Monthly Archives: October 2017

தத்வ த்ரயம் – ஈச்வரன் – இறைவன் யார்?

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

தத்வ த்ரயம்

<< அசித் – வஸ்து ஆவது எது?

இதுவரை நாம் சித் அசித் இரண்டின் இயல்புகளைக் கண்டோம்.

இனி பூர்வர்கள் உபதேசித்தபடி ஈச்வர தத்வம் அறிவோம்  

சித் அசித் ஈச்வர தத்துவங்களை அறியும் நம் பயணத்தை, பிள்ளை லோகாசார்யரின் “தத்வத்ரயம்”நூலின் வழி, மாமுனிகள் வ்யாக்யானத் துணையோடு தொடர்வோம்.

அறிமுகம்

முதலில் எம்பெருமானின் ஸ்வரூபம் (தனித்த இயல்பு) விரிவாகச் சொல்லப்படுகிறது. அவன் மற்ற எல்லாப் பொருள்களினின்றும் வேறுபட்டிருக்கிறான் என்பது நிரூபிக்கப்படுகிறது.

ஸ்வரூபம் – உண்மை இயல்பு

 • இயல்பாகவே ஈச்வரன்
  • ஒரு தாழ்ந்த குணத்துக்கும் இருப்பிடமல்லன், எல்லா நல்ல இயல்புகளும் உறைவிடம்
  • அவன்
   • காலம் – நிகழ், இறந்த, எதிர் காலங்களால் கட்டுப்படாதவன்
   • இடம் – பரமபத மற்றும் ஸம்ஸார எல்லைகளால் கட்டுப்படாதவன். எங்கும் நிறைந்திருப்பவன்.
   • எல்லாப் பொருள்களுக்கும் ப்ரகாரியாக (ஆத்மாவாக) இருப்பவன்
  • முழு ஞானம், ஆனந்தத்துக்கு உறைவிடம் ஆனவன்
  • ஞானம் பலம் போன்ற எண்ணிறந்த கல்யாண குணங்களுக்கு இருப்பிடமானவன்
  • ச்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் யாவும் நடத்துபவன்
  • பகவத் கீதை 7.16ல் சொன்னதுபோல் நால்வகைப் பட்ட அடியார்களுக்குப் புகலாய் இருப்பவன்
   • ஆர்த்தன் – துன்புற்றவன்
   • அர்த்தார்த்தி – புதிய செல்வம் வேண்டுபவன்
   • ஜிஞ்ஞாஸு – கைவல்யம் வேண்டுபவன்
   • ஞாநி – உண்மை அடியான்
  • நான்கு புருஷார்த்தங்களான தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் நான்கும் தரவல்லவன்
  • பல திவ்ய ரூபங்களை உடையவன்
  • ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி மூவரின் காதல் மணாளன்
 • எல்லா உயிர்வாழிகளின் அந்தர்யாமியாய் இருப்பினும் அவற்றின் கர்மங்களால் பாதிக்கப் படாதவன், தனி ஆத்மா அந்த சரீரத்தின் மாற்றங்களால் பாதிக்கப் படாதது போல்.

அவனது கல்யாண குணங்கள்

 • அவனது தலையாய திவ்ய கல்யாண குணங்கள்:
  • நித்யம் – எப்போதும் உள்ளவை
  • எண்ணற்றவை – அவை கணக்கிலடங்கா அனந்த கல்யாண குணங்கள்
  • எல்லை அற்றவை – ஒரோ குணமுங்கூட முழுதாக அறியமுடியாதது
  • அகாரணமானவை – அவன் கல்யாண குணங்கள் நிர்ஹேதுகமானவை யாதொரு வெளிக் காரணம்/தூண்டுதலால் வருவதன்று
  • குறையற்றது
  • எம்பெருமான் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி இருப்பதால் இக்குணங்களும் தன்னிகரற்றவை
 • கல்யாண குணங்களின் மூவகை:
  • தன்னிடம் பற்றுள்ளவர் தன அடியார்திறத்து
   • வாத்சல்யம் – தாய்ப் பாசம்

