வரதன் வந்த கதை 11-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 10-2

அயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கண்டு விட வேண்டும் என்கிற துடிப்பினோடு , பிரமன் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தான் ! வசிஷ்டர் மரீசி போன்ற அறிவிற்சிறந்த பெருமக்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த யாகத்தினை தரிசிக்க, பலரும் பெருமளவில் குழுமியிருந்தனர் !

இடர்ப்பாடுகள் தொடர்ச்சியாக ஏற்படுவதையும் , அவற்றை எம்பெருமான் உடனுக்குடன் போக்கியருள்வதையும் நினைத்துப் பார்த்த பிரமன், தன்னையுமறியாது பரமனைப் போற்றிக் கொண்டிருந்தான்..

வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கான பகவான், விளக்கொளியாய் வந்ததென்ன ; அவனே நரசிங்கமாய்த் தோன்றி விரோதிகளான அஸுரர்களை மாய்த்ததென்ன; இவற்றையே அங்கு அனைவரும்   வாய் வெருவிக் கொண்டிருந்தனர்!!

நல்ல காரியங்களுக்குத் தடைகள் பல ஏற்படுமாம் !! ஆம் !! தடைகள் ஏற்பட்டால் மட்டுமே அது நல்ல காரியம் என்று கொள்க !!

நல்லது செய்வதென்றால் எத்தனையெத்தனை தடைகள். இதே ஒரு தவறைச் செய்ய முற்பட்டால் தடையின்றி நிறைவேறி விடுகின்றதே! இது என்ன விந்தை !!

இவ்விஷயங்களைத் தன் மனதில் அசை போட்டபடியே மெய் மறந்திருந்த அயன், இனியும் தனக்கும் வேள்விக்கும் பிரச்சினைகள் வரும் என்று திடமாக நம்பினான் ! ஆனாலும் அவன் கலக்கமுறவில்லை..

பக்கத்திலே ஒருவர் அயனை விசாரித்தார். பிரமனே ! இனியும் பிரச்சனைகள் வருமா என்ன?

நிச்சயமாக வரும் ! இது பிரமன்..

கேள்வி கேட்டவர் , பிரமனின் இந்த விடையைச் சற்றும் எதிர்பார்த்திராததால் , விழிகள் வெளியில் விழுந்திடத் திகைப்புடன் அவனை நோக்கினார்; நடுநடுங்கிய குரலில், அயனே அத்தடைகளைச் சமாளிக்க நீ தயாராக இருக்கிறாயா என்றார் !

நிச்சயமாக இல்லை ! ஸரஸ்வதியை , அவள் கோபத்தினை, அவள் செயல்களை முறியடிக்கும் ஆற்றல் எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை..

இவ்வாறு பிரமன் பதில் சொல்லவும், வினவினவர் விக்கித்துப் போனார் !

சிரித்தான் அஜன் (பிரமன்) !

ஐயா ! நான் தயாரில்லை, என்னால் சமாளிக்க முடியாது என்று தான் கூறினேனேயொழிய, எம்பெருமானால் ஆகாது என்று சொன்னேனா ?!

அவன் நம்மை மீண்டும் மீண்டும் ரக்ஷித்திருந்தும், நாம் சந்தேகிக்கலாமா ? என்னைக் கருவியாய்க் கொண்டு இக்காஞ்சீ மாநகர் முழுவதும் தான் நிறைந்திடவன்றோ அவன் திருவுள்ளம் பற்றியிருப்பது !

அசரீரியாய் அவன் (பரமன்) பேச, அயமேத வேள்வியை ஆரம்பித்தேன் அடியேன். ஆம் ஆரம்பத்திலிருந்தே தடைகள் தான். ஆனால் அவன் துணையால் தடைகள் தூளாகின்றன அன்றோ !

(நமக்கும் இந்த நம்பிக்கை வேண்டும்! எத்தனை பிரச்சினைகள் ஏற்பட்டாலும்; அவன் துணையிருக்கிறான் என்கிற தெளிவு. அது முக்கியம். அவன் நிச்சயமாகக் கைவிட மாட்டான்)

பிரமன் நிதானமாக வார்த்தைகளை உதிர்த்தான். இப்பொழுது என் எதிர்பார்ப்பெல்லாம் அவன் அடுத்து என்னவாகத் தோன்றப் போகிறான்?! அவனை நான் எவ்விதம் துதிக்கப் போகிறேன் என்பது தான் !

விளக்கொளியாய், ஸிம்ஹேந்திரனாய்த் தோன்றியவனுடைய அடுத்த எழிற்கோலமென்ன;  இது தான் என்னுடைய விசாரம் !!

பிரமன் இவ்விதம் பேசவும், அவனுடைய உறுதிப்பாட்டினைக் கொண்டாடியபடி வசிஷ்டர் அவனருகே விரைந்தார் !

அஜனே ! இறைவன் பால் நீ கொண்டிருக்கும் விச்வாஸம் நிச்சயம் உனக்கு நன்மையே செய்யும். உன்னால் எங்களுக்கும் மேன்மையே என்றார் !

மேலும், ஸரஸ்வதி.. என்று தொடங்கி மேலே பேச முயன்றவரைக் கை கூப்பித் தடுத்திட்டான்.

ஆத்திரமுடையவர்களுக்கு புத்தி குறைவு என்பார்கள். இங்கோ புத்தியே (புத்தி -அறிவு) (= ஸரஸ்வதி) கோபித்துக் கொண்டு சென்றுள்ளது ! அவள் நிச்சயமாக சும்மா இருக்க மாட்டாள் !

ஆனால் கவலை வேண்டாம். ஸ்ரீ ஹரி பார்த்துக் கொள்வான். பிரமனின் இவ்வுரையைக் கேட்டு அனைவரும் மயிர்க்கூச்செறிந்தவர்களாய் பரமனுக்குப் பல்லாண்டு பாடினர் !

அங்கு. தன்னாற்றங்கரையில் ஸரஸ்வதி அஸுரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தாள் !

சம்பராஸுரன், பற்பல அஸுரர்கள் சென்றும் வேள்வியைக் குலைக்க முடியவில்லை. அடுத்து..? சட்டென நினைவிற்கு வந்தவளாய், கலையரசி, காளியின் பெயரை உச்சரித்தாள்.

காளியும் ஸரஸ்வதி முன்பு தோன்றினாள். ஆணையிட்டாள் ஆழ்கலையழகி ! ஹே ! காளி! உடனடியாக நீ பலரையும் அழைத்துக் கொண்டு பிரமன் வேள்வி நடத்துமிடம் சென்று, அவ்வேள்வியைக் கெடுப்பாய் என்றாள் !

காளியும் உடனே புறப்பட்டாள் ! பல அஸுரர்கள் புடை சூழ !!

