Monthly Archives: June 2020

நவவித ஸம்பந்தம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர் எம்பெருமானுக்கும் சேதனருக்கும் உள்ள ஸம்பந்தங்களை ஒன்பதாகப் பகுத்து அவற்றைத் தமது நவ வித ஸம்பந்தம் எனும் அத்புத ரஹஸ்ய கிரந்த நூலில் வியத்தகு முறையில் அருளிச் செய்துள்ளார். பரம காருணிகரும் வியாக்கியான சக்ரவர்த்தியுமான பெரியவாச்சான் பிள்ளை இவர்க்கு முன்பாகவே ரஹஸ்ய கிரந்தங்கள் இட்டருளும் வகையில் “நிகமனப் படி” எனும் தமது அதி ஸங்க்ஷிப்தமான (மிகச் சுருக்கமான) ரஹஸ்ய நூலின் திருமந்திரப் ப்ரகரணத்தில்: “அநுஸந்தான அர்த்தம் ஸம்பந்த அநுஸந்தானம்; ஸம்பந்தம் ஏதென்னில்:- அகார பதத்தாலே பிதா புத்ர ஸம்பந்தம் சொல்லி, “அவ ரக்ஷணே ” என்கிற தாதுவினாலே ரக்ஷ்ய ரக்ஷக ஸம்பந்தம் சொல்லி, லுப்த சதுர்த்தியாலே ஶேஷி ஶேஷ ஸம்பந்தம் சொல்லி, உகார பதத்தாலே பர்த்ரு பார்யா ஸம்பந்தம் சொல்லி, மகார பதத்தாலே ஞாத்ரு ஜ்ஞேய ஸம்பந்தம் சொல்லி, நம: பதத்தாலே ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் சொல்லி, நார பதத்தாலே ஶரீர ஶரீரி ஸம்பந்தம் சொல்லி, ஆய பதத்தாலே போக்த்ருத்வ போக்யத்வ ஸம்பந்தம் சொல்லி, ஆக திருமந்த்ரத்தால் நவவித ஸம்பந்தம் சொல்லித் தலைக் கட்டுகிறது” என்று அத்புதமாகத் தெரிவித்துள்ளார்.

திருமந்த்ரமே ப்ரபன்னரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உயிரான மந்த்ரம். அதில் பெறப்படும் உய்திப் பொருளே நவ வித ஸம்பந்தம் என்பதைப் பெரியவாச்சான் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் திருவருளால் அனுபவிக்கப் பெறுகிறோம்.

உலகத்தில் உள்ள எல்லாமதங்களிலும் ஆத்மாவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆத்மா தன் முயற்சியால் ஈஶ்வரனை நினைத்தும், தொழுதும், பல்வேறு உபாஸனை முறைகளாலும் அவனை அடைவதாகக் கூறுவார்கள். ஆனால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் எம்பெருமானே எல்லாவற்றுக்கும் மையப் பொருளாய் உள்ளான். அவன் அருளால் ஆத்மா அவனை அடைகிறது அவன் ஆனந்தத்தின் பொருட்டு.  அதிலும் அடைபவன் அவனே. அடைந்த இன்பமும் அவனுக்கே. தன்னை அவன் அடையத் தான் ஒரு தடையாக இல்லாமல் இருப்பதே இவன் செய்யக் கூடியது. இவ்வாறு எல்லாக் கருமங்களுக்கும் கர்த்தாவாகவும், அவற்றின் பயனாகவும், அப்பயனைத் துய்ப்பவனாகவும் எம்பெருமானே ஶாஸ்த்ரங்களிலும் காட்டப் படுகிறான். எனவே அவனுக்கே ஸ்வாதந்தர்யம், தன் இச்சையாய் தொழில் புரியும் தகைமை உண்டு என்பதும், ஆத்மாக்களுக்கு தம் ரக்ஷணம் உட்பட எவற்றிலும் அதிகாரம் இல்லை என்பதும் தெரிகிறது.

இவ்வாறு அவனையே எல்லாவற்றிலும் ஆத்மா சார்ந்திருப்பதன் அடிப்படையிலேயே எம்பெருமானுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள ஸம்பந்தம் அமைகிறது. இந்த அமைப்பு வேதங்கள், வேத அங்கங்கள், வேதாந்தம், அவற்றை விளக்கும் ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள்,  யாவற்றிலும் தெளிவாக உள்ளது. மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களும் அவர்களின் வழிநின்று வேத வேதாந்தங்களை விரித்துரைத்த ஆசார்யர்களும் ஒரே குரலாக இதையே ஓதினார்கள்.

இந்த சார்புத் தொடர்பை ஒட்டி எம்பெருமானுக்கும் சேதனர்க்கும் உள்ள ஸம்பந்தம் அதாவது தொடர்பு ஒன்பது வகையில் அமையும் என்று ஆசார்யர்கள் திருவுள்ளம். இந்த ஒன்பது உறவு முறைகளும் ஆத்மாவின் எம்பெருமானைச் சார்ந்த நிலையையே காட்டும்.

ஒன்பது உறவு முறைகள்

“பிதா ச ரக்ஷகஸ் ஶேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமா பதி: |
ஸ்வாம்யாதாரோ மமாத்மா ச போக்தா சாபி மனூதித: ||”

पिता च रक्षक: शेषी, भर्त्ता ज्ञेयो रमापति:।
स्वाम्याधारो ममात्मा च भोक्ता चापि मनूदित:।।

என்கிற ஶ்லோகத்தில் “ஶ்ரிய: பதியான எம்பெருமான் இச்சேதனனுக்குத் தந்தையும், ரக்ஷகனும்,  ஶேஷியும், பர்த்தாவும், அறியத்தக்கவனும், ஸ்வாமியும், ஆதாரமும், ஆத்மாவும், போக்தாவும் ஆவான்” என்று இந்த ஒன்பது உறவு முறைகளும் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஒன்பது உறவு முறைகளும் ஆத்மாவுக்கு எம்பெருமானோடு நிருபாதிகமாக, ஒரு காரணமின்றி, ஸ்வாபாவிகமாக ஏற்பட்டவை. உலகிலுள்ள உறவு முறைகள் யாவும் ஒரு உபாதியினால், கர்மம் காரணமாக, பிறப்பினால் அல்லது அதுபோன்ற லௌகிக காரணங்களால் வருவன. அக்காரணங்கள் முடிந்ததும் உறவும் முடிகின்றது.  ஆனால் எம்பெருமானோடுள்ள உறவோ, “ஒழிக்க ஒழியாது” என்றபடி அவனாலும் ஒழிக்க ஒண்ணாது, நம்மாலும் இயலாது, இருவராலும் ஒழிக்க இயலாது. இப்படிப்பட்ட ஸம்பந்தம் பெற்றுள்ள நாம் அவசியம் இதை அறிந்துகொள்ள வேண்டும், இதைப் பேணவும் வேண்டும்.

இவ்வுறவை வேதங்களும், வேதாந்தமும் எப்படிச் சொல்கின்றன, நம் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் எப்படிச் சொல்கின்றனர் என்பது அறிய ரஸமானது, பயனுள்ளது.

பிள்ளை லோகாசார்யர், “நம் ஆசார்யர்கள் ப்ரதம ரஹஸ்ய தாத்பர்யமான நவ வித ஸம்பந்தம் ஸ்வரூபஜ்ஞனுக்கு நித்யாநுஸந்தேயம் என்று அநுஸந்தித்தும் உபதேஶித்தும் போருவர்கள்” என்று அருளிச் செய்கிறார். ஆகவே, இந்த ஸம்பந்தமே மந்த்ர ரஹஸ்ய தாத்பர்யம் என்று மேலோர் கருதினர். மேலும், அவர்கள் அப்படியே இதைத் தாமும் அனுசந்தித்து, தம் ஶிஷ்யர்களுக்கும் உபதேஶித்தார்கள்.

இவ்வுபதேஶ  பரம்பரை நெடுநாள்களாக வந்திருந்தது என்பது அருளிச் செயலில் பெரியாழ்வாரின் ப்ரதம ப்ரபந்தமான திருப்பல்லாண்டு தொடங்கி, திருமங்கை ஆழ்வாரின் தமிழ் மறைக்கு அமைந்த ஆறங்கங்கள் நடுவாக, ஆழ்வாரின் திருவாய்மொழி ஈறாக இதே விஷயம் நமக்குப் ப்ராப்தமாவதில் புலனாகிறது.

பெரியாழ்வார், “எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ் படிகால்” என்றும் ;

ஆண்டாள், “உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்” என்றும்;

“உன்றன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது” என்றும்; “உன்றன்னோடுற்றோமே ஆவோம்; உனக்கே நாமாட் செய்வோம்” என்றும் ஸம்பந்தத்தை, உறவை மறவாது வாய் வெருவினார்கள். “அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்றிருந்தேனே” என்றும்;  “தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்றிருந்தேனே” என்றும் குலசேகரப் பெருமாளும் அருளினார். திருமங்கை ஆழ்வாரும் “எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் …” என்று இதையே விளக்கினார்.

அவை ஏது எனில்,

(1) விஶேஷண விஶேஷ்ய ஸம்பந்தம்

(2) ரக்ஷ்ய ரக்ஷக ஸம்பந்தம்

(3) ஶேஷ ஶேஷி ஸம்பந்தம்

(4) பர்த்ரு பார்யா ஸம்பந்தம்

(5) ஞாத்ரு ஜ்ஞேய  ஸம்பந்தம்

(6) ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம்

(7) ஶரீர ஶரீரி ஸம்பந்தம்

(8)  தார்ய தாரக ஸம்பந்தம்

(9) போக்த்ரு போக்ய ஸம்பந்தம்.

(1) விஶேஷண விஶேஷ்ய ஸம்பந்தம்

இந்த ஸம்பந்தம் யாதெனில் 1. பகுதியில் (அ எனும் சொல்லின்) பொருள் கொள்வதில் ஏற்படக்  கூடிய ஸந்தேகத்தை விலக்குவதாய், 2. ஆஶ்ரய ஆஶ்ரயியாய், 3. வ்யாவர்த்தக வ்யாவர்த்யமாய் இருப்பது.

 1. திருமந்திரத்தில் முதல் பதமான ப்ரணவத்தில் முதல் எழுத்து அகாரம். இதற்குப் பொருள் ஸகல ஜகத் ரக்ஷகன் எம்பெருமான் என்பது. இலக்கண விதிப்படி ‘அவ- ரக்ஷணே’ என்று (தாது) வேர்ச் சொல் இருப்பதால் அகார வாச்யனான எம்பெருமான், அகாரத்தால் அறியப்படும் எம்பெருமான்  ரக்ஷகன் ஆகிறான். ஆகில் சித், அசித் எனும் இரு பொருள்களுக்கும் அவன் (மூல) காரணம் என்று கொள்ளும்போது, அவன் அந்தக் கார்யங்களாய், பொருள்களாய் ஆகும்போது அவற்றின் அநித்யத்வம், நிலையில்லாமை எனும் தோஷம் அவனுக்கும் வருமே எனும் ஸந்தேகத்தை இவ்வுறவுமுறை நிவர்த்திக்கிறது. எப்படி எனில், அப்பொருள்கள் யாவும் நித்தியமான அவனுக்கு விஶேஷணமாய் இருப்பதால், அவன் அவற்றோடு கூடி இருக்கிறான் என்பதால் அவை சத்தை (இருப்பை) அடைகின்றன.   அவற்றின் மாறுபாட்டால் அவன் விகாரம் அடைவதில்லை.
 2. பொருள்கள் அனைத்தும் அவனை ஆஶ்ரயித்திருக்கின்றன, சார்ந்திருக்கின்றன. அவை அவனுடைய இருப்பைச் சார்ந்திருக்கின்றன. அதாவது, துணியின் வெண்மை துணியைச் சார்ந்திருப்பது போல். துணி இல்லாமல் துணியின் வெண்மை தனித்திருக்க முடியாது. ஈஶ்வரனின் ஸ்வரூபத்தைப் பற்றியல்லது பொருள்களுக்கும் இருப்பு என்பது இல்லை.
 3. வ்யாவர்த்தக வ்யாவர்த்யமாவது: எம்பெருமான் மற்றெல்லாவற்றிலுமிருந்து வேறுபட்டிருப்பதும், அவன் அப்படி வேறுபட்டிருக்கும் தன்மை இவை இல்லாமல் தெரியாதிருப்பதும்.  இத்தன்மையினாலேயே அவனது நித்ய கார்யம் கால அளவுகளைத் தாண்டியது, அநாதியானது என்று இந்த ஸம்பந்தத்தால் விளங்கும்.

“அகாரார்த்தோ விஷ்ணு:, ஜகத் உதய ரக்ஷா ப்ரளய க்ருத்” [अकारार्थो विष्णु: जगदुदयरक्षाप्रळयकृत] என்கிற அஷ்ட ஶ்லோகீ ஸ்ரீ ஸூக்தியில் பராஶர பட்டர் இந்த அகாரம் எம்பெருமானின் ஶ்ருஷ்டி (ஜகத் காரணத்வம்), ரக்ஷா (ஜகத்தை ரக்ஷிப்பது: அதாவது இஷ்ட ப்ராப்தி நல்குவது, அநிஷ்டத்தைத் தொலைப்பது எனும் கருணை), ப்ரளய க்ருத் (ஊழிக்காலத்தில் அனைத்தையும் தன்னுள் வைத்துக் காத்து புனர் ஶ்ருஷ்டிக்கு எடுத்துச்செல்வது) என்று நித்ய கார்யம் அநாதி என்று காட்டுகிறார்.

(2) ரக்ஷ்ய ரக்ஷக ஸம்பந்தம்

1, இந்த ஸம்பந்தம் தாது ஸித்தமானது. 2. அ எனும் பகுதியின் மேல்வினைப்பாட்டைக் காட்டுவது. 3. காப்பவன் காக்கப்படுபவன் இருவரின் ஸ்வரூபத்துக்கும் உசிதமானது.

1. தாது சித்தம் ஆகையாவது அ  காரத்தில் அவ ரக்ஷணே என்கிற வேர்ச் சொல்லின் பொருளான ரக்ஷணம்=காப்பு, ஒரு பொருளைப்  பற்றியன்றி நில்லாது. அதாவது ரக்ஷகன் ஒருவன் ரக்ஷிப்பானே ஆகில், அவ்வாறு ரக்ஷிக்கப்படுபவன் ஒருவன் அல்லது ரக்ஷிக்கப்படும்   பொருள் ஒன்று அவசியம் இருந்தாக  வேண்டும். அன்றேல் ரக்ஷகம், காப்பு என்பதற்குப் பொருள் சேராது.

“யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத்ப்ரயந்த்யபி ஸம்விஶந்தி தத் விஜிக்ஞாஸஸ்வ  தத் ப்ரஹ்மேதி” (தைத்திரீய ப்ருகுவல்லி)

[यतो वा इमानि भूतानि जायन्ते । येन जातानि जीवन्ति । यत्प्रयन्त्यभिसंविशन्ति । तद्विजिज्ञासस्व । तद्ब्रह्मेति] (யாதொன்றினிடமிருந்து இந்த ஜீவராஶிகள் தோன்றுகின்றனவோ, தோன்றினவை எதனால் (ரக்ஷிக்கப்பட்டு) உயிர் வாழ்கின்றனவோ, எதை ப்ரளயத்திலும் மோக்ஷத்திலும் அடைகின்றனவோ அதை அறிவாயாக; அதுவே  ப்ரஹ்மம்)   என்கிற புகழ் வாய்ந்த ஶ்ருதி வாக்கியம் இந்த ரக்ஷ்ய ரக்ஷக ஸ்வரூபத்தைக் காட்டுகிறது.

2. அகாரம் காட்டும் காரணத்வத்துக்கு அடுத்த செயல் பாட்டைக் காட்டும் ஸம்பந்தம் இது ஆகிறது. ஆழ்வார் இதை, “மூவாத் தனி முதலாய் மூவுலகுங் காவலோன்” என்று அருளிச் செய்தார். எக்காலத்திலும் மூப்பறியாத, தானே தனி முதல் வேராகி அனைத்துக்கும் வித்தானவன் தான் ஶ்ருஷ்டித்தவற்றுக்குத் தானே ரக்ஷகனாகவும் இருந்து காக்கிறான்.

3. இருவரின் ஸ்வரூபத்துக்கும் உசிதமானது: உபய ஸ்வரூப உசிதமானது என்பர்.  இருவர் ரக்ஷ்யனும் ரக்ஷகனும், அதாவது காக்கப்படுபவனும், காப்பவனும்,  காக்கப்படுபவன் ஸ்வரூபம் பாரதந்தர்யம். காப்பவன் ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம்.  காக்கப்படுபவன் தன்  ரக்ஷணத்தில் கண் வையான். ஏனெனில் ஸ்வரக்ஷணே ஸ்வாந்வயம் ப்ரபன்னனுக்கு ஸ்வரூப விரோதம். பரதந்த்ரனுக்கு ஸ்வரக்ஷண அந்வயம் கூடாது என்பதை இந்த ரக்ஷ்ய ரக்ஷக ஸம்பந்தம் காட்டும்.

“என் நான்  செய்கேன் யாரே களை  கண்? உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்”, என்றும்

“களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்” என்றும் ஆழ்வார் திருவாய்மொழியில் அருளிச் செய்தன இஸ்ஸம்பந்தத்துக்கு மிக உகந்த அநுஸந்தானம்.

