Monthly Archives: April 2016

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – தத்வ த்ரயம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< ரஹஸ்ய த்ரயம்

மூன்று தத்வங்கள் – ஒரு சுருக்கம்

தத்வங்கள் சித், அசித், ஈச்வரன் என மூன்றாகப் பகுக்கப் படுகின்றன.

பரமபதமாகிய நித்ய விபூதியிலும், ஸம்ஸார மண்டலமாகிய இந்த லீலா விபூதியிலுமுள்ள கணக்கற்ற ஜீவாத்மாக்கள் சித். ஞானத்தால் ஆனவையும், ஞானமுள்ளனவும் சித் ஆகும். ஞானம் என்பது ஆனந்தமானதால், ஞானமுள்ள சித் தூய ஞானத்திலுள்ளபோது ஆனந்தமாயுள்ளது. இந்த சித், எப்போதும் விடுதலையாகிக் கட்டுகள் தளைகளில்லாத நித்ய ஸூரிகள், முன் ஸம்ஸாரத்தில் கட்டுண்டிருந்து இப்போது விடுதலையாகி இருக்கும் முக்தர்கள், இப்போது ஸம்ஸாரத்தில் கட்டுண்டு துன்புற்றுழலும் பத்தர் என மூவகையினர். இதில் பத்தர், தளையிலிருந்து விடுபட விரும்பும் முமுக்ஷுக்கள் என்றும், தளையில் இன்புதுன்புகளை அநுபவித்துக் கிடக்கும் புபுக்ஷுக்கள் என்றும் இரு வகை. முமுக்ஷுக்களில், கைவல்யம் எனும் சுய இன்பம்தேடும் கைவல்யார்த்திகள் என்றும், எப்போதும் வேறு பயன் கருதாது இறைப்பணியே பலன் என்றுள்ள கைங்கர்யார்த்திகள் என்றும் இருவகை. மேலும் அறிய http://ponnadi.blogspot.com/2013/03/thathva-thrayam-chith-who-am-i5631.html பார்க்கவும்.

senses-elements - tamil

அறிவற்ற அனைத்துப் பொருள்களும், நம் புலன்களுக்கு உட்பட்டு உணரப்படுவனவும் அசித். ப்ரளயத்தில் இவை உரு மாய்ந்து கிடந்து, ஸ்ருஷ்டி காலத்தில் உருவுள்ளனவாகும். இவை நித்ய விபூதி லீலா விபூதி இரண்டிலுமுண்டு. பொருளியல் உலகில் இவை அறியப்படுவனவாகவும், ஆத்மீக விஷயங்களில் அறிய உதவுபவையாவும் உள்ளன. அசித், பரமபதத்தில் உள்ள தோஷமில்லாத, ரஜோ தமோ குணங்கள் கொஞ்சம் கூட சேராத சுத்த ஸத்வம்,  நன்மையும் தீமையும் கலந்த, ரஜோ தமோ குணங்கள் கலந்த மிஶ்ர ஸத்வம், நன்மை தீமைகளுக்கு அப்பாற்பட்ட, ஸத்வ ரஜோ தமோ குணங்கள் ஒன்றுமில்லாத காலம் – ஸத்வ ஶுன்யம் என்று பகுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய http://ponnadi.blogspot.com/2013/03/thathva-thrayam-achith-what-is-matter.html பார்க்கவும்.

ஈச்வரன் ஸ்ரீமன் நாராயணன். ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாருடன் கூடிய அவனே பரம்பொருள். பகவான் எனும் சொல், ஞாநம் (அறிவு), பலம் (வலிமை), ஐச்வர்யம் (ஆளுமை), வீர்யம் (துணிவு), சக்தி (ஆற்றல்), தேஜஸ் (பொலிவு) எனும் ஆறு குணங்களையுடையவன் என்று பொருள்படும். ஈஸ்வரன் எண்ணற்ற திருக்கல்யாண குணங்களை உடையவன். அவன் தாழ்ந்த குணங்கள் எதுவுமற்றவன். எல்லா சித் அசித்துகளும் அவனையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. அவனே அவற்றின் ஜீவனையும், அவற்றைத் தாங்கி நிற்பவனாயும் உள்ளான். மேலும் அறிய http://ponnadi.blogspot.com/2013/03/thathva-thrayam-iswara-who-is-god.html பார்க்கவும்.

இம்மூன்றனுக்கும் சில ஒற்றுமைகளுமுண்டு:

 • ஈச்வரனும் சித்தும் அறிவுள்ளவர்கள்
 • சித் அசித் இரண்டுமே ஈச்வரனின் உடைமைகள்
 • ஈச்வரன் அசித் இரண்டுமே சித்தைத் தம் இயல்பினவாக்க வல்லன. அதாவது சித் – ஜீவாத்மா உலகியல் இன்பத்தில் மூழ்கினால் அவன் அவற்றின் இயல்புகளை ஏற்கிறான்; அவ்வாறன்றி பகவத் விஷயத்தில் ஊன்றினால் பாகவதனாக, உலகியல் மாசுகள் நீங்கி தளைகள் அறுபட்டுப் பேரின்பம் எய்தவனாகிறான்.

இம்மூன்றனுள்ளும் உள்ள வித்யாசங்கள்:

 • ஈச்வரனின் தனிச்சிறப்பியல்பாவது அவன் யாவற்றினும் மேம்பட்டவன், எல்லாவற்றிலும் எப்போதும் எல்லா வகையிலும் உள்ளவன்.
 • சித்தின் சிறப்பாவது ஈச்வர கைங்கர்யத்திலேயே தான் எப்போதும் இருக்கவேண்டும் எனும் ஞாநம் உள்ளவன்.
 • அசித்தாவது எவ்வகை அறிவுமின்றி, எப்போதும் பிறர் அனுபவத்துக்கான கருவியாயே இருத்தல்.

இவ்வரும் பொருள்கள் யாவும் பிள்ளை லோகாசார்யரின் தத்வ த்ரயம் நூலில் மிகச் செழுமையாக விளக்கப் பட்டுள்ளன. மேலும் அறிய http://ponnadi.blogspot.in/2013/10/aippasi-anubhavam-pillai-lokacharyar-tattva-trayam.html பார்க்கவும்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://ponnadi.blogspot.in/2015/12/thathva-thrayam-in-short.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – ரஹஸ்ய த்ரயம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும்

பஞ்ச ஸம்ஸ்காரத்தின் ஒரு பகுதியாக மூன்று மந்த்ரங்கள் ஆசார்யனால் சிஷ்யனுக்கு உபதேசிக்கப் படுகின்றன:

 • திருமந்த்ரம்

ஓம் நமோ நாராயணாய

எம்பெருமானின் இருஅவதாரங்களில் நாராயண ரிஷி நர ரிஷிக்கு பத்ரிகாச்ரமத்தில் உபதேசித்தது. எம்பெருமானின் உடைமையான ஜீவாத்மா எம்பெருமானின் உகப்புக்காகவே இருத்தல் வேண்டும். எல்லார்க்கும் தலைவனான நாராயணனுக்கே கைங்கர்யம் செய்தல் வேண்டும் என்பது இதன் எளிய பொருள்.

 • த்வயம்

ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே |
ஸ்ரீமதே நாராயணாய நம: ||

எனும் ஈரடியுள்ள மந்த்ரம் விஷ்ணுலோகத்தில் எம்பெருமான் நாராயணனால் மஹாலக்ஷ்மித் தாயாருக்கு உபதேசிக்கப் பட்டது.

ஸ்ரீமஹாலக்ஷ்மித் தாயாரின் பதியான ஸ்ரீமன் நாராயணனின் தாமரைத் திருவடிகளில் சரணம் புகுகின்றேன், அத்தாயாருக்கும் எம்பெருமானுக்குமே சுய நலமற்ற கைங்கர்யம் செய்யக் கடவேனாக என்பது இதன் எளிய பொருள்.

 • சரம ச்லோகம்

பகவத் கீதையின் ஒரு பகுதியான

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச ||

எனும் ச்லோகம் அர்ஜுனனுக்கு க்ருஷ்ணனால் மஹா பாரதப் போர்க்களத்தில் அவன் மனம் கலங்கியபோது உபதேசிக்கப்பட்டது. எல்லா உபாயங்களையும் கைவிட்டு என் ஒருவனையே சரணமாகப் பற்று, உன் பாபங்களினின்றும்  உன்னை விடுவித்து உன்னை ரட்சிப்பேன் கவலையற்றிருப்பாயாக என்பது  இதன் சுருக்கமான பொருள்.

த்வய மஹா மந்த்ரப் பொருளை வ்யாக்யாநிக்கத் தொடங்கும்போது, முமுக்ஷுப்படியில், மாமுனிகளால் இம்மூன்று ரஹஸ்யங்களுக்குமுள்ள இருவகைத் தொடர்புகள் விளக்கப்படுகின்றன:

 • விதி – அனுஷ்டானம் – திருமந்த்ரம் ஜீவனுக்கும் பரமனுக்குமுள்ள உறவைக் காட்டுகிறது. சரம ச்லோகம் ஜீவனை எம்பெருமானிடம் சரண் அடையக் கட்டளை இடுகிறது. இவ்வாறு சரண் புக்க ஜீவன் எப்போதும் நினைந்து, சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதே  த்வய மஹா மந்த்ரம்.
 • விவரண – விவரணி – ப்ரணவம் திருமந்த்ரத்தில் நமோ நாராயணாய என்பதால் விளக்கப் படுகிறது. த்வய மஹா மந்த்ரம் திருமந்த்ரத்தை விளக்குகிறது.  சரம ச்லோகம் அதை மேலும் விளக்குகிறது.

இம்மூன்றிலும், த்வயமே ஆசார்யர்களால் மிகவும் அபிமாநிக்கப் பட்டதும், ஓயாது உள்ளப் பட்டதுமாம். இது மந்த்ர ரத்னம் எனப்பட்டது. இதுவே மஹாலக்ஷ்மித் தாயார் புருஷகாரம் செய்யும் வைபவத்தை ஸ்பஷ்டமாகச் சொல்கிறது. தேவராஜ குரு என்னும்எறும்பியப்பா வர வர முனி தின சர்யையில் அருளிய படி, எம்பெருமானும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்தியில் நித்ய கைங்கர்யப் ப்ரார்த்தனை இதிலேயே உண்டு:

மந்த்ர ரத்ந அநுசந்தான ஸந்தத ஸ்புரிதாதரம் |
ததர்த்த தத்த்வ நித்யாந் ஸந்நத்த புலகோத்கமம் ||

மாமுனிகளின் திருவதரங்கள் (உதடுகள்) த்வய மஹா மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவரின் உள்ளமோ த்வயத்தின் அர்த்தமான திருவாய்மொழியையே நினைத்துக் கொண்டிருப்பதால், அவரின் திருமேனியில் மயிர்க்கூச்செரிதல், கண்களில் கண்ணீர் பெருகுதல் போன்ற மாற்றங்கள் வெளிப்படுகின்றன என்பது இந்தச் ச்லோகத்தின் சுருக்கமான பொருள். நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டியது ஒன்று உள்ளது – குரு பரம்பரா த்யான பூர்வகமாகவே (அஸ்மத்குருப்யோ நம: … ஸ்ரீதராய நம: என்ற குரு பரம்பரா மந்த்ரத்தைக் கூறிய பின்னே) த்வயத்தை அநுஸந்தித்தல் வேண்டும்.