அட்டஹாஸச் சிரிப்புடன், வெளியில் தொங்கவிடப்பட்ட, கூர்மையான கோரைப் பற்கள் இரத்தக் கறையுடன் விளங்கிட, பற்பல ஆயுதங்களைத் தாங்கியபடி , தீ விழி விழித்தபடி , யாக பூமியில் காளி தோன்றிடவும், அதிர்ந்தனர் அனைவரும்..

ஆனால் பிரமன் மட்டும், அக்கணம் காளியின் எதிர்த்திசை நோக்கியபடி புன்னகை தவழக் கைகூப்பியபடி நின்றிருந்தான் !

இம்முறை , பிரச்சினை வந்த பின்பு அல்ல; காளி தோன்றுவதற்குச் சரியாக ஒரு கணம் முன்னதாகவே எம்பெருமான் தோன்றியிருந்தான் !!

அவனைத் தான் பிரமன் கை கூப்பித் தொழுது கொண்டிருந்தான் !

“ஓவி நல்லார் எழுதிய தாமரையன்ன கண்ணும் ஏந்தெழிலாகமும் தோளும் வாயும் அழகியதாம் !”..இவர் யார்?? என்று அனைவரும் வாய் பிளந்து நின்றிருந்தனர் ! யார் அவர் ??

காத்திருப்போம் !!

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

Advertisements

வரதன் வந்த கதை 10-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 10-1

ஆம்..வேளுக்கை ஆளரிக்கு முகுந்த நாயகன் என்றே திருநாமம் ! முகுந்தன் என்றால் முக்தியளிப்பவன் என்று பொருள். ஸம்ஸாரமாகிற பெரும்பிணியிலிருந்து நாம் விடுபட அவனே நமக்கு மருந்து !

இரணியனை வதம் செய்த பிற்பாடு, தான் இளைப்பாறத் தகுந்த இடம் தேடினான் இறைவன். இவ்விடமே (திருவேள் இருக்கை) அவனுக்குப் பிடித்திருந்ததாம். எனவே தான் இன்றளவும் அவன் இங்கு உளன் !

நரஸிம்ஹாவதாரம்..

தானவ சிசுவான (அசுரன் பிள்ளையான) ப்ரஹ்லாதனைக் காப்பாற்ற அவன் கொண்ட கோலமிதென்பது நாமறிந்ததே ! பிரமன் வரங்களைக் (இரணியனுக்கு) கொடுத்துவிட்டான் என்பதற்காக , அவைகளுக்குக் கட்டுப்பட்டு தூணில் இருந்து வெளிப்பட்டு இரணியனை முடித்தான்.

பிரமன் பேச்சு பொய்யாகி விடக்கூடாது என்பதில் தான் எத்தனை அக்கறை !

அவன் அவதாரங்கள் செய்வதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.. தானே கீதையில் அவதாரத்திற்கான காரணங்களைப் பட்டியலிடுகின்றான் கண்ணன்.

ஸாதுக்களை (நல்லவர்களை) ரக்ஷிப்பதற்காகவும், தீயவர்களை ஒடுக்கவும், தர்மத்தை நிலைநாட்டுதற் பொருட்டும் தான் அவதரிப்பதாக அவனே திருவாய் மலர்ந்தருளியுள்ளான்..

தர்மத்தை நிலைநாட்டுதல் என்றால்.. ?

அதனைத் தெரிந்துகொள்ள ஆசையிருப்பின் , தர்மம் என்றால் என்ன என்று அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது !

தர்மம் = திருக் கல்யாண குணங்கள் என்றருளுகிறார் ஸ்ரீ பராசர பட்டர் ..

அப்படியெனில் தன்னுடைய “எண்ணில் பல் குணங்களை” வெளியிடுவதற்காகவே அவன் தோன்றுவது !

“அஜாயமான: பஹுதா விஜாயதே” என்கிறது வேதம் .. (பிறப்பில்லாதவன்; பல படிகளாகப் பிறக்கிறான்) என்பது பொருள் !

அதாவது நம்மைப் போல் கர்மத்தின் காரணமாகவல்லாமல், தன் இச்சையின், மற்றும் நம் பால் கொண்டிருக்கிற அன்பின் காரணமாகப் பிறக்கிறானாம் !

இச்சா க்ருஹீதோபிமதோரு தேஹ : என்கிறது ஸ்ரீ விஷ்ணு புராணம் !

ஓரோர் அவதாரமும் ஓரோர் குணத்தை வெளியிடுவதில் நோக்காயிருக்கும் !

(அவதாரங்களில் எல்லா திருக்குணங்களையும் அவன் பால் நாம் காண முடியுமாயினும், முக்கியமாக ஓரோர் அவதாரத்திலும் ஓரோர் திருக்குணம் ஒளி விடும் !)

ந்ருஸிம்ஹாவதாரத்தில், உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்திருக்கை என்கிற தன்மை வெளிப்படுகின்றதாம் !

அவனுக்கே “அந்தர்யாமி” என்றொரு பெயர் உண்டு ! உள்ளுக்குள்ளே இருந்து கொண்டு ( நம்மை) நியமிப்பவன் என்பது பொருள் !

அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: என்று உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன் அவனே என்கிறது வேதமும் !

இந்தத் திருக் குணத்தை, தன்மையை நமக்கு நன்கு விளக்குவதே நரஸிம்ஹாவதாரம். ப்ரஹ்லாதன் அதனைத்தானே “தூணிலும் இருப்பான் துரும்பிலுமிருப்பான்” என்று சிறு குழந்தையும் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தான்.. !

ஆழ்வாரும் “எங்குமுளன் கண்ணனென்ற மகனைக் காய்ந்து” என்று இவ்வர்த்தத்தை அறுதியிடுகிறார் !

சிங்கப்பிரான் பெருமை நாம் ஆராயுமளவோ ?!

வேள்வியைக் காக்க வந்த வேளுக்கை ஆளரி, அசுரர்களை முடித்துப் பிரமனையும் காத்தான் !

பிரமன் வேள்வியைத் தொடர்ந்தார் !

அசுரர்களால் கலங்கின மதியை உடையவளான கலைவாணீ , வேள்வியைக் குலைக்க வேறோர் திட்டம் தீட்டினாள் !

என்ன திட்டம் அது ?!

அறியக் காத்திருப்போம் !

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

வரதன் வந்த கதை 10-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 9

யாக சாலையை மொத்தமாக அழித்து, பிரமனுடைய வேள்வியைச் சிதைத்து, எம்பெருமானை தரிசித்து விடவேண்டும்; பிரம்ம பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அவனுடைய எண்ணத்தைத் தவிடுபொடியாக்கிட விரும்பின அஸுரர்கள், பெருங்கூட்டமாக யாக பூமியை நெருங்கவும், வழக்கம் போல் அயன் பெருமானைப் பணிந்தான் !

