Monthly Archives: August 2021

பெரிய திருமொழி

ஸ்ரீ: ஸ்ரீமதே மஹதாஹ்வயாய நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகரம் |
யஸ்யகோபி: ப்ரகாசாபி: ஆவித்யம் நிஹதம் தம: ||

மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலை
அணைத்தருளும் கையா லடியேன் வினையைத்
துணித்தருள வேணும் துணிந்து

        ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே * மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் * ஆழ்வார்கள். எம்பெருமானுடைய க்ருபாகடாக்ஷத்திற்கு இலக்கானவர்கள் இப்பெரியவர்கள். வ்யாஸர், போதாயனர், டங்கர், குஹதேவர் என பல மஹரிஷிகள் இருந்த போதிலும், இவ்வாழ்வார்களை அங்கியாக உடைய நம்மாழ்வாருக்கே * ப்ரபந்ந ஜன கூடஸ்த்தர் * என்று திருநாமம் கிட்டிற்று. அவ்வாழ்வார்களில், * ஆலிநாடன், அருள்மாரி, அரட்டமுக்கி, அடையார்சீயம், கொங்கு மலர்க்குழலியர் வேல் மங்கைவேந்தன் * என்று பலபடிகளால் புகழப்பட்டவர் கலியன் என்னும் திருமங்கையாழ்வார். அவர் அருளிச் செய்த பெரிய திருமொழி பற்றி சிறிது விண்ணப்பிக்கப்படலாகிறது.

149312906.1jdtysmr.img_4225.cr2_

               ஒரு வஸ்துவை உள்ளது உள்ளபடி காட்டுவது ப்ரமாணம் ஆகும். அந்த ப்ரமாணத்தால் அறியப்படுவது ப்ரமேயம் ஆகும். இதனை ஆசார்யர்கள் * மாநதீநா மேயஸித்தி: * என்று அருளுவர்கள். முமுக்ஷுக்களுக்கு ப்ரமேயம் பகவான் ஸ்ரீமந்நாராயணனே ஆவன். * ச்ரிய:பதியாய், விஷ்ணுவாஸுதேவநாராயணாதிசப்தவாச்யமான ப்ரஹ்மமொன்றுமே முமுக்ஷுவிற்கு ஜ்ஞாதவ்யம் * என்கிற ஸகலப்ரமாணதாத்பர்ய ஸ்ரீஸூக்தி நினைக்கத்தக்கது. ப்ரகர்ஷேண மேயத்வாத் – நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்றிருப்பதால் முமுக்ஷுக்களுக்கு ப்ரமேயம் பகவான் ஸ்ரீமந்நாராயணனே ஆவன். தனக்கு ஒரு கர்த்தா இல்லாத வேதமும், அப்படிப்பட்ட ப்ரமேயமான பகவான் விஷயத்தில் * யதோ வாசோ நிவர்த்தந்தே. அப்ராப்ய மனஸா ஸஹ * என்று பின்வாங்கிற்று. ஜ்ஞானத்தில் ஸங்கோச விகாஸ (சுருங்குதல் – விரிதல்) என்கிற அவஸ்த்தை இல்லாதவர்களான ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பவர்களான நித்ய முக்தர்களும் – பகவான் விஷயத்தில் * பிணங்கி அமரர் பிதற்றும் * (எம்பெருமானுடைய குணங்களைக் கூறத் தொடங்கி, ‘யான் முன்னர், யான் முன்னர்’ என்று ஒருவர்க்கொருவர் மாறுபட்டுக் குளிர்காய்ச்சல் வந்தவர்களைப் போன்று பிதற்றுவதற்குக் காரணமான நற்குணங்கள் எல்லாம் பொருந்தியிருக்கும் தன்மையுடையவனான ஈஶனை) என்று கரைகண்டிலர். தேவிற் சிறந்த அத்திருமாலின் ஸ்வரூப, குண, விபூதி (சொத்து), சேஷ்டிதங்களை விரிவாகச் சொன்னது நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியே ஆகும். அத்தகைய திருவாய்மொழிக்கு ஆறு அங்கங்கள் அருளியவர் திருமங்கையாழ்வார் ஆவர். 

       வடமொழி மறைக்கு அங்கங்கள் ஆறு. அவை (1) சீக்ஷை, (2) கல்பம், (3) வ்யாகரணம், (4) நிருக்தம், (5) சந்தோவிசிதி, (6) ஜ்யோதிஷம். இதே போன்று தென்மொழி மறையான மாறன் மறைத்தமிழுக்கு திருமங்கையாழ்வார் அருளிய ஆறு அருளிச் செயல்களும் [(1) பெரிய திருமொழி, (2) திருக்குறுந்தாண்டகம், (3) திருநெடுந்தாண்டகம், (4) திருவெழுகூற்றிருக்கை, (5) சிறிய திருமடல், (6) பெரிய திருமடல்] அங்கங்கள் ஆகின்றன. இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகள் * மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூறவவதரித்த * என்று அருளுகிறார். * வேத சதுஷ்டய அங்க உபாங்கங்கள் போலே இந்நாலுக்கும் இருந்தமிழ்நூற்புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன்மாலைகளும் * என்கிற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தியும் இங்கு அனுஸந்தேயம்.

      இவற்றுள் பெரிய திருமொழி முதலாவதாக ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்டதாகும். இனி பெரிய திருமொழி திருவவதரித்தருளின க்ரமத்தினைப் பார்க்கலாம். இவர் சோழராஜாவினுடைய சேனைத்தலைவனாகப் போரிலே பராக்ரமங்களைச் செய்ய, அதனைப் பார்த்த ராஜாவும் மகிழ்ந்து இவரைத் திருமங்கை நாட்டிற்கு குறுநிலமன்னராக்கினார். இப்படியிருக்கையில் ஆழ்வார் ஒருநாள் குமுதவல்லியினைப் பார்த்து மணக்க ஆசை கொண்டார். ஆனால் குமுதவல்லியோ தான் ஸ்ரீவைஷ்ணவனைத் தான் பதியாகக் கொள்ளுவேன் என்னவும், ஆழ்வாரும் திருநறையூர் நம்பியிடம் ப்ரார்த்தித்து, அவரிடத்திலே திருவிலச்சினை சாதிக்கப் பெற்றார்.   அதற்கு மேலும் குமுதவல்லி – ” நீர் தினமும் 1008 ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ததீயாராதனை நடத்த வேண்டும்” என்ன, ஆழ்வார் தாமும் குமுதவல்லி நாச்சியார்க்காக தினமும் 1008 ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ததீயாராதனை நடத்துபவராய் அதற்கு வேண்டிய பொருள்களை ஈட்டுவதற்காக வழிப்பறியில் ஈடுபட்டார். இவரினைத் திருத்த திருவுள்ளம் பற்றிய ஸ்ரீரங்கநாதன், பெரிய பிராட்டியாருடன் திருமணக்கோலம் பூண்டு வயலாலிக்கு எழுந்தருளினார். அவரிடம் கொள்ளையடிக்க திருமங்கையாழ்வார் அவரிடம் அனைத்துப் பொருள்களையும் கொடுக்கும்படி கேட்க, பெருமானும் அவரிடம் நீரே எடுத்துக் கொள்ளும் என்றருள, ஆழ்வார் தாமும் பலாத்காரத்தால் பொருட்களை அபகரிக்க முயல, அது முடியாமையினாலே – என்ன மந்திரம் போட்டாய் என்று பெருமாளை வினவவும் அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பனும் ஆழ்வார்க்கு திருமந்த்ரத்தை உபதேசித்தருளினான். மரங்களுக்கு அரசான திருவரசினடியிலே தெய்வத்துக்கரசான திருவரங்கத்தானிடம் இருந்து, மந்திரங்களுக்கு அரசான * வலங்கொள் மந்திரத்தை * நேராக உபதேசிக்கப்பெற்றவர் ஆலிநாட்டரசரான திருமங்கையாழ்வார்.  * பறிகொடுக்கிறவன் தெய்வத்துக்கரசு எனப்படும் தேவராஜன், பறிக்கின்றவர் ஆலி நாட்டரசு. பறிக்குமிடம் மரங்களுக்கு அரசான அரச மரம். * இவை மாலைத் தனியே என்ற தனியன் வ்யாக்யானத்தில் ஸ்ரீபிள்ளைலோகஞ்சீயர் ஸ்வாமி ஸ்ரீஸூக்தி