அஷ்ட ச்லோகி அருளிய பட்டர் முதலாக, பரந்த ரஹஸ்யம் அருளிய பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீயப் பதிப் படி/யாத்ருச்சிகப் படி/பரந்த படி/முமுக்ஷுப்படி ஆகியவற்றில் பிள்ளை லோகாசார்யர், அருளிச் செயல் ரஹஸ்யத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், முமுக்ஷுப்படி முதலான ரஹஸ்ய வ்யாக்யானங்களில் மணவாள மாமுநிகள் ஈறாக ரஹஸ்ய  த்ரய விளக்கங்களிலேயே ஊன்றியிருந்தனர் நம் பூர்வர்கள் என்பது முக்யமாகக் குறிக் கொள்ளத் தக்கது.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஜீவாதுவான தத்த்வ த்ரயமும் அர்த்த பஞ்சகமுமே ரஹஸ்ய  த்ரய விளக்கமெனில் நன்றாம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://ponnadi.blogspot.in/2015/12/rahasya-thrayam.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< குரு பரம்பரை

நம் குரு  பரம்பரையின் பெருமைகளை அநுபவித்தபின் திவ்ய ப்ரபந்தங்கள் திவ்ய தேசங்களின் ப்ரபாவம் அனுபவிக்கப் ப்ராப்தம்.

 

ஸ்ரீமன் நாராயணன், பரமபதத்தில் ஸ்ரீதேவி (ஸ்ரீ மஹாலக்ஷ்மி), பூ தேவி, நீளாதேவி மற்றும் நித்ய ஸூரிகளுடன்

ஸகல கல்யாண குணகணங்கள் கூடிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தன் திவ்ய நிர்ஹேதுக க்ருபை அடியாகச் சில ஜீவாத்மாக்களை ஆழ்வார்களாக அனுக்ரஹித்துத் தன்பால் பக்தி பாரவச்யர்களாய்ப் பண்ணிப் போந்தான்.

நிரங்குச ஸ்வதந்த்ரனாக நித்யர்கள் மற்றும் முக்தர்களின் தலைவனுமாக இருந்தான் ஆகிலும் அவனுக்கும் ஒரு மன வருத்தம் இருந்தது. அவனது மன வருத்தம் யாதெனில், தன் மக்கள் லீலா விபூதியில் சிக்கித் துன்புற்று உழல்கிறார்களே என்பது பற்றியேயாம். இங்கே ஒரு கேள்வி எழும் – ஸர்வேச்வரனுக்குத் துன்பம் என்று உண்டு என்பது ஒரு தோஷமாகி விடுமே – அவன் ஸத்ய காமனாகவும் ஸத்ய ஸங்கல்பனாகவும் இருப்பதால் அவனே அத்துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாமே என்பதே அக்கேள்வி.இதற்கு நம் ஆசார்யர்கள் அழகான விளக்கம் அளித்துள்ளார்கள் – அதாவது, எல்லா சக்திகளும் படைத்த ஒரு தந்தை எவ்வாறு தான் தன் ஒரு குழந்தையுடன் இருக்கும் போதும் தன்னைப் பிரிந்திருக்கும் மற்றொரு குழந்தைக்காக வருத்தப்படுவானோ, அது போலவே பகவானும் தன்னைப் பிரிந்திருக்கும் ஜீவாத்மாக்களுக்காக பல முயற்சிகளை எடுக்கிறான். இவ்வாறு அவன் வருந்துவதை ஒரு சிறந்த கல்யாண குணமாகவே கொண்டாடுகின்றனர்.  இவ்வாறு மயங்கித் துன்புற்று உழலும் ஜீவாத்மாக்களின் நன்மையைக் கருதியே எம்பெருமான் ஸ்ருஷ்டி காலத்தில் அவர்களுக்குக் கரையேறும் பொருட்டுக் கரண களேபரங்கள் தந்தும், சாஸ்த்ரங்கள் தந்தும் தன்னைக் காட்டியும், ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்  செய்தும் அவர்களுக்கு அநுஷ்டித்துக் காட்டியும் திருந்தாததால் தன் மேன்மையையும் ரக்ஷகத்வத்தையும் உணர்த்த அவர்களிலேயே சிலரைத் தேர்ந்து, மானைப் பயிற்ற மானைப் போலேயும், யானையைப் பிடிக்க யானையைப் போலேயும் ஜீவர்களை உத்தரிப்பிக்க ஜீவர்களையே உபாயமாகக் கொண்டான்.  அங்ஙனம் கொள்ளப் பட்டவர்களே ஆழ்வார்களும் ஆசார்யர்களும் ஆவர். இவர்கள் பாரத தேசத்தில் வெவ்வேறு திவ்ய தேசங்களில் அவதரித்தமையை வேத வ்யாசர் போன்ற ரிஷிகள் முன்கூட்டியே ஸ்ரீமத் பாகவதம்  போன்ற நூல்களில் தெரிவித்தனர் என்பதும் நாம் அறிந்ததே.

Azhwars

ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய கல்யாண குணங்களைத் தீந்தமிழில் பாடினர். இவை சுமார் நான்காயிரம் பாசுரங்களாகும். இப் பாசுரங்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் எனப் போற்றப்படுகிறது. திவ்யம் எனில் தெய்வீகத் தன்மை பொருந்தியது, ப்ரபந்தம் எனில் இலக்கியம். ஆக எம்பெருமானின் திவ்ய குணங்களைப் பாடுவது திவ்யப் ப்ரபந்தம்.இவை எம்பெருமான் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேசங்களைப் பாடுகின்றன. பாடியவர்கள் திவ்ய சூரிகள், பாட்டு திவ்ய ப்ரபந்தம், பாடப்பெற்ற திருவரங்கம் திருமலை காஞ்சீபுரம்,திருவல்லிக்கேணி ஆழ்வார் திருநகரி போன்ற தலங்கள் திவ்ய தேசங்கள். இவற்றில் ராம க்ருஷ்ணாத்யவதாரப் பெருமைகளும், பரம பதத்தில் உள்ள பரத்வப் பெருமையும், க்ஷீராப்தியிலுள்ள வ்யூஹப் பெருமையும் அவரவர் உள்ளே அந்தராத்மாவாய் இருந்து ரக்ஷிக்கும் அந்தர்யாமிப் பெருமையும் சேர்த்தே பாடப் பெற்றுள்ளன. இவற்றில் எல்லாவற்றையும்விட நம் கண் காண வந்து நம்மை ரக்ஷிக்கும் திவ்ய தேசத்து அர்ச்சா விக்ரஹங்களே நம் ஆழ்வார்களுக்குப் பெருவிருந்தானது, அதுவே நம் ஆசார்யர்களின் உயிர்நாடியாயும் இருந்தது.

திவ்ய ப்ரபந்தம் வேத/வேதாந்தச் செம்பொருளை எளிய இனிய தீந்தமிழில் நமக்குக் கொடுக்கிறது. ஆழ்வார்கள் இவற்றை அருளிச் செய்த பல நூற்றாண்டுகளுக்குப் பின், ஸ்ரீமன் நாதமுனிகள் தொடக்கமாக மணவாள மாமுனிகள் ஈறான நம் ஆசார்யர்கள் இவற்றில் தோய்ந்தும் ஆய்ந்தும் ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தையும் ரக்ஷகத்வத்தையும் நமக்கு மிகத் தெளிவாகக் காட்ட இவைபோன்று வேறில்லை என்று அறுதியிட்டு நமக்காக இவற்றை ப்ரசாரம் செய்தும் வ்யாக்யானித்தும் நமக்குப் பேருபகாரம் செய்தனர். அவர்கள் தம் முழு வாழ்க்கையையும், வித்யாப்பியாசத்தையும் இச்செம்பொருள் பற்றிய சிந்தனையிலேயே செலவிட்டனர் எனில் மிகை அன்று.

azhwar-madhurakavi-nathamuni

நம்மாழ்வார், தம் இருபுறங்களிலும் மதுரகவிகள், நாத முநிகளுடன் (காஞ்சீபுரம்)

ஆழ்வார்களுக்குப் பின் திவ்ய ப்ரபந்தங்கள் ப்ரசாரமின்றி மறைந்துபோன ஓர் இருண்ட காலம் இருந்தது. அப்போது எம்பெருமான் திருவருளால் ஸ்ரீமன் நாதமுநிகள் தோன்றி, பல இன்னல்களுக்கிடையே ஆழ்வார் திருநகரியைத் தேடிக்கண்டுபிடித்து, அங்குச் சென்று மதுரகவி ஆழ்வார் க்ருபையால் நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து நாலாயிரம் பாசுரங்களையும் அவரிடமிருந்து அவற்றின் அர்த்தத்தோடேயே உபதேசமாகப் பெற்று, அவற்றை நாலாயிரம் பாசுரங்களையும் வகைப் படுத்தித் தொகுத்து, இவற்றைத் தமக்குபகரித்தருலிய மதுரகவிகளுக்கு க்ருதஜ்ஞதாநுசந்தானமாக நம்மாழ்வாரிடம் ஈச்வர விச்வாசம் கொண்டிருந்த அவரது “கண்ணிநுண் சிறுத்தாம்பு” பிரபந்தத்தை நாலாயிரத்தில் சேர்த்துத் தம் சிஷ்யர்களுக்குப் பண்ணோடு உபதேசித்தருளினார்.