திருவேங்கடமுடையான் எப்போதும் வாத்சல்யத்துக்குப் புகழப்பெறுபவன்

   • சௌசீல்யம் – பெருந்தன்மை

ஸ்ரீராமன் குகன், ஹநுமாநாதி களோடு புரையறக் கலந்து பழகியதால் அவன் சௌசீல்யத்துக்குப் புகழப்படுகிறான்

   • ஸௌலப்யம் – எளிமை

கண்ணன் எம்பெருமான் ஸௌலப் யத்துக்குப் புகழப்படுகிறான்

   • மார்தவம் – திருமேனியும் திருவுள்ளமும் மிக ம்ருதுவானவை
   • ஆர்ஜவம் – நேர்மை
  • தன்னை விரும்பாதவர் தன்னடியார் பக்கல் விருப்பற்றவர் பால் காட்டும் குணங்கள்:
   • சௌர்யம் – வீரம்/துணிவு
   • வீர்யம் – ஆற்றல்/சக்தி
  • எல்லார்க்கும் பொதுவாய்க் காட்டும் குணங்கள்:
   • ஞானம் – எல்லாம் தெரிந்திருத்தல்
   • சக்தி – ஆற்றல்
   • பலம் – வலிமை, எதையும் தாங்கும் பலம்
   • ஐச்வர்யம் – கட்டுப்படுத்தும் ஆற்றல்
   • வீர்யம் – தன்னுள் யாதொரு மாற்றமுமின்றி எல்லாவற்றையும் நடத்துதல்
   • தேஜஸ் – எதையும் தானே தனியாய் நிர்வகித்தல்
 • கல்யாண குணங்கள், அவற்றின் இலக்குகள்
  • ஞானம் – தாம் அஜ்ஞர்  என்றுள்ளார்க்கு உதவுவது
  • சக்தி – ஆற்றல் – தாம் பலவீனர்/ஆற்றலற்றோர் என்றுள்ளார்க்கு உதவுதல்
  • க்ஷமை – மன்னிக்கும் குணம் – தாம் தவறுசெய்தோம் என வருந்துவோர்க்கு உதவுவது
  • க்ருபை – துன்புற்றிருப்போம் என்றிருப்போர்க்கு உதவுவது
  • வாத்சல்யம் – தாய்மை கூடிய பொறுமை; தவறு செய்தோம் என்றிருப்போரைப் பொறுத்தல்
  • சீலம் – பெருந்தன்மை – தாம் தாழ்ந்தோர் என்றிருப்போரை உத்தரிக்க அருள்தல்
  • ஆர்ஜவம் – நேர்மை – தாம் நேர்மையற்றவர் என்றிருப்போரைக் காத்தல்
  • ஸௌஹார்த்தம்=நாம் நல்லோம் அல்லோம் என்றிருப்போரையும் காக்கும் இயல்பு
  • அவனது மார்தவம் – தன் பிரிவைத் தாங்க மாட்டாத ப்ரபன்னர்களுக்கு உதவும் மென்மை