(3) ஶேஷ ஶேஷி ஸம்பந்தம்:

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் உயிர் நாடியான ஸம்பந்தம் இது. எம்பெருமானும் பிராட்டியுமான சேர்த்தியிலே சரணாகதி, அதிலவர்களுக்கு உகப்பான நித்ய ஸர்வ வித ஸர்வகால ஒழிவில் கைங்கர்யமே ப்ராப்யம் என்பதாலும், ஶேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆன படியாலும், ஶேஷத்வம் கைங்கர்யத்தாலேயே ப்ராப்தமாகிறது என்பதாலும் இந்த முக்யத்வம் குறிக்கொள்ளத்தக்கது. இது, 1. விபக்தி ஸித்தமாய் இருப்பது. 2. தாத்வர்த்த பரார்த்ததா  ப்ரகாஶகமாய் இருப்பது. 3. போகாநுரூபதா தர்ஶகமாய் இருப்பது.

1. விபக்தி ஸித்தம்: அகாரத்தில், முதல் எழுத்திலேயே, சேதனன் தனக்குரியன் அல்லன், பிறர்க்குரியன் அல்லன், எம்பெருமான் ஒருவனுக்கே உரியன்  என்கிற நான்காம் வேற்றுமை உருபு (சதுர்த்தி) மறைந்து கிடக்கிறது. ப்ரணவத்தில் மகார வாச்யனான சேதனன் அகார வாச்யனான எம்பெருமானுக்கே ஶேஷப் பட்டவன் என்பதை இந்த சதுர்த்தியும், நடு எழுத்தான உ காரமும் உணர்த்தும். “உகாரோ அநந்யார்ஹம் நியமயதி ஸம்பந்தம்” [उकारोऽनन्यार्हं नियमयति संबन्धम्] என்று ஸ்ரீ பராஶர பட்டர் இதை அஷ்ட ஶ்லோகியில் ஸாதிப்பர். இதை ஶ்ருதியும்:

“யஸ்யாஸ்மி ந தமந்தரேமி” [यस्यामस्मि न तमन्तरेमि] (தைத்திரீய யஜுர் ப்ராஹ்மணம்) (எவனுக்கு நான் தாஸனாய் இருக்கிறேனோ அவனை விட்டு வேறொருவரிடம் செல்ல மாட்டேன்). இந்த அநந்யார்ஹ ஶேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூப நிரூபகமாக இருப்பது. அப்படியே அவனும் உளன் என்பதை,  பல இடங்களில் காணலாகும், ஆழ்வாரும், “நீ என்னையன்றி இலை” என்றார்.  தன்னையே பற்றியவர்களையே தான் சார்ந்திருப்பதை, எம்பெருமானும் “மம ப்ராணாஹி” [मम प्राणाहि] என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான். இந்த ஸ்தான த்ரயோசித பக்தியையே அன்றோ எம்பெருமானாரும் தம் ஶரணாகதி அனுஷ்டானத்தில் நம்பெருமாளிடம் இரந்து வேண்டியது.

2. தாத்வர்த்த பரார்த்ததா ப்ரகாஶகம்: இந்த உறவு முறையிலேயே நமக்கு அவரக்ஷணே எனும் வேர்ச் சொல்லில் உள்ள ரக்ஷணம் எம்பெருமான் தனக்கு ஶரீரமான சேதனன் விஷயமாகச் செய்யும் ரக்ஷணம் அவன் தன் உகப்புக்காகச் செய்யுமது என்கிற மிக உயர்ந்த   அர்த்த விஶேஷமும் கிடைக்கிறது. “ப்ராப்தாவும், ப்ராபகனும், ப்ராப்திக்கு உகப்பானும் அவனே” எனும் ஆசார்ய ஸ்ரீ ஸூக்தியை நினைப்பது.

3. போகாநுரூபதா தர்ஶகம்: ஶேஷ வஸ்து ஸ்வரூபம் ஶேஷி விநியோக அநு குணமாய் இருப்பது.  அதாவது, ஶேஷிக்கு எம்பெருமான் அநுபவம் தனக்கு ஓர் இன்பம் என்றிராமல் அது எம்பெருமான் போகத்துக்கு என்றிருத்தல். இப்படிப்பட்ட அநுபவம் ப்ராப்தமாம் பொழுது, ஶேஷன் தனது நீர்மையையும் எம்பெருமான் மேன்மையையும் நினையாதே அவனது முகோல்லாஸத்துக்கு முற்றிலும் தன்னை ஒருப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது. இந்நிலையில் ஶேஷனுக்கு ஸ்வாபாவிகமான ஆகிஞ்சன்யம் தாஸத்வம் என்பவற்றைவிட அவன் உகப்புக்கு உறுப்பாய்  இருப்பதே அவனுக்கு ப்ரயோஜனம் என்பது இந்த ஸம்பந்தத்தில் தெரிகிறது.

ஶேஷ ஶேஷி ஸம்பந்தமே மிகவும் பேசப்படுகிறது. ஈஶ்வரனுக்கும்  நமக்கும் உள்ள அத்யந்த ஆத்ம பந்துத்வம் ஸித்திப்பது இதிலே. ஆகவே, ஒரு சேதநன் தான் ஈஶ்வரனுக்கு ஶேஷப்பட்டவன், அவனுக்கு மட்டுமே ஶேஷப்பட்டவன் , தனக்குமல்லன், வேறு ஒருவருக்கும் அல்லன் என்ற திட அத்யவஸாயம் மனதில் ஊன்றுவதே இவனது ப்ராப்யத்வரையைக் காட்டும். திருவாய்மொழியில் அர்த்த பஞ்சகம் சொல்ல வந்த நம் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஆழ்வார் இந்த ஐந்தினையும் மூன்றில் சுருக்கி அவற்றையும் ஒன்றினில் அதாவது உறுதிப் பொருள், புருஷார்த்தம் ப்ராப்யம் ஒன்றே என்று காட்டி அருளினார்.

ப்ராப்யம், அடையத் தக்கது எம்பெருமானும் பிராட்டியுமான சேர்த்தியில் கைங்கர்யம். இதையே ஆழ்வார், “ஒழிவில் காலம் எல்லாம் வழு இலா அடிமை செய்ய வேண்டும்” என்று எம்பெருமானிடம் திருமலையில் கைங்கர்ய ப்ரார்த்தனையாகச் செய்து த்வயத்தின் செம்பொருளை நமக்குக் காட்டினார். இந்தக் கைங்கர்ய ப்ரதிஸம்பந்தி, அதாவது இந்தத் தொண்டை ஏற்றுக்கொள்பவர் பிராட்டியோடு கூடிய எம்பெருமான். இந்தக் காரணத்தினாலேயே திருமந்திரத்தில் உகாரம் அநந்யார்ஹ ஶேஷத்வத்தை அறிவுறுத்துகிறது.

பெரியவாச்சான்பிள்ளை, தமது “ரஹஸ்யத்ரய விவரணம்” எனும் நூலில், “உகாரத்தில் சொல்லுகிற சேதனனுடைய அநந்யார்ஹ ஶேஷத்வம் ஸித்திப்பது அதற்குப் ப்ரதி ஸம்பந்தியான ஶேஷித்வம் ஓரிடத்தில் இளைப்பாரில்; அங்ஙன் அன்றிக்கே, அநேகம் ஶேஷிகளாகில், அநந்யார்ஹ ஶேஷத்வம் ஸித்தியாது. அந்யராயிருப்பார் சில ஶேஷிகள் உண்டாகில் அந்ய ஶேஷித்வம் ஸித்திப்பதொழிய அநந்யார்ஹ ஶேஷத்வம் ஸித்தியாது” என்று ஸாதிக்கிறார்.

கைங்கர்யமே ஆத்மாவுக்கும் எம்பெருமானுக்குமிருக்கும் ஶேஷ ஶேஷி ஸம்பந்தத்தை உறுதி செய்கிறது. ஆகவே நம் ஆசார்யர்கள் கைங்கர்யமே ஶேஷ வ்ருத்தி அதாவது ஶேஷனின் செயல் என்று பலகாலும் சொன்னார்கள். இங்கும் பெரியவாச்சான் பிள்ளை, அநந்யார்ஹ ஶேஷத்வத்தை விளக்க, ஒருவன் ஶேஷன் ஆகில் அவன் கைங்கர்யம் ஒருவனுக்கே அமையும், அவ்வாறு அமையாமல் பலர் ஶேஷிகள் இருக்கில் அநந்யார்ஹ ஶேஷத்வம் குலையும். ஆத்மா பலருக்கு அடிமை ஆகில் ஸ்வரூப நாஶம் விளையும். ப்ரணவத்தில் உகாரமும், மத்யம பதமான நம : பதமும், சரம பதமான நாராயண பதத்தில் ஆய எனும் வ்யக்த சதுர்த்தியும் (வெளிப்படையாகத் தெரியும்  நான்காம் வேற்றுமை உருபும்) இதையே தெரிவிக்கும். திருமந்திரத்தின் நோக்கே ஸ்வரூபத்தில் தான், ஸ்வரூபம் நிறம் பெறுவது எம்பெருமானுக்கே அவன் உகப்புக்காகக் கைங்கர்யம் பிராட்டி சேர்த்தியில் ஸ்வயம் ப்ரயோஜனமாகச் செய்வதுதான்.

இந்த ஶேஷ ஶேஷி பாவத்திலிருந்து பிறக்கின்றன மற்ற ஸம்பந்தங்கள்.

(4) பர்த்ரு பார்யா ஸம்பந்தம்:

பர்த்ரு பார்யா ஸம்பந்தம் எம்பெருமான் கணவன் என்றும், ஜீவாத்மா மனைவி என்றும் முறைப்படுத்தும். இதுவும் ஒரு பிரபலமான பலரும் அறிந்துள்ள ஒரு உறவு முறை.

பர்த்ரு பார்யா ஸம்பந்தமாவது 1. உகார ஸித்தமாய் , 2. விபக்த்யர்த்த ஶோதகமாய் , 3. ஸ்வரூப ப்ராப்தமாய் இருப்பதொன்று.

ஒவ்வொரு ஸம்பந்தத்தையும் ஶாஸ்த்ர முகேனவும் ஸாம்ப்ரதாயிக பூர்வாசார்ய விவரணத்தோடும் விளக்கியருளும் உலகாரியர் இவ்வுறவைச் சொல்லும்போது “ஸ்வரூப ப்ராப்தமாய் இருப்பதொன்று” என்கிறார். அதாவது ப்ரபன்னனின் அநந்யார்ஹ ஶேஷத்வ, அநந்ய கதித்வ , அநந்ய போக்த்ருத்வங்களுக்கு மிகப் பாங்கான உறவு இது.

ஆழ்வார்களின் அகத்துறைப் பாசுரங்கள் யாவும் இதில் பரிணமித்துள்ளது.

1. உகார ஸித்தம்: ப்ரணவத்தில் உகாரார்த்தம் அவதாரணமாய் உள்ளது. அதாவது, அகாரத்தால் குறிக்கப்படும் எம்பெருமானுக்கு மகாரத்தால் குறிக்கப்படும் ஜீவாத்மா ஏகதேசமாக அவன் ஒருவனுக்கே ஆள் செய்யக் கடமைப் பட்டவன், தனக்கும் அல்லன் பிறிதொருவருக்கும் அல்லன் என்று, “உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்றும், “மாம் ஏகம்” என்றும் இந்த ஏவகாரம் பிரிநிலை ஏவகாரமாக வேறு ஒருவருக்கும் அருகதை இல்லை, என்று காட்டுகிறது. கற்பு நெறி வழுவாத தலைமகனும், தலைமகளும் ஒருவர்க்கொருவர் வைத்துள்ள அந்யோன்யம் இதில் தெளிவு. ஸ்ரீராமாயணம் முழுவதும் பெருமாளும் பிராட்டியும் ஒரே மாதிரியான சொற்களையும் எடுத்துக்காட்டுகளையும் கொண்டு தாங்கள் இருவரும் கதிரும் ஒளியும் போலப் பிரிக்க முடியாதவர்கள் என்று கூறியுள்ளனர். ஆத்மாக்கள் அனைவரும் தமக்கு ஒரே புருஷனாக எம்பெருமானைப் புருஷோத்தமன் என்று பற்றுகையால் இந்த ஸம்பந்தம் ஶாஸ்த்ர ஸம்மதமும் ஆயிற்று. பகவத் கீதையில் பதினைந்தாம் அத்தியாயத்தில் புருஷோத்தம யோகமே பேசப் படுகிறது. அதில் பத்தர் முக்தர் தேவர் அனைவர்க்கும் எம்பெருமானே நிகரற்ற புருஷோத்தமன் என்பது தெரிவிக்கப் படுகிறது.

இந்த ரக்ஷகனான எம்பெருமானுக்கே ரக்ஷ்யமான ஆத்மா அற்றுத் தீர்ந்திருக்கும் என்பதாம்.

2. விபக்த்யர்த்த ஶோதகம்: அகாரத்தில் உள்ள லுப்த சதுர்த்தி (மறைந்து நழுவிய நாலாம் வேற்றுமை உருபு) இந்த ஜீவாத்மா எம்பெருமானுக்கே உரியவன் என்று ஸ்வரூபம் சொல்லும். இந்த அநந்யார்ஹ ஶேஷத்வம் கணவன் மனைவிக்கு மட்டுமே உள்ள சிறப்பான உறவு. ஒருவர் பிறர்க்கு எவ்வகையிலும் உரிமையின்றி இருவரும் பரஸ்பரம் சேர்ந்திருப்பதுபோல் எம்பெருமானுக்கே உரியனான சேதனன் என்கிற அப்ருதக் ஸ்திதி பிரிக்கவொண்ணாத நிலையை இது காட்டும்.

“உன்றன்னோடு உறவேல் இங்கு ஒழிக்க ஒழியாது” என்ற இடத்தில, “இவ்வுறவை எங்களால் ஒழிக்க இயலாது , உன்னால் ஒழிக்க இயலாது, இருவராலும் ஒழிக்க இயலாது” எனும் பூர்வாசார்ய வ்யாக்யானம் நினைக்கத் தக்கது. இவ்விடத்திலேயே, ஆண்டாளின், “மற்றை நம் காமங்கள் மாற்று” என்பதும் அனுஸந்தேயம் . சேதனனுக்கு அநந்யார்ஹ ஶேஷத்வமும், அவிச்சின்னமான கைங்கர்யமுமே அடையாளங்கள். இதற்கு பர்த்தாவிடம் பத்னி காட்டும் அநந்யார்ஹமே சிறந்த எடுத்துக்காட்டு. பகவத் ஶேஷத்வமும், உலகியலில் பத்னி பர்த்தாவிடம் காட்டும் அநந்யார்ஹ ஶேஷத்வ ஸ்வரூபமாய் இருக்கும்.

3. ஸ்வரூப பிராப்தம்: பர்த்ருத்வம் பும்ஸ்த்வத்துக்கும், பத்னித்வம் ஸ்த்ரீத்வத்துக்கும் விளக்கம் ஆகுமாபோலே , சேதனனின் ஶேஷத்வம் பத்னித்வம் ஆகவும் , எம்பெருமானின் பாரதந்த்ர்யம் பர்த்ருத்வம் ஆகவும் பரிமளிக்கும்.

இவ்விடத்தில் பர்த்ரு  பார்யா ஸம்பந்தம் சொல்லும் பிள்ளை லோகாசார்யர், அந்யார்ஹ ப்ரஸங்க அஸஹம் இந்த ஸம்பந்தம் என்று ஸாதித்தார். அதாவது, பிறன் ஒருவன் ஸம்பந்தத்தை ஸஹியாத உறவு என்றபடி. எம்பெருமானின் மாம் ஏகம் எனும் அவதாரணம் எவ்வாறு அவன் அங்கு நின்ற அந்த தேரோட்டி நிலையிலேயே அர்ஜுனனனுக்கு ஆஸ்பதம் ஆயிற்றோ அதேபோல் அவனை ஶரண் புகுந்தவன் பிறிதோரிடத்தில் கண் வைப்பதை ஒரு நல்ல கணவன் போன்றே அவன் சகிப்பதில்லை.

இந்நிலை, பெருமாளுக்கு மட்டுமே தானோ எனில் அவ்வாறில்லை. ஶரணாகதரான பெரியாழ்வார்,

“உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன், இனிப்போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத் தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்” என்று அவனை ஶரண் புகுந்த தாம் இன்னொருவன் வாசலில் நின்று ஒன்று வேண்டினால் அது எம்பெருமான் புகழுக்கு இழுக்கு(சாயை அழிவு=உனக்குள்ள ஆளுமை அழிந்து போகும்) என்று ஸாதிக்கிறார் . இதிலும் இருவருக்கும் பரஸ்பரம் உள்ள உறவின் மேன்மையும் , ஒருவர்க்கு இன்னொருவர் இன்றியமையாமையும் தெளிவாகிறது.  பெரியாழ்வாரின் இப்பாசுரம் ப்ரபன்னனின் ஸ்வரூபகத ஸ்வீகாரத்தைக் காட்டவல்லது, அவன் அருள் அல்லது அருள் அல்ல, பிறர் மாட்டுச் சென்று நிற்பதும் அவன் ப்ரக்ருதிக்குச் சேராது என்று காட்டுகிறார். குண க்ருத தாஸ்யத்தைப் பார்க்கிலும் ஸ்வரூபகத தாஸ்யத்வமே நம் ஆசார்யர்கள் மிகவும் போற்றி ஏற்று ஒழுகியது. ஆகவே, இந்த பர்த்ரு பார்யா ஸம்பந்தமும் இவ்வகையில் சேர்ந்தது.