 

Ramanuja_Sriperumbudur

ஸ்ரீ ராமாநுஜர்

ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ ராமானுசருக்கு இவை யாவும் பூர்வாசார்யர்கள், முக்யமாக ஸ்ரீ யாமுநாசார்யர்  திருவுளப்படியே க்ரமேண அடைவே வந்து சேர்ந்தன. சமூகத்தின் எல்லாப் பகுதியினரும் இவற்றை அறிந்து உய்தி பெறவேண்டும் எனும் பெருங்கருணை கொண்ட மனத்தராய் இருந்ததால் திருவரங்கன் திருவருளால் இந்த ஸம்ப்ரதாயமும் எம்பெருமானார் தரிசனம் என்றே பேர் பெற்றது. அவரே திவ்யப் ப்ரபந்தத்தில் ஒரு பகுதியான திருவரங்கத்தமுதனாரின் இராமானுச நூற்றந்தாதியில் இத்தகு மேன்மை மிக்க ஸம்ப்ரதாய ஸ்தாபனம் செய்தமையால் ப்ரபன்ன காயத்ரி என அனைவரும் தினமும் அனுசந்திக்கத் தக்க க்ரந்தத்தால் போற்றப்படுகிறார்.

nampillai-goshti1

நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டி

இவ்வாசார்ய பரம்பரையில் எம்பெருமானார், எம்பார், பட்டர், நஞ்சீயர்க்குப் பின் வந்த மஹாசார்யர் நம்பிள்ளையேயாவார். இவர் தம் காலம் முழுவதும் ஸ்ரீ ரங்கத்தில் எழுந்தருளியிருந்து ஸம்ப்ரதாய ஸம்ரக்ஷணம் செய்தவர். இவர் காலத்திலேயே திருவரங்கத்தில் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதன் வ்யாக்யானங்களுக்கும் இவரது அர்த்த புஷ்டியும் நயமும் சுவையும் மிக்க விரிவுரைகளால் மிகப் பெரும் மதிப்பும் கௌரவமும் கூடின. இவரது சிஷ்யர்கள் சம்பிரதாய இலக்கியத்துக்குப் பெரும் பணிகள் ஆற்றினர். நாலாயிரத்துக்கும் வியாக்யானம் அருளிய வ்யாக்யானச் சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை இவரது சிஷ்யரே. இவரது திருவாய்மொழிப் பேருரையை ஏடு படுத்தி இன்றளவும் ஈடு முப்பத்தாறாயிரப் படி என நம்மனோர் அநுபவிக்கத் தந்த வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளையும் இவர் சிஷ்யரே.

pillailokacharya-goshti

பிள்ளைலோகாசார்யர் காலக்ஷேப கோஷ்டி

நம்பிள்ளைக்குப் பின், ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராகப் பிள்ளை லோகாசார்யர் எழுந்தருளியிருந்து அதற்கு முன்பில்லாதபடி ரஹஸ்ய க்ரந்தங்களை முழு நோக்கோடு அருளிச் செய்து, வேத/வேதாந்த/அருளிச் செயல்களில் பொதிந்து கிடக்கும் அர்த்த பஞ்சகம்/ரஹஸ்யத்ரய விவரணங்களை விசதமாகத் தம் அஷ்டாதச ரஹஸ்யங்கள் எனும் பதினெட்டுச் செம்பொருள் நூல்களால் பரப்பினார். இவர், நம்பிள்ளை சிஷ்யர் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக் குமாரர். இவரும் இவர் திருத் தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருமே நம்பிள்ளையின் திருவுளக் கருத்துகள் அனைத்தையும் தம் க்ரந்தங்களில் தெளிவுபடுத்தி ஸம்ப்ரதாயத்தைச் செழுமையும், வினாக்களுக்கப்பாற்பட்டதாயும் ஆக்கினர்.

srisailesa-thanian-small

மாமுநிகள் காலக்ஷேப கோஷ்டி…”ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” தனியன் ஸமர்ப்பணம் ஆதல்

இறுதியாக, எம்பெருமானாரின் புனரவதாரமாகக் கருதப்படும் மணவாள மாமுநிகள் ஆழ்வார் திருநகரியில் அவதரித்து, தம் திருத்தகப்பனாரிடமும் திருவாய்மொழிப் பிள்ளையின் சிஷ்யராய் அவரிடமும் வேத/வேதாந்தங்கள்/அருளிச்செயல், ரஹஸ்யார்த்தங்கள் யாவும் கற்று, ஆசார்யரான பிள்ளையின் திருவாணைப்படித் திருவரங்கம் சென்று ஸம்ப்ரதாய ஸம்ரக்ஷணத்திலேயே  அங்கேயே தம் வாழ்நாளைக் கழித்தார். ஓலைச் சுவடிகளில் கற்றும், கற்றவற்றை மிகக் கஷ்டப்பட்டுப் பின்புள்ளாருக்காக ஏடு படுத்தியும், இடை இடையே எல்லாத் திவ்ய தேசங்களுக்கும் சென்று சேவித்து, ஆங்காங்கே ஸந்நிதி முறைகளை நெறிப்படுத்தியும், ஓராண்டுக் காலம் தொடர்ந்து திருவரங்கன் திருமுன்பே திருவாய்மொழிப் பேருரை நிகழ்த்தி, அரங்கனாலேயே மன மகிழ்ச்சியினால் ஆசார்ய ப்ரதிபத்தி தோன்ற “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” எனும் தனியன் ஸமர்ப்பிக்கப் பட்டு இன்றளவும் எல்லா சந்நிதிகளிலும் திவ்ய பிரபந்த சேவைத் தொடக்க ச்லோகமாக நம்பெருமாள் நியமனப் படியே நடக்கும்படியான பெருமை இவர்க்கே அசாதாரணம். தொடர்ந்து அவதரித்த பல ஆசார்யர்கள் திவ்ய ப்ரபந்தங்களைக் கற்றும் அதன் படி வாழ்ந்தும் போனார்கள்.

எம்பெருமானின் திருவுள்ள உகப்பான சேதனர்களின் உஜ்ஜீவனத்துக்காக ஏற்பட்ட திவ்ய ப்ரபந்தங்களை நம் பூர்வர்கள் பல விதத்திலும் பாதுகாத்துப் போந்தார்கள். இவ்வாறாக, எம்பெருமானை அறிந்துகொள்ள அவனது நிர்ஹேதுக க்ருபையால் நமக்குக் கிடைத்துள்ள திவ்ய பிரபந்தத்தை நாம் கற்று அதன் செம்பொருளையும் வல்லார் வாய்க் கேட்டுணர்ந்து அதன் படி வாழ்தலும் வேண்டும்.

ஆழ்வார்களையும் அவர்களின் திவ்யப்ரபந்தங்களின் பெருமையையும் ப்ராமாணிகத்வத்தையும் பற்றி அறிய இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளைப் படிக்கவும்:

திவ்யப்ரபந்த பாசுரங்களின் அர்த்தங்களைப் பல மொழிகளில் அறிய  http://divyaprabandham.koyil.org பார்க்கவும்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://ponnadi.blogspot.com/2015/12/simple-guide-to-srivaishnavam-dhivya-prabandham-dhesam.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் –

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – குரு பரம்பரை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< ஆசார்ய சிஷ்ய ஸம்பந்தம்

முந்தைய கட்டுரையில் ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்குமுள்ள விசேஷ ஸம்பந்தத்தைப் பார்த்தோம்.

சிலர், “நமக்கும் எம்பெருமானுக்கும் இடையே ஓர் ஆசார்யன் ஏன்? எம்பெருமான் தானே நேராகவே கஜேந்த்ராழ்வான், குஹப் பெருமாள், சபரி, அக்ரூரர், க்ருஷ்ணாவதாரத்தில் காணும் கூனி த்ரிவக்ரா, மாலாகாரர் போன்றோரைக் கடாக்ஷிக்கவில்லையா?” என்பர்.

இதற்கு நம் பூர்வாசார்யர்கள் தரும் ஸமாதானம்: எம்பெருமான் தன்னிச்சையான ஸ்வதந்த்ரன், பெருங்கருணை காட்டுபவனும் அவனே, ஆகிலும் சேதனர் கர்மங்களுக்கேற்பப் பலன் தருபவனும் ஆகிறான்.  ஆகவே, இவ்விடத்தில்தான் ஓர் ஆசார்யரின் தேவை உணரப்படுகிறது, உணர்த்தப் படுகிறது. எம்பெருமான் , சேதனர் பொருட்டான தன் இடையறாத நல்லெண்ணத்தினால், சேதனர் உய்ய பல வாய்ப்பு வழிகளை ஏற்படுத்தி, ஒரு சதாசார்யனை அடைவித்து, அவ்வாசார்யர் மூலமாக ஐஹிக மோகங்களிலிருந்து விடுவித்து தன்னையும் தன் கருணையையுமே பற்றி உஜ்ஜீவனம் அடையச் செய்கிறான். பிராட்டியைப் போன்று புருஷாகாரம் செய்யும் ஆசார்யனும், எம்பெருமானிடம் தன்னை அண்டிய சிஷ்யன் உலக விஷயங்களில் இருந்து விலகியும் எம்பெருமானின் கருணையையே எதிர்நோக்கி உள்ளான் என்பதையும் உறுதிபடுத்துகிறார்.

எம்பெருமான் சேதனர் செய்த கர்மங்களுக்கேற்ப மறுபடி சம்சாரமோ மோக்ஷமோ தந்தாலும், ஆசார்யரோ தம்மை அண்டிய சிஷ்யனுக்கு எம்பெருமானிடம் புருஷகாரம் செய்து மோக்ஷமே பெற்றுத் தருகிறார்.  ஆகவே சேதனர் எம்பெருமானிடம் செல்வது கையைப் பிடித்துக் கார்யஞ்செய்து கொள்வது போல் எனில், ஆசார்யர் வழி செல்வது காலைப் பிடித்துக் கார்யஞ்செய்து கொள்வது போலாகும். எம்பெருமான் தானே சேதனரை ஆட்கொண்டதைவிட ஆசார்யரின் வழி ஆட்கொண்டதே பெரும்பான்மை ஆகும் என்றும் பூர்வாசார்யர்கள் திருவுள்ளம்.

ஆசார்யர்களைப் பற்றிப் பேசுங்கால், நம் பூர்வாசார்யர்களின் வ்ருத்தாந்தத்தைப் பார்த்தாலே போதும். அதாவது நம் குரு பரம்பரை. இவ்வாசார்ய பரம்பரை இன்றேல் நாமும் இன்று மற்ற பல கோடிப் பேர்களைப் போலேயன்றோ இருப்போம்!