       வடமொழி மறையைப் பகுத்தவர் வேதவ்யாஸ பகவான் ஆவர். தென்மொழி மறைகளான திவ்யப்ரபந்தங்களைப் பகுத்தவர் * சீலங்கொள் நாதமுனி * ஆவர். அவர் அடைவே அருளிச் செயல்களை வரிசைப்படுத்துகையிலே, திருமந்த்ர அடைவிலே நம: பதத்தின் அர்த்தமாக கண்ணிநுண்சிறுத்தாம்பினையும், நாராயண பதத்தின் அர்த்தமாக பெரிய திருமொழியினையும் வகுத்தருளினார். எம்பெருமானாலே உபதேசிக்கப் பெற்ற திருமந்த்ரத்தினைக் கொண்டே பெரிய திருமொழியினைத் தொடங்கியருளுகிறார் ஆழ்வார். * நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் * என்று ஒருதடவை அன்றிக்கே ஒன்பது தடவை அருளுகிறார்.  மேலும் அத்திருமந்த்ர ப்ரதிபாத்யமான வஸ்து அர்ச்சாவதார எம்பெருமானே என்று அறுதியிட்டு அர்ச்சாவதார எம்பெருமான்களை திருப்பிரிதி தொடங்கி மங்களாஶாஸனம் செய்தருளுகிறார். இவ்வாழ்வார் தாமும் அதனை ஆதி – நடு – அந்தமாக இவரது பெரிய திருமொழியினில் * நாராயணா என்னும் நாமம் * (பெரிய திரு 1-1-1) [திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை நான் கிடைக்கப்பெற்றேன்], * பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் * (பெரிய திரு 1-8-9) [அநுஸந்திக்கத் தக்கதும் போக்யமுமான திருவஷ்டாக்ஷர மஹா மந்திரத்தை] , * நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் * (பெரிய திரு 8-10-3) [உனது திருவஷ்டாக்ஷர மந்திரமானது], * வினைகள் தவிர உரைமின் நமோ நாராயணமே * (பெரிய திரு 6-10-9) [கர்மவினைகள் தீருவதற்கு திருவஷ்டாக்ஷர மஹா மந்திரத்தைச் சொல்லுங்கள்], * நர நாரணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன் * (பெரிய திரு 10-6-1) [பெரிய திருமந்த்ரத்தைக் கொடுத்தருளியவன்] என்றருளினார்.

           இன்னமும் திருமந்த்ரத்தால் தேறின அர்த்தமான ஸர்வவிதபாந்தத்வம் – எல்லாவிதமான பந்துவும் எம்பெருமானே என்பதை * எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாழ்நாள் * என்னும் பாசுரத்தினால் அருளினார். * மாதா பிதா ப்ரதா நிவாஸ: ஸுஹ்ருத் கதிர் நாராயண: * என்கிறது ஸுபாலோபநிஷத். அன்னையாகவும், அப்பனாகவும், கூடப் பிறந்தவர்களாகவும், நன்மை செய்கின்றவனாகவும் இருப்பவன் எம்பெருமான் என்பதைக் கூறிற்று அந்த உபநிஷத் வாக்யமாவது.

         இத்திருமந்த்ரந்தான் பண்டைக்குலத்தைத் தவிர்த்து தொண்டக்குலத்தினை அருள வல்லது என்பதினை * குலம் தரும் செல்வம் தந்திடும் * என்கிற பாசுரத்தினால் அருளிச் செய்தார். மேலும் இத்திருமந்த்ரமே கைங்கர்யமாகிற செல்வத்தினைத் தந்திடும் என்பதினை * செல்வம் தந்திடும் * என்றார். பெருமானுக்கு ஆட்பட்டவர்கள் * குப்பை கிளர்த்தன்ன செல்வம் * என்றன்றோ இவ்வுலக செல்வத்தினை நினைப்பது. கைங்கர்யமாகிற ஸ்ரீயன்றோ இவர்கள் விரும்புவது! * லக்ஷ்ஷமணோ லக்ஷ்மீ ஸம்பந்த: * (இளையபெருமாள் கைங்கர்யார்த்தமாகக் காட்டுக்கு எழுந்தருளும் பொழுது அன்றோ இப்படிக் கொண்டாடப் பட்டார்!) *அந்தரிக்ஷ கத: ஸ்ரீமாந்! * ( ஸ்ரீவிபீஷணாழ்வான் லங்கையினையும் செல்வத்தினையும் துறந்தபின்பு அன்றோ – இப்படிக் கொண்டாடப்பட்டார்!) * ஸது நாகவர ஸ்ரீமாந் * (கஜேந்த்ராழ்வான் தன் முயற்சியில் நின்றும் கைவாங்கி/விட்டுவிட்டு எம்பெருமானை நாராயணா! ஒ மணிவண்ணா ! நாகணையாய்! என்றழைத்தருளின் போது ஸ்ரீயை உடையவரானார்). இது மட்டுமன்று – அடிய்வர்கள் உடைய வினைத்துயர்களை எல்லாம் ஒழித்துப் பொகட்டு விடும் என்பதினை * அடியார் படும் ஆழ்துயர் எல்லாம் நிலந்தரம் செய்யும் * என்றருளினார். நிலந்தரம் செய்யும் – ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை இரண்டு யோஜனைகள் காட்டியருளியுள்ளார் – இங்கு நினைக்கத்தக்கது. பாபங்கள் தொலைவது மாத்திரம் அன்று – *நீள்விசும்பு அருளும் * என்று பரமபத்தினையும், அங்கு எம்பெருமான் திருமுகமலர்த்திக்காக பண்ணும் கைங்கர்யத்தினையும் *அருளொடு பெருநிலம் அளிக்கும் * கொடுக்கும் 

       இவ்வருளிச்செயலில் ப்ரதிபாதிக்கப்படுகிற விஷயம் தான் ஏது என்னில், அர்த்த பஞ்சகமே ஆகும். திருமந்த்ர ப்ரதிபாதனமன்றோ என்னில், திருமந்த்ரத்தின் பொருள் தானும் அர்த்த பஞ்சகமாய் இருக்கும். இவ்விடத்தில் * அறியவேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம் * என்கிற பிள்ளைலோகாசார்ய ஸ்ரீஸூக்தி விவக்ஷிதம்.  அவை பர ஸ்வரூபம், ஜீவாத்ம ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம், புருஷார்த்த ஸ்வரூபம் என ஐந்தாய் இருக்கும்.

        பரத்வமாகிற ஜகத் காரணவஸ்துவினை * பிறப்பொடு மூப்பொன்றில்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை இறப்பெதிர் காலக்கழிவுமானானை * (பெரிய திரு 4-3-2) [பிறப்பு மூப்பு முதலிய ஆகாரங்களொன்றும் இல்லாதவனாய் (ஒருபடிப்பட்டவனாய்) என்றும் ஒருபடிப்பட்ட ஆநந்தக்கடலாய் இருப்பவனாய்], * தன்னாலே தன்னுருவும் பயந்த தானாய் தயங்கொளிசேர் மூவுலகும் தானாய் வானாய் * (பெரிய திரு 6-6-6) [தன்னுடைய இச்சையினாலே தனது திவ்யமங்கள விக்ரஹத்தை உண்டுபண்ணிக்கொண்ட திவ்யாத்மஸ்வரூபத்தையுடையனாய், உபயவிபூதிக்கும் நிர்வாஹகனாய்], * திருத்தனைத் திசைநான்முகன் தந்தையைத் தேவதேவனை * (பெரிய திரு 7-10-7) [திருத்தன் – பூர்ண திருப்தியுடையவன்; நான்முகன் தந்தை – திருமால்] இத்யாதி பாசுரங்களினால் அருளியுள்ளார். வ்யூஹ நிலையினில் உள்ள எம்பெருமானை * வங்கமலி தடங்கடலுள் வானவர்களோடு …… ஈசன் அவன்* (பெரிய திரு. 3-9-9), * செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணைவருட முனிவரேத்த வங்கமலி தடங்கடலுள் அநந்தன் என்னும் வரியரவின் அணைத்துயின்ற மாயோன் * (பெரிய திரு. 7-8-1)  இன்னமும் அவ்வெம்பெருமான் தானே அனைத்தாயும் நிற்கின்றவன் என்பதினை * பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்பதங்களும் பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும், பெருகிய புனலொடு நிலனும் …… அண்டமும் தானுமாய் நின்ற எம்பெருமான் * (பெரிய திரு 5-7-1) [பண்டை நான்மறையும் தானாய் நின்ற வெம்பெருமான், வேள்வியும் தானாய் நின்ற வெம்பெருமான், கேள்விப் பதங்களும் தானாய் நின்ற வெம்பெருமான் என்று பொருள் கொள்க. இதனை அரையர் ஸேவையில் ஸேவிக்கும் பொழுது நெஞ்சம் உருகாநிற்கும்! திருவரங்கம் தொடர்பான அருளிச்செயல் சந்தைகள் அனைத்தையும் ஸ்வாமிகள் அன்று ஸேவிப்பர்கள். இவையெல்லாம் தனக்கு சரீரமாகும்படி தான் சரிரியாயிருக்கின்ற எம்பெருமான் ], * பவ்வ நீருடை ஆடையாகச் சுற்றி பாரகலம் திருவடியா பவனம் மெய்யா செவ்விமாதிரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான் * (பெரிய திரு 6-6-3) இத்யாதி பாசுரங்களினாலும் அருளிச் செய்தார். * உலவுதிரையும் குலவரையும் ஊழி முதலா எண்திக்கும் நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் * (பெரிய திரு. 1-5-3); * வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய எம்பெருமான் * (பெரிய திரு 4-1-3) * திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத்து உயிர்களும் மற்றும் படர்பொருள்களுமாய் நின்றவன் தன்னை * (பெரிய திரு.4-3-3) இத்யாதி பாசுரங்களினால் சரீர-சரீரி பாவம் அருளிச் செய்தார். எம்பெருமானுடைய ஆச்சர்ய சக்திகளை யாவரும் அறிந்து கொள்ளவும் இயலாது என்பதினை * சேயனென்றும் மிகப்பெரியன் நுண்ணேர்மையினாய, இம்மாயையை ஆரு மறியா வகையான் * என்றருளிச் செய்தார். எம்பெருமான் யவர்க்கும் எட்டாத பரமபதந் தன்னில் இருக்கிறான். திருமேனியிலும் பெரியவனாக இருக்கிறான். ஆயினும் ஸூக்ஷ்மமான வஸ்துக்களிலும் வ்யாபிக்கிறான் – இம்மாயையை ஒருவர் அறிவதும் இயலாது என்கிறார்

              ஜீவாத்ம ஸ்வரூபத்தை * மண்ணாய் நீர் எரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன் * என்று தேஹத்தினைக் காட்டிலும் வேறானது என்றும், அசித்தினுடைய சேர்க்கையே இவ்வாத்ம வஸ்துவின் துன்பங்களுக்குக் காரணம் என்றும் அருளினார். இவ்வாத்ம வஸ்து தானும் தேஹாதிகளில் புகுரவும், வெளிக்கிளம்பவும் (கர்மாநுகுணமாக) என்பதினை * ஊனிடைச்சுவர் வைத்து என்புதூணாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல் தானுடைக்குரம்பை பிரியும் போது * என்ற பாசுரத்தில் உணர்த்தினார்.