  • ஸௌலப்யம் – தன்னைக் காண விரும்பும் அடியார்க்கு உதவும் இயல்பு
  • இப்படி மேலும் pala.
 • அவன் குணங்களின் வடிவுகள்
  • ஜீவாத்மாக்களின் துன்பங்கள் பற்றி  எப்போதும் சிந்தித்து அவர்களுக்கு ஹிதமே எண்ணியவாறிருக்கிறான்
  • அவர்கள் துயருறும்போதெல்லாம் உடனிருந்து உதவுகிறான்
  • தன்னிடம் சரண் புக்கோர்க்கு
   • பிறப்பு, அறிவு, செயல் (ஜன்ம ஞான கர்ம) இவற்றால் வரும்  அவர்கள் குறைகளைக் கருதான்
   • தம்மைத் தாமோ அல்லது பிறரோ காக்க இயலாதபோது தானே சென்று காப்பான்
   • ஸாந்தீபனி ரிஷி விஷயமாகவும் (மாண்ட அவர் மகனை மீட்டது போல்) ப்ராஹ்மணர் விஷயமாகவும் (பரமபதத்துக்கு ஸ்ரீதேவி கொண்டு சென்ற  அவர் பிள்ளைகளைக் கண்ணன் எம்பெருமான் மீட்டுத் தந்து அங்குள்ளார்க்குத் தன க்ருஷ்ண விக்ரஹம் காட்டியது  போல்) நடத்தியது போல் ஆச்சர்யச் செயல்களை செய்கிறான்
   • அவன் தன்னை அவர்களுக்குப் பூர்ணமாகக் கொடுத்தருள்கிறான்
   • அவர்களுக்கு உபகரித்து, தன் தேவை பூர்த்தி ஆனதுபோல் மகிழ்கிறான்
   • தான் செய்த பேருதவிகளை நினையாதே, அவர்களின் சிறு நிறைகளையும் பெரிதாக எண்ணி அவர்களின் அநாதி கால ஸாம்ஸாரிக நசைகளைக் களையறுக்கிறான்
   • தன் பெண்டு பிள்ளைகளின் குற்றங்களை மறக்கும் மனிதர்களைப்  போல் அவர்களின் அபசாரங்களைக் காணாது விடுகிறான்
   • சரணாகதனின் பிழைகளைப் பிராட்டியே சுட்டினாலும் அவற்றைத் தள்ளுகிறான்
   • அன்புக்குரியவளின் வேர்வை நாற்றம் விரும்பும் காமுகன் போல்  அவர்களின் பிழைகளை விரும்பி ஏற்கிறான்
   • அவர்களைப் பிரியில், சரணாகதர்களைவிடத் தான் துயர் உறுகிறான்
   • அப்போதீன்ற  கன்றை நக்கி அரவணைக்கும் தாய்ப்பசு முன்னீன்ற கன்றைத் தள்ளுமா போலே  அவன் புதிய சரணாகதனை ஏற்றுப்  பிராட்டியையும் பழவடியார்களையும் விலக்குகிறான்.