ஸ்ரீ வைஷ்ணவம் (சனாதன தர்மம்), காலம் காலமாய் இடையறாது வருவது. த்வாபர யுக இறுதி தொடங்கி ஆழ்வார்கள் தக்ஷிண தேசத்து ஆற்றங்கரைகளில் தோன்றினர். ஸ்ரீமத் பாகவதத்தில் வ்யாஸ மஹரிஷி நதிக் கரைகளில் ஆழ்வார்கள் அவதரித்து எம்பெருமானின் குண சங்கீர்த்தனம் செய்து பக்தியைப் பரப்புவர் என்றார். அதன்படியே பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் புகழ்மழிசை ஐயன் அருள்மாறன் சேரலர்கோன் துய்ய பட்டநாதன் அன்பர்தாள் தூளி நற்பாணன் நன்கலியன் எனப் பதின்மர் (ஆண்டாள் நாய்ச்சியார், மதுரகவிகள் சேர்த்துப் பன்னிருவர்) அவதரித்து அவன் சங்கல்பத்தாலேயே நாலாயிரம் பாசுரங்களில் தத்வ  த்ரய நிர்ணயம் செய்து, நமக்கு அர்த்த பஞ்சக ஞான தானம் செய்து பரஞான பரம பக்தி நெறி காட்டியருளினர். ஆழ்வார்களின் பக்தி பெருக்கின் வெளிப்ப்பாடே அருளிச்செயல் என்று ப்ரசித்தமாகப் போற்றப்படும் நாலாயிர திவ்ய ப்ரபந்தம். அதிலும் அருளிச்செயலின் ஸாரமான அர்த்தங்கள் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி என்னும் திவ்யப்ர்பந்தத்தில் உள்ளது.

அழ்வார்களுக்குப் பிறகு ஸ்ரீமன் நாதமுநிகள், உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி,ஆளவந்தார், பெரிய நம்பிகள், பெரிய திருமலை நம்பிகள்,திருக்கோட்டியூர் நம்பிகள், திருமாலையாண்டான், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர், எம்பெருமானார், எம்பார், ஆழ்வான், முதலியாண்டான்,அருளாளப் பெருமாள் எம்பெருமானார், அனந்தாழ்வான், திருக்குருகைப் பிரான் பிள்ளான்,எங்களாழ்வான், நடாதூரம்மாள், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், கூர  குலோத்தம தாசர், திருவாய்  மொழிப் பிள்ளை, வேதாந்தாசார்யர், மணவாள மாமுநிகள் என அவிச்சின்னமான அத்விதீய ஆசார்ய பரம்பரை ஒன்று நமக்கு இவ்வரும் பொருள்களைத் தொடர்ந்து உபதேசித்து வருகிறது. இந்த ஆசார்யர்கள் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தெளிவான் மற்றும் விரிவான உரைகள் எழுதியுள்ளனர். இவையே நாம் படித்து பகவத் விஷயத்தில் மூழ்குவதற்காக நமக்கு அவர்கள் விட்டுச் சென்ற பெரும் செல்வம் ஆகும். எம்பெருமானின் கருணையால் இவ்வாசார்ய உபதேசங்கள் வழி நமக்கு அர்த்த விசேஷங்கள் மயர்வறத் தெளிவாகக் கிடைக்கின்றன.

உபதேச ரத்தின மாலையில் மாமுநிகள் நமக்குப் பூர்வாசார்யர்களின் வ்யாக்யானங்களினால் அருளிச்செயல் அர்த்த விசேஷங்கள் எளிதாகப் புலப்படுகின்றன, அன்றேல் நாம் அறியாமை இருளில் கிடந்திருப்போம் என்கிறார். இப்பாசுரங்களின் அர்த்த கனம் தெறிந்தனரோ பூர்வர்கள் இவற்றை நித்யானுஸந்தேயமாய்க் கொண்டு வைத்தார்கள். இன்றும் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் வெள்ளிக் கிழமை தோறும் சிறிய திருமடல் கோஷ்டி மிகப் பெரிதாய் சீரும் சிறப்புமாய் நடக்கக் காண்கிறோம். இதில் ஐந்து ஆறு வயதே ஆன சிறுவர்களும் அந்வயித்து எம்பெருமான் குணாநுபவம் செய்வதும் நடக்கிறது. மேலும் திருப்பாவை எல்லோரும் அறிந்ததே – பொதுவாகவும் மார்கழி மாதத்திலும் மூன்று நான்கு வயதே ஆன சிறுவர் சிறுமியர்களும் கூட ஆண்டாள் நாச்சியாரின் சிறந்த பாசுரங்களைப் பாடி மகிழ்வதை நாம் காணலாம்.

ஆகவே இவ்வளவும் நம் குரு பரம்பரையின் பெருமையேயன்றோ!

நம் பூர்வர்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும்:  http://acharyas.koyil.org .

ஆழ்வார்கள் வாழி! அருளிச் செயல் வாழி!
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்யமறை தன்னுடனே சேர்ந்து.

— உபதேச ரத்தின மாலை 3.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://ponnadi.blogspot.com/2015/12/simple-guide-to-srivaishnavam-guru-paramparai.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – ஆசார்ய சிஷ்ய சம்பந்தம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< பஞ்ச ஸம்ஸ்காரம்

பஞ்ச ஸம்ஸ்காரத்திலிருந்து ஒருவருடைய ஸ்ரீ வைஷ்ணவ வாழ்க்கைப் பயணம் தொடங்குகிறது என்று கண்டோம்.  இனி, நம் ஸம்ப்ரதாயத்தின் மிகச் சிறந்த ஆசார்ய சிஷ்ய சம்பந்தம் எனும் பெரும் உறவு எத்தகைத்து எனப் பூர்வாசார்யர்கள் திருவுளக் கருத்தின்படி காண்போம்.

”ஆசார்யர்” என்பதற்கு, சாஸ்த்ரங்களை நன்கறிந்து தாம் அனுஷ்டித்து, பிறர்க்கு உபதேசிப்பவர் என்று பொருள். சாஸ்த்ரங்களே, ஒருவர் ஸந்யாசியாய் இருப்பினும் திருமால் பரத்வத்தை ஏற்று ஒழுகாவிடில் அவர் சண்டாளர் தாம் என்கின்றன. ஆகவே ஆசார்யர் ஸ்ரீ வைஷ்ணவராய் இருத்தல் மிக முக்யம். அதாவது திருமாலைப் பரம்பொருளாய் ஏற்று அவன் திருவுளம் மகிழ்ச்சி அடைய வாழ்பவராய் இருத்தல் தலையாயது. பஞ்ச ஸம்ஸ்கார வேளையில் திருமந்த்ரம், த்வயம், சரம ச்லோகங்களைச் சொல்லி உபதேசிப்பவரே ஆசார்யர் என்பர் நம் பூர்வர்கள். சிக்ஷை பெறுபவன் சிஷ்யன். சிக்ஷை – கல்வி, திருத்தம். இங்கு திருத்தப் படுவதாவது, தவறுகள் குறைகள் நீங்கி ஆசார்யர் வழி காட்டுதலில் நல்வாழ்வு வாழ்தல்.

உடையவர்-கூரத்தாழ்வான் – ஆதர்ச (இலட்சிய)ஆசார்யர்-சிஷ்யர்

நம் பூர்வாசார்யர்கள் ஆசார்ய சிஷ்ய ஸம்பந்தம் பற்றி மிக விபுலமாக ஆய்ந்துள்ளனர்.  அவ்வாறு ஆய்ந்து, இவ்வுறவு ஒரு பிதா புத்ரனுக்குள்ள உறவைப் போன்றது, புத்திரன் எவ்வாறு  முற்றிலும் தந்தைக்காட்பட்டுள்ளவனோ அவ்வாறே சிஷ்யனும் ஆசார்யனுக்காட்பட்டவன் என்று சாதித்துள்ளனர்.

கண்ணன் எம்பெருமான் தன கீதையில், “தத் வித்திப் ப்ரணிபாதேன பரிப்ரச்ணேன ஸேவயா உபதேக்ஷ்யந்தி தே  ஞாநம் ஞாநினஸ் தத்வ தர்சின:” என்றருளினான்.  இது, ஆசார்யன் சிஷ்யன் இருவரின் குணங்களையும் மிக நன்றாக நமக்குணர்த்துகின்றது. இதில் எம்பெருமான், “நீ உன் ஆசார்யனைப் பணிவுடன் அணுக வேண்டும், மிக்க உவப்பும் பணிவுங்கொண்டு அவர்க்குப் பணிவிடைகள் செய்து விநயத்தோடு சந்தேஹங்களைக் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்” என்று முதல் அடியிலும், “பகவானை நன்குணர்ந்த ஆசார்யன் உண்மை ஞானத்தை உனக்கு உணர்த்துவார்” என்று இரண்டாமடியிலும் கூறுகின்றான்.

ஓர் ஆசார்யரிடம் எதிர் பார்க்கப்படும் குணங்கள்:

 • ஆசார்யர்கள் பொதுவாகப் பிராட்டியோடு ஒக்கப் பேசப்படுமவர்கள், பிராட்டியைப் போன்றே இவர்களும் எம்பெருமானிடத்து சேதனர்களைப் புருஷகாரம் செய்து சேர்ப்பிப்பவர்களன்றோ!
 • பிராட்டியைப் போன்றே இவர்களும் எம்பெருமான் ஒருவனையே அநந்ய கதியாகப் பற்றியுள்ளனர், எம்பெருமானுக்கு மட்டுமே சேஷபூதர்களாயிருக்கின்றனர், எம்பெருமானே உபாயமென்று கொண்டு அவன் முகோல்லாசமே தமக்கு லக்ஷ்யமாய்க் கொண்டுள்ளனர்.
 • பகவதாராதனத்தில் ஈடுபட சிஷ்யர்களுக்கு ஞானமும் வைராக்யமும் புகட்டி, எம்பெருமானே யாவும் என அறிவுறுத்த எல்லையற்ற க்ருபையும் தயையும் கொண்டுள்ளனர்.
 • ஆசார்யன் சிஷ்யனின் ஆத்மோஜ்ஜீவனத்தில் நோக்குள்ளவர் என்கிறார் மாமுனிகள். பிள்ளை லோகாசார்யர், “ஆசார்யன் தம்மையும், சிஷ்யனையும், பலத்தையும் நன்குணர்ந்தவர்” என்கிறார்.
  • ஆசார்யர் தம்மை ஆசார்யராய் நினையாமல் தம் ஆசார்யரையே ஆசார்யராக நினைக்கிறார்.
  • சிஷ்யரைத் தம் சிஷ்யராய்  நினையாமல் தம் ஆசார்யரின் சிஷ்யராய்  நினைக்கிறார்.
  • எம்பெருமானுக்கு எக்காலத்திலும் எந்நிலையிலும் மங்களாசாசனம் செய்வதையே நோக்காகக் கொண்ட சிஷ்யனை உருவாக்குவதிலேயே அவர் ஊன்றியுள்ளார்.
 • வார்த்தாமாலையில் சாதித்துள்ள படியும், ப்ரத்யக்ஷ அநுபவத்திலும், தம்மை நாடி உஜ்ஜீவனத்துக்காக குண விமர்சங்கள் செய்யாமல் வந்துள்ளதால் ஆசார்யர் சிஷ்யரை மிக்க கௌரவத்தோடு நடத்தக் காண்கிறோம்.
 • எம்பெருமானே ஆசார்ய பதவியை ஆசைப்பட்டான் என்பர் நம் பூர்வர்கள். ஆனது பற்றியே அவன் ஓராண்வழி ஆசார்ய பரம்பரையில் அந்வயிப்பது; தனக்கும் ஓர் ஆசார்யனை அவன் விரும்பியதாலேயே அழகிய மணவாள மாமுநிகளைத் தன் ஆசார்யராக ஏற்றுக்கொண்டதுமாம்.