                எம்பெருமானைப் ப்ரிந்து வாடுவதற்குக் காரணம் அசித் ஸம்பந்தம் என்பதனை * மறந்தேன் உன்னை – அதனால் இடும்பை குழியில் பிறந்தே எய்த்து ஒழிந்தேன் * என்றும், * கோவாய் ஐவர் என் மெய்குடியேறி கூறை சோறு தா * என்றும், * பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை வேண்டேன் * என்றித்யாதி பாசுரங்களினால் எம்பெருமானை அடையத் தடையாய் இருக்கும் சப்தாதி விஷயங்களின் தன்மைகளச் சொல்லும் முகமாக விரோதி ஸ்வரூபம் அருளிச் செய்தார்

              உபாயமாவது फलसमीपनेत्रुत्वम् (பலஸமீபநேத்ருத்வம்) ஆகும். அதாவது பலத்தின் அருகில் அழைத்துச் செல்வது உபாயத்வமாகும். * பலத்தோடே ஸந்திப்பிகுமதிறே உபாயமாகிறது * (திருப்பாவை குத்துவிளக்கெரிய – ஆறாயிரப்படி நாயனார் வ்யாக்யானம்).  வேதாந்தத்தில் விதிக்கப்பட்ட உபாயங்கள் பக்தியும் ப்ரபத்தியுமாகும். அதில் இவ்வாழ்வாருக்குத் திருவுள்ளமானது ப்ரபத்தி தான் என்பதை * வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் * (பெரிய திரு. 1-6-1) * விரையார் திருவேங்கடவா நாயேன் வந்தடைந்தேன் * (பெரிய திரு 1-9-1) * நாங்கைக் காவளம்பாடி மேய கண்ணனே களைகண் நீயே * (பெரிய திரு 4-6-1), * உலகமளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணிபொழில் திருவரங்கத்தமானே! * (பெரிய திரு 5-9-9) இத்யாதி பாசுரங்களினால் அருளிச் செய்தார். 

       இப்படி சரணம்புக்கவிடத்திலும், அத்தனை லக்ஷணங்களையும் அருளிச் செய்தார். * தேனுடைக் கமலத் திருவினுக்கரசே * என்று பெரிய பிராட்டியார் முன்னாக சரணம் புக்கார்.  பெரிய பிராட்டியாரின் புருஷகாரபலத்தாலே * வந்து உன் திருவடி அடைந்தேன் * என்றார். இதுதானும் * அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா * என்று நம்மாழ்வார் பெரிய பிராட்டியார் முன்னாக சரணம் அடைந்தது போல் அடைந்தார். இவர்களை அடியொற்றியே ஸ்வாமி எம்பெருமானாரும் * சரணம் அஹம் ப்ரபத்யே * என்று சரணாகதி கத்யத்திலே முதலில் பெரிய பிராட்டியாரை சரணம் புக்கார். சேதனன் எம்பெருமானை சரணம் புகுகிற நிலையினில் பெரிய பிராட்டியார் புருஷகாரபூதையாய் இருப்பள். சேதனனுடைய அபராதத்தினைக் கண்டு எம்பெருமான் சீறாதே அவனை சேதனனை அங்கீகரிக்கச் செய்து விடுவள். ஆகையினாலே இவள் முன்னாகவே அவனைப் பற்ற வேண்டும். இவள் புருஷகாரமாக ஆனால் எம்பெருமான் கார்யம் செய்து தலைக்கட்டுகிறான். இப்படிச் சரணம் புகுகிற சேதனன் அகிஞ்சனனாய் (கைமுதலில்லாமை) அநந்யகதியுடையவனாய் (வேறு புகலிடம் இல்லாதவனாய்) இருத்தல் வேண்டும். இதனையும் ஆழ்வார் * யானுடைத் தவத்தால் * என்றதினால் அருளிச்செய்தார். இவ்வாழ்வார் தாமும் இவரது வாழ்க்கை நடை எங்ஙனம் இருந்தது என்பதைனை விரிவாக அருளிச்செய்தார். தொடக்கமே * வாடினேன், வாடி வருந்தினேன் * என்றன்றோ அருளியது! அதனால் இங்கு தவம் என்பது எம்பெருமானையே குறிக்கும். இதனால் இவரது கைமுதலிலாமையினையும் அருளிச் செய்தார் ஆயிற்று!   * தாயே தந்தையென்னும் * பதிகத்திலும் இந்த ஆகிஞ்சன்யமே அருளிச் செய்துள்ளார். * நல்லதோர் அறம் செய்துமிலேன் *, * நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன் * இத்யாதி பாசுரங்கள் கொண்டு இவ்வர்த்தத்தினை ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை காண்பித்தருளியுள்ளார். * வெறிந்து வந்து – நின்னடிக்கே சிறந்தேன் * (6-2-4)  என்று வெறுமையை உடையேனாய் வந்து என்று ஆகிஞ்சன்யத்தை தெரிவித்தருளினார். 

       இப்படி ஆழ்வார் தாமும் எம்பெருமானை அடைந்தமை, சரணம் பற்றியவை ஆகியவைகளுக்குக் காரணம் எம்பெருமானே என்பதினை * தாய் நினைந்த கன்றேயொக்க என்னையும் தன்னையே நினைக்கச்செய்து, தானெனக்காய் நினைந்தருள் செய்யும் அப்பனை * (பெரிய திரு 7-3-2) என்கிற பாசுரத்தினால் அருளிச் செய்தார். இளங்கன்றானது தனது தாயையே எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கும். உலகுக்கெல்லாம் தாயான எம்பெருமான் தானும், தன்னையே நினைந்திருக்கும்படி ஆழ்வார்க்கு அருளினான் என்று ஆழ்வார் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையினை வெளியிட்டருளினார். இங்கு வ்யாக்யான ஸ்ரீஸூக்திகள் * எல்லாம் செய்தாலும் இவனுடைய நினைவுக்கு வைகல்யமுண்டாகக்கூடும். இவன் தலையில் இவ்வருந்தேவையிடுகிறதென் * என்று * அஹம் ஸ்மராமி * என்கிறபடியே, நான் நினைக்கமாட்டாத குறைதீர, எனக்காகத் தான் நினைத்து *
       இப்படி ஆழ்வார் அடைந்த நன்மைகளுக்குக் காரணம் ஏது என்னில் அது எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபை என்பதினை * பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே * என்று எம்பெருமானது நிர்ஹேதுக அருளே என்றருளிச் செய்தார். அதுவும் மீளவும் ஸம்ஸாரத்தில் வாராதபடி இருந்ததொன்று என்பதினை * சிக்கெனத் திருவருள் பெற்றேன் * என்றருளினார். 

         உபேயமாவதும் எம்பெருமானைக் கிட்டி அவனுடைய திருமுகமலர்த்திகாகப் பண்ணும் கைங்கர்யம் என்பதினை * வெங்கதிர்ப் பரிதி வட்டத்தின் ஊடு போய் விளங்குவாரே * என்பது முதலான பாசுரங்களினால் அருளிச் செய்தார். ஆழ்வார்கள் தாங்களும் சேஷத்வத்தை எம்பெருமான் அளவோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். அது அவனது அடியவர்கள் வரை செல்லும் என்பதினை உணர்த்துவர்கள். இவ்வாழ்வாரும் அதனை * திருவெட்டெழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கடிமை * என்றும், * நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு * பதிகத்தில் அவ்வடியவர்களை * அவர் எம்மை ஆள்வாரே * * நினைவார் என் நாயகரே * * அவர் எங்கள் குலதெய்வமே * * நச்சித் தொழுவாரை நச்சு என்தன் நல்நெஞ்சே * * வலங்கொள் என்மடநெஞ்சே * * தொழுவாய் என் தூய் நெஞ்சே * என்றருளிச்செய்தார். * கண்சோரவெங்குருதி * (7-4) வந்திழிய பதிகத்திலும் இவ்வர்த்தமே அறுதியிடப்பட்டுள்ளது  இப்புருஷார்த்தத்தினையே * சிறுபுலியூர்ச்சலசயனம் தொழுநீர்மையதுடையார் அடிதொழுவார் துயரிலரே * (7-9-6) என்றருளினார்.