அப்பொழுது பெருத்த சப்தத்துடன், யாக சாலையின் நடுவில் ,மேற்கு நோக்கியபடி நரஸிம்ஹனாய் பகவான் தோன்றி யாகத்தையும் பிரமன் முதலானவர்களையும் காத்தான் என்பதனை,

“ந்ருஸிம்ஹோ யஜ்ஞசாலாயா : மத்யே சைலஸ்ய பச்சிமே |
தத்ரைவாஸீத் மகம் ரக்ஷந் அஸுரேப்ய: ஸமந்தத:” என்கிற புராண ச்லோகத்தினால் நாம் அறியலாம் !!

மெய் சிலிர்த்து நின்றான் பிரமன் !

இமையோர் தலைவா! அழைக்கும் முன்பே, நினைத்த மாத்திரத்திலே ஓடோடி வந்து ரக்ஷிக்கின்றாயே!! இப்பெருமைக்குரியவன் உனையன்றி மற்றொருவருளரோ?

“சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி” எங்கும் பரந்தாற் போலே, இப்படி எங்கும் நிறைந்து எங்களை ரக்ஷிக்கும் இந்நீர்மையை யாரே வருணிக்கவியலும்?!

அதுவும் நரஹரியாக, நரஸிம்ஹனாகவன்றோ தேவரீர் (நீங்கள்) தோன்றியிருக்கிறீர்!!

அவதாரங்களுக்குள்ளே மிகச்சிறந்த அவதாரமாக கொண்டாடப்படும் பெருமை உடைய அவதாரம், இப்படி என் கண்களுக்கு விஷயமானதே ! என்னே என் பாக்கியம்!!
என்று பலவாறாகத் துதித்தான்..

“த்ரீணி ஜகந்த்யகுண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவ:” என்பர் வேதாந்த தேசிகன் !

எம்பெருமானுக்கு வைகுண்டன் (வைகுந்தன்) என்று பெயர் !

வைகுண்ட கண்டீரவன் = பகவத் ஸிம்ஹம் (பகவானாகிற ஸிம்ஹம்) என்று பொருள்!!

நரங்கலந்த சிங்கமாய் அவன் தோன்றியது ப்ரஹ்லாதாழ்வானைக் காக்க மட்டுமன்று; மூவுலகங்களையும் காத்திடவே என்றருளுகிறார் தசாவதார ஸ்தோத்ரத்தில் !!

பிரமன் விஷயத்தில் எத்தனை ஸத்யமான வார்த்தைகளாயிற்று இவைகள் !

வேள்வியைக் காக்க நரஸிம்ஹனாய் வரவேண்டும் என்கிற நிர்ப்பந்தமேதுமில்லையே!!

ஆயினும், யாகத்தைக் காத்து, பின்பு இங்கேயே தங்கி நம் அனைவரையும் ரக்ஷித்திடத் திருவுள்ளம் பற்றியன்றோ அவன் இவ்விதம் தோன்றியது ..

பிரமன், மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்ட சீரிய சிங்கத்தின் அழகில் தன்னையே பறி கொடுத்திருந்தான் !

பிரமன் மட்டுமா!? வசிஷ்டர், மரீசி முதலான ஆசையை வென்றவர்களாக அறியப்பட்டவர்களும் அவனை (பரமனை) ஆசைப்பட்டனர்..

ஸாக்ஷாத் மந்மதனும் மயங்கும் மந்மதனன்றோ இவன் ! அதனாலன்றோ காமன் என்று இவனை அழைக்கிறோம் ! (பகவானுக்கு காமன் என்றொரு பெயர் உண்டு. தமிழில் அதுவே ” வேள் ” என்றாகிறது – வேள் ஆசையோடிருக்குமிடம் வேளிருக்கை!! அதுவே மருவி வேளுக்கை ஆயிற்று !!)

“அழகியான் தானே அரியுருவன் தானே” என்றார் மழிசை வந்த சோதி .

அதனால் தான் பெருமானுக்கு அழகிய சிங்கன் என்று திருநாமமாயிற்று ! ஸஹஸ்ரநாமமும் “நாரஸிம்ஹ வபு: ஸ்ரீமாந்” என்றது ..

ஸ்ரீமாந் – செல்வமுடையவன்.. அழகையே பெருஞ்செல்வமாகவுடையவன் என்றபடி !!

அவதாரங்களில் சில அவதாரங்கள் ம்ருகாவதாரங்கள் (மிருக உருக் கொண்டவை); சில அவதாரங்கள் மனித உருக் கொண்டு தோன்றினான் !

பராசர பட்டர் ரஸமாக ஒரு விஷயம் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்தில் ஸாதிக்கிறார் (பேசுகிறார்) ..

சிலர் பால் பருகுகின்ற பழக்கத்தினைக் கொண்டிருப்பர்கள். சர்க்கரையைத் தொட்டே பார்த்திருக்க மாட்டார்கள்.  சிலருக்கு சர்க்கரை என்றால் ரொம்பப் பிடித்தமானதாக இருக்கும். பால் பருக மாட்டார்கள். பாலோடு சர்க்கரையும், சர்க்கரையோடு பாலும் சேர்த்துப் பருகினால் அவர்கள் இது நாள் வரையிலும் இந்தச்சுவையை அறியாமல் போனோமே என்று வருந்துவர்களாம்..

ம்ருகமாகவே அவன் எடுத்த பிறப்புகள் வெறும் பாலைப்போலே; மனிதனாகவே அவதரித்தவைகள் வெறும் சர்க்கரையைப் போலே..

ஆனால், பாலும் சர்க்கரையும் சேர்ந்தாற் போன்ற (மிருகமும், மனித உருவுமான) ஒரு அவதாரம் உண்டெனின் அஃது நரஸிம்ஹாவதாரம் மட்டுமே !!

எத்தனைச் சுவையான விளக்கம்..

ஸத்யம் விதாதும் நிஜ ப்ருத்ய பாஷிதம் என்கிறபடியே, “உண்மையான தொண்டனான” ப்ரஹ்லாதனுக்காக எத்தனை வேகமாய் ஓடி வந்தான் பகவான்..

பிரமனுக்காகவும். ஆம் அவனுமன்றோ அணுக்கத் தொண்டன். எனவே தான் இங்கும் யஜ்ஞ ரக்ஷகனாய் நரஹரி தோன்றினான்.

“த்ரவந்தி தைத்யா:ப்ரணமந்தி தேவதா:” – எங்கு நரஸிம்ஹன் புகழ் பாடப் படுகின்றதோ அங்கு தீயவர்கள் ஓட்டம் பிடிக்கின்றார்கள் .. தேவதைகள் பாடுகின்றவர்களை வணங்குகின்றார்கள்..