சிஷ்யனின் குணங்களாவன:

 • பிள்ளை லோகாசார்யர் ஸாதிக்கிறார்:
  • எம்பெருமானையும் ஆசார்யனையும் தவிர மற்ற ஐஸ்வர்யங்கள்/ஆத்மானுபவங்களை முற்றிலும் விட்டொழித்தல்.
  • ஆசார்யருக்கு எப்போதும் எத்தொழும்பும் செய்ய இசைந்திருத்தல்
  • ஐஹிக ஐஸ்வர்யாதிகளைக் கண்டு மனம் வெதும்பியிருத்தல்
  • பகவத் விஷயத்திலும் ஆசார்ய கைங்கர்யத்திலும் மட்டுமே ஊற்றமாய் இருத்தல்
  • பகவத் பாகவத விஷயங்களைக் கற்கும்போது அசூயை இல்லாதிருத்தல்.
 • தன் செல்வம் முற்றும் ஆசார்யருடையதே என்றெண்ணி, தன் தேஹ யாத்ரைக்குத் தேவையான அளவுமட்டுமே பொருளை வைத்துக்கொள்ளுதல் .
 • “மாதா பிதா” ச்லோகத்தில் ஆளவந்தார் அருளிச்செய்தபடி ஆசார்யரே எல்லாம் என்றிருத்தல்.
 • ஆசார்யரின் திருமேனிப் பாங்கினைக் கவனித்துக்கொள்ளுதல் .
 • மாமுநிகள் உபதேச ரத்தின மாலையில், இவ்வுலகில் உள்ளவரையில் சிஷ்யன் ஆசார்யரை ஒரு க்ஷணமும் பிரிந்திருத்தலாகாது என்று ஸாதிக்கிறார் .
 • ஆசார்ய சந்நிதியில் ஆசார்யப் பிரசம்சையிலேயே உள்ள சிஷ்யன், தனக்கு ஞாநம் தந்த ஆசார்யரிடம் எப்போதும் நன்றி பாராட்டியபடியே இருத்தல் வேண்டும்.

ஆசார்யரின் ஆத்ம ரக்ஷையில் சிஷ்யனுக்கு நோக்கோ அதிகாரமோ இல்லை. ஆதலால் அவரது செயல்கள்/குணங்களைத் திருத்த எண்ணவும் கூடாது, அவரது திருமேனிக் காப்பே சிஷ்யரின் கடமை ஆகும்.

பிள்ளை லோகாசார்யர் ஸாதித்தபடி, ஒரு சிஷ்யனாய் இருப்பது என்பதும் மிகக் கடினமானதே ஆகும்.  ஆகவேதான் இதை நிலை நிறுத்திக் காட்ட எம்பெருமான் தானும் நரன் என்கிற சிஷ்ய வடிவை எடுத்து அனுஷ்டித்துக் காட்டினான், தானே நாராயணனாக உபதேசம் செய்யும் ஆசார்யனாயும் இருந்தான்.  இந்நிலையில், நாம் வெவ்வேறு வகைப்பட்ட ஆசார்யர்கள் பற்றிப் பார்க்கவேண்டும்.
அநு வ்ருத்திப் ப்ரசன்னா சார்யரும், க்ருபா மாத்ரப் ப்ரசன்னாசார்யரும்

அநுவ்ருத்திப் ப்ரசன்னாசார்யரும், க்ருபா மாத்ரப் ப்ரசன்னாசார்யரும்

அநுவ்ருத்திப் ப்ரசன்னாசார்யர்:

முன்பிருந்த ஆசார்யர்கள், தம்மிடம் சரண் புக்காரை ஏற்குமுன் அவர்கள் எவ்வளவுக்கு ஞான வைராஞாதிகலோடிருந்தார்கள் என்று சோதித்துப் பார்த்தே ஏற்றுக் கொண்டார்கள்.  ஓர் ஆசார்யரை அண்டி உஜ்ஜீவிக்க நினைத்த சிஷ்யர் அவர்தம் திருமாளிகை சென்று பணிந்து அவரோடு ஓராண்டாவது இருந்து கைங்கர்யம் செய்து சிஷ்யராக ஏற்றுக்கொள்ளப்படும் க்ரமமே இருந்துவந்தது.

க்ருபா மாத்ரப் பிரசன்னாசார்யர்:

எம்பெருமானாரோ கலியின் ப்ரபாவத்தைத் திருவுளம் பற்றி, இவ்வாறான மிகக் கடிய நிபந்தனைகள் இருக்குமேயானால் லௌகிக வாழ்வை விட்டு மெய்ப்பொருள் அறிந்து மேன்மையைக் கைங்கர்யமாகக் கொள்ள என்னும் சேதனர் அல்லல் அதிகமாகுமேயன்றி அவர்க்கு ஒரு விடுதலை கிட்டாது என்றெண்ணி, “தகுதி”யே சிஷ்யவ்ருத்திக்கு முக்யம் என்பதை, “ஆசை”யே  முக்யம் என்று மாற்றியருளினார். இதனை மாமுனிகள் உபதேச ரத்ன மாலையில் மிக அழகாக, “ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் – பாருலகில் ஆசை  உடையோர்க் கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று பேசி வரம்பறுத்தார் பின்” என ஆச்சர்யமாக எடுத்துக் காட்டினார்.

உத்தாரக ஆசார்யரும்  உபகாரக ஆசார்யரும்

நாயனாராச்சான் பிள்ளை தாமருளிச்செய்த “சரமோபாய நிர்ணயம்” க்ரந்தத்தில் இவ்விருவகைப் பட்ட ஆசார்யர்களையும் பற்றித் தெளிவாக விளக்கி, எம்பெருமானாரின் ஏற்றம் என்ன என்பதைக் காட்டியுள்ளார்.

உத்தாரக ஆசார்யர்

தம்மைச் சரண் புக்க சிஷ்யரை ஸம்ஸார பந்தத்திலிருந்து மீட்டெடுத்துப் பரமபதம் சேர்த்துக் கரைசேர்க்கும் ஆசார்யரே உத்தாரக ஆசார்யர். இவ்வகையில் எம்பெருமான், நம்மாழ்வார், எம்பெருமானார் இம்மூவரே உத்தாரக ஆசார்யர்களாகக் கொண்டாடப் படுகிறார்கள்.  எறும்பியப்பா தமது வரவர முநி சதகத்தில் மாமுநிகளையும் இம்மூவரோடு சேர்த்து உத்தாரக ஆசார்யராகக் காட்டியருளுகிறார்.

ஸ்ரீமன் நாராயணன் ஸர்வஞன், ஸர்வ சக்தன், ஸர்வ ஸ்வதந்த்ரன் என்பதால் அவன் எவர்க்கும் மோக்ஷம் தர வல்லவன்.

பெரிய பெருமாள் – திருவரங்கம்

ஸம்ஸாரிகளுக்குத் தத்வஹித புருஷார்த்தங்களையுணர்த்தி, செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்ளவல்ல நம்மாழ்வார் எவர்க்கும் மோக்ஷம் தர வல்லவர். இதை அவரே,”பொன்னுலகாளீரோ” திருவாய்மொழியில் தூது செல்லும் பக்ஷிகளுக்கு ஸம்பாவனையாக நித்ய விபூதி/லீலா விபூதி இரண்டையும் அவை செய்யும் புருஷகாரத்துக்குத் தாம் ஸமர்ப்பிப்பதாக ஸூசிப்பிக்கிறார்.

நம்மாழ்வார்ஆழ்வார் திருநகரி

ஸ்ரீரங்கநாதனாலும்  திருவேங்கடமுடையானாலும் லீலா விபூதி, நித்ய விபூதி இரண்டுக்கும் “உடையவர்” என இராமாநுசர் நியமிக்கப் பட்டார். அவர் இந்த லீலா விபூதியில் 120 ஸம்வத்ஸரங்கள் எழுந்தருளி இருந்து பகவதநுபவத்தில் மூழ்கியதோடு, எல்லா திவ்யதேசத்தெம்பெருமான்களுக்கும் கைங்கர்யம் செய்து அவர்களின் ஆக்ஞையை நிறைவேற்றினார். முழுமையான வகையில் எம்பெருமான் திருவுளப்படியே ஸந்நிதி வழிபாட்டுக் கிரமங்களை நிறுவி 74 ஸிம்ஹாஸனாதிபதிகள், ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் மூலம் இதை நிரந்தரப் படுத்தினார்.

எம்பெருமானார்ஸ்ரீ பெரும்பூதூர்

எம்பெருமான் சாஸ்த்ர மர்யாதைப்படி நடப்பவன் ஆதலால் ஒவ்வொரு சேதனனுக்கும் அவனவன் இச்சை/கர்மாநுகுணமாக மோக்ஷம் தருவதோ, ஸம்ஸாரத்தில் வைப்பதோ செய்கிறான். ஆகவே, உத்தாரகத்வம் எம்பெருமானாரிடத்திலேயே பூர்த்தியாயுள்ளது என்று நாயனாராச்சான் பிள்ளை தலைக்கட்டுகிறார்.

நம்மாழ்வார், பரஜ்ஞானம் பெற்றாரேயாகிலும், தம் அளவு கடந்த ஆர்த்திகாரணமாக மிக்க இளமையிலேயே ஸ்வல்ப உபதேசம் செய்து, பகவதநுபவத்திலேயே மூழ்கி லீலா விபூதியை விட்டகன்றார்.

எம்பெருமானாரோ தமது நிரவதிக கருணையினால் இந்த பரஜ்ஞானத்தின் பலத்தை ஆசை உடையோர்க்கெல்லாம் அவ்வாசை ஒன்றே பற்றாசாகக் கொண்டு வழங்கி, எம்பெருமானிடம் சேர்ப்பிக்கிறார்.

