ரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

e-book – https://1drv.ms/b/s!AiNzc-LF3uwyhij5M315VkCgjhxZ

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ப்ரமாணம், ப்ரமேயம், ப்ரமாதா என்ற மூன்று விஷயங்களை மிகவும் கொண்டாடுகிறோம். இவற்றுள் ப்ரமாணம் என்பது நமக்கு உண்மை அறிவை அறிவிப்பன. ப்ரமேயம் என்பது அந்த அறிவைக் கொண்டு நாம் தெரிந்து கொள்வது. ப்ரமாதா என்பவர் ப்ரமாணத்தைக் கொண்டு ப்ரமேயத்தை நமக்கு உணர்த்துபவர்.

ப்ரமாணம் ப்ரத்யக்ஷம் (புலன்களால் அறிந்து கொள்வது), அனுமானம் (முன்பு தெரிந்ததைக் கொண்டு யோஜித்து அறிந்து கொள்வது) மற்றும் சப்தம் (சாஸ்த்ரம்) என்று பலவாக விரிந்திருந்தாலும், சப்தம் என்கிற சாஸ்தரமே முக்கியப் ப்ரமாணமாக வைதிகர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. சாஸ்த்ரம் பகவத் கைங்கர்யமே ப்ரமேயம் என்று சொல்கிறது.  ஆழ்வார்கள் மற்றும் பூர்வாசார்யர்களே நமக்கு நம்பத் தகுந்த ப்ரமாதாக்கள்.

திருமகள் கேள்வனான எம்பெருமான் சேதனர்களின் உஜ்ஜீவனத்துக்காக ப்ரமாணங்களில் தலை சிறந்ததான வேதத்தை ஒவ்வொரு ஸ்ருஷ்டியின்போதும் ப்ரஹ்மாவுக்கு உபதேசிக்கிறான். ப்ரஹ்மாவும் பல ரிஷிகளைக் கொண்டு வேதத்தையும் வேதத்தை விரிவாக விளக்கும் ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களையும் லோகத்தில் பரவச் செய்கிறான். ஆனால் வேதம் முதலியவை மிகப் பெரியதாக இருப்பதாலும் ஸாரமான அர்த்தங்கள் கடலுக்குள் ரத்தினங்கள் போல் அடங்கி இருப்பதாலும் ஸாமான்யர்களுக்கு அவை புரிவது கடினம்.

இதைக் கருத்தில் கொண்டே எம்பெருமான், ஸம்ஸாரத்தில் கட்டுண்டிருந்த சில ஆத்மாக்களுக்கு மயர்வற மதிநலம் அருளி, ஆழ்வார்களாக்கி, அவர்களைக் கொண்டு வேதத்தின் ஸாரமான அர்த்தங்களை எளிய தமிழில் அருளிச்செயல்களாக அளிக்கும்படி செய்தான்.

ஆழ்வார்கள் காலத்திற்குப் பின்பு அவதரித்த நாதமுனிகள் தொடக்கமான பூர்வாசார்யர்கள் அருளிச்செயல்களுக்கு விளக்கங்களை உபதேசம் செய்து வந்தார்கள். எம்பெருமானார் பெருங்கருணையுடன் வ்யாக்யானம் எழுதும் க்ரமத்தைத் தொடங்கி வைத்தார். எம்பெருமானாருக்குப் பின்பு நம்பிள்ளை காலத்தில் வ்யாக்யானங்கள் மிகவும் விரிவாக வளர்ந்தன.

வேத வேதாந்தங்கள் மற்றும் அருளிச்செயல்களின் வ்யாக்யானங்களில், ரஹஸ்ய த்ரயம் தொடர்பான விஷயங்கள் பொதிந்துள்ளன. ரஹஸ்ய த்ரயம் என்பது ஒருவர் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றுக் கொள்ளும்போது ஆசார்யனிடத்தில் உபதேசமாகப் பெறும் திருமந்த்ரம், த்வயம் மற்றும் சரம ச்லோகம் ஆகியவையே. ஆசார்யனிடம் ஸமாச்ரயணம் பெற்றபின், இவற்றுக்கு அர்த்தங்களைத் தெரிந்து கொண்டு, இதில் சொல்லப்பட்ட முறையின்படி வாழ்வதே சிஷ்யனின் கடமை ஆகும். “ஞாநாந் மோக்ஷம்” என்று சாஸ்த்ரம் சொல்வதால் மோக்ஷத்தில் இச்சை கொண்டவர்களான முமுக்ஷுக்களுக்கு ரஹஸ்ய த்ரய ஞானம் மிகவும் அவசியம்.

பெரியவாச்சான் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், வேதாந்தாசார்யர் போன்ற மஹாசார்யர்கள் ரஹஸ்ய க்ரந்தங்களை அருளியுள்ளனர். அவற்றுள் பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர் மற்றும் நாயனார் ஆகியோரின் முக்கியமான ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள் தலைசிறந்த வ்யாக்யானங்களை அருளியுள்ளார். இவை காலக்ஷேப க்ரந்தங்களாக நம் பெரியோர்களால் எப்பொழுதும் சேவிக்கப்பட்டு வந்துள்ளன.

பிள்ளை லோகாசார்யர் – மணவாள மாமுனிகள்

இவ்வாறு அமைந்துள்ள ரஹஸ்ய க்ரந்தங்களான முமுக்ஷுப்படி, தத்வ த்ரயம், ஸ்ரீவசன பூஷணம் மற்றும் ஆசார்ய ஹ்ருதயம் ஆகியவற்றுக்கு மாமுனிகள் அருளிச்செய்துள்ள வ்யாக்யான அவதாரிகையைக் (முன்னுரை) கொண்டே அவ்வவ ரஹஸ்ய க்ரந்தங்களில் சொல்லப்பட்ட விஷயங்களை ஓரளவு நாம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் பிள்ளை லோகாசார்யரின் அர்த்த பஞ்சகம் என்னும் முக்கியமான ப்ரபந்தத்தையும் ஓரளவு எளிய முறையில் இங்கே அனுபவிக்கலாம்.

இவை அனைத்தும் தேர்ந்த வித்வான்களிடத்தில் முறையாக காலக்ஷேப முறையில் கற்றுக்கொள்ள வேண்டியது. இங்கே நம் முயற்சி, இவைகள் விஷயத்தில் ஓர் அறிமுகம் ஏற்படவே.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org