என்னே அத்புத கேஸரியின் மஹிமை !

அநுபவிக்க அநுபவிக்கத் திகட்டாததன்றோ நம் வேளுக்கை நாயகன் வைபவம்..

அவனுக்கே முகுந்த நாயகன் என்கிற பெயரும் உண்டு !!

அப்படியென்றால்..

விரைவில் ..

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

வரதன் வந்த கதை 9

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 8

தீப ப்ரகாசன். இன்றும் காஞ்சியில் திருத்தண்கா என்று கொண்டாடப்படும் திவ்ய தேசத்து எம்பெருமான். குளிர்ச்சியையுடைய சோலைகளுடன் கூடிய இடமாதலால் அப்பெயர் ! வேதாந்த தேசிகன் அவதரித்த க்ஷேத்ரம் இது !!

சம்பராஸுரன், இருட்டினைக் கொண்டு வேள்வியைக் கெடுக்க முற்பட, பிரமனாலே ப்ரார்த்திக்கப்பட்ட எம்பெருமான் ஒரு பேரொளியாகத் தோன்றி, காரிருளை விரட்டி, அனைவரையும் ரக்ஷித்தான்..

ஒளியாக வந்து ரக்ஷித்த பெருமானின் பெருங்கருணையை பிரமன் முதலான அனைவரும் கொண்டாடினர் !

“ப்ரகாசிதம் ஜகத்ஸர்வம் யத் தீபாபேன விஷ்ணுநா |
தஸ்மாத் தீப ப்ரகாசாக்யாம் லபதே புருஷோத்தம:” என்கிறது புராணம்..

தன்னுடைய ஒப்பற்ற ஒளியினாலே உலகனைத்தையும் ப்ரகாசிக்கச் செய்தவன் ஆனமையால் இவன் தீப ப்ரகாசன் என்று பெயர் பெற்றானாம் !

பகவான் ஒரு மிகப் பெரிய தீப்பந்தம் போன்ற வடிவு கொண்டிருந்தாலும் , யாக சாலைக்கோ, பிரமன் தொடக்கமானவர்களுக்கோ எந்த இன்னலும் தராமல், எதனையும் எரித்துச் சாம்பலாக்காமல் ஒளி மட்டும் தருபவன் ஆனானாம் ..

“ந ததாஹ ததா சாலாம் ததத்புதமிவாபவத்”  என்று புராணம் விவரிக்கிறது !!

எம்பெருமானுடைய தேஜஸ்ஸு, ஒளியிற்சிறந்த மற்ற எல்லா பதார்த்தங்களையும் (பொருள்களையும்) வெல்ல வல்லது !

அவனுக்கு முன்னே சூரியனோ, சந்திரனோ, மின்னல்களோ, நக்ஷத்ரக் கூட்டங்களோ அல்லது அக்னி தான் ஒளிவிடக் கூடுமா ?!

ஒளியை உடையவன் என்பதனாலுமன்றோ அவன் “தேவன்” எனப்படுகின்றான் !

கீதாசார்யனான கண்ணனும் ” திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா| யதி பாஸ்ஸத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ்தஸ்ய மஹாத்மந ” என்றான் !!

(கணக்கற்ற ஸூர்யர்கள், ஒரே சமயத்தில், ஆகாயத்தில் தோன்றினால் அவைகள் அந்த மஹாபுருஷனுடைய ஒளிக்கு ஒப்பாகக் கூடும்)

உபனிஷத்தும் அவனை பாரூப: (ஒளிமயமாயிருப்பவன்) என்கிறது !!

“கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன்” என்றும்” சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு” என்றும் ஆழ்வார்கள் இறைவனைப் போற்றுகின்றனர் !!

விளக்கொளி என்றும் தீபப்ரகாசன் என்றும் போற்றப்படுகின்ற இவ்வெம்பெருமானின் பெருமைகளை “சரணாகதி தீபிகையின்” வாயிலாக வெளியிடுகின்றார் தேசிகன் ..

சோதி வெள்ளமாய்த் தோன்றிய இறைவனை, பல வகைகளில் துதித்தான் பிரமன். அவனுடைய தோத்திரங்களால் மகிழ்ந்த பகவானும் பிரமனுக்கு நல் ஆசிகளை வழங்கினான் !! அஸுரர்களின் திட்டம் தவிடு பொடியானது.

பல முறை தோற்றாலும் அஸுரர்கள் திரும்பத் திரும்ப வரத் தானே செய்வர்கள். வேறோர் வகையில் வேள்விக்கு பங்கம் விளைவிக்க ப்ரயத்னம் செய்தார்கள்..

யாக சாலைக்குப் பெருங்கூட்டமாகப் படையெடுத்து அனைத்தையும் நொடிப்பொழுதில் அழித்திட எண்ணங்கொண்டு அஸுரர்கள் திரும்பவும் திரண்டனர் !!

தீப ப்ரகாசன் தோன்றித் துயர் தீர்த்திருக்க, ஈதென்ன மீண்டும் பிரச்சினை என்று பிரமன் அஞ்சினாலும், அவனுடைய இறை நம்பிக்கை அவனைத் தேற்றியது !

பெரும்படையுடன் ஓடி வரும் அஸுரர் குழாம் கண்டு பிரமன் தன்னுள் சொல்லிக் கொண்டது இது தான்..

இதுவும் கடந்து போகும் .. அவனருளால்..

அப்பொழுது யாகசாலையிலிருந்து பெருத்த சப்தத்துடன் ஏதோவொன்று மேலே கிளம்பியது !

என்ன அது ??

அடுத்த பகுதியில் …

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வரதன் வந்த கதை 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 7

வசிட்டன் சொன்ன காரணம் கேட்டு நான்முகன் செய்வதறியாது திகைத்தான்..
வேள்விக்காக நகரத்தைத் தயார் செய்து, அலங்கரித்து, அனைவருக்கும் அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டு யாவும் தயார் என்ற நிலையில், பிரமன் வாடிப்போகுமளவிற்கு அப்படி வசிட்டன் சொன்னது தான் என்ன?

ஒரு விஷயத்தைப் பிரமன் அலட்சியப்படுத்தினான் அல்லது பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி மறந்தே போனான் என்று தான் சொல்ல வேண்டும்!

அவ்விஷயம் நினைவிற்கு வரவும் வசிட்டன் , நான்முகனுக்கு அதனை உணர்த்தினார் ..

உணர்த்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் தான் அது ! அதனால் தான் வசிட்டர் சொல்லவும் (பிரமன்) திகைப்புக்குள்ளானான் !