இவ்வாறு, எம்பெருமானாரிடம் மட்டுமே இந்த உத்தாரகத்வ பூர்த்தி உள்ளது என்று நாயனாராச்சான் பிள்ளை உறுதிப் படுத்துகிறார்.

உபகாரகாசார்யர்

நம் ஸம்ப்ரதாயத்தில் நம்மை உத்தாரகாசார்யரிடம் கொண்டு சேர்க்க வல்ல ஆசார்யர் உபகாரகாசார்யர் எனப்படுகிறார்.  நமக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் நடக்கும்போது, நம் ஆசார்யர் குருபரம்பரையின் மூலமாக நம்மை எம்பெருமானிடம் கொண்டு சேர்ப்பித்து ஸம்ஸாரத்தைத் தாண்டி பரமபதம் அடைவிக்கிறார்.

நம் ஸம்ப்ரதாயத்தில் எம்பெருமானாருக்குள்ள ப்ராதான்யம் ஒப்புயர்வற்றது என்றாலும், உத்தாரகாசார்யர், உபகாரகாசார்யர் இருவருமே நமக்கு இன்றியமையாதவர்கள், உத்தேச்யர்கள்.

ஸமாச்ரயணாசார்யர், ஞானாசார்யர்

நமக்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்பவர் நம் ஸமாச்ரயணாசார்யர். நமக்கு க்ரந்த காலக்ஷேபாதிகளால் ஆத்ம ஞானம் வளர்ப்பவர் ஞாநாசார்யர். நம் ஸமாச்ரயணாசார்யருக்கு நாம் எல்லா வகைகளிலும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டாற்போன்றே ஞாநாசார்யரையும் கருதக் கடமைப் பட்டுள்ளோம். சிலருக்கு இருவருமே ஒரே ஆசார்யராய் இருக்கக் கூடும். உண்மையில் நாம் ஒவ்வொரு ஸ்ரீ வைஷ்ணவரையும் நம் ஆசார்யராகவே கருதவேணும் என்பது ஸ்ரீ வசன பூஷண தாத்பர்யம்.

சுருங்கச்சொல்லில், சிஷ்யன் ஆசார்யனையே முற்றிலும் சார்ந்திருக்கவேண்டும்; ஆசார்யரின் ஐஹிகத் தேவைகள் அனைத்தையும் தாமே பூர்த்தி செய்யவேண்டும். இதற்காக, அவர் எப்போதும் ஆசார்யரோடு தொடர்பிலிருந்து என்ன தேவை என அறிந்துகொள்ள வேண்டும்.

பூர்வாசார்யர்கள் வாழ்விலே பல அத்புதமான நிகழ்ச்சிகள் ஆசார்ய சிஷ்ய ஸம்பந்தத்தை விளக்குவனவாக உள்ளன.

 • மணக்கால் நம்பி தம் ஆசார்யர் திருமாளிகையில் பல வகைப்பட்ட கைங்கர்யங்களைச் செய்தார்.
 • இவரே ஆளவந்தாரை நம் சம்ப்ரதாயத்தில் கொணரப் பெரும்பாடு பட்டார்.
 • எம்பெருமானார் ஆசார்யராக இருப்பினும், சிஷ்யர் ஆழ்வானை மிக்க மர்யாதையோடேயே நடத்திக்கொண்டு போந்தார்.
 • ஒருகால் எம்பெருமானார் ஆழ்வானிடம் மனஸ்தாபம் கொண்டார். ஆழ்வான், “அடியேன் எம்பெருமானாரின் சொத்து. அவர் திருவுளப்படி உபயோகித்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.
 • எம்பார், தன் ஆசார்யன் திருமலை நம்பி ஸயநிக்கும் முன்பாக அவரது படுக்கையில் தாம் படுத்து, சரியாயிருக்கிறதா என்று சோதிப்பார்; இது அபசாரமன்றோ என எம்பெருமானார் கேட்டபோது, அபசாரமே ஆகிலும், எனக்குப் பாபமே சேரிலும் அதனாலென்ன, ஸ்வாமிக்கு சயனம் குறைவற இருக்க வேண்டும் என்றாராம்.
 • எம்பெருமானார் அனந்தாழ்வானிடம் “பட்டரை நாமாகவே எண்ணியிரும், அப்படியே மதித்திரும்” என்றார்.
 • பட்டரும் நஞ்சீயரும் மிகச்சிறந்த ஆசார்ய சிஷ்ய பாவனையிலிருந்தார்கள். நஞ்சீயர் சாதிப்பார் ”அடியேனுடைய ஸன்யாஸ ஆச்ரமம் ஆசார்ய கைங்கர்யத்துக்கு சிறிது இடையூறானாலும், இந்தத் த்ரிதண்டத்தைத் தூக்கி எறிந்து விடுவேன்”.
 • பாசுர விளக்கங்கள் தருவதில் அபிப்ராய பேதங்கள் தோன்றினாலும், ஆசார்யரான நஞ்சீயர் தம் சிஷ்யர் நம்பிள்ளை வ்யாக்யானம் சாதிப்பதை மிகவும் உகந்து ஊக்குவித்தார் என்பது ப்ரசித்தம்.
 • பின்பழகிய பெருமாள் ஜீயர், நீராடி வரும் தம் ஆசார்யர் நம்பிள்ளையின் நீர்த்துளி முத்துகள் தெரியும் திருமுதுகைத் திருக்காவேரியிலிருந்து கண்களால் பருகியபடியே வருதற்காகப் பரமபதமும் வேண்டாம் என வெறுத்திருந்தார்.
 • கூர குலோத்தம தாசர் திருவாய்மொழிப் பிள்ளையை ஸம்ப்ரதாயத்தில் கொணர அரும்பாடு பட்டார்.
 • மணவாள மாமுநிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளையின் ஆஞ்யைக்கிணங்கவே ஸ்ரீ பாஷ்யம் ஒரே உரு சாதித்து, பின் எல்லாப் போதையும் அருளிச்செயல் வ்யாக்யானங்களிலும் ரஹஸ்ய க்ரந்த காலக்ஷேபத்திலேயுமே கழித்தார்.
 • ஒரு ஸம்வத்ஸர  காலம் முழுதும் தன் ஸந்நிதி வாசலிலேயே தன நாய்ச்சிமாரோடு மணவாள மாமுநிகளின் ஈடு காலக்ஷேபம் கேட்டு, ஸ்ரீ ரங்கநாதன் ஆசார்ய சம்பாவனையாக அவர்க்கு “ஸ்ரீ சைலேச” தனியனையும், தன் சேஷ பர்யங்கத்தையும் சமர்ப்பித்தான்.
 • மணவாள மாமுநிகள் தமதேயான திருவாழி/திருச்சங்க இலச்சினைகளைத் தம் சிஷ்யரான பொன்னடிக்கால் ஜீயருக்குத் தந்து, அவரைத் தம் ஸிம்ஹாஸனத்திலேயே எழுந்தருளச்செய்து அப்பாச்சியார் அண்ணாவுக்கு ஸமாச்ரயணம் செய்வித்தார்.

இங்கனே இன்னும் பலவுள. இவ்விசேஷ சம்பந்தம் தெரிந்துகொள்வதற்காகச் சிலவற்றை இங்குச் சொன்னபடி.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://ponnadi.blogspot.com/2015/12/simple-guide-to-srivaishnavam-acharya-sishya.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – பஞ்ச ஸம்ஸ்காரம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< முகவுரை

பெரிய நம்பிகள் ஸ்ரீ ராமாநுஜருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்தல்

நாம் ஸ்ரீவைஷ்ணவர் ஆவதெப்படி?

நம் பூர்வாசார்யர்கள் திருவுளப்படி நாம் ஸ்ரீவைஷ்ணவராவதற்கு ஒரு முறை/க்ரமம் உள்ளது. அதுவே “பஞ்ச ஸம்ஸ்காரம்” ஆகும், அதாவது நம் சம்ப்ரதாயத்துக்கு அறிமுகப் படுத்தப் படுவது.

ஸம்ஸ்காரம் எனில் தூய்மைப் படுத்தும் முறை. தகுதி அற்ற நிலையிலிருந்து தகுதி உள்ள நிலைக்கு மாற்றப் படுவது. இம்முறையில்தான் ஒருவர் முதலில் ஸ்ரீ வைஷ்ணவர் ஆகிறார். ப்ராஹ்மண குடும்பத்தில் பிறந்தவன் ப்ரஹ்மோபதேசம் பெற்றுப் ப்ராஹ்மண நிலை எய்துவதுபோல்தான் இது. ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் பிறந்தவன் இந்த முறையில் எளிதில் ஸ்ரீவைஷ்ணவன் ஆகிறான். ஆனால் இதில் ஒரு வியத்தகு செய்தி என்னெனில் ஸ்ரீவைஷ்ணவன் ஆதற்கு ஒருவன் ஸ்ரீவைஷ்ணவகுலத்தில் பிறந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில் ஸ்ரீ ஸ்ரீவைஷ்ணவத்வம் ஆத்ம ஸம்பந்தமானது, ப்ராஹ்மண்யம் சரீர ஸம்பந்தமான ஸம்ஸ்காரம். மோக்ஷ மார்க்கம் புகுந்து பிற தேவதாந்தர உபாஸனம் முதலியன விட்டு எம்பெருமானையே சரண் அடைய வழி செய்யும் பஞ்ச ஸம்ஸ்காரம் மொழி, ஜாதி, இனம், நாடு அனைத்தும் கடந்ததாகும்.

பஞ்ச ஸம்ஸ்காரம் அல்லது ஸமாச்ரயணம் என்பது சாஸ்த்ரத்தில் ஒருவரை ஸ்ரீவைஷ்ணவர் ஆக நெறிப்படுத்தும் முறையாக விளக்கப்பட்டுள்ளது. இந்த ச்லோகம் இதை நன்கு விளக்குகிறது:
“தாபப் புண்ட்ர ததா நாம மந்த்ரோ யாகஸ் ச பஞ்சம:” என்பதில் ஐந்து நடவடிக்கைகளும் சொல்லப்படுகின்றன.