பரகால நாயகி

           ஆழ்வார்கள் தாமான தன்மையை விட்டு பெண் நிலைமை அடைந்து பாசுரங்கள் அருளிச் செய்வர்கள். இது கூடுமோ என்னில், புருஷோத்தமனான எம்பெருமானின் தன்மையைப் பார்த்தால், இவர்களை பெண் உடை உடுக்கப் பண்ணும்.  திருநெடுந்தாண்டகம் * பட்டு உடுக்கும் * பாசுர வ்யாக்யானத்தில் ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை * ஸ்வாமித்வ ஆத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத்யா: ஸ்வாமிநோகுணா: | ஸ்வேப்யோ தாஸத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வதாயிந: ||  என்கிறபடியே புருஷோத்தமனுடைய பும்ஸ்த்வமாவது எதிர்த்தலைக்கு ஸ்த்ரீத்வதாயியாயிருக்கையாலே நான் ஸ்த்ரீ என்கிற புத்தி பிறக்கத்தட்டில்லை; ஸ்த்ரீ என்கிற புத்தி பிறக்கையாவதுதான் ஸ்த்ரீகளோடு ஆகாரஸாம்யத்தாலே பிறக்கும் புத்தியல்ல; புருஷ விஷயத்தில் ஸ்த்ரீகளுக்குப் பிறக்கும் அநுராகவிசேஷபுத்தி பிறக்கை. * . இங்கு ஸ்வாமி எடுத்து உதாஹரித்தருளியுள்ள ஶ்லோகத்திற்குப் பொருளானது – எம்பெருமானிடமுள்ள தலைவனாயிருக்கும் தன்மை, ஆத்மாவாயிருக்கும் தன்மை, பயனைப்பெறும் தன்மை, ஆணாயிருக்கும் தன்மை முதலிய குணங்கள் ஜீவாத்மாக்களுக்கு முறையே அடியவனாகும் தன்மையினையும், உடலாயிருக்கும் தன்மையினையும், பிறர்க்குப் பயன்படும் தன்மையினையும், பெண்தன்மையினையும் கொடுக்கின்றன. இங்கு * ஸ்வேப்யோ * என்கிற பதத்தினால் எம்பெருமானிடம் உள்ள திருக்குணங்கள் ஜீவாத்மாவிடம் உள்ளவற்றான (அடியவனாகும் தன்மையினையும், உடலாயிருக்கும் தன்மையினையும், பிறர்க்குப் பயன்படும் தன்மையினையும், பெண்தன்மை) ஆகியவற்றினை எதிர்ப்பார்க்கின்றன என்றதாயிற்று. ஜீவாத்மாவிற்கு இயல்பான தன்மையாவது பெண்ணிலைமையே ஆம். எம்பெருமான் ஒருவனே புருஷோத்தமன். அவனைத் தவிர அனைவருமே பெண்ணிலைமை உடையவர்களேயாம்.

        * ஜ்ஞானத்தில் தம் பேச்சு ப்ரேமத்தில் பெண் பேச்சு * (ஆசார்ய ஹ்ருதயம் – 118) என்கிற ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை குறிக்கொள்ளத் தக்கது.  ஜ்ஞானம் முதிர்ந்த தசையில் தாமான தன்மையில் பாசுரங்கள் அருளிச் செய்வர்கள். ப்ரேமம் மிகுந்த தசையில் நாயிகா பாவத்தில் பாசுரங்கள் அருளிச் செய்வர்கள். * காவியங்கண்ணியென்னில் கடிமாமலர்ப்பாவை ஒப்பாள் * என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்தபடி ஜீவாத்மாக்கள் அனைவருக்கும் பெரிய பிராட்டியாரோடு ஸாம்யம் (ஒப்பு) இருக்கும்.  * கந்தல் கிழிந்தால் ஸர்வர்க்கும் நாரீணாமுத்தமையினுடைய அவஸ்தை வரக் கடவதாயிருக்கும் * என்றருளிச் செய்தார் ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர்.  கந்தல் எனப்படும் ப்ரக்ருதி ஸம்பந்தம் நீங்கப் பெற்றால் ஜீவாத்மாக்கள் அனைவருக்கும் பெரிய பிராட்டியாரோடு ஒப்புச் சொல்லாம்படியிருக்கும்.  * பட்டு உடுக்கும் * பாசுர வ்யாக்யானத்தில் ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி * பிராட்டிமார்க்கும் இவர்க்கும் அநந்யார்ஹ சேஷத்வமாகிற ஸம்பந்தம் ஒத்து இருக்கையாலும், (1) நமக்கும் பூவின்மிசை நங்கைக்குமின்பனை (திருவாய்மொழி 4-5-8) என்கிறபடியே போகம் ஸமாநமாயிருக்கையாலும், (2) முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யாவிவோத்த்ருதௌ – என்று இளையபெருமாள் பிராட்டியோடே ஏகப்ரக்ருதியாய்த் தம்மைச் சொல்லுகையாலே – வ்யதிரேகத்தில் ஆற்றாமை ஒத்து இருக்கையாலும், பிராட்டிதசையை ப்ராபிக்கத்தட்டில்லை. * (1) நமக்கும் – ஆழ்வார் இன்று வந்து எம்பெருமானின் திருவடித் தாமரைகளைப் பற்றிய தன்னையும், பூவின்மிசை நங்கை – * அகலகில்லேன் * என்று எம்பெருமானை விட்டு ஒரு க்ஷணம் பிரியாதவளான பெரிய பிராட்டியார்க்கும், இன்பன் (இனியவன்) என்றார். இதனால் இப்போது வந்து ஆச்ரயிக்கும் ஆழ்வார்க்கும், * நித்யாநபாயிநீ * யான பெரிய பிராட்டியார்க்கும் போகம் ஒத்திருக்கும் என்றருளினார். (2) இளையபெருமாள் தம்மைப் பற்றி அருளுமிடத்தில், * நானும் ஸீதையும் * உன்னைவிட்டு ஒரு க்ஷணம் பிரியமாட்டதவர்களாய் இருக்கிறோம் * என்று ஸமமாக அருளினார். இதனாலும் ஜீவாத்மாக்கள் அனைவருக்கும் பெரிய பிராட்டியாரோடு ஒப்புச் சொல்லாம்படியிருக்கும் என்னும் அர்த்தம் தேறுகிறது என்ற்ருளுகிறார் ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை.

100977722_1366061916930580_7493401111726915584_n

பரகால நாயகி

ஆறு ப்ராகரத்தால் பெரிய பிராட்டியாருக்கு ஒப்பாவர்கள் ஜீவர்கள். அவை

 1. அநந்யார்ஹ சேஷத்வம் (மற்றவர்க்கன்றி எம்பெருமானுக்கே சேஷப்பட்டிருப்பது)
 2. அநந்ய சரணத்வம் (எம்பெருமானையே சரணாகக் கொண்டிருப்பது)
 3. அநந்ய போக்யத்வம் (எம்பெருமானையே போக்யமாகக் கொள்ளுவது)
 4. ஸம்ஶ்லேஷத்தில் தரிக்கை (எம்பெருமானோடு இருக்கும் தசையில் தரிக்கை)
 5. விஶ்லேஷத்தில் தரியாமை (எம்பெருமானை விட்டுப் பிரிந்தால் தரியாமை)
 6. ததேக நிர்வாஹ்யத்வம் (எம்பெருமானாலே நிர்வஹிக்கத் தகுந்திருக்கை).

             இதனை *தூவிரிய மலருழக்கி * பதிகத்தில் ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை * ஸகலாத்மாக்களுக்கும் பிராட்டிமார் தசை பிறந்தபடிதான் என் என்னில்; அநந்யார்ஹசேஷத்வம் என்று ஒன்று உண்டு, அது இரண்டு தலைக்கும் ஒத்திருக்கும்; கலந்த போது ப்ரீதி பிறக்கையாலும், பிரிந்தபோது ஆற்றாமை பிறக்கையாலும், ததேக போகத்தாலும், அவன் நிர்வாஹகனாக இத்தலை நிர்வாஹம் ஆகையாலும், ஸ்வயத்நத்தாலே பேறு என்று இருக்கை அன்றிக்கே அத்தலையாலே பேறு என்று இருக்கையாலும், பிராட்டிமார் படி உண்டாகத் தட்டு இல்லை *  என்றருளினார்.               

                   ஆதலால் நாயிகா பாவத்தில் ஆழ்வார்கள் பாசுரங்கள் அருளிச் செய்த்ததற்குக் கொத்தை ஒன்றுமில்லை என்றதாயிற்று. இதனை * வித்யை தாயாகப் பெற்று * என்கிற ஒரு சூத்ரத்தினால் ஆசார்ய ஹ்ருத்யத்தில் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் * மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று * (ஆழ்வார் தம்மை மணிவல்லி என்று நாயிகா பாவம் ஏறிட்டுக் கொண்டது அன்று) அருளியது குறிக்கொள்ளத் தக்கது.