ஸ்ரீவசன பூஷணத்தில்: சூ 108ல் :”பகவத் விஷயத்தில் இழிகிறதும் குணங்கண்டன்று; ஸ்வரூப ப்ராப்தமென்று”;

111, 112ல்: ”குண க்ருத தாஸ்யத்திலுங்காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே ப்ரதாநம்” என்று அருளிய லோகாசார்யர், “அநஸூயைக்குப் பிராட்டி அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது” என்று இவ்விஷயத்தை ஸ்ரீராமாயணத்தில் பெருமாளை உபாய உபேயமாகப் பற்றித் தன் ஆகாரத்ரயமும் பொலிய  விளங்கிய பிராட்டியை எடுத்துக்காட்டி முடித்தார்.

அநஸூயைப் பிராட்டியை, பெருமாளின் பெருமைகளால் அவரைச் சார்ந்திருப்பதாகக் கூற, பிராட்டி,“பெருமாள் எல்லா நல் இயல்புகளும் நிரம்பப் பெற்றவரே; ஆகிலும், அவர் அங்ஙனல்லராகிலும் அடியேன் அவரையே சார்ந்திருப்பேன்” என்று தன் அப்ருதக் ஸ்திதியை வெளிப்படுத்தினாள். இதைவிட பர்த்ரு பார்யா ஸம்பந்தத்துக்கு வேறு சிறப்பான எடுத்துக்காட்டு இருக்க முடியாது: அவர்கள் திவ்ய தம்பதிகள், சூரியனும் ஒளியும் போல், சொல்லும் பொருளும் போல் பிரிக்கவொண்ணாதவர்கள்.

பெரியவாச்சான் பிள்ளை, பிராட்டி பெருமாள் ஸம்பந்தத்தை எடுத்துரைக்கும்போது, “மத்ஸயத்தினுடைய ஆகாரமெல்லாம் ஜலமயமாய் இருக்குமாப்போலே, ஸ்ரீமானுடைய வடிவத்தனையும் ஸ்ரீமயமாய் இருக்கும்” என்று பெரிய முதலியார் அருளிச் செய்வர் என்று ஆளவந்தார் திருவுள்ளத்தை எடுத்துக் காட்டினார்.

நம் ஸம்ப்ரதாயத்தில் பிராட்டி விஷயமாக அவள் தத்வ ரஹஸ்யங்களை முதல்முதலில் ஶ்லோக ரூபமாக சது: ஶ்லோகீ என்று அருளிச் செய்தவர் ஆளவந்தார். இதுவே பின்பு பிராட்டி விஷயமான அனைத்து க்ரந்தங்களுக்கும் அடிவேராய் அமைந்தது.

(5) ஞாத்ரு ஜ்ஞேய ஸம்பந்தம் :

அறிபவன், அறியப்படுபவன் எனும் இது மூன்று விஷயங்களைக் கூறும்: 1. மகாரத்தை விளக்குவதாய் இருக்கும். 2. உகார அர்த்த அநுஸந்தான அபேக்ஷிதமாய் இருக்கும். 3. அசித் வ்யாவ்ருத்தி வேஷமாய் இருக்கும்.

ஞாத்ரு ஜ்ஞேய ஸம்பந்தம் எம்பெருமான் ஒருவனுக்கே கர்த்ருத்வம் உண்டென்பதை சரம ஶ்லோக வாக்யார்த்தம் போல் எல்லாக் கார்யங்களாகவும், கார்யங்களின் பயனாகவும் எம்பெருமான் இருப்பதை அறிந்து, தன் ஞாத்ருத்வம் ஶேஷத்வம் அறிந்து அவனிட்ட வழக்காய் இருத்தலே என்பது. ஆத்ம வஸ்துவுக்கு ஞானமுண்டு. மகார வாச்யனான ஜீவாத்மா சைதன்யம் உள்ளவனாய் இருக்கிறான். ஆனால் “கண்கள் சிவந்து பெரியவாய்” திருவாய்மொழியில் ஆழ்வார் ஸாதித்தபடிக்கு அடியேன் உள்ளான் என்பதே சேதனனுக்கு வாழ்ச்சி. இந்த நுண் பொருளையே திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானார்க்கு ஆழ்வான் வழியாகத் தெரிவித்து, ஸ்வாமி தம் ஸ்ரீபாஷ்யத்தில் ஆழ்வான் கருதியபடி ஆத்மாவுக்கு அடையாளம் ஶேஷத்வமே, ஞாத்ருத்வம் அன்று என அறுதியிட்டு உரை அருளினார்.

1. மகாரம் ஞான வாசியான ஜீவனைக் குறிக்கிறது. அந்த ஞானத்துக்கு என்ன குறிக்கோள், பயன் என்றால் பகவத் ஸ்வரூப ரூப குணங்களை அறிவது.

நெறிவாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறிவாசல் போர்க்கத்தவம் சார்த்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம்நால்வர்க்கன்றுரைத்த
ஆலமமர் கண்டத் தரன்

என்கிற பாசுரத்தில் ஆழ்வார் இந்திரியங்கள் அடங்கியபின் சேதனனின் அறிவு குவிந்து நெறியும், வாசலும் தானே ஆகி நின்ற உபாயமும் உபேயமும் தானே ஆன, ப்ராப்யமும் அதை அடைய வழியான பிராபகமும் தானே ஆன எம்பெருமான் ஒருவனே ஞானத்தின் பயன் என்று காட்டினார். இப்பாசுரத்தில் இவ்வுண்மையை அறிந்தவன், தான் அறிந்தவாறு அகஸ்த்யர், தக்ஷர், புலஸ்த்யர் மற்றும் மார்க்கண்டேயர் ரிஷிகளுக்கு உரைத்ததாகத் தெரிகிறது.

நம் ஆசார்யரும், “விதி ஶிவ ஸனகாத்யை: த்யாதும் அத்யந்த தூரம்” [विधिशिवसनकाद्यैर्ध्यातुमत्यन्तदूरं] என்று ஸ்தோத்ரரத்னத்தில் (ஶ்லோ-47) பணித்தார். வெறும் த்யானம் அல்லது ஞானம் கொண்டு எம்பெருமானை அடையாது, எம்பெருமானை அடைய எம்பெருமானே வழி என்ற ஞானமே, அந்த ஞானத்தை ஒரு ஸாதனம் ஆக்காமல் ஸித்த ஸாதனமான எம்பெருமானைக் காட்டித்தரும்.

2. இந்த உறவு உகார அர்த்த அனுஸந்தானமாய் அமையும்போது, பர்த்ரு பார்யா ஸம்பந்தத்துக்கு இந்த ஞாத்ருத்வம் அவசியம். உகாரம் அநந்யார்ஹ ஶேஷத்வம் சொல்லும் பதம். பிறர்க்குக் கைங்கர்யமோ, பிறரிடம் ஒரு ப்ரயோஜனம் கருதி ஒரு நமஸ்கார ப்ரதக்ஷிணமோ செய்வது பத்நியின் ஸ்வரூபத்துக்குச் சேராது.

சிறிய திருமடலில், “செங்குறிஞ்சித்  தாரார் நறுமாலை சாத்தற்குத்  தான் பின்னும் நேராதன ஒன்று நேர்ந்தாள் ” எனும் தலைவி நிலையை விளக்கும் பெரியவாச்சான் பிள்ளை, ஒருவேளை யாதானும் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்று உண்டோ என்று தாயார் கவல்வதாக வ்யாக்யானித்தருளினார். அதாவது, ஒரு பயன் கருதி ஒருவனை வலம்  செய்வதோ வணங்குவதோ, ஸ்வரூப விருத்தம் என்றபடி.

இத்தகைய அநந்யார்ஹ ஶேஷத்வம் அமைவதற்கு, தனக்கும் எம்பெருமானுக்கு உள்ள நிருபாதிக ஸம்பந்தம் ஸ்வப்ரயோஜனமானது, அவனுக்கும் தனக்கும் மட்டுமேயான அப்ருதக் ஸ்திதியைக் காட்டுவது, பிறர்க்காம்போது அது தேவ யஜனமான புரோடாஸம் நாய்க்கிடுமா போல் ஆகும் என்கிற ஞானமே இந்நிலையில் இவனது ஞாத்ருத்வத்துக்கு அடையாளம்.

3. அசித் வ்யாவ்ருத்தி வேஷம்: இந்த ஞாத்ரு ஜ்ஞேய ஸம்பந்தம் இந்த ஸம்பந்தங்களை அறிகையும் , இவற்றின் ஞானமாயும் அறிந்த ஞாதாவாயும், அறிந்த பின் அந்த ஞானங்களுக்கு அறிந்தோன் அதீனமாயும், அவனுக்கு ப்ரயோஜனமுமாய் இருக்கும்.

ஶேஷத்வம் அசித்துக்கும் உண்டு, சித்துக்கும் உண்டு. ஆனால் சித்துக்கு ஶேஷத்வத்தின் பயன் கைங்கர்யம் என்கின்ற ஞானம் உண்டு, அசித்துக்கு அது இல்லை. புஷ்பம் சந்தனம் போன்றவை எம்பெருமானுக்கு உகப்பளிப்பவை; ஆயினும் தம்மால் அவனுக்கு உகப்பு ஏற்பட்டது என்பதை அவை அறியா. சேதனனோ எம்பெருமான் முக மலர்த்தியே தன் கைங்கர்யத்தின் பயன் என்று அறியக் கூடியவன்; அப்படி அறிந்தும் அந்தக் கைங்கர்யம் அவன் முக மலர்த்திக்கானது, தான் செய்தது என்ற ஸ்வகீய புத்தியோ, தனக்கு இதில் மகிழ்ச்சி என்ற ஸ்வார்த்த நினைவோ, இதன் பயன் தனக்கு எனும் பயன் கருதும் நினைவோ இன்றிச் செய்வதால் இவனுக்கும் அசித்துக்கும் வ்யாவ்ருத்தி (வேறுபாடு) உண்டு. அந்த வ்யாவ்ருத்திக்காக மட்டுமே இவனுக்கு இந்த ஞாத்ருத்வம்.  இது தெரிவதற்கு இந்த ஞாத்ரு ஜ்ஞேய ஸம்பந்தமும், பர்த்ரு பார்யா ஸம்பந்தமும் துணை நிற்கும்.

(6) ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம்

ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் மூன்று விஷயங்களைக் காட்டும்:

 1. இது நமஸ் ஶப்த தாத்பர்யமாய் இருக்கும்
 2. மகாரார்த்த நிபந்தன ப்ரம நாஶக ப்ரகாரமாய் (கலக்கத்தைப் போக்குவதாக) இருக்கும்
 3. ஸ்வாபாவிகமாய் இருக்கும் ஒரு ஸம்பந்தம்
 4. நமஸ் ஶப்த தாத்பர்யமாக அமைவது எப்படி எனில்: நமஸ் ஶப்தம் அஹம் (நான்), மமதா (என்னுடையது) என்கிற இரு விரோதிகளைக் களையறுக்கிறது. உகாரம் காட்டும் அநந்யார்ஹ ஶேஷத்வத்தை, நம: ஶப்தம் விஶதீகரிக்கிறது.  ‘ந:’ என்று முதலில் எனக்கில்லை என்கிற நிஷேதத்தைப் பண்ணி அதன் பின்பே ‘ம’ என்று தன்னைச் சொல்லும் அளவுக்கு இதில் ஸ்வாந்வய நிவ்ருத்தி தெரியும். அதாவது ஸ்வரக்ஷணத்தில் ஸ்வ அந்வயம் இன்மை. தன்னைத் தான் காத்துக்கொள்வது என்பது , “அவனை ஒழியத் தான் தனக்கு நன்மை தேடுவதாவது – ஸ்தநந்தய ப்ரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி, காதுகனான ஆட்டு வாணியன் கையிலே காட்டிக் கொடுக்குமாபோலே இருபத்தொன்று” (ஸ்ரீவசனபூஷணம் சூ. 179) என்று லோகாசார்யர்  ரக்ஷணம் தன் ஸ்வாமியான எம்பெருமான் (உடைமையாளன்) பொறுப்பாய் இருக்க, தன்னைத்தானே காத்துக்கொள்வதென்பது ஒரு கைக்குழந்தையை அதன் தாய் தந்தையிடமிருந்து வாங்கி, அதற்குப் பாதுகாப்புத் தருவதாக நினைத்து அதை ஒரு கசாப்புக்கடைக்காரனிடம் ஒப்படைப்பது போன்றது என்கிறார்.

“களைவாய் துன்பம், களையாதொழிவாய், களைகண் மற்றிலேன் ” என்று திருக்குடந்தையில் ஶரணாகதி செய்த ஆழ்வார் ஈஶ்வரனின் ரக்ஷணத்தை நினைத்து ஸ்வரக்ஷணத்தில் தமக்கு அந்வயம் இல்லை என்று தெரிவித்தார். ஸ்வரக்ஷணத்தில் ஸ்வாந்வயம் ஸ்வரூப விரோதி; ஸ்வரக்ஷணத்தில் பிறர் ஸஹாயம் நாடினால் உபாய விரோதி;  அவன் உகப்புக்கு அவன் கைங்கர்யம் ஏற்காமல் ஸ்வபோக்யத்துக்கு அவன் கைங்கர்யம் ஏற்கில் ப்ராப்ய விரோதி என்று மூவகை விரோதிகளும் காட்டப் பட்டு, இதைக் களை எடுக்க நம: பதமும், உகாரமும், இறுதிப் பதமான திருநாமத்தில் வ்யக்த சதுர்த்தியும் நமக்கு அனுஸந்தேயம் என்று ஸ்ரீ பராஶர பட்டர் அஷ்ட ஶ்லோகியில் அருளிச்செய்யும்படி:

“உகாரோ அநந்யார்ஹம் நியமயதி ஸம்பந்தம் அனயோ :” [उकारोऽनन्यार्हं नियमयति संबन्धमनयो:] மேலும்

“நம இதி ச பதம் பாந்தவாபாஸ லோல: ஶப்தம் நாராயணாக்யம்” [नम इति च पदं बान्धवाभासलोल: शब्दं नारायणाख्यं] என்றும்.

“மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர் கம்யம் ஶிக்ஷிதம் ஈக்ஷிதேன புரத: பஶ்சாதபி ஸ்தானத:” [मन्त्र ब्रह्मणि मध्यमेन नम: पुंस:स्वरूपं गति: गम्यं शिक्षितमीक्षितेन पुरत: पश्चादपि स्थानत:] என்றும் உகாரம், மத்யம பதமான நம இந்த இரண்டும் சேதனனின் ஸ்வரூபத்தைக் காட்டுவனவாய் உள்ளன, இவன் ஸ்வாதந்த்ர்யம் பாவிப்பானாகில் அகாரத்தில் அவனே ரக்ஷகன் என்றுள்ளது கொண்டு  தெளிக; ஸ்வயத்னத்தை நம்புவானாகில் நமப்பதத்தின் பொருள் உணர்ந்து அதை விடக்கடவன் ; பிறர்க்கடிமை எனும் எண்ணம் தோன்றுமேல் ஆபாசமான அனைத்து உறவுகளும் நாராயண பதத்தின் பொருள் நினைத்து ஒழியக் கடவது என்கிறார்.

நமப்பதம் முன்னும் பின்னுமாக நோக்கி  இவனுக்கு ஸ்வரூபம் ஶேஷத்வம் என்பதையும், இவனுக்கு ஸ்வரக்ஷணத்தில் அந்வயம் இல்லை என்பதையும், எம்பெருமானே ஸ்வாமியாதலால் அவன் தன்  சொத்தைப் புறக்கணியாமல் போற்றிக் காப்பான் என்றும் விசுவசிக்கக் கடவன்.

இதில் பலியும் (பலத்தை, பயனை, ப்ராப்யத்தை அனுபவிப்பவன் பலி) அபிமானியும் ஆன எம்பெருமானுக்கே  சேதனன்  உடைமையாய்த் தோன்றுவதைப்  விளக்குகிறார். இவன் உடைமையாய் இருப்பதால் போக்யதா புத்தி ஏற்பட வழியில்லை. உடையவன்தான் போகி , உடைமை அன்று. உடைமை வெறும் போக வஸ்து . அதன் போக்த்ருத்வமும் எம்பெருமானுக்கே உரியது.

2. மகாரார்த்த நிபந்தன பிரம நாஶகம் – சேதனன் ஸ்வாதந்த்ர்யம் பாவிக்கில் அநுபவமும் அதில் திருப்தி மகிழ்ச்சியும் ஏற்படும் பிரமமுண்டாகும். எம்பெருமான் ஸ்வாமி தான் ஸ்வம் (சொத்து) எனும் தெளிவு ஏற்பட்டபின், “யானே என்னை அறியகிலாதே  யானே என்தனதே என்றிருந்தேன் யானே நீ என் உடைமையும் நீயே ” என்ற நினைவுண்டாகி எம்பெருமான் முகோல்லாஸத்துக்குத் தன் கைங்கர்யம் எனும் ஞானம் பிறந்து, ஞானம் அடியாக வந்த கர்த்ருத்வ மயக்கம் அறும். சேதனனுக்கு ஶேஷத்வமே அடையாளம், ஞாத்ருத்வம் அன்று எனச் சொன்னதற்குக் காரணமே இந்த ஞாத்ருத்வம் அஹங்கார கர்ப்பமானது. பிள்ளான், இதை, “மதிரா பிந்து மிஶ்ரமான ஸாத கும்பமய கும்ப கத தீர்த்த ஸலிலம் போலே அஹங்கார மிஶ்ரமான கைங்கர்யம்” என்று திருவுள்ளம் பற்றினார். ஸ்வ ஸ்வாமி ஸம்பந்த ஞானம் இந்த அஹங்காரமாகிய களையை நீக்கும். அதாவது, பராதீனமான இந்த ஆத்மாவின் குணவிஶேஷங்களும் பராதீனம், அவை முற்றிலும் எம்பெருமானின் ஸ்வாதந்த்ர்யத்தையே  சார்ந்து அவன் இட்ட வழக்காய் இருக்கும். இதனால், சேதனனுக்கு, தனக்குக் கர்த்ருத்வம் உண்டு எனும் பிரமம் அறும் .  இவனுக்கு, கர்த்ருத்வம் இல்லாததால் அந்த கர்த்ருத்வத்தால் வரும் சங்கிலித் தொடர்களான பாபங்கள், பிறவிச்சுழல் முதலியன நீங்கும்.

