார். ஆழ்வார் க்ருஷ்ண பக்தியின் காதலின் வடிவம் என்றும் கூறுகிறார். ஆழ்வாரும் க்ருஷ்ண பக்தியும் வேறல்ல எனும் பட்டர், வேதங்களின் எண்ணற்ற சாகைகளை ஆழ்வார் தமிழில் காட்டினார் என்றும் அருளிச் செய்துள்ளார்.

பதின்மூன்றாம் ச்லோகத்தில்.

அமதம் மதம் மதமதாமதம் ஸ்துதம் பரிநிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம் இதி ரங்கராஜாமுதஜுகுஷத் த்ரயீ

என்பதில் முதல் பகுதி “யஸ்யாமதம் தஸ்ய மதம்” எனும் உபநிஷத் வாக்யத்தை அப்படியே ஒட்டியுள்ளது.  யாவன் ஒருவன் தான் ப்ரஹ்மத்தை உணர்ந்ததாக எண்ணுகிறானோ அவன் அதை அறிந்திலன், யாவன் ஒருவன் தான் ப்ரஹ்மத்தை அறிந்திலேன் என்கிறானோ அவன் அதை உணர்ந்தவன் என இது பொருள்படும்.

இதன் அடுத்த பகுதியில் இம்மந்த்ரம், “ஸ்துதம் பரிநிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்” என்கிறது. ப்ரஹ்மத்தைப் புகழ்வதும் ஒர் இகழ்ச்சியாகவும், இகழ்ச்சியே புகழ்வதாகவும் ஆகிறது. இப்பகுதி உபநிஷத்தில் எவ்விடத்திலும் இல்லை ஆனால் ஆழ்வார் திருவாக்கில், பெரிய திருவந்தாதியில், “புகழ்வோம் பழிப்போம், புகழோம் பழியோம், இகழ்வோம் மதிப்போம், மதியோம் இகழோம்” என வருகிறது.

இதில் ஸ்வாரஸ்யம் என்னெனில் பட்டர் இவ்விரண்டுமே த்ரயீயின் பாகங்கள் என்கிறார். அவர் உபநிஷதங்கள் திவ்ய ப்ரபந்தங்கள் இரண்டையுமே வேத பாகங்களாகக் கருதுகிறார். இது, பதினாறாவது ஸ்லோகத்தில் “ஸ்வம் ஸம்ஸ்க்ருத த்ராவிட வேத ஸூக்தை:” என்பதில் தெளிவாகத் தெரிகிறது.

இருபத்தொன்றாம் ச்லோகத்தில், “துக்தாப்திர் ஜனந்யஹமியம்” என்பதில் அவர், தொண்டரடிப்பொடி ஆழ்வாரின், “தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கம்” என்பதில் காவேரி ஆறு கலங்கி ஓடுவதாக அநுபவிப்பதை அடியொற்றுகிறார்.

ஜித பாஹ்ய ஜினாதி மணிப்ரதிமா அபிவைதிகயன்னிவ ரங்கபுரே | மணிமண்டப வபகணான் விததே பரகாலகவி:ப்ரணமே மஹிதான் ||

என்பதில் பட்டர், ஆழ்வார் நியமித்தருளிய கோபுரங்களும் தூண்களும் மண்டபங்களும் பரமவிலக்ஷணமான ஊர்த்வ புண்ட்ராதிகளோடும் எம்பெருமானின் சங்க சக்ர சின்னங்களோடும் திகழ்வதை அருளிச் செய்கிறார்.

நாற்பத்தோராவது ச்லோகத்தில் சந்திர புஷ்கரிணிக்குக் கிழக்கே எழுந்தருளியிருக்கும் ஆழ்வார்கள் துதிக்கப் படுகிறார்கள்:

பூர்வேண தாம் தத் வதுதார நிம்ன ப்ரசன்ன சீதா சய மக்ன நாதா: |
பராங்குசாத்யா: ப்ரதமே புமாம்சோ நிஷேதிவாம்சோ தசாமாம் தயேரன் ||

சந்திர புஷ்கரிணிக் கரையிலுள்ள புன்னை மரத்தைப் பற்றிச் சொல்லும்போது பட்டர் சாதிப்பது:

புன்னாக  தல்லஜம் அஜஸ்ர சஹஸ்ர-கீதி சேகோத்த திவ்ய-நிஜ-சௌரபமாமநாம: (49)

இம்மரத்தடியிலேயே பூர்வாசார்யர்கள் பலரும் எப்போதும் திருவாய்மொழி அர்த்த விசேஷங்களையே பேசிக்குலாவியபடியால் இம்மரமும் திருவாய்மொழி நறுமணம் பெற்றதாயிற்று.    

இப்படி மர நிழலை அழகாகச் சொன்ன மாத்திரத்திலேயே பூர்வர்கள் திருவாய்மொழியின் செம்பொருள்களையே பேசிக் காலம் கழித்தனர் என்றும் காட்டினாராயிற்று.

குலசேகராழ்வார், “கடியரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் மாயோனை மணத்தூணே பற்றி நின்று என் வாயாரவென்றுகொலோ வாழ்த்துநாளே” என்கிறார். அரங்கனின் திருக்கண்களில்ருந்து பெருகும் அருள் அமுதத் திவலைகளில் நிற்க மாட்டாமல் ஒரு பிடிப்புக்காக அங்குள்ள திருமணத்தூணைப் பற்றிக்கொள்வேன் என்றார் ஆழ்வார்.

சேஷசாய லோசனாம்ர்த நதிரயாகுலித லோல மானாநாம் |
ஆலம்பமிவாமோத ஸ்தம்பத்வயம் அந்தரங்கமபியாம: || 59

மணத்தூண் என்பதை ஆமோத ஸ்தம்பம் என்றே பட்டர் சாதித்திருப்பதைக் காண்க.

78வது ச்லோகத்தில்

வட தள தேவகி ஜடர வேத சிர: கமலாஸ்தன சடகோப வாக் வபுஷி ரங்கக்ருஹே சயிதம்“ என்று ஸ்ரீரங்கநாதன் தனக்குறைவிடமாக ஆழ்வார் திருவாக்கைக் கொண்டுள்ளான் என்றார்.

கிரீடசூட ரத்னராஜிராதி ராஜ்ய ஜல்பிகா |
முகேந்து காந்திருன்முகம் தரங்கிதேவ  ரங்கினா: ||

என்று 91 வது ஸ்லோகத்தில் பட்டர் ஆழ்வாரின் “முடிச்சோதியாய்” பாசுரத்தை மிக அழகாக வடமொழியாக்கியுள்ளார்.

116வது ஸ் லோகத்தில்  “த்ரயோ தேவாஸ்-துல்யா:” என “முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்” எனும் ஆழ்வார் திருவாக்கை அடியொற்றினார்.

ஆழ்வார் திருவாக்குக்கும் பட்டர் திருவாக்குக்கும் உள்ள ஸாம்யம் காண்பதில் நாம் நம்மையே ஹேளனப்பொருளே ஆக்கிக்கொள்வோமித்தனை போக்கி வேறில்லை. பட்டர் திருவாக்கு ஒவ்வொன்றிலும் ஆழ்வார் திருவுள்ளமே உண்டென நம் பூர்வர்கள் வ்யாக்யானங்களால் கண்டு ரஸித்து உணர்வோர் பாக்யசாலிகள் என்றிவ்வளவே கூறலாகும்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/02/25/dramidopanishat-prabhava-sarvasvam-27/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org