இல்லாளுடன் இணைந்தன்றோ வேள்வி செய்ய வேண்டும் ! அவளோ தன்னாற்றின் கரையில் தவமியற்றச் சென்று விட்டாள் !!

ஸஹ தர்ம சாரிணியான (கணவன் உடனிருந்து , அவன் அறங்களை அநுட்டிக்க உதவுமவள்) அவளில்லாமல் வேள்வி எப்படி சாத்தியம் ?

இது தான் வசிட்டன் பேசியது !

நான்முகன் சிறிது நேரம் சிந்தித்து விட்டு கூடியிருந்தவர்களிடம் பேசலானான் !

இத்தனை பெரிய வேள்வியை நான் செய்யப் போகிறேன் ! இவ்விஷயம் ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் தெரியும் ! கோபமுற்றுத் தவமியற்றச் சென்றிருக்கும் ஸரஸ்வதியும் அறிந்திருப்பாள் !

எனவே அவளாகவே வரமாட்டாளா? என்று பிரமன் வினவவும் சபை சலனமற்று இருந்தது !

பிரமனின் தான்மை (ego) அவளை அழைக்க மறுத்தது ! புரிந்து கொண்டார் வசிட்டர் .. தந்தைக்கு உபதேசம் செய்தார் தநயன். தான் ஸரஸ்வதியை, பிரமன் அழைத்து வரச் சொன்னார் என்று சொல்லி அழைத்து வர முயல்வதாக உறுதியளித்துப் புறப்பட்டார் !

வசிட்டர் தன்னை நாடி வருகிறார் என்று ஸரஸ்வதி அறிந்திருந்தாளோ என்னவோ; வரட்டும் வசிட்டன். நம் குறைகளைச் சொல்லிடுவோம் என்று காத்திருந்தாள் !

ஆனால், நன்மைகளை விரும்பிடாத அஸுர வர்க்கத்தினர் ஸரஸ்வதி யாகத்திற்குச் சென்று விடுவளோ என்றஞ்சினர்! அவள் சென்றிடவே கூடாதென்பதில் உறுதியாக இருந்தனர்! ஆம்! யாகம் நன்கு நடைபெற்று விட்டால், தேவர்கள் -ரிஷி முனிவர்கள் மற்றும் பிரமன் – ப்ருஹஸ்பதி பிரச்சினைகள் தீர்ந்து விடும். அது அஸுரர்களான தங்கள் நலனிற்கு உகந்ததல்ல. எனவே எப்பாடு பட்டேனும் யாகத்தைத் தடுப்பது என்கிற முனைப்பில் ஈடுபட்டிருந்தனர் !!

வசிட்டர் ஸரஸ்வதியை (அழைக்க) அணுகினார் ! அவளை விழுந்து வணங்கித் தான் வந்த காரியத்தை விண்ணப்பித்தார் !

ஊடலால் கலங்கின ஸரஸ்வதி போகலாமா வேண்டாமா என்று சிந்தித்திருந்தவள், தீர்மானமாக நான் வரமாட்டேன் என்றுரைத்தாள் !

வசிட்டர் எத்தனையோ சொல்லியும், கெஞ்சியும் கூட அவள் மனம் மாறவில்லை!

தலையைத் தொங்கவிட்ட படி வசிட்டர் பிரமனிடம் வந்து சேர்ந்து நடந்தவற்றை எடுத்துரைத்தார் !

பிரமன் தனது கண்களை உருட்டியபடி, சரி ! அவள் (ஸரஸ்வதி) வர மாட்டேன் என்கிறாள். வேள்வியோ செய்தே ஆக வேண்டிய ஒன்று !

கவலையில்லை ! ஸாவித்ரீ முதலான மனைவிகளைக் கொண்டு வேள்வியைத் தொடங்கிடுவோம் என்று தீர்மானித்துத் தொடங்கவும் செய்தார் !

ஸரஸ்வதி வரவில்லையென்றால் வேள்வி தடைப்பட்டுப் போகும் என்றெண்ணியிருந்த அஸுரர்கள் ஏமாற்றத்திற்குள்ளாயினர் !

பிரமன் மற்ற மனைவிகளின் துணையோடு யாகத்தினை ஆரம்பிப்பார் என்று அவர்கள் நினைத்தே பார்க்கவில்லை !

ஒன்றும் குறையில்லை.. ஸரஸ்வதியைக் கொண்டே ஏதேனும் க்ருத்ரிமம் செய்வோம் என்று முடிவு செய்து, கள்ள வேடம் பூண்டு ஸரஸ்வதியை அணுகினர் அஸுரர்கள் ! இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஸரஸ்வதியை மூளைச் சலவை செய்தனர் .. ஸாவித்ரீ முதலான மனைவியர்க்கு முக்யத்துவம் தந்து நான்முகன் உனக்கு அநீதி இழைத்தனன் என்று அவ்வஸுரர்கள் சொல்வதை மெய்யென்றே எண்ணினாள் மங்கைக் கலைவாணியும் ! ஏதேனும் ஒரு உபாயம் செய்து வேள்வியைத் தடுக்க முனைந்தாள் !

அஸுரர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர். சம்பராஸுரனைக் கொண்டு வேள்வியைக் குலைக்கலாம் என்று குதூகலித்தனர் !

சம்பராஸுரன் மிகுந்த சந்தோஷத்துடன் இசைந்தான் ! கண்ணுக்குப் புலனாகாமல் விசித்திரமான வழிமுறையில் வேள்வியைக் குலைக்கத் திட்டமிட்டான் !

அதென்ன விசித்திரமான திட்டம் !! ஆம் !! காரிருள் (கும்மிருட்டு) ஒன்றை உண்டாக்கி யாக சாலையில் , ஒரு பொருளும் தெரியாத படிச் செய்தான் !

பொருள்கள் மட்டுமா? பிரமனுக்கோ பிறர்க்கோ ஒருவரையொருவர் பார்த்தறிந்து கொள்ள முடியாத நிலை (இருட்டினால்) ஏற்பட்டது !!

என்ன செய்வதென்றறியாத நிலையில் , பிரமன் “மஹத்யாபதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்ய: பகவான் ஹரி:” (பெரிய ஆபத்து ஏற்படும்பொழுது ஸ்ரீஹரியைச் சிந்திக்க வேண்டும்) என்று சாஸ்த்ரங்கள் சொன்னபடி, இருகரம் குவித்து இறைவனை இறைஞ்சினான் !!

ஆபத் ஸகன் ஆயிற்றே பகவான் ! வாராதிருப்பானோ ?!

அப்பொழுது வார்த்தைகளால் வருணிக்கமுடியாத ஒரு பேரொளி தோன்றியது. ஒளி தோன்றிடவும், அச்சத்தை உண்டு பண்ணின இருட்டு விலகத் தொடங்கியது!!

ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்ற பிரமன் மெதுவாகத் தன்னை ஆச்வாஸபடுத்திக் கொண்டு, அழுத்தமாக ,அனைவருக்கும் கேட்கும்படியாக ஒரு சொல்லினை உச்சரித்தான் !!

“தீபப்ரகாசன்” என்பதே அது !!

யார் அவன்..

விரைவில் …

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வரதன் வந்த கதை 7

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 6

நான்முகன் அழைத்தவுடனே விச்வகர்மா விரைந்து வந்தான். ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தை அலங்கரிக்கும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட, அவனும் தன் பேறு இது என்று ஏற்றுக் கொண்டான் !

பிரமன் விவரிக்கத் தொடங்கினார் ! ஸகல வசதிகளுடன் பற்பல மாடமாளிகைகள் கட்டப்பட வேண்டும் .. வேள்வியைத் தரிசிக்க வரும் விருந்தினர்க்கு எவ்வகையிலும் சிரமங்கள் ஏற்படாத படி , ஸௌகரியங்கள் பல செய்து செய்து தரவும் ஆணையிட்டார்.

விச்வகர்மா சன்னமான குரலில் கேட்டான்.. நான்முகனே ! இவ்வேள்விக்கு எத்தனை பேர் வரக்கூடும்? தெரிந்து கொள்ளலாமா?

சிரித்தபடி பதிலுரைத்தான் பிதாமஹன் (பிரமன்). விச்வகர்மாவே நன்கு கேள் !!

வேள்விகளில் சிறந்ததாய், ஸகல பாபங்களையும் போக்குவதாய், வைஷ்ணவமானதாய் (ப்ரதானமாக, நேரடியாக பரமாத்மாவையே பூசிப்பதாய்) விளங்கக் கூடியது இந்த அச்வமேதம் !

இந்த க்ஷேத்ரமும் (ஸத்ய வ்ரத க்ஷேத்ரம்) நாம் தொடங்கிய நற்காரியங்கள் தடையின்றி நிறைவேறுமிடமாய், பாபங்களிலிருந்து நமக்கு முக்தி அளிப்பதாய் உயர்ந்த ஹஸ்திகிரியை தன்னகத்தே கொண்டதாய் விளங்கும் உன்னத இடமாகும் !!

வேள்வியும் சிறந்தது. வேள்வி நடை பெறுமிடமும் சிறந்தது. எனவே ஆசையுடன் பலரும் வருவர்கள். இத்தகு வேள்வியை தரிசிப்பதே புண்யமன்றோ !!

தவிரவும் , வேள்வி நடைபெறுமிடத்திற்கு , நமக்கு அழைப்பு வந்தால் போகலாம் என்று காத்திருக்க வேண்டியதில்லை. நம்மை அழைக்காமல் விட்டாலும் நாம் வேள்வியைக் காணப் போக வேண்டும் சாஸ்த்ரமும் சொல்லியிருப்பதால் ஆஸ்திகர்கள் (வேத வேதாந்தங்களில் நம்பிக்கையுடையவர்கள்)
தாங்களாகவே வருவார்கள்..

தேவர்கள், மனிதர்கள் , இன்ன பிறர்களும் ஆசையுடன் வரக்கூடும்.. எனவே ஏற்பாடுகள் கனகச்சிதமாக இருக்க வேண்டும். யாக சாலைகள், யாக வேதி (யாகம் செய்யப் பாங்கான மேடை), பாக சாலைகள் (சமையலறைகள்), விருந்துண்ணுமிடங்கள், கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கங்கள், விருந்தினர் விடுதிகள், என்று யாவும் சிறந்த முறையில், மிக நேர்த்தியாக, அழகாக அமைக்கப்பட வேண்டும் என்று பிரமன் சொல்லவும், அவ்விதமே செய்வதாக விச்வகர்மா பதிலுரைத்தனன்.

அவர் சொன்னபடி அனைத்தையும் விரைவாகச் செய்து முடித்தான் விச்வகர்மா !

எல்லா வகையாலும் உயர்ந்த ஹஸ்திகிரியையே உத்தர வேதியாக்கினான் விச்வகர்மா ! நம் வரதன் உதிக்கப் போகும் இடம் இதுவேயாம் !

(அக்னிஹோத்ரம் செய்வதற்கு ஆஹவனீயம், கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி ஆகிய மூன்று அக்னிகள் உண்டு; இவைகளுக்கு முன்பிருக்கிற இடத்திற்கு மஹாவேதி என்று பெயர். ஸதஸ், ஹவிர்தானம் என்னுமிடங்களும் அங்கு உண்டு.  அதற்கு முன்பாக அக்னியை ஸ்தாபனம் (உண்டாக்கி) பண்ணி வேள்வி செய்வார்கள்; அந்த இடத்திற்கே உத்தர வேதி என்று பெயர்)

அனைத்தையும் நன்கு வடிவமைத்து, ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தை ஒரு ராஜதானி (தலை நகரம்) போலே சமைத்திட்டான் (உருவாக்கினான்) விச்வகர்மா !

நன்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஊரினைப் பார்வையிட வருமாறு பிரமனுக்கு அவன் (விச்வகர்மா) அழைப்பு விடுக்கவும், அயனும் ஆசையுடன் வந்தான் ! வந்தவன் தன் மனத்தினைப் பறி கொடுத்தவனாய், இந்த க்ஷேத்ரத்தினை, விச்வ கர்மாவின் கை வண்ணத்தினை ச்லாகிக்கத் தொடங்கினான் !!

நாநா விதமான (பல்வகை) ரத்நங்களாலும், ஸ்வர்ணம் முதலானவைகளைக் கொண்டு, சிறந்த சில்பிகளைக் கொண்டு பக்குவமாக அமைக்கப்பட்டிருக்கிற நகரத்தின் மாட மாளிகைகளின் அழகு, பிரமனையும் ஏனையோரையும் வியப்பிலாழ்த்தியது.

இனிமேல் தான் இந்த க்ஷேத்ரம் “காஞ்சீ” என்று ப்ரஸித்தமான பெயரைச் சுமக்கும் என்று புன்னகை தவழ , பெருமிதத்துடன் பேசினான் அயன் !

ஏன்? ஏற்கெனவே காஞ்சீ என்ற பெயருளதே!! “பூமிக்கு இடையாபரணம் போன்ற ஊர்” என்கிற பொருளிலே முன்னமேயே இந்நகரத்துக்கு காஞ்சீ என்ற பெயர் கொடுக்கப் பட்டுள்ளதே.

பின்பு ஏதோ இப்போது தான் புதியதாக இவ்வூருக்கு இப்பெயர் சூட்டுமாப் போலே நான்முகனுக்கு ஏன் இத்தனை ஆநந்தம்..