“என்னைத் தீமனம் கெடுத்தாய்”, என்றும், “மருவித் தொழும் மனமே தந்தாய்” என்றும் சேதனனுக்கு உண்டாகும் மங்களங்கள் அனைத்தும் எம்பெருமான் ஸ்வாமித்வத்தால் வருவன.

3. ஸ்வாபாவிகம் – ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் ஸ்வாபாவிகமானது, இது வந்தேறியன்று. அஹங்காரம் மமகாராம் இவற்றின் விளைவான ஸ்வரக்ஷணத்தில் ஸ்வாந்வயம் , எம்பெருமான் கைங்கர்யத்தில் மமதா புத்தி, சேர்த்தியில் போக்த்ருத்வ புத்தி ஆகியன யாவும் வந்தேறிகள். ஆனால் அவன் உடையவன், நாம் உடைமை என்பது இயற்கையான உணர்வு. ஏனெனில், “ஸ்வஸ்வம் ஆத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்” [स्वस्वमात्मनि संजातं स्वामित्वं ब्रह्मणि स्थितम्] என்கிற (உடைமையாய் இருக்கும் தன்மை ஆத்மாவினிடத்தில் உள்ளது. உடையவனாய் இருக்கும் தன்மை ப்ரஹ்மத்தினிடமுள்ளது. இருவர்க்கும் இதுவே ஸம்பந்தம் . வேறு ஸம்பந்தம் எனக்கு இஷ்டமில்லை) விஷ்ணு தர்ம வசனம் ஜீவ பரர்களின் ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம்  ஸ்வதஸ் ஸித்தமானது என்று உணர்த்துகிறது. ஸ்வத்துக்கு ஸ்வரக்ஷண கர்த்ருத்வம் இல்லை என்றும், ஸ்வாமிக்கே அது தொழில் என்றும் இந்த ஸம்பந்தம் காட்டுகிறது.  நிலத்தை உடையவன் அந்த நிலத்தை உழுவது, நீர் பாய்ச்சுவது, அங்கேயே குடில் கட்டி இருந்து பாதுகாப்பது செய்வான். நிலம் உடையவனைப் பாதுகாப்பதில்லை. பாதுகாப்பது ரக்ஷகனுடைய, உடைமையாளனுடைய காரியம். இந்த ஸம்பந்தம் இதைக் காட்டுகிறது.

(7) ஶரீர ஶரீரி ஸம்பந்தம்

ஶரீர ஶரீரி ஸம்பந்தம் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்துக்கு , விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தத்துக்கு மகுடமாக அமைந்தது. இது:

 1. நாராயண பதத்தில் ஸமாஸ விஶேஷ ஸித்தமாய் இருப்பது.
 2. நமஶ் ஶப்தார்த்த ஸ்வரூப ப்ரகாசகமாய் இருப்பது.
 3. ஸாமாநாதிகரண்ய யோக்யமாய் இருப்பது.
 4. ஸமாஸ விஶேஷ சித்தமாவது: நாராயண பதம் பஹுர்வ்ரீஹி ஸமாஸத்தில் எம்பெருமான் ஸகல சேதன அசேதனங்களையும் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ளான் என்று அறிகிறோம்.  அதாவது அவன் அவை யாவற்றையும் தனக்கு ஶரீரமாகக் கொண்டுள்ளான். அந்நிலையில் அவன் அவ்வனைத்தினுள்ளும் வ்யாபித்து அவற்றின் ஶரீரியாகத் தான் உள்ளான். ஶரீரம் உடல். ஶரீரி ஆத்மா.

நார ஶப்தம் நித்ய வஸ்துக்களின் திரளைக் குறிக்கும். முமுக்ஷுப்படியில் பிள்ளை லோகாசார்யர் இவற்றை :

“ஞான ஆனந்த அமலத்வாதிகளும், ஞான ஶக்த்யாதிகளும், வாத்ஸல்ய ஸௌஶீல்யாதிகளும், திருமேனியும், காந்தி ஸௌகுமார்யாதிகளும், திவ்ய பூஷணங்களும், திவ்யாயுதங்களும், பெரிய பிராட்டியார் தொடக்கமான    நாச்சிமார்களும், நித்ய ஸூரிகளும், சத்ர சாமராதிகளும், திருவாசல் காக்கும் முதலிகளும், கணாதிபரும், முக்தரும் பரமாகாஶமும், ப்ரக்ருதியும், பத்தாத்மாக்களும், காலமும், மஹதாதி விகாரங்களும், அண்டங்களும், அண்டத்துக்குட்பட்ட தேவாதி பதார்த்தங்களும்”

என்று எம்பெருமான் ஶரீரமாக அனைத்துப் பொருள்கள்: சேதன அசேதனங்கள், கொண்ட பூரணமான ஒரு பட்டியலைத் தந்துள்ளார்.

இவை அனைத்தையும் தன ஶரீரமாகக் கொண்ட எம்பெருமான் தனது அளவற்ற மேன்மையை, பரத்வத்தைக் காட்டுகிறான். பகவத் கீதையில் விபூதி அத்யாயம் தன்னில் அர்ஜுனன் கண்ட அனைத்தும் இவற்றில் உள்ளன. ஆழ்வாரின், “கடல் ஞாலம்”, “நல்குரவும்” ஆகிய பதிகங்கள் இந்த விசித்திர ஶ்ருஷ்டி விஶேஷத்தையும் அதை அவன் எளிதாகத் தாங்குவதையும் காட்டும். “நல்குரவும்” திருவாய்மொழிக்கு அந்தாதி வெண்பா அமைத்த மணவாள மாமுனிகள் “விருத்த விபூதியன்”  என்கிற வியத்தகு சொல்லை உபயோகிக்கிறார். அதாவது முற்றிலும் மாறுபாடான ஒன்றுக்கொன்று முரண்பாடானவற்றைத் தன்  விபூதியாக ஐஶ்வர்யமாகக் கொண்டவன் என்று.

நாராயண பதத்தை நிர்வகிக்கும் நம் ஆசார்யர்கள் ஸமாஸ த்வந்த்வம் என்று இருவகையாக விளக்குகிறார்கள். ஒன்று யாவும் அவனுக்கு ஶரீரம் என்று. இவற்றில் அவன் ஶரீரியாய் இருப்பது.  இன்னொன்று அத்துணை ஶரீரங்களிலும் தான் உள்ளே இருந்து அந்தராத்மாவாய் அவற்றுக்கு சத்தை தந்து, தனது எளிமை=நீர்மை=ஸௌலப்பியத்தையும் காட்டுகிறான்.

2. நமஶ் ஶப்தார்த்த ஸ்வரூப ப்ரகாஶகம்: நமஶ் ஶப்தத்தில் வரும் ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் கிருஹ க்ஷேத்ராதிகளில் போலன்றிக்கே அப்ருதக் ஸித்தமாய் இருக்கும் என்று லோகாசார்யன் சாதிக்கிறார். இது ஓர் அத்புத விளக்கம். நாம் உலகியலில் காணும் உடைமையாளன், உடைமை இவை தனித்தே உள்ளன. வீடு தானே தனியாய் உள்ளது, வீட்டுக்கு உரியவன் தனியே உள்ளான். நிலம் தானே தனியாய் உள்ளது, நிலத்துக்கு உரியவன் தனியே உள்ளான். ஆனால், எம்பெருமானான ஸ்வாமி(உடையவன்)யும் , சேதன அசேதனங்களான அவனது உடைமைகளும் அவனிடமிருந்து பிரிக்க முடியாதபடி இணைந்தே உள்ளன. இந்த நிலையே “அப்ருதக் ஸ்திதி” என்னப்படுகிறது.

ஈஶ்வரன் உள்ளே உள்ளபடியால் உயிர்வாழிகள் ஸத்தை (உயிர் உள்ளனவாய் இருக்கும் நிலை) பெற்றுள்ளன.   அந்த ஆத்மா தனது இப்பிறவி ஶரீரம் விட்டவுடன் ஶரீரம் செயல் இழந்து வெறும் அசேதனமாக, கட்டை, கல் போல் ஆகிறது. “ஶரீரம் யத் அவாப்னோதி” [शरीरं यदवाप्नोति] என்று பெருமாள் இதை தனது பகவத் கீதா திவ்ய ஶாஸ்திரத்தில், புருஷோத்தம யோகம் உணர்த்துமுகமாக அர்ஜுனனுக்குத் தெளிவிக்கிறார் .

3. ஸாமாநாதிகரண்ய யோக்யமாகையாவது – ஸ்வரூப பேதத்தாலே பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தமான ஜீவ பர ஸ்வரூபம் ஶரீர ஶரீரியான ஐக்யத்தாலே ஒன்று என்னலாகை .

இந்த அதி அத்புத விளக்கத்தை அருளிய லோகாசார்யர், “விஶிஷ்டாத்வைத ப்ரகாஶகம் இந்த ஸம்பந்தம் ” என்று ஸாதிக்கிறார் .

ஒரு பெரிய ஆல மரத்தைப் பார்க்கும்போது அது ஒரு மரமாகக் காட்சி தருகிறது. அதன் பெரிய சிறிய கிளைகள், அதன் பருத்த அடிமரம், அதன் தொங்கும் நீளமான விழுதுகள், அதன் அடர்த்தியான இலைகள் சேர்ந்த கிளைகள், அதிலுள்ள பழங்கள், இவற்றோடு இருக்கும் அவ்வப்போது வந்து செல்லும் பறவைகள் என்று ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் காட்சி தரும். கிளைகள் அந்த மரத்தின் பகுதிகளே. அடிமரமும் அதன் பகுதியே. விழுதுகளும் அவ்வண்ணமே. இவை யாவும் சேர்ந்து நமக்கு ஒரே பொருளாக ஆல மரமாக , வட வ்ருக்ஷமாகத் தோற்றுகிறது . கிளையை மட்டும் பார்த்தால் ஆலம் கிளையும், விழுது மட்டும் பார்த்தால் ஆல விழுதும் இதேபோல் பிறவும் தனித்தனியே தோற்றுகின்றன . ஆனால் உள்ளது ஒரே மரம். அதுவே தொகுதியாக ஒரு மரமாகவும், பல பகுதிகளாக கிளை, இலை , அடிமரம், விழுது என்றும் தோன்றுகிறது.

ஸகல சேதன அசேதனங்களைத் தன் ஶரீரமாகக் கொண்ட எம்பெருமானும் இவ்வாறே அவ்வப்பொருள்கள், உயிர்வாழிகளாகவும் தானே தனி பரப்ரஹ்மமாகவும் காட்சி தருகிறான். இவ்விஷயத்தை வேதாந்தம் ஸாமான்யாதிகரணம் என்கிறது.

ஸ்வாமி எம்பெருமானார் இந்த உத்தியைக் கொண்டு, ப்ரஹ்மம் அனைத்துப் பொருள்களையும் தன்னோடு எப்போதும் கொண்டுள்ளது. அவையே நமக்கு அவனது பல வடிவங்களாகத் தோற்றுகிறது என்று நிர்வகித்தார்.

ஸ்வாமியின் இந்த ஶரீர ஶரீரி பாவ விளக்கத்துக்கு ஆழ்வாரின் திருவாக்கே வேராக அமைந்தது:

“உடல் மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன்” என்பது ஆழ்வார் திருவாக்கு. நம் உடலில் உயிர் எங்கு உள்ளது? ஓரிடத்தில் இருந்தாலும் ஞானத்தால் எல்லாவிடத்திலும் பரந்து வ்யாபித்துள்ளது. ஆனால் அது இல்லாதபோது ஶரீரம் அசேதனமாகி விடுகிறது. எப்போதும் ஶரீரம் அசேதனமே ஆகிலும் உயிர் உள்ளபோது அறிவும் உணர்வும் அவற்றால் அனுபவமும் உண்டாகிறது.

இவ்வாறு ப்ரஹ்மம் விஶிஷ்டமாக, இந்த விபூதிகளை உடையதாக இருப்பதால் இதைச் சொல்லும் தத்துவத்துக்கு விஶிஷ்ட அத்வைதம் என்கிற பெயர் ஏற்பட்டது.

இக்காரணம் பற்றியே உலகமும், உயிர்களும், யாவும் உள்ளன எதுவும் மாயை அன்று, ஏனெனில் அவை ஈஶ்வரனின் திருமேனியில் ஒன்றி உள்ளன, அவனால் ரக்ஷிக்கப் படுகின்றன, ப்ரளய காலத்தில் அவனிலேயே லயமாகி மீண்டும் அவனாலேயே ஶ்ருஷ்டி செய்யப்படுகின்றன என்றார் ஸ்வாமி.

“வித்தாய் வேர் முதல்” என்று ஆழ்வார் அவனே முதல், வித்து, வேர் என்று மூல காரணம் அவனே என்கிறார் ஆழ்வார்.

ஶரீர ஶரீரி ஸம்பந்தம் கொண்டே ஸ்வாமி எம்பெருமானார் சேதநாசேதனங்கள்  அனைத்தும் எம்பெருமானின் ஶரீரமாய் உள்ளன, அவன் ஸூக்ஷ்ம அவஸ்தையில் அவற்றின் காரணமாயும், ஸ்தூல அவஸ்தையில் கார்யமாயும் உள்ளான், “பஹுஸ்யாம்  ப்ரஜாயேயேதி ” [बहुस्यां प्रजायेय इति] எனும் வேதாந்த வாக்கியம் இதைக் காட்டுகிறது என்கிறார். ஆனால் இந்த காரியத்தை எம்பெருமான் ஸங்கல்ப மாத்ரத்தாலேயே செய்கிறான். ஆகவே இந்த ஸ்வரூப மாற்றமோ அல்லது அவற்றின் ஸ்வபாவ மாற்றமோ ப்ரஹ்மத்தில் ஒரு மாற்றமும் விளைவிப்பதில்லை. ஆகவே, “அவிகாராய ஶுத்தாய நித்யாய பரமாத்மனே” [अविकाराय शुद्धाय ] என்கிற வசனத்துக்கு அவன் விளக்கமாய் இருக்கிறான். அளவற்ற முதலும் முடிவும் அற்ற இத்தனை வஸ்துக்களின் ஸ்ருஷ்டி ஸ்திதி லயம் அவன் காரியமாய் இருப்பினும், இதை “தத் ஐக்ஷத ” [तत् ऐक्षत] எனும் வேதாந்த வாக்யத்தின்படி ஸங்கல்ப மாத்ரத்தாலே  செய்வதால் ப்ரஹ்மத்தின் நிலையில் ஒரு குறைவோ நிறைவோ   ஏற்படுவதில்லை.   ஆகில் இதைச் செய்வான் என் எனில், “லீலாவத்  து கைவல்யம் [लीलावत् तु कैवल्यं] ” என்று வேதாந்தம் இதை விளக்குகிறது. அவன் கேவல லீலையாகவே இதைச் செய்வதால் “அலகில் இன்புறும் விளையாட்டு” என்றும் பேசப்படுகிறது.

“திட விசும்பெரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்
உடல் மிசை  உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே” எனும் ஆழ்வார் திருவாக்கை வைத்தே ஸ்வாமியின் ஸ்ரீபாஷ்யம் அமைந்தது. இதை விளக்க வந்த அழகியமணவாளப் பெருமாள் நாயனார், “இது கொண்டு பாஷ்யகாரர் ஸூத்ர வாக்யங்களை ஒருங்க விடுவர்” என்று திருவாய்மொழியின் சீர்மையை எடுத்துரைத்தார்.

இவ்விடத்தில் ஈடு வ்யாக்யாநம் சாதிக்கும் நம்பிள்ளை,  ஸாமானாதிகரண்யம் சொன்ன ஆழ்வார் அத்தால் பலித்த ஸம்பந்தம் ஶரீராத்ம பாவம் என்கிறார் என்றார். “அநேந ஜீவேந ஆத்மநா அனுப்ரவிஶ்ய நாம ரூபே வ்யாகரவாணி”, “யஸ்ய ஆத்மா ஶரீரம், யஸ்ய ப்ருத்வீ ஶரீரம்” [अनेन जीवेन आत्मना अनुप्रविश्य नाम रूपेण व्याकरवाणि, यस्य आत्मा शरीरं यस्य पृथ्वी शरीरं ] என்கிற ஶ்ருதி வாக்யங்களைக் காட்டி, “விஶிஷ்டத்திலேயிறே ஶரீராத்ம பாவம் கொள்ளலாவது” என்று தெளிவுபடக் கூறுகிறார். அதாவது, அவனுக்கு இவை உடலாய் அவனை விவரிக்கக் கூடிய விஶேஷணமாய் இருப்பது.  அவனை விவரிக்கும்போது இவைகளாய் இருப்பவன், இவற்றை ஆக்கியவன் என்ற இரு நிலைகளும் எம்பெருமானுக்கு உபாதான காரணம்,  ஸஹகாரி காரணம், நிமித்த காரணம் என பொருள்களுக்கான மூன்று காரணங்களாகவும் தானே இருப்பவன் என்கிறார்கள். இதனால் இந்த சேதனாசேதனங்களை அவன் பெரும் பரிவுடன் நடத்துவதில் ஆழ்வார்கள் மிகவும் ஈடுபட்டார்கள்.