 • தாப: – உஷ்ணம் – சங்கமும் சக்ரமும் உஷ்ணப்படுத்தப்பட்டுத் தோள்களில் பொறிக்கப்படுவது; பாத்திரம் பண்டங்களில் பெயர் குறித்து இன்னார் உடைமை என்பதுபோலே இதனால் நாம் எம்பெருமானுக்கு உடைமை என்பது தெரிவிக்கப் படுகிறது.
 • புண்ட்ர – த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களை உடலில் குறிப்பிட்ட பாகங்களில் தரித்தல்;
 • நாம – தாஸ்ய நாமம் தரித்தல். ஆசார்யனால் வழங்கப்படும் தாஸ்ய நாமம், மதுரகவி தாசன் அல்லது இராமானுச தாசன் அல்லது ஸ்ரீ வைஷ்ணவ தாசன் என்பது போல
 • மந்த்ர – மந்த்ரோபதேசம். ஆசார்யரிடம் மந்த்ரோபதேசம் பெறுதல். மந்த்ரம் என்பது உச்சரிக்குக்கும் நம் துயர்களைப் போக்குவது. திருமந்தரம், த்வயம், சரமச்லோகம் இம்மூன்றும் நம் ஸம்ஸாரத் துயரங்களைப் போக்குவன.
 • யாக – இல்லத்தில் தினமும் எம்பெருமானைத் தொழத் திருவாராதனக் கிரமத்தை அறிதல்.

அடிப்படைத் தகுதிகள்

எம்பெருமானைச் சரண் புகுமுன் நமக்கு வேண்டிய அடிப்படைத் தகுதிகள் இரண்டுளதாம். அவை:

 • ஆகிஞ்சந்யம் – அடியேனுக்கு ஒரு நிறையும், தகுதியும் இல்லை, முற்றிலும் இயலாதவனாக ஒரு நிறைவும் இல்லாதவனாக உள்ளேன் எனும் பணிவு
 • அநந்ய கதித்வம் – எம்பெருமானைத் தவிர வேறு ஒரு புகலும் இல்லை, அவனே கரையேற்றிக் காப்பாற்றுவான் எனும் உறுதி

பஞ்ச ஸம்ஸ்காரத்தின் லக்ஷ்யங்கள்

சாஸ்த்ரம் “தத்வ ஞாநான் மோக்ஷ:” – ப்ரஹ்ம தத்வத்தைப் பற்றிய அறிவினால் மோக்ஷம் என்கிறது. ஆகவே உரிய ஓர் ஆசார்யர் மூலமாக அர்த்த பஞ்சக ஞாநம் பெற வேண்டுவது ஆவச்யகதை ஆகிறது. இம்மந்த்ரத்தின் உட்பொருளான 1. ப்ரஹ்மம – எம்பெருமான், இறைவன்; 2. ஜீவன் – ஜீவாத்மா; 3. உபாயம் – இவ்விறைவனை அடையும் வழி; 4. உபேயம் – உறுதிப் பொருள், கைங்கர்ய ப்ராப்தி; 5. விரோத – இவ்வுறுதிப் பொருளை அடைவதில் உள்ள தடைகள் என்னும் இவ்வைந்து விஷயங்களே அர்த்த பஞ்சகத்தை உணர்த்தும் மந்த்ரங்களின் உட்பொருளாம். நித்ய விபூதியில் எப்போதும் கைங்கர்யம் செய்ய விழைந்து வேண்டுவதும், எப்போதும் எல்லாவற்றுக்கும் எம்பெருமானையே எதிர்நோக்கி இருப்பதும், இந்நிலவுலகில் இருக்கும்வரை எம்பெருமானுக்கும், ஆசார்யருக்கும் பாகவதருக்கும் தொண்டு செய்தே இருப்பதும் திருவாராதனம், திவ்ய தேச கைங்கர்யம் இவற்றில் போது போக்குதலும் தலையாய கடமைகளாம்.

இச்சீரிய கருத்தினை அனைவரும் அறிந்து உய்யுமாறு அனைவர்க்கும் எடுத்துரைத்தலும் ஒரு பெரிய கைங்கர்யமாகும்.

ஆசார்யரே ஜீவனையும் பரமனையும் இணைத்து வைப்பவர் ஆதலின், நாம் அனைவரும் ப்ரபன்னரே ஆகிலும் நாம் ஆசார்யரையும் பாகவதர்களையும் அண்டி நிற்கும் ஆசார்ய/பாகவத நிஷ்டர்களே என்றே இராமாநுசர் முதலாக நம் முதலிகள் அனைவரும் மூதலித்துப் போந்தனர். ஜீவாத்மா தன் உண்மை நிலையை உணர்ந்து பஞ்ச ஸம்ஸ்கார சமயத்தில் ஆசார்யன் மூலமாக எம்பெருமானிடம் சரண் அடைவதால், இதுவே உண்மையான பிறவியாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த ஜீவாத்மா-பரமாத்ம ஸம்பந்தம் மனைவி-கணவன் ஸம்பந்தம் போன்றதால், ஜீவாத்மா மற்ற தேவதைகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டியதின் ஆவச்யகதை அடிக்கடி அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இவ்வாறாக, இந்த ஸம்ஸார மண்டலமும் அல்ப அஸாரமான பொருள்களில் ஆசையும் விட்டு, எம்பெருமானின் நித்ய விபூதியில் நித்ய கைங்கர்யம் செய்ய விரும்பிச் செல்வதே பிறவிப் பயன் என்பது இவ்வைஷ்ணவ சித்தாந்த ஸாரமாகும்.

யார் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யலாம்?

ஸ்ரீ வைஷ்ணவம் அநாதி காலமாய் இருந்துவரும் ஸம்ப்ரதாயமே ஆகிலும், இராமாநுசர் ஸகல சாஸ்த்ரங்களையும் ஆய்ந்து தமது பூர்வாசார்யர்களான ஆளவந்தார் நாதமுனிகள் போன்றோரின் நெறி நின்று எல்லாக் க்ரமங்களுக்கும் நெறிமுறைகளைத் தெளிவுபட ஏற்படுத்தி வைத்தார். அவர் 74 ஸிம்ஹாஸனாதிபதிகளை நியமித்து, எவரெவருக்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொள்ள ஆசை உள்ளது, அதற்குத் தக்க உள்ளனர் என்று கண்டுகொண்டு அதைச் செய்துவைக்கச் சில மடங்களையும் ஏற்படுத்தினார். இவ்வேழுபத்தினான்கு ஆசார்யர்களின் வழியிலும், மடங்களின் மரபிலும் வந்தோர் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யும் மரபு ஏற்பட்டது.

பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொள்ளுமன்று நாம் என்ன செய்ய வேண்டும்?

 • அதிகாலையில் எழ வேண்டும்.
 • எம்பெருமானோடுள்ள ஸம்பந்த ஞாநம் இன்று பிறப்பதால் இன்றே பிறந்த நாள் என்றெண்ணி எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனையும், ஆழ்வார்களையும் ஆசார்யர்களையும் சிந்திக்கவேண்டும்.
 • ஊர்த்வபுண்ட்ர தாரணம், ஸந்த்யாவந்தநாதி தினசர்யைகளை அனுஷ்டிக்கவேண்டும்.
 • இயன்ற அளவு புஷ்பம் பழம் ஆசார்யனுக்கும் எம்பெருமானுக்கும் வஸ்த்ரம் சம்பாவனைகளை எடுத்துக்கொண்டு குறித்த வேளைக்குள் ஆசார்யன் மடம்/திருமாளிகை அடைய வேண்டும்.
 • ஸமாச்ரயணம் பெறவேண்டும்.
 • ஆசார்யரிடம் ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீகரிக்க வேண்டும்.
 • ஆசார்யர் அனுக்ரஹிக்கும் உபதேசங்களைக் கவனமாகக் கேட்க வேண்டும் .
  மடம்/திருமாளிகப் ப்ரசாதம் ஸ்வீகரிக்க வேண்டும்.
 • அன்றைய பொழுதை மடம்/திருமாளிகையிலேயே இருந்து ஆசார்யரிடம் நேரடியாக எவ்வளவு ஸாரார்த்தம் க்ரஹிக்க முடியுமோ க்ரஹிப்பது.
 • ஸமாச்ரயணம் ஆனவுடனே ஆலுவலகம் ஓடுவது தவிர்த்து அன்றைய நாளை முழுவதும் ஆத்மா சிந்தனையில் நிம்மதியாகச் செலவிடுவது.

பஞ்ச ஸம்ஸ்காரம் ஒரு தொடக்கமா அல்லது முடிவா?

ஸமாச்ரயணம் என்பது ஓர் எளிய சடங்கு, அத்தோடு எல்லாம் முடிந்தது என்றொரு தவறான கருத்து நிலவுகிறது. ஸ்ரீவைஷ்ணவ வாழ்வுக்கு இது ஒரு தொடக்கம் மட்டுமே. ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரோடு ஸ்ரீமன் நாராயணனுக்கு நித்ய கைங்கர்யம் திருநாட்டில் செய்ய வேணுமென்பதே ஒரே லக்ஷ்யம். ஆதலால் அதை அடைய ஆசார்ய அனுக்ரஹமும் பாகவத அனுக்ரஹமும் பெற்று எம்பெருமானின் கைங்கர்யத்தில் மகிழ்ச்சியோடு ஈடுபடப் பூர்வர்கள் காட்டிய நெறியில் அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நம்மை உயர்த்திக் கொள்வதே இதன் குறிக்கோள்.

பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்ற ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுடைய நடைமுறை எப்படி இருக்கும் என இதனைப் பிள்ளை லோகாசார்யர் முமுக்ஷுப்படி ஸூத்ரம் 116ல் தெளிவுபடுத்தியருளும் வகை இதோ:

 • உலகியல் விஷயங்களில் எல்லா ஆசைகளையும் முற்றாக விட்டுத் தொலைப்பது.
 • ஸ்ரீமன் நாராயணன் ஒருவனையே ஒரே அடைக்கலமாகப் பற்றுவது.
 • நித்ய கைங்கர்யம் எனும் பேறு அவச்யம் கிட்டும் எனும் அசையா நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது .
 • அந்தப் பேற்றை விரைவிலேயே அடைய வேண்டும் எனும் இடையறாத ஆசையோடு தவிப்பது.
 • இவ்வுலகில் இருக்கும் வரை திவ்ய தேசங்களில் கைங்கர்யம் செய்தும் எம்பெருமானின் திவ்ய குணாநுபவம் செய்தும் பொழுது போக்குவது.
 • இப்படிப்பட்ட குண சீலர்களான எம்பெருமானின் அடியார் பெருமை உணர்ந்து அவர்களைக் கண்டு மகிழ்வது.
 • திருமந்த்ரத்திலும் த்வய மகா மந்த்ரத்திலும் நெஞ்சை நிலை நிறுத்துதல்.
 • தன் ஆசார்யரிடம் அன்பும் பக்தியும் பெருகி இருத்தல் .
 • ஆசார்யரிடமும் எம்பெருமானிடத்தும் நன்றி விச்வாசம் பாராட்டுதல் .
 • ஸத்வ குண ஸம்பன்னரான மெய்ஞானமும் பற்றின்மையும் சாந்தமும் உள்ள ஸ்ரீவைஷ்ணவரோடு கூடியிருத்தல் .