              ஆழ்வார் தாமும் தாய்ப் பாசுரமாகவும் தலைமகள் பாசுரமாகவும் அருளுவது கூடுமோ என்னில, எம்பெருமானே வந்து கைக்கொள்ளுவன் என்று உபாயத்தில் துணிவு தாய்ப் பாசுரமாகவும், எம்பெருமானோடு உடனே கலந்து பரிமாறவேண்டும் என்கிற ஆசையானது/த்வரையானது தலைமகள் பாசுரமாகவும் ஆழ்வாரால் வெளியிடப்பட்டுள்ளது. தாயார், தோழிமார், தலைமகள் என் மூன்று தசையிலும் பாசுரமிட்டவர் ஸ்வாமி நம்மாழ்வார். தாயார், தலைமகள் என் இரண்டு தசைகளில் பாசுரமிட்டருளியவர் ஸ்வாமி திருமங்கையாழ்வார். இது தன்னை ஸம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞாவஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர் என்கிற ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை உணர்த்தும்.

தாய் பாசுரங்கள்

(1) திவளும்வெண்மதிபோல் (2-7)

            எம்பெருமானோடு தான் நினைத்தபடி கலந்து பரிமாற முடியாத ஆற்றாமையினால் தாமான தன்மை போய் பிராட்டியின் தசையினை அடைந்தார் ஆழ்வார். ஆழ்வாருடைய நிலையினைப் பார்த்து, இதற்குக் காரணனான எம்பெருமானை நோக்கி தாய் கேட்பதாக அமைந்திருப்பது இத்திருமொழி. * கங்குலும் பகலும் * என்கிற திருவாய்மொழியினை ஒத்திருப்பது இத்திருமொழி.  தாய்ப் பாசுரமாக அமைவது – எம்பெருமான் நம்மை வந்து கைக்கொள்ளுவன் என்கிற அத்யவஸாயத்தை வெளியிட என்பது முன்னமே உரைக்கப்பட்டது. இத்திருமொழியில் * தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் * (எம்பெருமான் வந்து ரக்ஷித்தருளுவன் என்கிற ப்ரபந்ந குல மரியாதையை ஆராய்ந்து இலள்) என்கிற பாசுரம் இங்கு அநுஸந்தேயம். * உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே ! * என்கிற இது ஆழ்ந்த ஸத்ஸம்ப்ரதாய விஷயத்தினை உள்ளடக்கியது.

(2) கள்வன்கொல் யானறியேன் (3-7)

          தனக்கும் எம்பெருமானுக்கும் நடந்த சேர்க்கையினை மானஸீகமாக அநுபவித்து அதனை தாய்ப் பாசுரமாக அருளுகிறார் ஆழ்வார்.  * நல்லதோர் தாமரைப் பொய்கை * (3-8) என்னும் பெரியாழ்வார் திருமொழிப் பாசுரமும் இதே சாயையில் அமைந்ததாகும்.

(3) கவளயானைக் கொம்பொசித்த (4-8)

                  எம்பெருமானை உடன் அடைய வேண்டும் என்கிற த்வரையினாலே, தாமான தன்மை போய் அவனைப் பிரிந்திருப்பது ஆற்றாமையினால் நோவுபட்டு, அவன் படிகளை வாய் வெருவுகிற தலைமகள் நிலையினை திருத்தாயார் பாசுரமாக இருக்கிறது இத்திருமொழி. 

(4) வெருவாதாள் வாய்வெருவி (5-5)

                பரகால நாயகியானவள், ஸர்வ ரக்ஷகனான எம்பெருமான் அருகில் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்க, அவனிடத்தில் எல்லா விதமான கைங்கர்யங்களும் செய்யப் பெறாமையினால் ஒரு பிராட்டி தசையினை அடைந்தாள். இதைக் கண்ட திருத்தாயார் ” அவனை இவளோடு சேர்த்து வைக்கப் பெற்றிலேன். இவளை நோவு (துன்பம்) அடையாமல் இருக்கவும் வைக்கப் பெற்றிலேன் – என் செய்வேன்! ” என்றருளுவது இத்திருமொழி. 

(5) சிலையிலங்கு பொன்னாழி (8-1)

              இவ்வாழ்வார்க்கு திருக்கண்ணபுரத்தம்மானிடம் உள்ள காதல் ஒருவராலும் சொல்ல இயலாது. இத்திருமொழி தொடங்கிப் பத்துப் பதிகங்களாலே திருக்கண்ணபுரம் மங்களாஶாஸனம் நடக்கிறது. இத்திருமொழியிலே ஆழ்வாரை தரிசித்தவுடனே, திருத்தாயார், ஆழ்வார் திருக்கண்ணபுரத்தம்மானைக் கண்டுவிட்டாள்; அவனுடைய ஸௌந்தர்யாதி குணங்கள், ஆண்பிள்ளைத்தனம், திவ்யாயுதங்களை தரித்திருக்கை, கருடவாஹனனாயிருக்கை ஆகியவற்றில் ஆழ்ந்துவிட்டாள். என் ஹித வசனங்களைக் கேட்கின்றிலள் என்று திருத்தாயார் பாசுரமாக அமைந்துள்ளது.

இத்திருமொழி ப்ரவேசத்தில் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை – எப்படி தந்தையான உத்தாலகர் ஶ்வேதகேதுவினைப் பார்த்தவுடன் இவன் வேதாந்திகள் அறிந்தவாறு த்ரிவிதகாரணமாக ப்ரஹ்மத்தினை அறியவில்லை என்று புரிந்து கொண்டாரோ, அதே போன்று பராங்குச நாயகியை தரிசித்தவாறே திருத்தாயார் – இவள் திருக்கண்ணபுரத்தம்மானின் ஸ்வரூப குண விபூதிகளை நன்கு அறிந்து கொண்டு விட்டாள் என்று அறுதியிடுகிறாள் – என்று வ்யாக்யானித்துள்ள ஸ்ரீஸூக்திகள் மிகவும் அற்புதமானவை

(6) தெள்ளியீர் தேவர்க்கும் (8-2)

                      * கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தம்மானை நோக்கி – ” நீர் இவள் நெஞ்சைப் பறித்தது மாத்ரமன்றிக்கே இவளது வளைகளையும் பறிக்க வேணுமோ?” என்று திருத்தாயார் கேட்பதாக அமைந்தது இத்திருமொழி.

(7) மூவரில் முதல்வன் (9-9)

             திருத்தாயார் தலைவியினது ஆற்றாமை கண்டு, எம்பெருமானோடே சேர்ந்தல்லது இவள் தரிக்கமாட்டாள் போல் இருக்கிறது. இவள் சேர்ந்து விட வல்லள் தான். இப்படி நோவு படுகிறாளே!” என்று கொண்டு பின்பு அவனோடு சேர்ந்து விடுவள் என்று உறுதியாகக் கூறுவதாக அமைந்தது இத்திருமொழி. (1) கூடுங்கொலோ? (2) காணுங்கொலோ? (3) அணுகுங்கொல்? (4) நணுகுங்கொல்? (5) தொழவல்லள் கொலோ? (6)காணுங்னொலொ? (7) தொழவல்லள் கொலோ? (8) தொழவும் முடியும் கொல்? (9) நணுகுங்கொல்? என்று சந்தேஹமாக அருளி கடைசியில் அணியிழை காணும் என்று அறுதியிட்டது நினைக்கத்தக்கது

(8) பூள்ளுருவாகி நள்ளிருள் வந்த (10-9)

திருத்தாயார் தலைவியினது ஆற்றாமை கண்டு இவள் க்ரமமாகக் கிடைக்கட்டும் என்று ஆறியிருப்பவள் அன்று , என்று இவளது தசையினைக் கண்டு என் செய்வோம் என்று பார்த்து ” எம்பெருமான் மிடுக்கை உடையவன், தான் நினைத்த கார்யங்களை செய்து முடிக்கக்கூடியவன், குணங்களையுடையவன், சிறந்த வடிவழகை உடையவன் என்று கொண்டு லோகத்தில் ஆற்றாமையுடையவர்கள் எல்லாரும் சொல்லிக் கூப்பிட்ட பாசுரத்தை இவளுடைய வ்யஸநத்திற்கு ஒப்பாகச் சொல்லி, இவளுடைய நிலையினைச் சொல்லும் திருத்தாயார் பாசுரமாக ஆயிற்று இத் திருமொழி

தலைமகள் பாசுரங்கள்

(1) திரிபுரம்மூன்றுஎரித்தானும் (2-8)

               திருமங்கையாழ்வார்க்கு * உருவெளிப்பாடாக அமைந்தது இத்திருமொழி. நம்மாழ்வார்க்கு * எங்ஙனேயோ அன்னைமீர்காள்! பதிகம் போன்றது. ஆழ்வார் தாம் அனுபவித்த எம்பெருமானைத் தோழியர்க்கும், தாயார்க்கும் உரைப்பதாக அமைந்தது இத்திருமொழி. எம்பெருமானுடைய ஆபரண சோபை (செம்பொனிலங்கு வலங்கை வாளி திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள் .. – எதிரிகள் சினத்தெழும் போதைக்கும் அபலைகளை வசீகரிக்கைக்கும் இவையிரண்டுக்கும் பரிகரமாயிற்று திவ்யாயுதங்கள்); அவயவ சோபை (நீதிவானத்து அஞ்சுடர் போன்று இவர் ஆர்கொல் என்ன – ஜீவாத்மாக்களுக்கு உள்ள சேஷித்வ முறைகெடாதபடி பரிமாற்றம் செய்யும் பரமபதத்திலே அதயதத: பரோதிவோஜ்யோதிர்தீப்யதே சாந்தோக்யோபநிஷத்-3-13-7 என்று ஸ்வர்க்கத்தையும் கடந்து பிரகாசிக்கிறது – என்று இருக்கக்கடவ) பரத்வம் (மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க) முதலான திருக்குணங்கள், சாஸ்த்ர ப்ரதானம் பண்ணியருளினது, எம்பெருமானுடைய திருமேனி முதலிய வர்ணனைகள் கொண்டத் இத்திருமொழி