“ஒன்றும் தேவும் உயிரும் மற்றும் யாதும் இல்லாத அன்று ” எம்பெருமான் இந்த அண்ட சராசரங்களைப் படைக்க நான்முகனைப் படைத்து அவன் மூலமாக அனைத்து தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்களையும் செய்து அவற்றை உள ஆக்கினான்.

(8) தார்ய தாரக ஸம்பந்தம்

தார்ய தாரக ஸம்பந்தம் 1. ஸமாஸாந்தர ஸித்தமாய் இருப்பது 2. ஶரீர ஶரீரி ஸம்பந்தைக லக்ஷணமாய் இருப்பது 3. அசித் அவிஶேஷ ஸ்திதி ஸம்பந்தமாய் இருப்பது.

1. ஸமாஸாந்தர ஸித்தமாவது – நாராயண பதத்தில் தத் புருஷ ஸமாஸமாக விவரிக்கும்போது, அவன் அனைத்துக்குள்ளும் வியாபித்து, நார பதத்தால் விளக்கப்படும் பொருள்கள் அனைத்தையும் தான் தாங்கி நிற்பதால், அவை தார்யம் (தாங்கப்படுபவை ) என்றும், தான் தாரகன் (தாங்குபவன்) என்றும் இருக்கும் நிலை. பகவத் கீதையில் இந்த விஷயத்தை பகவான் அர்ஜுனனுக்குப் பலவாறு எடுத்துரைக்கிறார்.

“ஏதத் யோநீநி  பூதாநி ஸர்வாணி இத்யுபதாரய [एतत् योनीनि भूतानि सर्वाणि इति उपधारय]

அஹம் க்ருத்ஸ் நஸ்ய ஜகத : ப்ரபவ: ப்ரலயஸ்ததா” [ अहं कृत्स्नस्य जगत: प्रभव: प्रलयस्तथा] என்றும்,

“மத்தப் பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய மயி ஸர்வம் இதம் ப்ரோக்தம் ஸூத்ரே மணி கணா இவ” [मत्तः परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय। मयि सर्वमिदं प्रोक्तं  सूत्रे मणिगणा इव।] என்றும்,

“மத்ஸ்தானி ஸர்வபூதாநி ந சாஹம் தேஷ்வவஸ்தித:” [मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः] என்றும்  வரும் கீதாஶ்லோகங்கள் எம்பெருமான் தாங்குகிறான், மற்றெல்லாப் பொருள்களும், சேதனங்களும்  அசேதனங்களும் , தாங்கப்படுகின்றன என்று தெளிவாகிறது. அகாரத்தின் விரிவாய் உள்ள நாராயண பதம், அகாரத்தின் பொருளான ரக்ஷகத்தை விரிவாக விளக்குகிறது.

2. ஶரீர ஶரீரி ஸம்பந்தைக லக்ஷணம் என்றால், ஶரீர ஶரீரி ஸம்பந்தம் ஒன்றையே தன் வடிவாகக் கொண்டது தார்ய தாரக ஸம்பந்தம் எனப் பொருள்படும். ஶேஷத்வம் உணரப்படும்போது கைங்கர்யம்  பெறுமவன் ஆதேயனாயும், செய்யுமவன் விதேயனாயும் இருக்கிற நிலை.

தார்ய தாரக ஸம்பந்தம் உட்கொண்டுள்ள விஶேஷமானது, ஆதேயத்வம்/விதேயத்வம் எனும் ஶேஷத்வ ரூபமான ஶரீர லக்ஷணங்களிலும், ஆதாரத்வ/விதாயகத்வம் எனும் ஶேஷித்வ ரூபமான ஶரீரி லக்ஷணங்களிலும் இது ஒன்றாய் இருக்கும். அதாவது, எம்பெருமான் கைங்கர்யத்தைப் பெறும் போது அந்த ஶேஷத்வ ரூபமான கைங்கர்யத்தைச் செய்யுமவன் விதேயனாக (வேலைக்காரனாக) இருக்க, அதைப்பெறுமவன் ஆதேயனாக இருக்கை . இதில் ஶரீர லக்ஷணம் தெரியும். அவன் இவனுக்கு ஆதாரமாக, சேதனனைத் தாங்குமவனாக எம்பெருமான் இருந்து இந்தக் கைங்கர்யத்தை ஸ்வீகரிக்கும்போது ஶரீரி லக்ஷணம் தெரியும். அதாவது, கைங்கர்யத்தை அநுபவிப்பது எனும் சேதன கார்யத்தை ஶரீரியாக அநுபவிக்கும் புருஷனாக இருந்து எம்பெருமான் அனுபவிப்பதால் சேதநன் அதில் தானும் அஹங்காரமடியாக அல்லது தன் உவப்புக்காக என்றில்லாமல் அசேதன ஸமமாக இருந்து அவன் அனுபவத்தையே நோக்கும். இவ்வாறு இதிலும் ஶேஷ ஶேஷி ஸம்பந்தம் உணர்த்துகிறார் பிள்ளைலோகாசார்யர்.

ஸகல ப்ரமாண தாத்பர்யத்தில் பெரியவாச்சான் பிள்ளை இவ்விஷயத்தை, “தாரகமாய், நியாமகமாய், ஶரீரியாய், ஶேஷியாய் ” என்று அருளிச் செய்கிறார்.

“இப்படிப்பட்ட ஸமஸ்த விஶேஷண விஶிஷ்டமான ப்ரஹ்மம் ஒன்றையும் அறிந்த அதிகாரி வேறொன்றையும் அறிய வேண்டாத க்ருதக்ருத்யன். இந்த அதிகாரியே ஞாநாதிகரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்  நித்ய முக்தர்களுக்கும், ஆசார்யனுக்கும், பிராட்டிக்கும் , ஶ்ரிய:பதிக்கும் அத்யந்தப்ரியதமன்” என்று கீதையில் எம்பெருமான் தனக்கு ப்ரியர், ப்ரியதரர், ப்ரியதமர் என்று காட்டுமத்தை ஸூசிப்பிக்கிறார் .

3. அசித் அவிஶேஷ ஸ்திதி ஹேது : – “அநேந ஜீவேனாத்மநாமநுப்ரவிஶ்ய  நாம ரூபே வ்யாகரவாணி”(சாந் 6-3-2) [अनेन जीवेन आत्मना अनुप्रविश्य नाम रूपे व्याकरवाणि’] என்பதில் அந்தர் வ்யாப்தியினால் எம்பெருமான் சேதனங்களுக்கு நாமங்களையும் ரூபங்களையும்  தருகிறான். அவன் உள்புகுந்து அவற்றுக்கு ஞாத்ருத்வம் அளித்திலனேல், அவை அறிவற்ற ஜடப் பொருள்களாகவே கிடக்கும்.  இத்தோடு,  அவ்வாறன்றி, வெளியிலிருந்து சேதனங்கள் அசேதனங்கள் இரண்டுக்கும் அவற்றின் இயல்பான தோற்றம் இருப்பு ஆகியவற்றுக்கும் காரணமாய் இருக்கிறான். இந்த ஸம்பந்தத்தாலேயே சித், அசித் இரண்டுமே நித்யத்வம் பெறுகின்றன.

(9) போக்த்ரு போக்ய ஸம்பந்தம்

அனுபவிப்பவன், அனுபவம் என்று இரண்டுபடியாக இருப்பது. எம்பெருமானே அனுபவிப்பவன், தனது ஶேஷத்வம் உணர்ந்து அவனுக்குக் கைங்கர்யம் செய்யும் சேதனன்  தன்னை அவனது போகத்துக்கான பொருளாக நினைத்திருக்கக் கடவன்.  இதுவும் மூன்று படியாய் இருக்கும்: 1. சரம விபக்தி ஸித்தமாய் இருக்கும், 2. பூர்வ ஸம்பந்த ப்ரயோஜன ப்ரதர்ஶகமாய் இருக்கும்.  3. ப்ரதி ஸம்பந்தி போகாநுரூபமாய் இருக்கும்.

1. சரம விபக்தி ஸித்தம் : “நாராயணாய” என்பதில் உள்ள சதுர்த்தீ விபக்தி (நாலாம் வேற்றுமை உருபு-ஆய என்பது), எம்பெருமானுக்கே அநந்யார்ஹமாக ஶேஷப் பட்டிருக்கும் சேதனனுக்கு அந்த ஶேஷ வ்ருத்தி ஸஹஜமானது, பிறவி இயற்கை, வந்தேறியன்று . ஆகவே அவன் செய்யும் கைங்கர்யங்கள் தரும் ஆனந்தம் ஶேஷியான எம்பெருமானையே சேரும். அந்த ஆனந்தத்தில் இவனுக்குப் பங்கில்லை. அதாவது, போகம் என்பது இவனாக, போக்தா அனுபவிப்பவன் எம்பெருமானே என்பது தெரிகிறது. எம்பெருமான் ஶரீரி, ஶரீரத்தை உடையவன். ஆகவே போக்த்ருத்வம் அனுபவித்தல் அவனுக்கே உரியது. இவன் வெறும் ஶரீரமாய் இருப்பதால், சைதன்யம் உள்ளவன் ஆனாலும் ஶரீரியான எம்பெருமானே போக்தா என்றிருக்கக் கடவன்.

“யானே என்னை அறிகிலாதே யானே, எந்தனதே என்றிருந்தேன் யானே நீ, என் உடைமையும் நீயே”  என்று ஆழ்வார் திருவாய்மொழியில் அருளினார். தனக்கு ஶரீரி எம்பெருமான் என்ற உணர்வு வந்ததும், தனக்கு ஒரு அனுபவமும் கிடையாது அனுபவம் எம்பெருமானுக்கே உரியது, அவனே போக்தா அவனுடைய போக்கியமாய் அடியேன் உள்ளேன் எனும் நிலை இது.

“அஹம் அந்நம்  அஹம் அந்நம்” [अहं अन्नं अहं अन्नं] (நான் அன்னம், நான் அன்னம்) என்று சேதனன் நிற்க, “அஹம் அன்னாத:” [अहं अन्नाद:] என்று ஸ்வாமி தன்னை உண்பவனாகக் காட்டும் நிலை இது.

2. இது பூர்வ ஸம்பந்த ப்ரயோஜன ப்ரகாஶகம். இது எங்ஙனே எனில், ஸர்ப்பத்துக்கும் விஷத்துக்கும்  தார்ய தாரக ஸம்பந்தம் இருந்தும், அந்த விஷத்தைத் தாங்கி இருக்கும் ஸர்ப்பத்துக்கு அதனால் ஒரு பயனும் இல்லை; அந்த ஸம்பந்தத்தில் போல் அல்லாமல் இதில் உள்ள சுவை, பயன் அனைத்தும் தாரகனான எம்பெருமானுக்கே ஆகும்படி, தார்யனான சேதனன்  தனக்கு இந்த அநுபவத்தில் பங்கில்லை என்றிருத்தல். கைங்கர்யம் செய்பவனைவிட, அதை ஏற்பவனுக்கன்றோ அந்த கைங்கர்ய ருசி ரசிப்பது?

3. பிரதி ஸம்பந்தி போகாநுரூபம் – இந்த ஸம்பந்தமே கைங்கர்யத்தின் ரஸத்தை , சுவையை கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியான எம்பெருமானே அனுபவிக்கத் தக்கவன், அந்தக் கைங்கர்யத்தில் அதன் சுவை, ரஸத்தில் தனக்கு ஒரு பங்கும் இல்லை என்று நசையற்று இருப்பதே கிங்கரனான கைங்கர்யபரனான சேதனனுக்கு ஸ்வரூப லாபம். கைங்கர்யம் சென்று சேர்விடம் எம்பெருமான், செய்பவன் சேதனன். அந்தக் கைங்கர்யம் செய்பவன் அந்தக் கைங்கர்யத்திலும் அதின் ரஸம்/சுவையிலும் தானும் ஈடுபடுவானாகில் அவனது அத்யந்த பாரதந்த்ர்ய  ஶேஷத்வ ஸ்வரூபம் நாசமாகும்.

“உனக்கே நாம் ஆட் செய்வோம்” என்றது உன் உகப்புக்கே நாம் ஆட் செய்வோம் என்றபடி. ஆழ்வாரின் “வேய் மருதோளிணை ” திருவாய்மொழியில், பராங்குஶ நாயகி பெருமாளுக்கு விருப்பமான “ஒசிசெய் நுண்ணிடையிளவாய்ச்சியர் நீ உகக்கும் நல்லவரொடும் உழிதராயே ” என்றும், “உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன் திருவுள்ளம் இடர்கெடும்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் ” என்றும் ஆழ்வார் திருவாக்கு அமைந்தது.

ஶேஷித்வம் ஶேஷத்வம் இரண்டிலும்  மறுக்களைந்தது இந்த ஸம்பந்தம் என்று லோகாசார்யர் ஸாதிக்கிறார். ஶேஷியின் கைங்கர்ய ரஸாநுபவத்துக்கும் கைங்கர்ய ஆச்ரயமான ஶேஷபூதனுடைய ஶேஷி போக விருத்த ரஸத்வ ராஹித்யத்தையும் இது சொல்லும். அவன் உகப்பே கைங்கர்யத்தின் பயன்; எனவே அவன் உகக்க உகக்க இது நடைபெற வேண்டும். அப்படி நடக்கையில் அவன் இன்புறுதலுக்குத் தான் எவ்விதத்திலும் தடையாய் இல்லாதிருக்க வேண்டும். “ஶேஷிக்கு அதிசயத்தை விளைவிக்கை ஶேஷ பூதனுக்கு ஸ்வரூப லாபமும் ப்ராப்யமும்” என்று முமுக்ஷுப்படியில் இவர் அருளிச் செய்யும்படி.

நவவித ஸம்பந்தம் – ஸங்க்ரஹம்

பிள்ளை லோகாசார்யர் நவ வித ஸம்பந்தங்களையும் விவரித்தபின், இதில் எந்தெந்த ஸம்பந்த ஞானம் ஏற்படுவதால் சேதனனுக்கு எந்தெந்த விஷயங்களில் ஸந்தேஹம் நீங்கும் என்று அத்புதமாக ஒரு சுருக்கம் அருளிச் செய்கிறார்:

 1. விஶேஷண விஶேஷ்ய ஸம்பந்த ஞானம் பிறந்தால், ஜகத் காரணன் எம்பெருமானே என்பதில் உள்ள ஸந்தேஹம் அறும் .
 2. ரக்ஷ்ய ரக்ஷக ஸம்பந்த ஞானம் பிறந்தால், எம்பெருமானைத் தவிர பிறர் ஒருவர் ரக்ஷகர் எனும் ஸந்தேஹம் அறும் .
 3. ஶேஷ ஶேஷி  ஸம்பந்த ஞானம் பிறந்தால் வேறொருவன் ஶேஷி (உடைமையாளன்) எனும் ஸந்தேஹம் நீங்கும்.
 4. பர்த்ரு பார்யா ஸம்பந்த ஞாநம் பிறந்தால் சேதனனுக்கு அநந்யார்ஹ சங்கை, தான் எம்பெருமானை அல்லாது வேறொருவர்க்கும் அருகதை உள்ளவன் என்கிற சங்கை ஒழியும்.
 5. ஞாத்ரு ஜ்ஞேய  ஸம்பந்த ஞானம் பிறந்தால், அறியப்பட வேண்டிய(து)வன் வேறொருவன் (வேறொன்று) என்கிற ஸந்தேஹம் நீங்கும்.
 6. ஸ்வ ஸ்வாமி ஸம்பந்த ஞானம் பிறந்தால், தனக்கு ஸ்வாதந்த்ர்யம் உண்டு என்கிற ஸந்தேஹம் நீங்கும்.
 7. ஶரீர ஶரீரி ஸம்பந்த ஞானம் பிறந்தால் ஸ்வரூபம் ஒன்று என்கிற ஸந்தேஹம் நீங்கும்.
 8. தார்ய தாரக ஸம்பந்த ஞானம் பிறந்தால் தனக்கு தாரகன் வேறொருவரும் உண்டு எனும் ஸந்தேஹம் நீங்கும்.
 9. போக்த்ரு போக்ய ஸம்பந்த ஞானம் பிறந்தால், தனக்கு போக்த்ருத்வம், அனுபவம் உண்டு என்கிற ஸந்தேஹம் நீங்கும் (போக்தா அனுபவிப்பவன் எம்பெருமானே என்கிற தேற்றம் உண்டாகும்).

ஆக இவ்வாறான நவவித ஸம்பந்தமும் அறிந்து ஆனந்தித்திருக்கவும் என்று பிள்ளை லோகாசார்யர் இந்த நவவித ஸம்பந்த விளக்கத்தை நம் எல்லார்க்கும் ஒரு மங்களாஶாஸனத்தோடு முடிக்கிறார்.

பெரியவாச்சான் பிள்ளை இந்த அர்த்தம் அறிந்து அநுஸந்திப்பவனையே ஆசார்யர்களும், பிராட்டியும் எம்பெருமானும் தமக்கு மிக ப்ரியதரமானவன் என்று கொண்டாடுவர் என்று நமக்கு ஆஶ்வாஸம் தந்தருளினார்.