காரணத்வம் – ஈச்வரனே யாவற்றுக்கும் முதற் காரணம்

முதல் பிறப்பாளனான ப்ரம்மன் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் தோன்றுதல்

 • பகவானே எல்லா உலகங்களுக்கும் காரணன்
 • சிலர் அணுவே காரணம் என்பர்
 • இது ப்ரத்யக்ஷத்துக்கும் சாஸ்த்ரத்துக்கும் விரோதிப்பதால் இது முதல் காரணம் ஆகாது
 • பிறர்  சிலர் ப்ரக்ருதி முதல் காரணம் என்பர்
 •  ப்ரக்ருதிக்கு ஞானம் இல்லாமையாலும், பகவான் தலையீடின்றி மாற்ற இயலாததாலும் ப்ரக்ருதி காரணம் ஆக முடியாது
 • பத்த சேதனர்கள் (கர்மாதிகளால் கட்டுண்ட) ப்ரம்ம ருத்ராதிகள் முதல் காரணர் ஆகார்
 • அவர்கள் கர்மங்களுக்குக் கட்டுண்டு க்லேசப்படுவதால் அவர்கள் காரணர்கள் ஆகார்
 • ஆகவே ஈச்வரன் ஒருவனே முதல் காரணன்
 • .அவன் அஞ்ஞானம், கர்மம் ஆகியவற்றாலன்றி, தன் இச்சை மற்றும் ஸங்கல்பத்தால் காரணன் ஆகிறான்
 • அவன் இச்சையாலேயே ச்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்கள் நிகழ்வதால் அவனுக்கு இதில் யாதொரு துயரும் இல்லை
 • இந்நிகழ்வுகள் யாவுமே அவன் லீலை (விளையாட்டு).
 • ஸம்ஹாரத்தில் அவன் லீலை தடைபடுமோ எனில் படாது அதுவும் அவன் விளையாட்டே என்பதால். மாமுனிகள் இதற்கு அழகிய த்ருஷ்டாந்தமாக குழந்தைகள் தாம் கட்டும் மணல் வீட்டைத் தாமே விளையாட்டின் இறுதியில் அழிப்பதைக் காட்டியருளுகிறார்
 • தன் சரீரத்தையே அவன் பிரபஞ்சமாக மாற்றுவதால், அவனே உபாதான காரணம். மூன்று காரணங்கள் உள – உபாதான காரணம் (காரணப் பொருள்), நிமித்த காரணம் (செய்யும் உபகரணம்/கருவி), சஹகாரி காரணம் (துணைக் காரணம்). உதாரணத்துக்கு – பானை செய்வதில், மணலும் களிமண்ணும் உபாதான காரணம், குயவன் நிமித்த காரணம், தண்டும் சக்கரமும் ஸஹகாரி காரணம்.
 • ச்ருஷ்டியில் அவன் திருமேனிக்கு ஒரு மாற்றமும் இல்லையாதலால் அவன் நிர்விகாரன் எனப்படுகிறான் (“அவிகாராய”).
 • அவனது சரீரம் (சித்தும் அசித்தும்) மட்டுமே மாற்றங்களுக்குட்படுகின்றன. ஒரு சிலந்தி தன் வாய் எச்சிலாலேயே வலையைப் பின்னி, பின் தானே அதை விழுங்கும். ஒரு சிலந்திக்கு இது கைகூடுமாகில் ஸர்வஞ்ஞனுக்கு என்ன கஷ்டம்!

ச்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்

அவன் தானே இவ்வெல்லாவற்றையும் நியமித்து நடத்துகிறான். (சமஷ்டி ச்ருஷ்டி ஆகிய பஞ்ச பூத ச்ருஷ்டி வரை தானே நேரே செய்து, வ்யஷ்டி ச்ருஷ்டி ஆகிய பல்வேறு படைப்புகளைத் தன் ஆணைக்குட்பட்டோரைக் கொண்டு அவர்களின் அந்தர்யாமியாய் நடத்துகிறான்.

ச்ருஷ்டி(படைப்பு)

 • ச்ருஷ்டி ஆவது:
  • ஸூக்ஷ்ம வஸ்துக்களை ஸ்தூல வஸ்துக்களாக மாற்றுவது
  • ஜீவாத்மாக்களுக்கு சரீரமும் புலன்களும் தருவது
  • ஜீவாத்மாக்கள் ஞாநத்தை விரிவுபடுத்துவது
 • ச்ருஷ்டியில்  பிரம்மன், ப்ரஜாபதி, காலம் மற்றும் அனைத்து வஸ்துக்களுக்கும் அந்தர்யாமியாய் உள்ளுறையும் ஆத்மாவாய் இருந்து நடத்துவான்
 • ச்ருஷ்டி ரஜோ குணம் (உணர்வு மிகுதி) எனும் நிலையில் நடத்துவான்

ஸ்திதி (இருப்பு)

 • ஸ்திதி (இருப்பு)
  • நெல்லையும் அரிசியையும் நீர் மூலம் பிழைப்பிப்பதுபோல் அவன் ஜீவர்களை அவர்களுள் தான் உறைந்து தன ஸௌஹார்த்தத்தால் உதவி செய்து காக்கிறான்.
 • ஸ்திதி
  • விஷ்ணு முதலான பல அவதாரங்களால் செய்கிறான்
  • மநு, ரிஷிகள் பிறரால் சாஸ்த்ரங்கள் தந்தான்
  • ஜீவாத்மாக்களை நல்  வழிப் படுத்துகிறான்
  • எப்போதும் அந்தர்யாமியாய் எல்லாருள்ளும்  இருக்கிறான்
 • ஸ்திதி ஸத்வ குண செயல்பாடு