பலரும் அங்கே இப்படித் தான் யோசித்த படி புருவங்களை உயர்த்தலாயினர் !!

நான்முகன் பேசினான் !!

எனக்கு “க” என்றொரு பெயர் உண்டு ! க என்கிற என்னால் எவ்விடத்தில் ஸ்ரீ ஹரி பூசிக்கப்படுகின்றானோ அவ்விடத்திற்கு “காஞ்சீ” என்று பெயர் ! இவ்வூர் புண்ணியங்களை நன்கு வளர்த்திடும் திறன் பெற்றது.. என்று அவன் சொல்லவும் , வானம் பூச்சொரிந்து நம் நகரை (காஞ்சியை) நனைத்தது..

பிரமன் முகத்தில் ஆநந்தத்திற்குக் குறைவில்லை.. ஆனால் அவர் மைந்தன் வசிட்டர் முகம் வாடிக் காணப்பட்டார்..

காரணம் வினவினான் வசிட்டரை..

அவர் சொன்ன பதில் நான்முகன் முகத்தையும் வாடச் செய்தது ..

என்ன காரணம்..

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

வரதன் வந்த கதை 6

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 5

ஸேதுர் யஜ்ஞே ஸகல ஜகதாம் ஏக ஸேது : ஸ தேவ : ||

நிகரில் புகழுடைத் தொண்டை மண்டலத்தின் மேன்மைகள் …

பேரருளாளன் பெருமையை, திருவத்தி மாமலையின் ஏற்றங்களை “ப்ரஹ்மாண்ட புராணம் ” என்கிற நூல் நமக்கு எடுத்துரைக்கிறது ..

நாரதரும் ப்ருகு முனிவரும் பேசிக் கொள்வதாய், (ஒரு உரையாடலாக) ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்ம்யம் அப்புராணத்தில் அமைந்துள்ளது !

ப்ருகு வேண்டினபடியால், பிரமன் தனக்கு உபதேசித்த ஸத்ய வ்ரத க்ஷேத்ர மாஹாத்ம்யத்தை நாரதர் (ப்ருகுவிற்குச்) சொல்லலானார் .

துண்டீர மண்டலமென்றும் தொண்டை மண்டலமென்றும் வழங்கப்படுகிற இந்நிலப் பகுதி,  பூமியின் மற்ற பாகங்களை விடப் பல வகைகளில் சிறப்புடையது !

அதனால் தான் அசரீரி, பிரமனை பூமியின் இப்பகுதிக்கு விரைந்து செல்ல ஆணையிட்டது ! ஆம் !! “ஸத்ய வ்ரத க்ஷேத்ரம்” அது இங்கு தானே உள்ளது !

நம்முடைய விரதம் ..அதாவது நாம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தொடங்கும் நற்காரியங்கள் தங்கு தடையின்றி வெற்றிகரமாக நிறைவேறுமிடமாதலால் இவ்விடம் ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் என்று கொண்டாடப்படுகின்றது !

பூமிப் பிராட்டியின் இடைக்கு ஒட்டியாணமிட்டது போல் விளங்கும் ஊராக அறியப்படும் பெருமை காரணமாக “காஞ்சீ” என்றே புகழப்படும் நிலம் இது !

ஆம் ! காஞ்சீ என்று மேகலைக்கும் (இடை ஆபரணத்திற்கும்) பெயர் !

ஒரு பெண்ணை வருணிக்கும் புலவர்கள் பெரும்பாலும் அவள் இடையையன்றோ கவி பாடுவர் ! அது போல் , பூமி இத்தனை சிறந்து அழகாய் காட்சி அளித்திடக் காரணம் அவள் இடை, இடை ஆபரணம் போல விளங்கும் காஞ்சியேயாம் !

காஞ்சியில் பிறந்தால் முக்தி ; காசியில் மரித்தால் முக்தி என்னும் சொற்றொடர் இவ்வூரின் பெருமையை பாமரர்க்கும் எளிதில் உணர்த்திடும் !

அயோத்யா, (வட) மதுரா , ஹரித்வாரம், காசீ, காஞ்சீ, உஜ்ஜயினீ, த்வாரகை ஆகிய க்ஷேத்ரங்களை “முக்தி தரும் நகரங்கள்” என்று அழைப்பர்கள் !! தென்னாட்டில் இருந்து இப்பட்டியலில் இடம் பெற்ற பெருமை காஞ்சிக்கே என்பதனை நினைவில் கொள்க !

இன்னொன்று; பூமிக்கு இடை ஆபரணம் போலே என்று (காஞ்சீ) சொல்லப்பட்டது போல், மற்றெந்த முக்தி க்ஷேத்ரங்களும் பூமியோடு தொடர்பு படுத்திப் பேசப்படவில்லை / கொண்டாடப் படவில்லை என்பதும் காஞ்சிக்குத் தனிப் பெருமையாம் !!

ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் ஒன்று என்கிற தன்னேற்றமும் காஞ்சிக்கு உண்டு ! (ஒருவரும் ப்ரார்த்திக்காமல், தானே உகந்து பகவான் நிலை கொள்ளும் இடங்களை ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள் என்பர்)

“ஸ்வயமுதயிந:” என்று தயா சதகம் மேலே சொன்ன கருத்தினை அறிவிக்கின்றது !!

பண்ணிய நல் விரதமெல்லாம் பலிக்க , பாரதத்திற் படிந்திட்ட பங்கயத்தோனை (பிரமனை) ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் செல் என்று அசரீரி பணிக்கவும், சடக்கெனப் புறப்பட்டான் பிரமன் !

அப்பொழுதே யாகம் செய்து இறைவனைக் கண்டு விட்டாற் போல் குதூகலித்தான் கமலோத்பவன் (பிரமன்) !!!!

வேதாந்த தேசிகன் “ஹம்ஸ ஸந்தேசமென்றொரு நூல்” அருளியுள்ளார் ..
ஸீதையின் பிரிவால் வாடும் இராமன் ஓர் அன்னப் பறவையை அவளிடம் தூது விடுவதாக அமைந்திருக்கிற அற்புதக் காவியமிது !

அன்னப்பறவைக்கு, எப்படிச் செல்ல வேண்டும்; எங்கெங்கெல்லாம் செல்ல வேண்டும்; தரிசிக்க வேண்டியவைகள் என்னென்ன என்று அனைத்தையும் விவரித்துச் சொல்லுகிறான் இராகவன் !!

போகும் வழியில் , தொண்டை மண்டலம் புகுந்து ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் செல்லாமல் வாராதே என்று அன்புக் கட்டளையிடுகின்றான் !!