எம்பெருமானார் திருவடிகளே  ஶரணம். உலகாசிரியர் திருவடிகளே ஶரணம். ஜீயர் திருவடிகளே ஶரணம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழியும் அர்த்தபஞ்சகமும்

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

ச்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதன் ஏற்றத்தை பரமாசார்யரான நம்பிள்ளை ஈட்டிலே “ஆழ்வாருக்குப் பின்பு நூறாயிரம் கவிகள் போறும் உண்டாய்த்து. அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியற அவற்றை விட்டு இவற்றைப் பற்றி துவளுக்கைக்கு அடி, இவருடைய பக்தி அபிநிவேஶம் வழிந்து புறப்பட்ட சொல் ஆகையிறே!” என்று கொண்டாடியருளுகிறார். கவி என்று பேர் கொண்டவர்கள் ஆழ்வார் திருவவதாரத்திற்குப் பின்பு தோன்றியுள்ளார்கள். ஆயினும், அவர்கள் கவிகளை நம் பூர்வர்கள் கைக்கொள்ளுவதில்லை.  ஆனால் இவ்வாழ்வார்களின் அருளிச் செயல்கள் இல்லை என்றால் உற்சவங்களும் விழாக்களும் பொலிவிழந்து போகும் என்று வியந்து கம்பர் தம்முடைய சடகோபர் அந்தாதியில் குறிக்கும் பொழுது – அந்தமிலா மறையாயிரத்தாழ்ந்தவரும் பொருளைச் செந்தமிழாகத் திருத்திலனேல் நிலத்தேவர்களுந் தந்தம்விழாவும் அழகும் என்னாம்? (சடகோபர் அந்தாதி – 14) [அழிவில்லாதனவும் அநேக ஆயிரம் சாகைகளாக உள்ளனவுமான வேதங்களின் சாரார்த்தத்தை தமிழ்த் திவ்ய ப்ரபந்தங்களாகச் சீர்திருத்தி அருளிச் செய்யாதிருந்தாரானால் அந்தணர்களும் அவர்கள் கொண்டாடும் உத்ஸவங்களும் எங்ஙனம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயும் யாதாய் முடியும்] என்று குறித்தருளுகிறார். ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில் இவ்வாழ்வாரின் திருவாய்மொழி அனுபவத்திற்குத் தடையாக எழுந்தருளினார் என்று கோஷ்டி கலைக்கும் பெருமாள் வந்தார் என்று செல்வர் புறப்பாடினை நிறுத்திக் கொண்டார்கள் என்றால் – அதன் மூலம் திருவாய்மொழியின் ஏற்றம் நன்கு விளங்கும்.

DSC01004.JPG

ஆழ்வார்களில் வேதம் தமிழ் செய்த மாறன், ஶடகோபன் – அஜ்ஞானத்திற்குக் காரணமான ஶடம் என்னும் வாயுவை நிரஸித்தவர், மற்றைய ஆழ்வார்களைத் தனக்குத் அங்கங்களாகக் கொண்டவர் என்ற பெருமைகள் உடையவர் நம்மாழ்வார். இவர் அருளிச் செய்த நான்கு ப்ரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழிக்கு மற்றைய ஆழ்வார்கள் அருளிச்செய்த செய்தவைகள் அங்கங்களாகவும் உபாங்கங்களாகும் உள்ளன. இது “வேத சதுஷ்டய அங்கோபாங்கங்கள் பதினாலும் போலே இந்நாலுக்கும் இருந்தமிழ் நூற்புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன்மாலைகளும்” (43) என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை கொண்டு உணரத்தக்கது. இவருடைய அருளிச்செயலான திருவாய்மொழிக்கு, கல்பந்தோறும் சதுர்முக ப்ரஹ்மாவிற்கு வேதத்தினைக் கொடுத்தவனான ஸ்ரீரங்கநாதன் வேதஸாம்யத்தைப் ப்ரஸாதித்தருளினான். இதுதன்னை கோயில் ஒழுகிலும், ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த கலியன் அருள்பாடு என்னும் க்ரந்தத்திலும் காணலாம். இதனை த்ராவிட வேத ஸாகரம் என்றார் ஸ்ரீமந் நாதமுனிகள். வேதத்தின் லக்ஷணங்கள் அனைத்தும் இத்திருவாய்மொழிக்கு உண்டு என்பதை வேத நூல், இருந்தமிழ்நூல் (45) என்னும் சூர்ணிகையினால் காண்பித்தருளுகிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். இந்த திவ்ய ப்ரபந்தத்திற்கு வேதத்தோடுள்ள ஸாம்யமானது ஆசார்ய ஹ்ருதயத்தில் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரால் நன்கு நிலை நாட்டப்பட்டது குறிக்கொள்ளத் தக்கது. இதற்கு த்ரமிடோபநிஷத் என்றே திருநாமம்.

இத்தகைய பெருமை வாய்ந்த திருவாய்மொழியின் ப்ரமேயம் (திருவாய்மொழியினால் அறிந்து கொள்வது) அர்த்த பஞ்சகம் ஆகும். மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்

என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார். அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும், மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும், தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும்,  வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று. ஆக (1) பரமாத்ம ஸ்வரூபம் , (2) ஜீவாத்ம ஸ்வரூபம் , (3) உபாயஸ்வரூபம், (4) விரோதி ஸ்வரூபம், (5) புருஷார்த்த ஸ்வரூபம் ஆகிய ஐந்து ஞானமே அர்த்த பஞ்சகம் என்பதாகும். இது தன்னை ஹாரீத ஸ்ம்ருதியில்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]

என்ற ஶ்லோகம் தெரிவிக்கிறது. இதன் திரண்ட பொருள் – அடையத்தக்க பரம்பொருளின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மை, அடையும் வழி, அடைந்து பெறும் பயன், அடைவதற்குத் தடை ஆகியவற்றை இதிஹாஸ புராணங்களோடு கூடிய வேதங்களும் வேதஶப்தார்த்தங்களையறியும் மஹாபுருஷர்களான முனிவர்களும் ஆழ்வார்களும் உரைக்கின்றனர். இந்த ஶ்லோகம் முமுக்ஷுப்படியில் வ்யாக்யானம் அருளிச்செய்யுமிடத்து பெரிய ஜீயர் காண்பித்தருளுகிறார். அதற்கு அரும்பதம் அருளிச்செய்த எம்பாவய்யங்கார் ஸ்வாமி முநயஶ்ச மஹாத்மந: என்பதற்கு மஹாத்மாக்களான முநிகள் என்பதால் – வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா என்று கீதாசார்யன் அருளிச் செய்தபடி இங்கு ஆழ்வார்களே குறிக்கப்படுகிறார்கள் என்று காட்டியுள்ளார் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது.

arththa panchakam

இதன் ஏற்றத்தை பூர்வாசார்யர்கள் பலபடிகளாலும் பேசியுள்ளார்கள்.

 1. ஸ்ரீ பாஷ்யத்திலும் இவ்வர்த்த பஞ்சகம் சொல்லுகிறது என்று கொள்ள இடமுண்டு. முதல் இரண்டு அத்யாயங்களான ஸமந்வயம் மற்றும் அவிரோத அத்யாயாங்களாலே எம்பெருமானே ஜகத்காரணன் என்பதை சொல்வதினால் பரஸ்வரூபமும், ஆத்மாதிகரணம் முதலானவற்றில் ஜீவாத்மாவின் ஸ்வரூபமும், மூன்றாவது அத்யாயத்தில் முதல் பாதமான வைராக்ய பாதத்தினால் விரோதி ஸ்வரூபமும், அதற்கு மேல் உபாஸநம் சொல்லுவதால் உபாய ஸ்வரூபமும், அதற்கு மேல் புருஷார்த்தமான ப்ரஹ்ம ப்ராப்தியையும் சொல்லுவதால் அர்த்த பஞ்சகம் சொல்லியாயிற்று.
 2. அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதற்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்” என்கிறார் பிள்ளைலோகாசார்யர்.
 3. இதனை “ஞாதவ்ய பஞ்சகஜ்ஞானம்” என்கிறார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அதாவது அறிந்து கொள்ள வேண்டிய அர்த்தம் அர்த்தபஞ்சகம் என்கிறார். மேலும் அதனை அறிகையே பிறப்பு இறப்பு ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கும், அதனை அறிந்து கொள்ளாமையே பிறப்பு இறப்பு சுழியில் சிக்கிக் கொள்வத்ற்கும் காரணம் என்கிறார்.
 4. ஸப்தகாதையில் இதனை “அஞ்சுபொருள்” என்கிறார்.

இனி திருவாய்மொழியில் அர்த்த பஞ்சகம் அமைந்திருக்கும் படியை பார்க்கலாம். திருவாய்மொழி மொத்தம் 100 பதிகங்களால் ஆனது. அதில் இவ்வர்த்தத்தை மொத்தம் 20 பதிகங்களில் விசதமாக்கி மற்ற 80 பதிகங்களில் இது தன்னையே பரக்க அருளிச் செய்துள்ளார் ஆழ்வார். இப்பொழுது முக்கியமான 20 பதிகங்கள் (ஒவ்வொரு ஜ்ஞானத்திற்கும் 5 பதிகங்கள் ) – அவற்றைப் பார்க்கலாம்.

பர ஸ்வரூபம்:

பர ஸ்வரூபம் என்றால் ஸகல கல்யாண குணநிதியாய், அகில ஹேயப்ரத்யநீகநான (தோஷங்களுக்கு எதிர்த்தட்டான) பராத்பரனான ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்வரூபம். அதனைப் ப்ரதிபாதிக்கும் (சொல்லும்) திருவாய்மொழிகள்,

 1. உயர்வற உயர்நலம்
 2. திண்ணன்வீடு
 3. அணைவதரவணை
 4. ஒன்றுந்தேவும்

         உயர்வறயுயர்நலம் உடையவன் என்று தொடங்கும் 1ம் பத்து முதல் திருவாய்மொழி பரத்வத்தில் பரத்வம் சொல்லுகிறது என்பர் ஆசார்யர்கள். இதில் எம்பெருமான் “தம் ஈஶ்வராணாம் பரமேஶ்வரம்” (ஶ்வேதாஶ்வரோபநிஷத் ) என்கிறபடியே பரர்களுக்கு எல்லாம் பரனாய் ஸர்வஸ்மாத் பரனாய் இருக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்.

முதல் பாசுரம்  உயர்வறவுயர்நலம்  *உயர்வறவுயர்நலம் உடையவன்* என்பதினால் கல்யாணகுண யோகத்தையும், *அயர்வறும் அமரர்கள் அதிபதி* என்பதினால் நித்ய விபூதியோகத்தையும், *சுடரடி* என்பதினால் திவ்ய விக்ரஹத்தையும் அருளிச்செய்கிறார். திருவடியைச் சொன்னது திருமேனிக்கு உபலக்ஷணம்.

 

ஸர்வாதிகமான (எல்லாவற்றைக் காட்டிலும் மேலான) பரப்ரஹ்மத்திற்கு லக்ஷணம் (அஸாதாரணமான பண்பு) கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாயும் தோஷங்களுக்கு எதிர்த்தட்டாயும் இருக்கை. இதுவே உபயலிங்கம் எனும் அடையாளங்கள். இதனை அஸங்கேய (கணக்கற்ற) அநவதிக (அவதி – எல்லை – அநவதிக – எல்லையில்லாததான) திருக்கல்யாண குணங்களை உடையவன் என்பதை – உயர்வறவுயர்நலம் உடையவன் என்றார்.

இரண்டாம் பாசுரம் மனனகமலமற எல்லாவித தாழ்வுகளுக்கும் எதிர்த்தட்டாகவும் எல்லையில்லாத திருக்குணங்களையும் உடையவனாய் இருக்கும் எம்பெருமான் – சேதனம் எனப்படும் அறிவுள்ள சித் மற்றும் அசேதனம் எனப்படும் அறிவில்லாத அசித் ஆகிய இரண்டு வஸ்துக்களைக் காட்டிலும் அத்யந்த விலக்ஷணன் என அவனது மேன்மையை அருளிச் செய்கிறார்
மூன்றாம் பாசுரம் இலனது நித்ய விபூதி (விபூதி என்பது ஐஶ்வர்யத்தைக் குறிக்கும்) போலே லீலா விபூதியும் அவனுக்கு சேஷம் – அவனுக்கு உரியது என்கிறார்
நான்காம் பாசுரம் ஆய் நின்ற அவரே இந்த லீலா விபூதியுனுடைய ஸ்வரூபம் பரமாத்மாவிற்கு அதீனம் என்கிறார். எப்படியென்னில், (1) ஸ்ருஷ்டியில் இதை உண்டாக்குவது பரமாத்மா தான், (2) வஸ்துக்கள் வஸ்துக்களாகும்படி அநுப்ரவேஶித்ததும் அவன்தான், (3) இது அழியும் பொழுது ஸூக்ஷ்மமாகத் தன்னிடம் ஒடுங்கும்படி செய்வதும் அவன்தான்.
ஐந்தாம் பாசுரம் அவரவர்  இனி ஸ்திதியும் (இருப்பு) அவனது அதீனம் என்கிறார். அதாவது ஸர்வர்க்கும் அந்தர்யாமியாய் நின்று ரக்ஷிப்பது எம்பெருமான் என்கிறார்.
ஆறாம் பாசுரம் நின்றனர் இருந்தனர் கிடந்தனர்  இங்கு ஶப்தங்கள் பன்மையாகப் படிக்கப்பட்டுள்ளன. அதனால் எம்பெருமானைத் தவிர்ந்த அனைத்தின் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி அவனது அதீனம் என்பது இங்கு தெளிவு.
ஏழாம் பாசுரம் உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே
ஏழாம் பாட்டில் ஜகத்துக்கும் ஈஶ்வரனுக்கும் உள்ள ஶரீராத்மபாவத்தை அருளிச்செய்கிறார். *சுடர் மிகு சுருதியுள் உளன்” என்பதினால் வேதத்தினால் சொல்லப்படும் பரம்பொருள் எம்பெருமான் என்கிறார். இங்கு “* சுடர்மிகு சுருதியுள் * என்கையாலே நாராயணாநுவாகாதிகளில் சொல்லுகிற பரத்வம் லக்ஷ்மீ ஸம்பந்தம் இவையெல்லாம் அங்கீகரித்தாகிறார் *” என்னும் ஈட்டு ஸ்ரீ ஸூக்தி அனுஸந்திக்கத்தக்கது.
எட்டாம் பாசுரம் பரபரன் பரபரன் என்பதே உயிரான பதம். ஸர்வஸம்ஹர்த்தாவாய் (உலகில் ஸம்ஹரிக்கிறவன் என்று பெயரெடுத்தவர்களையும் மஹாப்ரளயத்தில் ஸம்ஹரிக்கிறவனாய்), ஸர்வஸ்ரஷ்டாவாய் (ஸர்வத்தையும் படைப்பவனாய்) ஸர்வாந்தர்யாமியான (அனைவருக்கும் அந்தர்யாமியான), ஸர்வேஶ்வரனே பரபரன் என்கிறார்.
பரபரன் – பர:பராணாம் பரம: பரமாத்மாத்ம ஸம்ஸ்தித: | ரூபவர்ணாதி நிர்தேஶ விஶேஷண விவர்ஜித: || (ஸ்ரீ விஷ்ணுபுராணம் 1-2-10) (மேலானவற்றைக் காட்டிலும் மேலானவனும் தன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லாதவனும் தனக்குத்தானே ஆதாரமாய் இருப்பனுமான பரமாத்மா ரூபம் நிறம் முதலியவை, நாமம் ஆகிய ப்ராக்ருத விஶேஷணங்கள் அற்றவன்) என்கிறபடியே ப்ரஹ்மாதிகளுக்கும் பரனாகையாலே பராத்பரன் என்றபடி.
பத்தாம் பாசுரம் கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே * அணோரணீயாந் மஹதோ மஹீயாந் * என்று ஶ்ருதி ஓதியபடியே பரதத்த்வமானது அணுக்களிலும் அந்தர்யாமியாய் எங்கும் பரந்துளன் என்றருளிச் செய்தார். இதனால் அவனது வ்யாப்தியை அருளிச் செய்தாராயிற்று
பதினொன்றாம் பாட்டு. வரனவில் திறல்வலி அளிபொறையாய் நின்ற பரன்  பஞ்சபூதங்களுக்கும் அஸாதாரணமான ஶப்தாதி குணங்களுக்கு நிர்வாஹகனாய் பரனாய் நிற்பவன் ஸர்வேஶ்வரன்

இப்படிப் பரக்க எம்பெருமானின் பரத்வத்தை பேசினார் நம்மாழ்வார் “உயர்வற உயர்நலம் உடையவன்” பதிகத்தில். அதிலும் அவற்றைத் தான் மயர்வற மதிநலம் அருளப்பெற்றதால் நேரே அனுபவித்துப் பின்பு அவற்றைப் பேசினார். அதுவும் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்கிறார். இவ்வளவு அர்த்தங்களையும் சுருக்கி ஸ்ரீமத் வரவரமுனிகள் தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு
மயர்வேத நேர்கொண்டுரைத்து – மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு. (திரு. நூ. 1)  என்றருளினார். உயர்வே பரன்படியை என்பதினால் பரத்வே பரத்வமும், உள்ளதெல்லாம் தான் கண்டு என்பதினால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று ஆழ்வார் அவை அனைத்தையும் கண்டதையும், மயர்வேத நேர் கொண்டு உரைத்து என்பதினால் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்ததையும் இப்பாசுரத்தில் அருளினார் ஆயிற்று.

திண்ணன் வீடு என்னும் பதிகத்திலும் ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தை அருளினார் ஆழ்வார். முதலில் உயர்வற உயர்நலம் பதிகத்தில் ஶ்ருதியைக் கொண்டு பரத்வம் சொன்னாற்போலே, இந்தப் பதிகத்தில் இதிஹாஸ புராணங்களைக் கொண்டு அவனது பரத்வத்தைப் ப்ரதிபாதிக்கிறார் (சொல்லுகிறார்) இந்தப் பதிகத்தில். அப்படி அருளிச்செய்தவைகளாவன

 • மாபாவம் விட அரற்குப் பிச்சைபெய் * கோபாலகோளரி ஏறன்றியே. (2-2-2)
 • தேவனெம்பெருமானுக்கல்லால் * பூவும் பூசனையும்தகுமே (2-2-4)
 • தகுங்கோலத் தாமரைக்கண்ணனெம்மான் (2-2-5)
 • புள்ளூர்தி கழல்பணிந்தேத்துவரே (2-2-10)

இப்பதிகந்தன்னில் ஈட்டில் சில மேற்கோள்கள் இதிஹாஸத்தில் இருந்து காட்டப்பட்டுள்ளன. சிலவற்றை மட்டும் பரத்வம் சொல்லுவதைப் பார்க்கலாம்.