இதை இன்னும் விளக்கமாகக் காண – http://ponnadi.blogspot.in/2012/08/srivaishnava-lakshanam-5.html.

இவ்விஷயத்தில் தம் சிஷ்யர்கள் பலர் மூலமும், எழுபத்து நான்கு ஸிம்ஹாசனாதிபதிகள் மூலமும் பஞ்ச ஸம்ஸ்காரத்தை நிலை நிறுத்தி, ஒழுங்கு படுத்தி இதை ஒரு சாஸ்வதமான நெறியாக்கி நம் யாவர்க்கும் உய்வளித்த ஸ்வாமி எம்பெருமானாரை அவச்யம் நன்றியோடு நினைவு கூர்ந்து அஞ்ஞானத்திலிருந்து நம்மை எடுத்துத் தூக்கி எம்பெருமான் கைங்கர்யமும் மங்களாசாசனமுமே வாழ்ச்சி எனக் காட்டிய அவர் திருவடிகளை ஸ்மரிப்பது கடமை.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://ponnadi.blogspot.com/2015/12/simple-guide-to-srivaishnavam-pancha-samskaram.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – முகவுரை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< வாசகர் வழிகாட்டி

srivaishna-guruparamparai

ஸ்ரீமன் நாராயணன் ஸ்ருஷ்டி காலத்தில் ப்ரம்மாவுக்கு சேதனர்களை உய்விப்பதற்காக நிர் ஹேதுக க்ருபா மாத்ரமடியாக வேதங்களை உபதேசித்தான்.வைதிகர் அனைவர்க்கும் வேதமே ப்ரமாணம். ஒரு ப்ரமாதா (ஆசார்யன்) ஒரு ப்ரமாணம் (சாஸ்திரம்) மூலமாகவே ப்ரமேயத்தை (எம்பெருமானை) நிர்ணயிக்க முடியும்.  எப்படி எம்பெருமான் பிற எல்லாவற்றினின்றும் அவனை வேறுபடுத்திக் காட்டும்படி அகில ஹேய ப்ரத்யநீகதானத்வம் (எல்லாத் தாழ் குணங்களுக்கும் எதிர்த்தட்டாயிருத்தல்), கல்யாணைகதானத்வம் (அனைத்துக் கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாயிருத்தல்) எனத் தனிசிறப்புகளோடு திகழ்கிறானோ, அவ்வாறே பிற ப்ரமாணங்களினின்றும் தன்னை வேறுபடுத்திக் காட்டும் பின்வரும் சிறப்புகளைப் பெற்றுள்ளது:

 • அபௌருஷேயத்வம் – ஒருவரால் படைக்கப்படாமை. ஒவ்வொரு ஸ்ருஷ்டி காலத்திலும் எம்பெருமான் ப்ரம்மனுக்கு வேதத்தைக் கற்றுத் தருகிறான். ஆகவே, சாதாரணர் படைப்புகளிலுள்ள குறைகள் எதுவும் இன்றித் திகழ்கிறது வேதம்.
 • நித்யம் – அழியாமல் சாஸ்வதமாய் உள்ளது. தொடக்கமோ முடிவோ இல்லாமல், எப்போதும், அதன் உள்பொருளை நன்கு அறிந்தவனான எம்பெருமானாலேயே ப்ரம்மனுக்கு உபதேசிக்கப் படுகிறது.
 • ஸ்வத: ப்ராமாண்யத்வம் –  இது பிரமாணம் என்று உணர்த்த இன்னொரு நூலின் தேவையின்றித் தானே அடிப்படையாய் இருப்பது.

வேதங்களின் அளவற்ற பரப்பை உணர்ந்தும், அவற்றை நாள்பட நாள்படக் குறைந்துகொண்டே வரும் மானிட ஞானத்தினால் அறிந்துகொள்வது கடினமென்னும் நினைவாலும், வேத வ்யாசர் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பகுத்தார்.

வேதங்களின் ஸாராம்சமே வேதாந்தம்.  இப்படி எம்பெருமானைப் பற்றிய நுட்பமான விஷயங்களைப் பேசுவன உபநிஷத்துகள். வேதங்கள் உபாசனை முறைகளைப் பற்றிப் பேசும்; வேதாந்தமோ அந்த உபாசனைக்குப் பொருளான எம்பெருமானைப் பற்றிப் பேசும். உபநிஷதங்கள் பல. ஆயினும் பின்வரும் உபநிஷதங்கள் ப்ரதானம்:

 • ஐதரேய
 • ப்ருஹதாரண்யக
 • சாந்தோக்ய
 • ஈச
 • கேந
 • கட
 • கெளஷீதிகீ
 • மஹா நாராயண
 • மாண்டூக்ய
 • முண்டக
 • ப்ரச்ன
 • ஸுபால
 • ச்வேதாச்வதர
 • தைத்திரிய

உபநிஷதங்களின் ஸாரமாகக் கருதப்படும் வேதவ்யாசரால் தொகுக்கப்பட்ட ப்ரஹ்ம ஸூத்ரமும் வேதாந்தத்தின் பகுதியாகக் கருதப் படுகிறது.

வேதங்கள் அனந்தம் – எண்ணற்றவை, அளப்பரியன, நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாதவை என்பதால்  நாம் வேதங்களையும் வேதாந்தத்தையும் ஸ்ம்ருதி, இதிஹாசங்கள், புராணங்களின் துணையோடு அறிகிறோம்.

 • மநு, விஷ்ணு ஹாரீதர், யாஞவல்க்யர் போன்ற மஹரிஷிகளால் தொகுக்கப்பட்ட சாஸ்த்ரங்கள் ஸ்ம்ருதி எனப்படும்.
 • ஸ்ரீ ராமாயணமும், மஹா பாரதமும் இதிகாசங்கள். .ஸ்ரீ ராமாயணம் சரணாகதி சாஸ்த்ரமாகவும், மஹா பாரதம் பஞ்சமோ (ஐந்தாம்) வேதம் என்றும் போற்றப் பெறுகின்றன.
 • ப்ரம்மனால் தொகுக்கப்பட்ட பதினெட்டு முக்ய புராணங்களே புராணங்கள் எனக் கருதப் படும். இந்த ப்ரம்மனே, தான் ஸத்வ குணத்திலுள்ளபோது எம்பெருமானையும், ராஜச குணத்திலுள்ளபோது தன்னையேயும், தாமஸ குணத்திலுள்ளபோது அக்னி போன்ற தாழ்ந்த தேவதைகளையும் ஏத்திப் பேசுவதாகக் கூறுகிறார். ஆகவே அந்தந்தப் புராணங்களின் நிலையும் அதுவேதான்.

இவ்வாறு பல்வேறு சாஸ்த்ரங்களும் இருப்பினும் அவற்றால் ஞானம் அடையாது ஜீவர்கள் லௌகிகத்திலேயே மூழ்கிக் கிடந்தது துவள்வதால் எம்பெருமான் தானே கருணையால் அவதாரங்கள் செய்து அறிவூட்டித் திருத்தப் பார்த்தான். மானிடரோ திருந்தாததோடு ஈச்வரனோடும் எதிரம்பு கோக்க முற்பட்டனர்! ஆகவே அவர்களிலேயே சிலரைத் தன் க்ருபையினால் மயர்வற மதிநலம் அருளி, ஆழ்வார்களாக பகவதநுபவம் பெற்று மற்றோர்க்கும் அதைப் பகிர்ந்தளிக்கும் காருணிகர்களாக நிறுத்தியருளினான். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார்,பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார்,திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (நம்மாழ்வாரின் சீடர்), ஆண்டாள் (பெரியாழ்வார் திருமகளார்) என்கிற ஆழ்வார்கள் மூலம் மங்களாசாசனமே வாழ்வாகக் காட்டியருளினான்.

இவ்வாறு ஜீவர்களை உஜ்ஜீவிப்பிக்க எம்பெருமான் ஆழ்வார்களைத் தோற்றுவித்தும்  திருப்தியுறாது, நாதமுநிகள் முதலாக மணவாள மாமுனிகள் ஈறாக ஆசார்யர்களையும் தோற்றுவித்தான். ஆதிசேஷனின் அவதார விசேஷமான ராமானுஜர் நம் ஆசார்ய பரம்பரையில் நடு நாயகமாகத் திகழ்ந்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தையும் விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தையும் சிறந்து விளங்கும்படி செய்தார்.

பராசரர், வ்யாசர், த்ரமிடர், டங்கர் போன்ற ரிஷிகள் வழியில் சென்று விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நன்கு ஸ்தாபித்தார். எழுபத்து நான்கு சிம்ஹாசநாதிபதிகள் வாயிலாக விசிஷ்டாத்வைதத்தை எங்கும் பரப்பி, ஆசையுடையோர்க்கெல்லாம் ஸ்ரீவைஷ்ணவத்தை அளிக்கும்படி செய்தார்.இப்படிப்பட்ட இவரின் சிறந்த செயல்களாலும், எல்லோரையும் உஜ்ஜீவிக்கக் கூடியவராய் இருந்ததாலும், நம் ஸம்ப்ரதாயம் எம்பெருமானார் தரிசனம் என்றே பேர் பெற்றது. பின்பு, திவ்ய ப்ரபந்தங்களையும் அதன் அர்த்தங்களையும் நன்கு பரப்புவதற்காக அவரே மணவாள மாமுனிகளாக அவதரித்தார். பெரிய பெருமாளும் அவரை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு, தன்னால் தொடங்கப்பட்ட ஆசார்ய ரத்ன ஹாரத்தைத் தானே முடித்து அருளினான். பின்பு, மாமுனிகளின் சீடர்களான அஷ்ட திக் கஜங்களால், முக்கியமாக அதில் ப்ரதான சீடரான பொன்னடிக்கால் ஜீயர்  மூலமாக ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் நன்றாக வளர்க்கப் பட்டுள்ளது. அக்காலத்திற்குப் பிறகு பல பல ஆசார்யகள் அவதரித்து நம் பூர்வாசார்யர்களின் திருவுள்ளப்படி ஸம்ப்ரதாயத்தை நன்கு வளர்த்தனர்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://ponnadi.blogspot.com/2015/12/simple-guide-to-srivaishnavam-introduction.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org