(2) தூவிரிய மலருழக்கி (3-6)

           ஸ்வாமி நஞ்சீயர் மிகவும் உகந்தருளினது இத்திருமொழி. இத்திருமொழி மிகவும் விலக்ஷணமானது, ஆழ்வாருடைய இப்பாசுரங்கள் இந்நிலத்திற்கு எட்டாதவைகள். ஆழ்வார் இத்திருமொழியில், பிராட்டிமார் தசையினை அடைந்து எம்பெருமானுக்குத் தூது விடப் பார்த்து, தூது விடுவார்க்குத் சொல்லுகிற வார்த்தையினாலே – தம்முடைய நெஞ்சானது புண்பட்டிருக்கிற ஸமயத்திலே எம்பெருமான் அருகில் வர – அவனுக்குத் தன்னுடைய நிலைமைகளைச் சொல்லுகிறார் தலைமகள் நிலையில். “இவ்விடத்தே பட்டர் அருளிச்செய்வதொரு வார்த்தையுண்டு, ஸமஸ்த கல்யாணகுணாத்மகனாய் உபய விபூதியுக்தனாய் ஸர்வாதிகனாய் ஸர்வநியந்தாவாயிருக்கிற ஸர்வேச்வரன் நாலிடைப்பெண்களிருந்தவிடத்தே புக்கல்லது நிற்கமாட்டாத செல்லாமைவிளைய, அவர்கள் நீ இங்குப் புகுராதேகொள் என்ன, விலங்கிட்டாப்போலே பேரவும் திரியவும்மாட்டாதே தடுமாறி நின்றானென்கிற ஸௌசீல்யம் தங்களையுமிவர்களையுமொழிய ஆரறிந்து கொண்டாட வ்யாஸாதிகள் எழுதியிட்டுவைத்துப் போனார்களோ? என்றருளிச்செய்வர்” – இது மின்னிடை மடவார் பதிகத்தில் * குழகி எங்கள் குழமணன் கொண்டு * என்கிற பாசுரத்தில் உள்ள ஈட்டு ஸ்ரீஸுக்தி. இதே போன்றது ஆழ்வார்க்கும் எம்பெருமானுக்கும் இந்த பதிகத்தில் நடந்த பரிமாற்றங்கள்! இந்த அற்புதமான பதிகம் ஆனது ஆழ்வார்க்கும் அவனுக்கும் நடந்த உரையாடல் ஆக ஆவது – இது தன்னுடைய வைலக்ஷண்யத்தை அறிபவர்கள் நம் ஆசார்யர்களே!

(3) கரையெடுத்த சுரிசங்கும் (8-3)

             இதற்குக் கீழ்த்திருமொழியில் *தெள்ளியீர்! தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் — கைவளை கொள்வது தக்கதே * என்று திருத்தாயார் பாசுரமாக எனது பெண்பிள்ளையின் கை வளைகளைப் பறித்துக் கொண்டீரே என்று கேட்பதாக இருந்தது, அதைக் கேட்ட பெண்பிள்ளையானவள் தனது திருக்கைகளை தடவிப் பார்த்து திருக்கண்ணபுரத்து உறையும் பெருமானுக்கு இழந்தேன் என் வரிவளையே! என்று சொல்வதாக இருக்கிறது இத்திருமொழி. வளைகளை இழத்தல் என்பது ஸ்வாபதேசமாக மமகாரம் நீங்குதலைக் குறிக்கும். * கலைவளை அஹம் மம க்ருதிகள் * என்கிற ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை நோக்கத்தக்கது.

(4) பொன் இவர்மேனி (9-2)

           எம்பெருமான் அழகிய ஆபரணங்களோடு சங்கு சக்கரமேந்தி, திருத்துழாய் மாலையோடு கருடாரூடனாய் ஆழ்வார் நெஞ்சுக்கு விஷயமாக – அப்பெருமானுக்குத் தோற்று ஆட்செய்ய இயலாமையினை தலைமகள் பாசுரமாக அருளுகிறார் ஆழ்வார். தோழிக்குத் தலைமகள் கூறும் பாசுரமாக அமைந்தது இத்திருமொழி.

(5) தன்னை நைவிக்கிலென் (9-3)

             நாயகன் வரக் காணாமையினாலே ஆற்றாமை கரைபுரண்டு – இனி நாம் அவன் வரக் காத்திருக்கலாகாது. ஈச்வரனோடே உடன் கலக்க வேண்டும் என்று பார்த்து ஸ்த்ரீகளுக்குச் சேர்ந்த குணங்களான அச்சம், மடம், நாணம் ஆகியவற்றைப் பொகட்டு – அவன் திருமுகத்தை பார்ப்பதே அமையும் என்றிருக்கிறாள் நாயகி.அப்போது தோழி இது உனக்குச் சேராது என்று சொல்ல, அவளையும் உதவியாகக் கொண்டு புறப்படுகிறாள் தலைவி.

(6) காவார் மடற்பெண்ணை (9-4)

        கீழ்த் திருமொழியில் (தன்னை நைவிக்கிலென்) தான் திருப்புல்லாணி நோக்கி புறப்பட்ட தலைவியானவள், கண்ணால் கண்ட பக்ஷிகளைத் தூது விடுதல், பந்துக்கள் வசனங்களைக் கேளாத தசையாய் இருத்தல் என்று நிலையினை உறைப்பதாக இருக்கிறது இத் திருமொழி. இத்திருமொழியில் * பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே * என்கிற சந்தையின் வ்யாக்யானத்தில் ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வாரது நிலையினை வெகு அழகாகக் காட்டுகிறார். * நித்யஸூரிகள் நித்யாநுபவம் பண்ணா நின்றார்கள். இவ்வருகுள்ளார் விஷயங்களிலே அந்யபரராகா நின்றார்கள். மூன்றாம் விபூதியாகப் பண்ணிவிட்டதாகாதே நோவு படுத்துகைக்கு நம்மையென்கிறாள். * நமக்கு என்று ஆழ்வார் நிலையினை அருளுகிறார். நித்ய ஸூரிகள் பரமபதத்திலே நித்யாநுபவம் பண்ணுகிறார்கள். அந்த அனுபவத்திற்குத் தடையே கிடையாது! இந்த ஸம்ஸார மண்டலத்தில் உள்ளவர்கள் – * சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம் * (சப்த, ஸ்பர்ச, ரூபம் முதலான விஷயங்களைக் கண்டு, இந்த ஆத்மா எம்பெருமானுக்கு அடிமைப்பட்டது என்பதினை மறந்து) என்றிருக்கிறார்கள். * ஸம்ஸாரிகள் தங்களையும் ஈச்வரனையும் மறந்து, ஈச்வர கைங்கர்யத்தையும் இழந்து இழந்தோம் என்கிற இழவுமின்றிக்கே * என்கிற முமுக்ஷுப்படி ஸ்ரீஸூக்தி அநுஸந்தேயம். இப்படியிருக்கையில் நீயும் (தோழி) நானும் மட்டும் இப்படி எம்பெருமானை நினைத்திருகிறோமே! * உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே! * என்றன்றோ ஆழ்வார்கள் நிலை இருப்பது.

(7) தவள இளம் பிறை (9-5)

           கீழே நடந்தவைகளுக்குப் பக்ஷிகளைத் தூதுவிடுதல், நெஞ்சைத் தூதுவிடுதல் ஆகியவை செய்து அவை வருவதற்கு முன்னே நோவுபடுவாளாயிருந்தாள் தலைவி. அப்படிப்பட்ட தலைவியை நோக்கி தாய்மாரும் தோழிமாரும் சிலவற்றைச் சொன்னார்கள். அவர்களை நோக்கி அவைகள் (தென்றல், மன்மதன், மாட்டின் கழுத்தில் பூட்டிய மணி, குழலின்னிசை, அன்றிலின் குரல், வாடைக்காற்று, சந்த்ரன் ஆகியவை என்னைத் தொல்லைப்படுத்துகின்றன. இவை தீர என்னைத் திருக்குறுங்குடி திவ்யதேசத்திலே சேருங்கள் என்று தலைமகள் வார்த்தையாக இருப்பது இத்திருமொழி.  இத்திருமொழியில் சரணாகதியின் தன்மை சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் வ்யாக்யானம் கொண்டு அனுபவிக்கத்தக்கது. 