ஸம்ஹாரம் (அழித்தல்)

 • ஸம்ஹாரம்
  • ஜீவாத்மாக்கள் பொருள் ஆசைகள்/பற்றுதல்களைக் குறைக்க அவர்களை ஸூக்ஷ்ம நிலைக்குக் கொண்டு செல்வது . கட்டுப்படாத மகனைச் சிறையிட்டுத் தந்தை காப்பது போல இது.
 • ருத்ரன், அக்னி, காலம் இவற்றின் அந்தர்யாமியாய் இது செய்கிறான்
 • ஸம்ஹாரம் தமோ (அஞ்ஞானம்) நிலையில் நடக்கிறது..

ச்ருஷ்டியில் பகவானின் மிக உயர்ந்த இயல்புகள்

 • ச்ருஷ்டியில் சிலர் இன்பமாயும் சிலர் துன்பமாயும் இருத்தல் பகவானின் பக்ஷபாதம் கடும் இயல்பைக் காட்டாதோ? எனில்
 • அவ்வாறன்று. ஒவ்வொருவரும் தன கர்ம வினைக்குத் தக்கவே உடல் பெறுவதால் அவர்களை நிலையில் உயர்த்தி மெல்ல நல்ல நிலைக்குச் செலுத்தும் முயற்சி எப்போதும் நடப்பதால் எம்பெருமானிடம் பக்ஷ பாதமோ கடுமையோ இல்லை
 • நம்மாழ்வார் திருவொய்மொழி 3.2.1.ல் சொன்னாற்போல பகவான் ச்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை திவ்ய மங்கள விக்ரஹத்தோடு செய்கிறான்.

பகவானின் வெவ்வேறு வடிவங்கள்

 • எம்பெருமான் வடிவங்கள்
  • அவன் குணம், ஸ்வரூபத்தைப் பார்க்கிலும் இனிமையானவை
  • நித்யம் – எப்பொழுதும் உருவத்துடன் இருக்கிறான்
  • ஒரே மாதிரியானவை – அவற்றுக்கு மூப்பு முதலியன கிடையாது
  • தூய நல்லியல்பினால் ஆன புனித பஞ்சோபநிஷத் மயமானது
  • ஆத்மாவின் ஞானத்தை மறைக்கும் மாமிச சரீரம் போலல்லாமல் அவன் ஸ்வரூபத்தை வெளியிடும் திவ்ய உருவங்கள்
  • எப்போதும் ஒளிர்வது
  • அழகு, மென்மை போன்ற திவ்ய இயல்புகளின் இருப்பிடம்
  • யோகிகளின் த்யானத்துக்கு விஷயம்
  • மற்றெல்லாவற்றிலுமுள்ள நம் பற்றுதலை நீக்குமவை
  • நித்ய ஸூரிகளும் முக்தாத்மாக்களும் அநுபவிப்பவை
  • நம் துயர்களை அறுக்குமவை
  • எல்லா அவதாரங்களும் அடிவேர்
  • எல்லார்க்கும் புகல்
  • எல்லாவற்றுக்கும் உறையுள்
  • சங்க சக்ர ஹார மாலாதிகளால் அழகு படுத்தப்பட்டவை
 • பகவான் ஸ்வரூபம் ஐந்து நிலைகளில் உள்ளது:
  • பரத்வம் – பரம பதத்தில் உள்ள நிலை
  • வ்யூஹம் – இவ்வுலகைக் கணிசிக்கும் நிலை
  • விபவம் – எம்பெருமானின் எண்ணற்ற அவதாரங்கள்
  • அந்தர்யாமி – அனைத்து சேதன அசேதனங்களில் அந்தர்யாமியாய் இருப்பவன்
  • அர்ச்சை – கோயில்கள் மடங்கள் இல்லங்களில் வழிபடப்படும் எண்ணற்ற திருவுருவங்கள்
  • இவை சுருக்கமாகக் காணலாம் இவ்விணையப் பதிவில் – http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-parathvadhi.html.

