க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

“அஜாயமான: பஹுதா விஜாயதே” (பிறப்பற்ற பகவான் பல பிறவிகளை எடுக்கிறான்) என்று வேதமும், “பஹூனிமே வ்யதீதானி ஜந்மானி” (எனக்கும் பல பிறவிகள் ஏற்பட்டுள்ளன) என்று வேதத்தால் அறியப்படும் எம்பெருமான் தானும், “சன்மம் பல பல செய்து” என்று வேத தாத்பர்யத்தை அறிந்த வைதிகோத்தமரான நம்மாழ்வாரும் எம்பெருமான் பல அவதாரங்களை எடுக்கிறான் என்பதைக் காட்டியுள்ளார்கள். நாம் பிறந்து பிறந்து துன்பப்படுவது நம்முடைய கர்மங்களாலே. ஆனால் எம்பெருமான் தன்னுடைய கருணையினாலே, நம்மை உயர்த்துவதற்காகப் பிறப்பதனால், அவனுக்கு ஒவ்வொரு பிறவியிலும் ஒளி கூடுகிறது என்பது சாஸ்த்ரமும் ஆழ்வார்களும் காட்டியுள்ள உயர்ந்த விஷயம்.

இப்படிப்பட்ட அவதாரங்களில் பத்து அவதாரங்கள் ப்ரதானமாகக் கொண்டாடப்படுகின்றன. திருமங்கை ஆழ்வார் இதை “மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமோதரனுமாய்க் கற்கியும் ஆனான்” என்று அற்புதமாக ஒரே வாக்யத்தில் காட்டியுள்ளார். இவற்றிலும், ஸ்ரீ ராமாவதாரத்துக்கும் க்ருஷ்ணாவதாரத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் பெரியோர்களாலே சொல்லப்படுகிறது. அதிலும் க்ருஷ்ணாவதாரம் வெகு ஸமீபத்திலே, அதாவது த்வாபர யுகத்தின் இறுதியிலே நடந்ததால், ரிஷிகளும், ஆழ்வார்களும், ஆசார்யர்களும் மிகவும் ஈடுபட்டு இருந்தாரகள். அதிலும் கண்ணன் எம்பெருமானின் சிறு வயது லீலைகளில் ஈடுபடாதவர்கள் எவருமில்லை. கல் நெஞ்சுக்காரர்களையும் உருக்கக் கூடிய அற்புதமான பல செயல்களை எம்பெருமான் செய்தான்.

என்னுடைய பிறப்பையும் லீலைகளையும் உண்மையாக அறிந்தவர்கள் என்னையே அடைவார்கள்” என்று கண்ணன் எம்பெருமான் தானே ஸ்ரீ பகவத் கீதையில் அருளியுள்ளான். ஆகையாலே க்ருஷ்ணாவதாரத்தை, ஸ்ரீபாகவதத்தில் தசம ஸ்கந்தத்தில் (பத்தாம் காண்டத்தில்) காட்டிய க்ரமத்தில், நம் பூர்வர்கள் காட்டியுள்ள பல முக்கியமான தாத்பர்ய அர்த்தங்களோடு சேர்த்து, எளிய நடையில், வரும் நாள்களில் அனுபவிக்கலாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org