(8) திருத்தாய் செம்போத்தே (10-10)

            ஆழ்வார் தலைவி தசையினை அடைந்து தன்னுடைய ஆற்றாமையினாலே அவனை என்னோடே சேர்க்க வேண்டும் என்று, தான் காணுகிற பக்ஷி முதலானைவைகள் காலில் விழுகிறாள். அதாவது செம்போத்து என்னும் பறவை வலமாக வந்தால் அபீஷ்டமான காரியம் நடந்துவிடும் என்று சாகுண்ய சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளதால், பரகாலநாயகி செம்போத்தை நோக்கி ‘எம்பெருமான் இங்கே வந்து சேருகையாகிற என்னுடைய உத்தேச்யம் கை புகும்படி நீ வலமாகவேணும்’ என்று வேண்டுகிறாள். இதேபோன்று *கூவாய் பூங்குயிலே * * கொட்டாய் பல்லிக்குட்டி* * சொல்லாய் பைங்கிளியே * கோழி கூவென்னுமால்* என்றாயிற்று. “ஜ்ஞாநவிபாக கார்யமான அஜ்ஞாநத்தாலே வருமவையெல்லாம் அடிக்கழஞ்ச பெறும்” என்ற ஸ்ரீவசநபூஷணஸ்ரீஸூக்தி இங்கு அநுஸந்தேயம்.

(9) குன்றம் ஒன்று எடுத்து (11-1)

             நாயகனான எம்பெருமானோடு கூடப் பெறாமையினால் தென்றல் முதலான பதார்த்தங்கள் தலைமகளை வருத்தியது சொல்லப்பட்டது இத்திருமொழியில்

(10) குன்றமெடுத்து மழை தடுத்து (11-2)

           நாயகனும் என்னைக் கைவிட்டுவிட்டான் – எனக்கு இனி ரக்ஷகர் தான் உண்டோ என்று தலைமகள் பேச்சாக இருப்பது இத்திருமொழி.

(11) மன் இலங்கு பாரதத்து (11-3)

               எம்பெருமான் தானும் ஒரு ஜீவாத்மாவைப் பெறுகைக்கு தான் பண்ணும் யத்னங்களையும், க்ருஷி தன்னது என்பதனையும் காட்டிக் கொடுத்து, சிலகாலம் தாமதித்து ஆழ்வாரை இப்படிப் பண்ணிற்றே என்னவும் – ஆழ்வார் ப்ரீதராய் அவனை நித்யானுபவம் பண்ணவில்லையாகிலும் அவன் திறத்து அன்றோ த்வரை விளைந்தது என்று ப்ரீதிக்குப் போக்குவீடாக அருளுவதாக அமைந்தது இத்திருமொழி. 

          திருநெடுந்தாண்டகத்தில் உள்ள தாய்ப்பாசுரமும், தலைமகள் பாசுரமும் இக்கட்டுரையில் சேர்க்கப்படவில்லை என்பதினைக் குறிக்கொள்க.

சில பதிகங்களின் அனுபவங்கள்

ஏழை ஏதலன் (5-8)

இது ஒர் ஆச்சர்யமான பதிகமாகும். இப்பதிகந்தன்னில் எம்பெருமான் (1) குஹப்பெருமாள், (2) திருவடி, (3) கஜேந்த்ராழ்வான், (4) ஸுமுகன் (பாம்பு), (5) கோவிந்த ஸ்வாமி, (6) மார்க்கண்டேயன், (7) ஸாந்தீபினி (க்ருஷணன் குருகுல வாஸம் செய்த குரு), (8) அந்தணன், (9) தொண்டைமான் சக்ரவர்த்தி இவர்கள் திறத்து அருள் செய்தது போன்று எனக்கும் அருள் செய்ய வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார். இப்படி அடியவர்களின் வரலாறு கூறுவதால் சரணாகதியும் நன்கு விளக்கப்பட்டுள்ளது வ்யாக்யானம் கொண்டு தெளிய வேண்டியது.

திருவுக்கும் திருவாகிய செல்வா! (7-7)

நம்மாழ்வார்க்கு * உண்ணிலாவிய ஐவர் * போன்று இவர்க்கு இது. இப்பாசுரத்தில் உள்ள விளிகள் (அழைப்பது) மிகவும் உருக்குதலாய் இருக்கும்.

கள்ளம் மனம் விள்ளும் வகை (7-9)

இத்திருமொழியில் வேதத்திற்குப் புறம்பான பாஹ்ய குத்ருஷ்டி மதங்களைத் தள்ளி சிறுபுலியூர் சலசயனத்தில் ஸேவை ஸாதிக்கும் பெருமானின் திருவடிகளைப் பற்றுங்கோள் என்று உபதேசம் செய்கிறார் ஆழ்வார். உபதேசத்தைக் காட்டிலும் தான் அனுஷ்ட்டித்துக் காட்டுவது சிறந்தது என்று * திருமாமகள் மருவும் சிறுபுலியூர் சலசயனத்து அருமாகடலமுதே! உனதடியே சரணாமே! * என்று பிராட்டி முன்னாகத் தான் சரணம் புக்குக் காட்டுகிறார்.

பெரும்புறக்கடலை (7-10)

இப்பதிகத்தின் சப்தார்த்தமும், பொருளும் அதி அற்புதமானவை. ஆழ்வார் எம்பெருமானையும் அவனுடைய திருக்குணஙளையும் இப்பதிகந்தன்னில் ஆச்சர்யமாக அனுபவிக்கிறார்.

 • பெரும்புறக்கடல் – அனைத்தையும் தன்னுள்ளே கொண்டிருக்குமா போலே, முடிவில்லாத கடல் போன்றவனை,
 • அடலேற்றினை – தன்னையொழிந்த ஸமஸ்த வஸ்துக்களயும் தனக்குள்ளே வைத்து ரக்ஷிக்கையினால் வந்த மிடுக்கை உடையவனை,
 • பெண்ணை – பெண்ணானவள் எப்படிக் கட்டுப்பட்டு இருப்பாளோ அதேபோன்று ஆச்ரிதர்களிடம் கட்டுப்பட்டு இருப்பவன்,
 • ஆணை – கேட்பார் இல்லாத ஸ்வாதந்த்ரியம் உடையவன்
 • முத்தின் திரள்கோவையை – கண்டபோதே ச்ரமம் எல்லாம் ஆறும்படி முத்தினுடைய திரண்டமாலை போன்று இருக்கக் கூடியவனை
 • அரும்பினை அலரை – யுவாகுமார: என்றிருப்பவனை
 • அமுதம் பொதியின் சுவைக் கரும்பினை – அமுதத்தினை நீராகப் பாய்ச்சி விளைந்த கரும்பு போன்று இருக்குமவனை.
 • ஆலிலைப் பள்ளி கொள் மாயனை – அகடிதகடனாசாமர்த்தியம் உடையவனை
 • துப்பனை – தான் நினைத்தது நடத்தும் ஸாமர்த்தியம் உடையவனை
 • சுடர்வான்கலன் பெய்தது ஓர் செப்பினை – மிக்க ஒளி பொருந்தியதாய் ஆபரணங்கள் இட்டு வைக்கும் செப்பு போன்றவனை (இந்த செப்பு தானும் ஏதென்பதினை வ்யாக்யானம் கொண்டு அறிக)

ஒருநற்சுற்றம் (10-1)

இத்திருமொழியில் 21 திவ்யதேஶங்கள் கூறப்பட்டுள்ளன. ஆழ்வார் இந்த லீலாவிபூதியினை பிறந்தவீடாகவும், பரமபதத்தினைப் புகுந்த வீடாகவும் கொண்டு, புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்பிள்ளை சுற்றத்தவர்களிடம் சொல்லிக் கொண்டு கணவன் இடத்திற்குச் செல்லுமா போலே, ஆழ்வாரும் அருளுகிறார். ஆழ்வார்க்கு சுற்றத்தவர்கள் திவ்யதேச எம்பெருமான்களே என்பது குறிக்கொள்ளத் தக்கது.

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை (10-2)

        பெருமாளது வெற்றியினை இராக்கதர்கள் வாயிலாகச் தங்கள் தோல்வியினையும் பெருமாளது வெற்றியினையும் சொல்லுவதாக அமைந்துள்ளது இத்திருமொழி. இதனை ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை * தோற்றவர்கள் தோல்வியாலே படையடிக்க ஆடுவதொரு கூத்துண்டு * என்றருளுகிறார். பாசுரந்தோறும் * தடம்பொங்கத் தம் பொங்கோ * என்றிருப்பது நோக்கத்தக்கது.

ஏத்துகின்றோம் (10-3)

இத்திருமொழியும் பெருமாளது வெற்றியினை இராக்கதர்கள் வாயிலாகச் தங்கள் தோல்வியினையும் சொல்லி தோற்றவர்கள் ஆடுவதாகச் சொல்லுவது இத்திருமொழி, இதனை * குழமணிதூரமே * என்று அருளுகிறார்.