‘துண்டீராக்யம் ததநு மஹிதம் மண்டலம் வீக்ஷமாண: க்ஷேத்ரம் யாயா: |
க்ஷபித துரிதம் தத்ர ஸத்ய வ்ரதாக்யம் ||’

என்று புகழ்கின்றான் இவ்வூரினை !!

ஸத்ய வ்ரத க்ஷேத்ரமென்பது பாபங்களையெல்லாம் விரைவாகப் போக்கும் திவ்ய பூமி !

மேலும் எம்பெருமானின் தொடர்ச்சியான கருணைப் பார்வைக்கு இலக்கான ஒரே ஊர் காஞ்சீ மட்டுமே என்றும் ஹம்ஸ ஸந்தேசம் இவ்வூரினைக் கொண்டாடுகின்றது !!

இன்னொன்றும் வெகு ஸ்வாரஸ்யமாக, தனக்கே உரித்தான பாணியில் “கவி தார்க்கிக ஸிம்ஹம்” தேசிகன், அங்கு அருளிச்செய்கிறார் !

ஸீதையை நாடிச் செல்லும் அன்னப் பறவை, வெகு தூரம் செல்ல வேண்டியிருப்பதால் களைத்துப் போக வாய்ப்புண்டு ! வியர்வையினால் உண்டாகும் சிரமங்களும் அன்னத்தை பாதிப்பிற்குள்ளாக்கக் கூடும் !

ஆனால் அன்னம் அது குறித்து அஞ்ச வேண்டியதில்லையாம் !! ஏனெனில் காஞ்சியின் காற்று அன்னத்தின் களைப்பை அநாயாஸமாகப் போக்கிவிடுமாம் !!

“மந்தாதூதாத் ததநு மஹிதோ நிஸ்ஸ்ருதச் சூதஷண்டாத்;
பார்ச்வே தஸ்யா: பசுபதிசிரச் சந்த்ர நீஹார வாஹீ |
தூராத் ப்ராப்தம் ப்ரியஸகமிவ த்வாம் உபைஷ்யதி அவச்யம்;
கம்பாபாத : கமல வநிகா காமுகோ கந்தவாஹ:||”

அன்னமே; காஞ்சியில் மாஞ்சோலைகள் நிறைய உண்டு ! காற்று வீசுவதால் மாமரங்கள் அசைய, அவற்றின் (மாங்கனி, பூ, இலை) நறுமணங்களைச் சுமந்து கொண்டு, காற்று அங்கிருந்து நகரத்து மக்களை மகிழ்விக்கப் புறப்பட்டுச் செல்லும் !

அது மட்டுமா?!! அக்காற்று தன்னுடைய குளிர்ச்சியை அதிகரிக்க மற்றொரு உபாயத்தை (வழியைக்) கைக் கொள்ளுமாம்.. மாந்தோப்புகளிலிருந்து புறப்பட்டு நகரத்திற்கு வரும் போது இங்கு கோயில் கொண்டிருக்கும் ஏகாம்பரன் (பரம சிவன்) தலையைத் தடவிக் கொண்டு கிளம்புமாம்..

காற்று தன் குளிர்ச்சியைக் கூட்ட, சிவனின் சிரஸ்ஸை தடவிப் பயன் உண்டோ என்கிற ஐயம் எழுவது இயற்கை !

சிவன் தன் தலையில் சந்திரப் பிறை சூடியிருக்கின்றான் .. சந்திரன் குளிர்ச்சிக்குப் ( தண்ணளி) பெயர் போனவன் .. அப் பிறையில் தோய்ந்து காற்று தன்னை இன்னமும் குளுமையூட்டிக் கொள்ளுமாம் !! இத்தனை போதாதென்று தாமரைக் காட்டைத் தழுவி , அதன் மணத்தையும் சுமந்து கொண்டு, ஒரு தோழனை உபசரிக்குமாப் போலே அன்னமே காஞ்சியின் காற்று உன்னையும் உபசரிக்கும் !!

அஞ்சாதே !! என்று பெருமாள் (இராமன்) அன்னத்தைப் பார்த்துச் சொல்லுவதாக ஸாதிக்கிறார் தேசிகன் !!

தற்சமயம் கடும் கோடை வெப்பத்தால் துவண்டு அவ் வருணனை (மழையை) எதிர்பார்த்திருக்கும் நமக்கு இவ் வருணனை (மேலே கண்ட ச்லோகம் மற்றும் அதன் பொருள்) சற்றேனும் ஆறுதலன்றோ !

(அவ் வருணனை,  இவ் வருணனை என்றவிடங்களில் சிலேடைச் சுவை ரசித்திடுக!)

இப்படிப் பரம்பொருளான இராமனே , இந்நகரைப் பல படிகளாக (பல வகைகளில்) கொண்டாடியிருக்கின்றான் எனில்; பிரமன் மகிழ்ச்சியுடன் இந்நகரை நோக்கி ஓடி வரத் தயக்கம் தான் உண்டோ ?!

மண் மகளுக்கு அலங்காரமெனத் திகழும் மதிள் கச்சியை மகிழ்வுடனே வேகமாக அடைந்திட்டான் நான்முகனும் !!

வரதனாய் இறைவன் வருவதற்கு முன்பே அவன் அருட்பார்வை பதிந்திட்ட அத்திகிரியைக் கண்டான் அயன் !

எம்பெருமானுடைய சக்ராயுதமே அத்திகிரி ஆயிற்றோ என்று வியந்தான் பிரமன்.. ஆம் சக்ரம் எதிரிகளைப் பூண்டோடு அழிக்கும் !

இம்மலை நம் வினைத் தொடரை (பாபங்களை) வேரோடு அறுக்கும் !!

மலைக்கு இனியனாய் நின்ற பெருமானை மனக்கண்ணில் நிறுத்தி , மலையையே கரம் குவித்துப் போற்றலானான் நாபீஜன்மன் !!

உடனடியாக வேள்விக்குத் தன்னையும், ஊரையும் தயார்படுத்த எண்ணியவன் சட்டென ஒரு பெயரை உச்சரித்தான் ..

ஆம் .. விச்வகர்மா தான் அவன்..

அவன் வருகைக்குக் காத்திருந்தான் பிரமன்..நாமும் காத்திருப்போம் !!

 

******************************************************************************

விட்டில் பூச்சிகள் விளக்கினில் விழுந்து மடிவது அனைவருமறிந்ததே !!

விளக்கினை ஆரேனும் குறை கூற வழியுண்டோ ??

விளக்கொளியில் விழுந்து சாகும் விட்டில் பூச்சிகள் .. ( நிஜ வாழ்க்கையிலும் பல மூடர்களுக்குப் பொருந்தும் ) !!

வரதன் வந்த கதையில் .. விரைவில்..

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org