க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய: |
க்ருஷ்ணஸயஹி க்ருதே பூதமிதம் விச்வம்சராசரம் || (மஹாபாரதம் பீஷ்ம பர்வம்)
உலகங்களுடைய உத்பத்தியும் க்ருஷ்ணன் தான்; ப்ரளயமும் க்ருஷ்ணன் தான் என்பது ப்ரஸித்தம். ஜங்கம ஸ்தாவரமாயிருக்கிற ஸகலமான இந்த ப்ராணி ஸமூஹமானது க்ருஷ்ண நிமித்தமாக இருக்கிறது.

யச்ச கிஞ்சிந்மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவரஜங்கமம் |
தத் பச்யமஹம் ஸர்வம் தஸ்ய குக்ஷௌ மஹாத்மந: || (மஹாபாரதம் ஆரண்யம்)
உலகத்தில் சராசராத்மகமான யாதொன்று என்னால் பார்க்கப்பட்டதோ அவை எல்லாவற்றையும் நான் ஈச்வரனுடைய வயிற்றில் பார்த்தேன்

இதனை உட்கொண்டே ஸ்ரீமத் வரவரமுனிகள் * திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை – நண்ணி அவதாரத்தே நன்குரைத்த * என்றருளினார்.

*அணைவது அரவணை மேல்* என்பது இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி ஆகும். ஈட்டில் இதன் அவதாரிகையில் பரத்வம் சொல்லுகிறது என்பதற்கு இரண்டு யோஜனைகள் காட்டப்பட்டுள்ளன. முதலாவது “தீர்த்தன் உலகளந்த சேவடி மேல்” என்கிற 6வது பாசுரத்தில் உள்ள * பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை” என்பது கொண்டு இங்கு பரத்வம் பேசப்படுகிறது என்பது ஒரு நிர்வாஹம். அர்ஜுனன் தினமும் பரமஶிவனுக்கு ஒரு புஷ்பம் ஸம்ர்பிப்பது வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு தினம் ஸமர்ப்பிக்க முடியாமல் போகவே – அன்று கண்ணன் எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கவே மறுநாள் பரமஶிவனின் முடியில் அந்த புஷ்பத்தைக் கண்டான். இனி பராஶர பட்டர் – முதல் பாசுரமான * அணைவது அரவணை மேல் * என்பதினால் எம்பெருமான் நித்ய சூரிகள் அனுபவிப்பது போன்று மோக்ஷம் அருளக் கூடியவன் என்று கொண்டு – அதனால் பரத்வம் சொல்லுகிறது என்று நிச்சயித்தார். ஆழ்வார் இப்படி மோக்ஷப்ரதத்வத்தை (மோக்ஷம் கொடுக்க வல்லவனாயிருக்கை) தனியாக அருளிச் செய்ததை அடியொற்றியே யாமுநமுனியான ஆளவந்தாரும் தம்முடைய ஸ்தோத்ரரத்னத்தில் – “த்வாதாஶ்ரிதாநாம்” என்கிற ஶ்லோகத்தில் மோக்ஷப்ரதத்வத்தையும் சேர்த்து அனுபவித்தார். இப்படி பட்டர் நிர்வாஹத்தையே முக்கியமாகக் கொண்டார்கள் நம் பூர்வர்கள்.

1

அடுத்ததாக 4ம் பத்து கடைசி தஶகம் – * ஒன்றுந்தேவுமுலகுமுயிரும் * என்கிற பதிகத்தால் அர்ச்சையில் பரத்வம் சொல்லுகிறது. * ஸதேவ ஸௌம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம் * – என்று ஶ்ருதி சொன்னபடியே ஶ்ருஷ்டிக்கு முன்பு வேறு ஒருவரும் இல்லாத நிலைமையில், அனைத்தையும் தன்னுடன் ஒட்டி வைத்துக் காப்பாற்றி, அனுப்ரவேஶம் பண்ணியருளி அனைவரையும் படைத்ததைக் கொண்டு இங்கு அர்ச்சையில் பரத்தவத்தை ஸாதித்தருளுகிறார்

 • நான்முகன் தன்னோடு தேவருலகோடுயிர் படைத்தான்- ஆதிப்பிரான்
 • நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் – புகழாதிப்பிரான்

ஈட்டில் இந்த பதிகத்தின் ப்ரவேஶத்தில் அத்புதமாக எம்பெருமானின் பரத்வம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு ராமானுஜபதாச்சாயரான ஸ்வாமி எம்பார் வார்த்தையாக ஒன்று ஈட்டில் காட்டப்பட்டுள்ளது – “ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை அடுப்பிடு கல்லாக பாவிப்பர்கள்”. ஆழ்வார் இத்திருவாய்மொழி அருளிச் செய்தபின்பு, அதை உணர்ந்ததனால் எம்பெருமானின் பரத்வத்தை அறிந்து கொண்டு – மற்றைய தேவர்கள் அடுப்பில் வைக்கும் கல் போன்று கொள்வர்கள் என்று – அதாவது மோக்ஷம் பராத்பரனாலேயே கொடுக்க முடியும். எனவே மற்றவர்களால் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆவது ஒன்றுமில்லை என்றபடி.

ஜீவாத்ம ஸ்வரூபம்:

பரமாத்ம ஸ்வரூபத்தைப் பார்த்த அநந்தரம் ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லும் திருவாய்மொழிகளைப் பார்க்கலாம். ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லும் திருவாய்மொழிகள்

 1. பயிலுஞ் சுடரொளி (3-7)
 2. ஏறாளும் இறையோனும் (4-8)
 3. கண்கள் சிவந்து (8-8)
 4. கருமாணிக்க மலைமேல் (8-9)

          ஸ்ரீவசனபூஷணதிவ்ய ஶாஸ்த்ரத்தில் ஆசார்ய அக்ரேஸரரான பிள்ளை லோகாசார்யர் * அஹங்காரமாகிற ஆர்ப்பைத் ஆத்மாவிற்கு அழியாத பேர் அடியான் என்றிரே *  என்றருளுகிறார். அதாவது தேஹமே ஆத்மா, மற்றும் நான் ஸ்வதந்த்ரன் என்னும் இரு வகையான அஹங்காரம், மமகாரம் என்னும் அழுக்கு – ஆசார்ய உபதேசத்தால் நீங்கும் போது – ஆத்மா உள்ளவரை இருக்குமது தாஸத்வம் என்பதாகும். ஆத்மா நித்யமாகையாலே தாஸத்வமும் நித்யம் என்பது கருத்து. அந்த தாஸத்வமும் ஹரியின் அடியார்கள் வரை செல்லும் என்பதை * உற்றதும் உன்னடியார்க்கடிமை * என்பதாக, அடியார்களுக்கு அடியவனாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபத்தை * பயிலுஞ் சுடரொளி * திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார். இத்திருவாய்மொழியில்

 • எம்மையாளும் பரமர் (3-7-1)
 • எம்மையாளுடை நாதரே (3-7-2)
 • எம்மையாளுடையார்களே(3-7-3)
 • சன்மசன்மாந்தரம் காப்பரே (3-7-6)
 • எம்தொழுகுலம் தாங்களே (3-7-8)

என்றும் அருளிச்செய்து, முடிவில் * இவைபத்து அவன் தொண்டர்மேல் முடிவு * என்றது குறிக்கொள்ளத்தக்கது. இந்தப் பதிகத்தில் உள்ள பத்து பாசுரங்களுக்கும் விஷயம் அவன் தொண்டர்கள் என்றாராயிற்று.

     இனி * ஏறாளும் இறையோனும் * பதிகத்தில், அவனது திருவுள்ளத்திற்கு வேறுபடில் ஆத்மாவும் வேண்டா என்பது தேறிய கருத்தாகும். இங்கு ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு வேண்டா எனில் எனக்கும் வேண்டா என்றருளிச் செய்கிறார். ஆத்மீயம் என்றால் – ஆத்மாவுடையது என்றபடி. இதனால் தேறுவது என் என்னில் – எம்பெருமானுக்காக என்றால் தான் ஆத்மாவும் கைக்கொள்ளத்தக்கது என்பதை எதிர்மறையாக உணர்த்தியருளுகிறார் ஆழ்வார். இதனை அடியொற்றியே ஸ்ரீ ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ரரத்னத்தில் * ந தேஹம் ந ப்ராணாந் * [ஆத்மா என்று அபிமானம் கொள்ளாம்படி இருக்கும் தேஹம், ப்ராணன், தேவர்களும் ஆசைப்படும் ஸுகம், பிள்ளைகள், நண்பர்கள், ஆத்மா – இவையனைத்தும் உனக்கு புறம்பாகில் ஒரு க்ஷணகாலமும் ஸகிக்கமாட்டேன். இதைப் பொய்யாக விண்ணப்பித்தேனாகில் – உன்னிடத்தில் மது என்னும் அரக்கன் பட்டது படுகிறேன்] என்கிற ஶ்லோகத்தில் இவ்விஷயத்தையே அருளினார்.  இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகளும் * ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்கவுயிர் – தேறுங்கால் என்றனக்கும் வேண்டாவெனுமாறன்றாளை * என்றருளினார். – இதன் தேறின அர்த்தம் – “பெரிய பிராட்டியாரை தன் திருமார்பில் கொண்ட ஈசன் திருவுள்ளவுகப்புக்கு வேறுபட்டால் உடைமையும், ஆத்மாவும் ஆராயுங்கால் எனக்கு வேண்டியதில்லை” என்பதாகும்.

      அடுத்து *கண்கள் சிவந்து* என்னும் பதிகத்தினால் ஆத்மவஸ்து எம்பெருமானுக்கு சேஷம் என்றும், ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறாய் (தேஹாதிகளைக் காட்டிலும் வேறாய்) ஜ்ஞாநம் ஆநந்தங்கள் இரண்டையும் கொண்டிருப்பது என்று ஆத்ம தத்வத்தினைத் தெரிவித்தருளுகிறார். அதாவது * அடியேனுள்ளான் உடலுள்ளான் * என்று ஆத்ம தத்த்வத்தை தெரிவித்தருளும் பொழுது அடியேன் என்று அது பரமாத்மாவிற்கு தாஸன் என்பதை அறிவிக்கும் முகமாக அடியேன் என்ற சப்தத்தை உபயோகப்படுத்தியருளினார். இது * தாஸபூதா ஸ்வதஸ்ஸர்வே ஆத்மாஹி பரமாத்மந: * (இயற்கையாகவே ஆத்மாவானது பரமாத்விற்கு அடிமைப்பட்டவன் ) என்பது முதலான ப்ரமாண வசனங்கள் இங்கு விவக்ஷிதம். * சென்று சென்று பரம்பரமாய் * என்பதினால் தேஹம், ப்ராணன், மனஸ் ஆகியவை ஒன்றுக்கொன்று மேம்பட்டதாய் அவைகளில் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்) ஆத்மா என்று ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறானவன் என்று தெரிவித்தருளினார். *  நன்றாய் ஜ்ஞாநம் கடந்ததே * – ஆத்ம ஸ்வரூபமானது ஜ்ஞாநம் மற்றும் ஆநந்தம் இவை கொண்டே அறிய வேண்டியது; நன்றாய் ஜ்ஞாநம் என்றதால் ஆநந்தமாயிருப்பதும் – ஆநந்தமென்பது அநுகூல ஜ்ஞாநமாகையாலே அதனால் ஜ்ஞாநம் சொன்னதாயிற்று. இதனால் ஆத்மா ஜ்ஞாந ஆநந்தங்கள் உடையவன் என்பதாயிற்று.

    ஆத்மாவானது பகவானுக்கு அடிமைப்பட்டிருக்கும் என்பது கீழேயே சொல்லப்பட்டது. அந்த விலக்ஷணமான ஆத்ம ஸ்வரூபம் தானும் தனக்கு என்றில்லாமல் எம்பெருமானுக்கே அநந்யார்ஹ சேஷமாயிருக்கும் (பிறர்க்கு அர்ஹமாகாமல் அவனுக்கே சேஷமாயிருக்கும்) என்பதனை *கருமாணிக்க மலை மேல் * (8-9) என்னும் திருவாய்மொழியில் தோழிப் பேச்சாக ஆழ்வார் அருளிச் செய்கிறார். இது தானும் அறிதியிடுவது * படவரவணையான் நாமமல்லால் பரவாளிவள் *, * திருப்புலியூர் புகழன்றிமற்று – பரவாளிவள் * *திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே – அன்றி மற்றோருபாயம் என் இவளந்தண்டுழாய் கமழ்தல் * இவை கொண்டு .  ஸ்ரீமத் வரவரமுனிகள் இதனை – * திரமாக அந்நியருக்காகாது அவன்றனக்கேயாகுமுயிர் அந்நிலையையோரு நெடிதா * (திரு. நூ – 79) என்றருளிச் செய்தார் – ஸ்ரீ க்ருஷ்ண பகவான் விஷயத்தில் ஒரு கன்னிகையின் அவஸ்தையை அடைந்து – அத்விதீயமாய் விலக்ஷணமான ஸம்ஸ்லேஷ லக்ஷணங்களைத் தோழிப் பேச்சாலே அருளிச் செய்யப் புகுகையாலே ஸ்திரமாக ப்ராப்த ஶேஷி (ஶேஷி – கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்பவன்; ப்ராப்த ஶேஷி – ஒரு காரணமன்றிக்கே இயல்பாக அமைந்த ஶேஷி) சேஷமாகிற ஆத்ம ஸ்வரூபம் பிறருக்கு சேஷமாகாமல் அவனுக்கே சேஷமாகும் நிலைமையை தீர்க்கமாக ஆராயுங்கோள் – என்பது அந்தப் பாசுரத்தின் தேறின அர்த்தம்.

விரோதி ஸ்வரூபம்:

விரோதியானது – கீழ்ச்சொன்னபடி பகவானுக்கே அடிமையான ஆத்ம வஸ்து அவனைக் கிட்டி வாழ்ச்சி பெறாது தடை செய்யுமவையாம். இந்த விரோதி வர்க்கத்தைச் சொல்லும் திருவாய்மொழிகள்

 • வீடுமின் முற்றவும் (1-2)
 • சொன்னால் விரோதம் (3-9)
 • ஒருநாயகமாய் (4-1)
 • கொண்ட பெண்டிர் (9-1)

இவற்றுள்  * வீடுமின் * பதிகத்தில் எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களின் தோஷங்களை அறிவித்து அதை விட, நாடு நலத்தால் அடைய நன்கு உரைக்கிறார் ஆழ்வார். மேலும் அவற்றைப் பற்றுவதற்கு அஹங்காரம் (நான் நான் என்று நினைப்பது), மமகாரம் (என்னுடையது என்று நினைப்பது) ஆகிய இரண்டுமே ப்ரதான காரணம் ஆதலால் அவற்றை * நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து * என அவற்றை அடியோடு விடச் சொல்கிறார் இத்திருவாய்மொழியில்.  இங்கு * அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யா மதி: | அவித்யா தருஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் * (6-7-11) என்கிற ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் நினைக்கத்தக்கது. [தான் அல்லாத தேஹத்தில் தான் என்கிற நினைவும், தன்னுடையதல்லாத பொருள்களில் தன்னுடையது என்கிற நினைவும் ஸம்ஸாரத்தில் அவித்யையாகிற காம்யகர்மங்களெனும் மரம் வளர்வதற்குறுப்பான விதைகளாகும்] .

          இனி ஸேவை செய்வது எம்பெருமானுக்கே என்றும் – மற்றவர்களுக்கு ஸேவை செய்வது அஸேவ்ய ஸேவையாகும் (செய்யத் தகாததாகும்) என்பதனை * சொன்னால் விரோதமிது * என்னும் திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார். * என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள் * – முதலான இப்பதிகத்தில் உள்ள பாசுரங்கள் இதனைத் தெரிவிப்பன. இப்படி அஸேவ்ய ஸேவை செய்தால் த்ருஷ்டமும் (கண்ணால் தெரியும் பலனும்), அத்ருஷ்டமும் (ஐஹிஹ லோக பலங்களும்) கிடைக்காது – மாறாக அநர்த்தமே ஸித்திக்கும் என்பது இப்பதிகத்தில் அறிய வேண்டியது.

      ஒரு புருஷனால் வேண்டப்படுவது புருஷார்த்தமாகும். அது நான்கு வகைப்படும். ஐச்வர்யம் (இது இரு பிரிவு – இழந்த செல்வம், புதிதாக வேண்டும் செல்வம்), கைவல்யம் (ப்ரக்ருதி ஸம்பந்தம் ஒழித்து பகவானை அனுபவிக்காமல் தன்னைத் தானே அனுபவித்தல்) மற்றும் பகவல்லாபம். இவற்றுள் ஐச்வர்யம், கைவல்யம் இரண்டும் அல்பம் அஸ்திரம் ஆகையால் விட வேண்டியது. இதனை * மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே இனிதாம் * என்று மாமுனிகள் அருளிச் செய்கிறார். அதனையும் * ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் * என்பதால் இவ்வுலகம் அனைத்தையும் தன் ஆட்சியின் கீழ் என்னும்படி வாழ்ந்தாலும், அது நிரந்தரமில்லை – * பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் * என்றுரைத்தார். இனி ஸ்வர்க்க லோகாநுபவமோ என்னில் * க்ஷீணே புண்யேமர்த்த்யலோகம் விஶந்தி * (புண்யம் அழிந்தவாறே அங்கிருந்து விழுகிறார்கள்) என்பதை * குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தி மீள்வர்கள் * என்றார். இது ப்ரஹ்மலோகானுபவம் வரை உபலக்ஷணம். இவை போல் அஸ்திரமாக இல்லாமல் இருந்தாலும் தன்னைத் தான் அனுபவிப்பதாகிற கைவல்யம் – * இறுகலிறப்பு * என பகவதனுபவத்தைப் பார்த்தால் தோஷமாயிருக்கும்.