பரத்வம்

 • பரமபதம் எல்லையற்ற இன்பமும் மங்கலமும் நிறைந்த கால தத்வம் ஆட்சி செய்யாத இடம். ஸம்ஸாரத்தில் நாம் விரும்பினாலும் இல்லையென்றாலும் காலம் நம்மைக் கட்டுப் படுத்தி ஒவ்வொன்றையும் மாற்றுகிறது.
 • பரமபதத்தில் எல்லாமே திவ்யம்
 • அங்குப் ப்ரதானம் ஸ்ரீ பூ நீளா தேவிகளோடுள்ள எம்பெருமானே
 • நித்ய ஸூரிகள் (எப்போதும் தளை அறுந்தவர்கள்), முக்தாத்மாக்கள் (முன்பு சம்சாரத்திலிருக்குது இப்போது தளை அறுந்தவர்கள்) அனுபவத்துக்காக அவன் அங்கு எப்போதும் உளன்
 • அவனது ஞானம் பலம் முதலான அனைத்துக் கல்யாண குணங்களும் அங்கே பரிமளிக்கும்

வ்யூஹம்

க்ஷீராப்தி  நாதன் – வ்யூஹ வடிவங்களின் ப்ரதிநிதி

 • பகவான் ஏற்றுக்கொண்ட வடிவங்கள்
  • ச்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளால் லோக க்ரமம் காக்க
  • சம்சாரத்தில் ஜீவர்களை வழி நடத்திக் காக்க
  • த்யானம் செய்வோர் த்யான விஷயமாக இருக்க
 • பர  வாஸுதேவன் வ்யூஹ வாஸுதேவனாக விரிகிறான்
 • வ்யூஹ வாஸுதேவன் ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என மேலும் மூன்று வடிவங்கள் மேற்கொள்கிறான்
 • ஸங்கர்ஷணன்
  • ஞானம் (அறிவு), பலம்(எல்லாவற்றையும் தாங்கும் சக்தி) இவனில் மேம்பட்டுத் தோன்றும்
  • இவன் ஜீவர்களின் தலைவனாய் ஆத்மாவுக்கும் வஸ்துவுக்கும் (ப்ரக்ருதிக்கும்) வேறுபாடுகள் விளைத்து ஒவ்வொரு வடிவுக்கு நாம ரூபங்கள் தரும் க்ரமத்தைத் தொடங்குகிறான்
  • வேதம் வேதாந்தம் என சாஸ்த்ரங்களையும் தந்து ஸம்ஹாரத்தைத் தலைமை தாங்கி நடத்துகிறான்
  • பின்னர் அவனே பிரத்யும்னனாக விரிகின்றான்
 • ப்ரத்யும்னன்
  • ஐச்வர்யம் (ஆளுமை/செல்வம்), வீர்யம் (அதிகாரம்) இவை இவனது பிரதான அடையாளங்கள்
  • இவனே மனஸ் தத்வத்தைக் கட்டுப் படுத்துகிறான்
  • இவன் பொறுப்புகள்
   • சரியான தர்ம நியாயங்களை வெளியிடுதல்
   • (ப்ராஹ்மண க்ஷத்ரிய வைச்ய சூத்ரராகிய) நால் வர்ணத்து மனிதரைப் படைத்தல்
   • (எம்பெருமானிடம் இட்டுச்செல்லும் நல்லியல்பான) ஸாத்விகம் கொண்டோரைப் படைத்தல்
 • அநிருத்தன்
  • சக்தி(ஆற்றல்) தேஜஸ் (எதையும் தனியே சமாளிக்கும் ஸாமர்த்யம்) இவை இவனது விசேஷ குணங்கள் .
  • இவன் பொறுப்புகள்
   • உண்மை ஞானம் தருதல்
   • காலம், மற்றும் நல்லதும் கேட்டதும் கலந்த அஞ்ஞானம் இவற்றுக்குப் பொறுப்பு