மானமரும் (11-5)

            சாழல் என்பது பெண்டிர் விளையாடும் ஒரு வகையான சொல்-விளையாட்டு ஆகும். எம்பெருமானுடைய மேன்மையினை ஒருத்தி பேசுவதாகவும், அவனது எளிமைக் குணத்தினை ஒருத்தி பேசுவதாகவும் அமைந்தது இத்திருமொழி. அரசனுக்குச் சத்ரசாமரங்கள்போல அவனுக்கு பரத்வ ஸௌலப்யங்கள் என்னும் ஆசார்யர்கள் திருவாக்கு நோக்கத்தக்கது. இப்பதிகத்தின் சாற்றுப் பாசுரத்தில் * வெள்ளத்தான் வேங்கடத்தானேலும் கலிகன்றி உள்ளத்தினுள்ளே உளன்கண்டாய் சாழலே * என்பது அற்புதமான சந்தையாகும். இங்கு வ்யாக்யான ஸ்ரீஸூக்தி * ஆழ்வார் ஹ்ருதயத்தில் நின்றும் புறப்படத் தள்ளினாலும் புறப்படாதே கிடக்கிறான் *

திருவாய்மொழியும் திருமொழியும்

        திருவாய்மொழி * பக்தாம்ருதம் * – * தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் * என்னும்படி பக்தர்களுக்கு அமுதம், திருமொழி – * அடங்காநெடும் பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதம் * ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்த க்லேஶ பாஜனம் என்கிறபடியே கடக்கவொண்ணாததாய் கோரமான ஸம்ஸார ஸாகரமாகிற விஷத்திற்கு அமுதமாயிருக்கும். திருவாய்மொழி – விச்வஜநானுமோதனம் அனைவரையும் கவரக் கூடியதாய் இருக்கும். திருமொழி – * நெஞ்சுக்கு இருள்கடி தீபம் * நெஞ்சத்தில் உள்ள இருளினைப் போக்கடிக்ககூடிய தீபம். திருவாய்மொழி ஸர்வார்த்ததம்; திருமொழி ஆரணசாரம் – வேதத்தின் ஸாரமாயிருக்கும். * ஸர்வம் அக்ஷ்டாக்ஷராந்த:ஸ்தம் * (ஹாரீத ஸ்ம்ருதி 6-48) என்கிறபடியே வேதமும் அதன் உபப்ரும்ஹணங்களும் அஷ்டாக்ஷரத்தில் அடங்கியுள்ளன. திருவாய்மொழி * ஸ்ரீசடகோபவாங்மயம் * – தான்தோன்றியான வேதம் போலன்றிக்கே ஆழ்வாரிடம் இருந்து அவதரித்தது; திருமொழி – * பரகாலன் பனுவல்களே * * மருவலர் தம் உடல் துணிய வாள்வீசும் பரகாலன் * என்கிறபடியே பகவத்பாகவத விரோதிகளை நிரஸனம் பண்ணியருளக் கூடிய ஆழ்வாரின் அருளிச்செயல் ஆகையினாலே, இவ்வருளிச்செயலே பகவத்பாகவத விரோதிகளை நிரஸனம் பண்ணிவிடும். திருவாய்மொழி – * ஸஹஸ்ரசாகோபநிஷத் ஸமாகமம் * திருமொழி – * தமிழநன்னூல்துறைகள் அஞ்சுக்கு இலக்கியம் * எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து விஷயங்களுக்கு இலக்கணம், இவ்வாழ்வாரின் அருளிச் செயல்கள். ஆசு கவி, விஸ்தாரக் கவி, மதுர கவி, சித்ரகவி என்று நாலுவகையிலும் கவிதை பாடக்கூடிய நாலுகவிப்பெருமாள் அல்லவா ஆழ்வார்! திருவாய்மொழி – * த்ராவிடவேதஸாகரம் * திருமொழி – * பரசமயப் பஞ்சுக்கு அனலின் பொறி * வேதத்திற்கு அபார்த்தம் கற்பிக்கின்ற புறச் சமயங்களாகிற பஞ்சுக்கு அனல் போன்றவை இவரின் ஸ்ரீஸூக்திகளாகும்.

திவ்யதேஶ வர்ணனைகள்

       இவ்வாழ்வார் தாமே நேரில் சென்று திவ்யதேஶங்களை மங்களாஶாஸனம் செய்தமையினாலே இவரது அருளிச்செயல்களில் திவ்யதேஶ வர்ணனைகள் மிகவும் அற்புதமாக இருக்கும். அது மாத்திரமன்று. இத்தகைய இயற்கை சூழல் வர்ண்னைகளும் உட்பொருள்களைத் தன்னகத்தே கொண்டே இருக்கும். அவற்றுள் சில இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

 • *கமலநன் மலர்த்தேறல் அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளி அம்பொழிலூடே, செருந்தி நாண்மலர் சென்றணைந்து உழிதரு திருவயிந்திரபுரமே * (3-1-1) இதற்கு அர்த்தம் அழகிய சோலைகளினுள்ளே நல்ல தாமரைப்பூவின் தேனைக் குடித்து இனிய ராகங்களைப் பாடிக்கொண்டு இருக்கின்ற வண்டுகளின் கூட்டங்கள் நெருங்கி சுரபுன்னை மரத்தினுடைய அப்போதலர்ந்த பூவிலே போய்ச் சேர்ந்து ஸஞ்சரிக்கப்பெற்ற திருவயிந்திரபுரமே என்பதாகும். ஆனால் இதனுடைய உட்பொருளாவது ” ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவயிந்திரபுரத்திலே கோயில் கொண்டுள்ள தெய்வநாயகனின் திருவடித் தாமரைகளிலே பெருகுகின்ற தேனினைக் குறைவற உண்டு அவனது புகழ் பாடிக் கொண்டு, அதன்பின் பரமபத நாதனின் திருவடித்தாமரைத் தேனினை பருகச் செல்லுவர்கள்” என்பதாகும். * சேமமுடை நாரதன், முனிவாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு என்னும் * என்கிற ஆசார்ய ஹ்ருதய ஸூத்ரம் நினைக்கத்தக்கது,
 • * களியாவண்டு கள்ளுண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற நளிர் வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே * (6-7-4) – இதற்கு மேலெழுந்த அர்த்தம் – மெல்லிய பூக்களின்மீது வண்டுகள் களித்து தேனைப்பருக, அழகிய தென்றல்காற்று புஷ்பங்களை வீசியிறைக்க, குளிர்ந்த முகத்தையுடைய முல்லைப் பூக்கள்புன்சிரிப்புச் செய்யுமாபோலே மலரப் பெற்ற நறையூர், நின்ற நம்பி என்பதாகும். இதற்கு ஆசார்யர்கள் காட்டும் ஸ்வாபதேசமாவது – ஒரு ஸ்ரீவைஷ்ணவன் விதி வசதத்தால் மதுபானம் பண்ணினான். அதனை இன்னொருவன் ” இவன் கள்ளுண்டான்! இவன் கள்ளுண்டான்! என்று கூறிக் கொண்டு திரிந்தான். அதனைக் கண்ட இன்னொரு ஸ்ரீவைஷ்ணவன் ப்ரக்ருதியின் ஸ்வபாவம் இது; இப்படியிருக்க பழிகூறித் திரிவதே என்று முறுவலித்தானாம்!

முடிவுரை

         இவ்வாழ்வார் தாமும் பெரிய திருமொழி (7-10) பதிகம் சாற்றுப் பாசுரத்தில் எம்பெருமானை நோக்கி அருளுவதாக இருப்பது * மெய்ம்மை சொல்லில் வெண்சங்கமொன்று ஏந்தியகண்ண, நின்றனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே * . எம்பெருமானே! உனக்கும் இதிலே (திருமொழியிலே) ஆர்வமுண்டாகில் எனக்கு சிஷ்யனாயிருந்து கற்றவேண்டும் என்கிறார். இத்திருமொழியின் இனிமையைக் கண்டவாறே எம்பெருமானும் “கலயாமி கலித்வம்ஸம்” என்று தனியன் தொடங்கி அநுஸந்தித்து அதிகரிக்கப் புகுவன் என்றத்தை ஸுசிப்பித்தவாறு. அவ்வளவு உயர்ந்த சொற்சுவையினையும் பொருட்சுவையினையும் கொண்டது இத்திருமொழி. சொல்லின்பமும் பொருளின்பமும் எம்பெருமானையும் வணங்கப்பண்ணும்! எம்பெருமானை வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண! என்று அழைத்த விளி அதி அற்புதமானது. “ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனென்று இறுமாந்திருந்தால் போகாது; என்பாடே அதிகரிக்கில் அறியலாம்” என்று இதற்கு வ்யாக்யான ஸ்ரீஸூக்திகள். இச்சந்தையினை மெய்ப்பிக்கவே திருமங்கையாழ்வார் நம்பிள்ளையாக கார்த்திகை கார்த்திகையிலும், கண்ணன் எம்பெருமான் பெரியவாச்சான் பிள்ளையாக ஆவணி ரோஹிணியிலும் திருவவதாரம் என்றுரைப்பர் பெரியோர். இப்படிப்பட்ட சீரிய அர்த்தங்களும் ஏற்றங்களும் உடையதாகும் இத்திருமொழி.

ஐயன் அருள்மாரி செய்ய அடி இணைகள் வாழியே
அந்துகிலும் சீராவும் அணியும் அரை வாழியே
மையிலங்கு வேல் அணைத்த வண்மை மிகு வாழியே
மாறாமல் அஞ்சலி செய் மலர்க் கரங்கள் வாழியே
செய்ய   கலனுடன் அலங்கல் சேர் மார்பும் வாழியே
திண் புயமும் பணிலம் அன்ன திருக் கழுத்தும் வாழியே
மையல் செய்யும் முக முறுவல் மலர்க்கண்கள் வாழியே
மன்னு முடித் தொப்பாரம் வளையமுடன் வாழியே –
 
ஸ்ரீ மதாலி ஸ்ரீ நகரீ நாதாய கலி வைரிணே
சதுஷ் கவி ப்ரதானாய பரகாலாய மங்களம்
 

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org