       ஆர்க்கும் ஹிதம் தன்னையே பார்க்கும் கீர்த்தியுடைய மாறன் * கொண்ட பெண்டிர் * பதிகந் தன்னில் சரீர ஸம்பந்தத்தினால் வரும் அனைத்தும் த்யாஜ்யம் (விட வேண்டும்) என்பதை தெளிவாக உரைத்தருளினார். சரீர ஸம்பந்தங்கள் அனைத்தும் கர்மமடியாக வருபவை. * கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை * என்கிறார் ஆழ்வார். நிருபாதிக (ஒரு காரணம் பற்றி இல்லாமல்) ஸம்பந்தியான ஈஶ்வரனைப் பற்றினால் அவன் * அடியார்க்கென்னை ஆட்படுத்தும் * என்றபடி அவனது அடியவர்களுடன் சேர்த்து விடுகிறான். அதுவே ஆத்மவிற்கு ஹிதம்.

உபாயஸ்வரூபம்:

உபாயமாவது இவ்வாத்ம வஸ்துவின் ஸ்வரூபத்திற்குச் சேர செய்ய வேண்டியது ஆகும். இது தெரிவிக்கும் திருவாய்மொழிகள்

 • நோற்ற நோன்பிலேன் (5-7)
 • ஆராவமுதே (5-8)
 • மானேய் நோக்கு நல்லீர் (5-9)
 • பிறந்தவாறும் (5-10)

திருவாய்மொழி

தெரிவிக்கும் கருத்து

நோற்ற நோன்பிலேன்

கைமுதலில்லாமை – பேறு பெற்றுத் தருவதற்கு – வேறு உபாயங்கள் ஒன்றும் செய்யாமை. ஶரணாகதி அநுஷ்டிக்கும் பொழுது வேறு உபாயங்கள் ஒன்றும் நம் கைகளில் இல்லை என்றும் – நமது தீய வ்ருத்தங்களையும் சொல்லிக் கொண்டே அநுஷ்டிக்க வேணும், இதனை * நோற்ற நோன்பிலேன் * என்றார். சரி பேற்றுக்கு என்ன உபாயம் என்னில் – * ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * என எம்பெருமானே உபாயம் என்றபடி. மற்றைய உபாயங்கள் ஸாத்யோபாயங்கள் (சேதனனுடைய செயலாலே ஸாதிக்க வேண்டுபவை). எம்பெருமானோ என்னில் ஸித்தோபாயம் (ஸித்தமாக இருக்கிறான்)

ஆராவமுதே

கீழே ஆகிஞ்சன்யம் அருளிச் செய்தார். இங்கு எம்பெருமானை விட்டால் வேறு கதியில்லை என்பது தோன்றும்படி * களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன் * (எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி, களையாவிட்டாலும் சரி வேறு சரணமுடையேனல்லேன்) என அநந்யகதித்வத்தை அருளிச் செய்கிறார். ப்ரபந்நர்களுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக வேண்டும் 1) ஆகிஞ்சன்யம் – எம்பெருமானைத் தவிந்தவை உபாயாந்தரங்கள் எனப்படும் – கர்ம ஜ்ஞான பக்தியோகங்கள். இவைகளில் கை வைக்காமல் இருக்கை ஆகிஞ்சன்யம் ஆகும். 2) அநந்யகதித்வம் – உன்காரியமாகிற மோக்ஷம் அளிப்பதில் நீ எப்படியிருந்தாலும், என் காரியத்தில் நான் என்னுடைய  * நம்மேல் வினைகடிவான்- எப்போதும் கைகழலாநேமியான் *  என்னும் நிஷ்டை (இருப்பு) குலையமாட்டேன். இப்படி அநந்யகதிவம் முன்னாக * கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன் *  – கண்ணபிரானுடைய திருவடிகளையே தஞ்சமாகக் கொள்ளுகை என்பதை இந்தப் பதிகத்தால் வெளியிட்டார்.

மானேய் நோக்குநல்லீர்

* நாமங்களாயிரமுடைய நம்பெருமானடிமேல் சேமங்கொள் * என்னும்படி ஆயிரம் திருநாமங்களையுடைய ஸர்வேச்வரன் திருடிகளிலேயே தம்முடைய க்ஷேமபாரங்களையெல்லாம் வைக்கையும், அவைகளின் மேல் அத்யவஸாயம் உடையவராய் இருக்கையும்.

பிறந்த வாறும் வளர்ந்த வாறும்

* நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று, * , எம்பெருமான் திருக்குணங்கள் *எனதாவியை நின்றுநின்று உருக்கியுண்கின்ற*,  *என்னையுன் செய்கை நைவிக்கும்*  *வந்தென்னெஞ்சையுருக்குங்களே* என சிதிலப் பண்ணினாலும், சரணம் புகுந்தவர்களை எம்பெருமான் கைகொள்ள வேண்டாம் என நினைத்தாலும் அப்படி உபேக்ஷிக்க விடாதே கைகொள்ளப்பண்ணும் இயல்வினன் திருவனந்தாழ்வான்; அவர்மீது கண் வளர்ந்து அடியார்களுக்கு உபகாரகனாயிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று இடையறாத அத்யவஸாயம் கொள்ளுகை ஆழ்வார் இத்திருவாய்மொழியில் உபதேஸிக்கும் அர்த்தம் ஆகும்.

2

புருஷார்த்த ஸ்வரூபம்:

புருஷார்த்தம் என்பது – புருஷனால் அர்த்திக்கப்படுவது. இதுவும் கீழே நிருபித்த அத்யந்த பாரதந்த்ரயனான ஜீவாத்மாவின் தன்மைக்குச் சேர இருக்க வேண்டும். இதனை நிருபித்த திருவாய்மொழிகள்

எம்மாவீட்டுத் திறமும் செப்பம் (2 – 9)
ஒழிவில் காலமெல்லாம் (3 – 1)
நெடுமாற்கடிமை (8-10)
வேய்மருதோளிணை (10 – 3)

* எம்மா வீட்டுத் திறமும் * என்கிற திருவாய்மொழி அருளும் அர்த்தம் மிகவும் சீர்மையானது. நம் பூர்வாசார்யர்கள் மிகவும் சீர்மையான அர்த்தங்களை * எம்மா வீடு * என்றே குறிப்பிடுவர்கள். இனி இதில் இருக்கும் அர்த்தத்தைப் பார்க்கலாம். ஆழ்வார் அனைவருக்கும் எம்பெருமான் மோக்ஷப்ரதன் (மோக்ஷத்தை அளிக்க வல்லவன்) என்று உபதேசித்ததைப் பார்த்த எம்பெருமான் – ஆழ்வாருக்கு மோக்ஷத்தில் ஆசையுள்ளது என்று கொண்டு, ஆழ்வாருக்கு மோக்ஷத்தைப் ப்ரஸாதிக்க திருவுள்ளமானான். அதைப் பார்த்த ஆழ்வார் – ” எம்பெருமானே! எனக்காகக் கொடுப்பதனால் மோக்ஷமும் புருஷார்த்தம் அன்று என்று நிர்த்தாரணம் பண்ணியருளி, எம்பெருமானே! நீ பரமபதத்தில் என்னை வைக்கவுமாம், அல்லது ஸம்ஸாரமாகிற மருகாந்தாரத்திலே வைக்கவுமாம் – எனக்கு ஒன்றுமில்லை. உனக்கு திருவுள்ளமே எனக்கு வேண்டுவது ” என்று புருஷார்த்த ஸ்வரூபத்தை அருளிச் செய்தார். கைங்கர்யத்தில் தனக்காகப் பண்ணுவது என்பது ஸ்வார்த்தமாகும். அதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

இந்த கைங்கர்யமும் ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் செய்ய வேண்டும் என்பதை * ஒழிவில் காலமெல்லாம் * என்ற திருவாய்மொழியினால் உண்ர்த்துகிறார்.

 • * சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து* (3-3-2) அதாவது – “எம்பெருமானுடைய ஸௌசீல்ய குணத்திலே ஈடுபட்டவர்களாய் ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமான நித்தியஸூரிகள் அனைவரும் *சென்னியோங்கு தண் * திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி திவ்யபுஷ்பங்களை எடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்; அந்தப் புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பூவார்கழல்களில் யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க முடியாதவர்களாய் சீலகுணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றன;” என்பதினால் உடம்பினால் செய்யும் கைங்கர்யத்தையும்,
 • * தெண்ணிறைச்சுனை நீர்த்திருவேங்கடத்து * (3-3-3) என்பதினால் தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய மனஸ்ஸு இருக்கும்படியையும் அதனால் செய்யும் கைங்கர்யத்தையும்,
 • * ஈசன் வானவர்க்கென்பன் * (3-3-4) என்பதினால் நித்யர்களைச் சொல்லி அவர்கள் இருக்கும்படியான * நம இத்யேவ வாதிந* என்று அவர்கள் எம்பெருமானால் போகம் அனுபவிப்பர்களாய் அந்த போகத்தினால் வரும் ஆனந்தமும் எங்களதன்று என்பதற்காக நம: நம: என்று உரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதினால் வாசிகமான கைங்கர்யத்தையும் காட்டியருளினாராயிற்று,

இதனால் அனைத்து வகையான கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் என்பதை அருளிச் செய்தாராயிற்று. இதனையும் * வேங்கடத்துறைவார்க்கு நம* (ஸ்ரீவைகுண்ட வாஸத்தை விட்டு திருமலையிலே நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு நம:) என்பதினால் தன் போகத்திற்காக என்னும் புத்தி நிவ்ருத்தியும், * சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே * (பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை அளிக்கும்) என்பதினால் அக்கைங்கர்யத்தை அளிப்பதும் திருமலையாழ்வாரே என்றதாயிற்று. இதனால் அந்த கைங்கர்யம் தானும் * வழுவிலா அடிமையாயிருக்கும் * என்பதனை அருளிச் செய்தாராயிற்று.

இந்த கைங்கர்யம் தானும் எம்பெருமானோடு மட்டும் இல்லாமல், அவனது அடியார்கள் வரை போக வேண்டும் என்பதை * நெடுமாற்க்கடிமை * (8-10) பதிகத்தால் அருளிச் செய்தார். இதுவே பரம புருஷார்த்தம். அதிலும் இப்பதிகந்தன்னில் அவனது * தனிமாத் தெய்வமான * எம்பெருமானின் அடியார்கள் திறத்தில் அடிமையாம் அளவன்றிக்கே அவ்வடிமை நிலையில் எல்லை நிலம் என்று அனுஸந்தித்துக் காட்டுகிறார். *சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் * (ஸ்வயம் பிரயோஜநமாக கைங்கர்யத்தின் எல்லையிலே நிலை நின்ற அடியவர்களுடைய திருத்தாள்கள் வணங்கி) * அவனடியார் நனிமாக்கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே * (ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சேர்க்கையே எப்பொழுதும் வாய்க்க வேண்டும்) * கோதில் அடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே! * (கோதற்ற அடியார்க்கு அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே அடியேனுக்கு வாய்க்கவேணும்) இங்கு குறிக்கொள்ளத் தக்கது.

இறுதியாக * வேய்மருதோளிணை * பதிகத்தில் புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லப்படுகிறது. இதனை “ பரஸம்ருத்த்யேக ப்ரயோஜனத்வத்தைச் சொன்ன ” (அவனுடைய திருமுகமலர்த்தியே பேறாக) என்கிறார் ஸ்ரீமத் வரவரமுனிகள். இப்பதிகந்தன்னில் * உகக்கு நல்லவரொடுமுழிதந்து உன்தன் திருவுள்ளமிடர் கெடுந்தொறும் நாங்கள் வியக்கவின்புறுதும் எம்பெண்மையாற்றோரும் * என்கிற பாசுரம் தன்னில் இவ்வர்த்தம் சொல்லப்பட்டது. ஆழ்வார் இப்பதிகந்தன்னில் கண்ணன் எம்பெருமான் நம்மை விட்டு பசு மேய்க்கப் போனான் என்று இடைப் பெண்கள் பேசும் பேச்சாகப் பேசினார். க்ருஷ்ணனை என்னை விட்டுவிட்டு பசு மேய்க்கிறேன் என்று போகாதே எனப் பல காரணங்களைச் சொன்னார். அதில் இப்பாசுரத்தின் முந்தைய பாசுரத்தில் * நீ உகக்குநல்லவரொடும் உழிதராயே * (உனக்குப் பிடித்த ஸ்த்ரீகளுடன் இங்கேயே இரு) என்றார். இதனைக் கேட்ட கண்ணபிரான் “இப்படி நீங்கள் சொல்லுகிறது உண்மை தானோ? நான் போகாமைக்காகச் சொல்லுகிற வார்த்தையே தவிர, உங்களருகே நான் வேறு சில பெண்களோடே இருந்தல் அதை நீங்கள் பொறுத்துக் கொள்வீகளோ?” என்று கேட்டான். அதற்கு பதில் கூறுவதாக இருந்து கொண்டு நம் ஸ்வரூபத்திற்குத் தக்க புருஷார்த்தத்தைத் தெரிவிப்பது இப்பாசுரம்; உன்னோடு நாங்கள் இருப்பதைக் காட்டிலும், நீ உன் திருவுள்ளத்தில் உகப்பாக இருப்பவர்களோடு இரு, அதனால் நாங்களடையும் உகப்பே எங்களுக்கு உயர்ந்தது என்கிறார் இப்பாட்டில்.
* எம் பெண்மையாற்றோம்* – உன் சந்தோஷத்திற்கு வேறாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு வேண்டோம்; உன் சந்தோஷமே முக்கியம் எனும் ஸ்வரூபஜ்ஞானமில்லாத பெண்களின் படி எங்களுக்கில்லை என்றபடி.

ஆக இதுவரையில், கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாய், அனைத்து தோஷங்களுக்கும் எதிர்த்தட்டாய், ஸர்வஶேஷியாய், அனைவரையும் ரக்ஷிக்கிறவனாய், இருக்கும் பரமாத்ம ஸ்வரூபம் (1), தேஹம் இந்திரியம் முதலானவற்றைக் காட்டிலும் வேறாய் ஜ்ஞானானந்தங்களை லக்ஷணமாக உடையவனாய், பகவானுக்கே ஶேஷமாய் இருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபம் (2), அஹங்கார மமகாரங்களை விளைக்கடவதாயும், ஜீவனுடைய ஸ்வரூபத்தை மறைக்கக் கடவதாய் இருக்கும் ப்ரக்ருதி ஸம்பந்தம், எம்பெருமானைத் தவிர மற்ற பலன்களில் ஆசை வைக்கை, எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்குச் செய்யும் சேவை, எம்பெருமானைத் தவிர மற்றவர்களை பந்துக்கள் என நினைத்தல் ஆகிற விரோதி ஸ்வரூபமும் (3), ஜீவாத்மாவின் ஸ்வரூபத்திற்குத் தக்கதான உபாய ஸ்வரூபமும் (4), * ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித: * என்று அவனுடைய முக மலர்த்தியே பேறான புருஷார்த்த ஸ்வருபமும் (5) ஆகிய ஐந்தினையும் விரிவாகத் தெரிவிக்கும் திருவாய்மொழிகளைப் பார்த்தோம். மற்றுமுள்ள 80 பதிகங்களிலே இவ்வர்த்தமே கிடக்கிறது. 

பணவாளரவணைப் பள்ளி பயில்பவர்க்கு எவ்வுயிரும் குணபோகம் என்று குருகைக்கதிபன் உரைத்தது உய்ய தவத்தோர் தவப்பயனாய் வந்த முடும்பை மணவாளரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் – இவ்வர்த்தங்கள் அனைத்தையும் ஒரு சூர்ணிகையிலே அடக்கி அருளியுள்ளார்.

“மூன்றில் சுருக்கிய ஐந்தினையும் உயர் திண் அணை ஒன்று பயில் ஏறு கண் கரு வீடு சொன்னால் ஒருக்கொண்ட நோற்ற நாலும் எம்மாவொழிவில் நெடுவேய் என்கிற இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (211)

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஜயதுயஶஸாதுங்கம்ரங்கம் ஜகத்த்ரயமங்களம்
ஜயதுஸுசிரம் தஸ்மிந்பூமா ரமாமணிபூஷணம்
வரதகுருணாஸார்த்தம் தஸ்மை ஶுபாந்யபிவர்த்தயந்
வரவரமுநி: ஸ்ரீமாந்ராமாநுஜோ ஜயதுக்ஷிதௌ

பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான திருவரங்கமானது பெருமையுற்று விளங்கவேணும்; அத்திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ கௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாக உடைய எம்பெருமான் பல்லாண்டு பல்லாண்டாக விளங்க வேண்டும்; அந்த ஸ்ரீ ரங்கநாதனுக்காக ஸ்ரீ வரதகுருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும் மேலும் உண்டாக்குபவரான ராமாநுஜரின் அபராவதாரரான ஸ்ரீ மணவாளமாமுனிகள் இப்புவிதனில் விளங்க வேண்டும்.

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org