விபவம்

தசாவதாரம் – பத்து முக்ய அவதாரங்கள்

 • பகவானின் அவதாரங்கள் எண்ணிறந்தன
 • அவதாரங்கள்
  • முக்ய அவதாரங்கள்
   • மோக்ஷம் விரும்பும் முமுக்ஷுக்களுக்கு இவை முக்ய உபாஸனைக்குப் பொருளாவன
   • பகவான் தானே மத்ஸ்ய கூர்ம வராஹாதிகளாய் இறங்கி வந்தான்
   • பரமபதத்தில் போலே இவையும் பஞ்சோபநிஷத் மயமானவை .
   • பரமபதம் போலே  இவற்றிலும் அவன் தன்  குண பூர்த்தியைக் காட்டினான்
   • ஒரு திரியில் ஏற்றிய விளக்கு அத்திரியைவிட ஒளிர்வதுபோல் இவ்வவதாரங்களும் பரத்வத்தைப் பார்க்கிலும் ஒளிமயமானவை
  • கௌண அவதாரங்கள்
   • கௌணம் ஆவது அவன் தன் ஸ்வரூபம் (இயல்பு). அல்லது சக்தி (ஆற்றல்) இவற்றை ஒரு குறிப்பிட்ட லக்ஷ்யத்துக்காக ஜீவாத்மாக்களுக்குத் தருவது
   • இவை முக்யமாகக் கருதப் படவில்லை, குறிப்பிட்ட நோக்கத்துக்காக வந்ததால்  முமுக்ஷுக்களுக்கு உபாஸ்யமுமன்று
   • இரண்டு வகைகள்
    • ஸ்வரூபாவேசம்: பகவான் தன் இயல்பை ஜீவாத்மாக்களுக்குத் தந்து தன திவ்ய வடிவில் வருவது, உதாரணம்: பரசுராமன் போன்றோர்
    • சக்தி ஆவேசம் – பகவான் தன ஆற்றல்களை மட்டும் ஜீவர்களுக்குக் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகத் தருதல். உதாரணம்: ப்ரம்மன், சிவன், வ்யாஸன் போன்றோர்.
 • அவன் தன் இச்சையை முன்னிட்டே பல்வேறு அவதாரங்கள் செய்கிறான்
 • பகவானே இவ்வவதாரங்களின் லக்ஷ்யத்தை விளக்குகிறான் பகவத் கீதை 4.8ல்:
  • பரித்ராணாய ஸாதூனாம் – தனது அடியார்களைக் காக்க
  • விநாசாய ச துஷ்க்ருதாம் – தீயவர்களை ஒழிக்க
  • தர்ம ஸம்ஸ்தாபநார்த்தம் – தர்மத்தை நிலை நாட்ட
 • ரிஷி சாபம் முதலியவற்றால் பகவான் பிறக்கிறான் என்று சொல்வதெல்லாம் ஒரு உபசார வழக்கு, அவனது இச்சையாலேயே பிறக்கிறான்

அந்தர்யாமி

 • அந்தர்யாமி ஆவது எல்லா உயிர்கள் பொருள்களிலும் உள் நின்று அவற்றை நியமித்து நடத்துதல்
 • ஜீவாத்மாக்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அவனும் உடன் சென்று வழி நடத்துகிறான்
 • பகவானை த்யானிக்க விழைவோர்க்கு அவன் தன திவ்ய வடிவில் திவ்ய மஹிஷிகளோடு இதயத்தில் தோன்றுகிறான்
 • அவர்கள் நெஞ்சில் எப்போதும் நின்று ஜீவாத்மாக்களை அவன் ரக்ஷிக்கிறான்

அர்ச்சை

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நூற்றெட்டு திவ்ய தேசங்கள்

 • இவை எம்பெருமானின் வெவ்வேறு திருக்கோலங்களின் எல்லை நிலமாகக் கட்டப்படுள்ளன
 • பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதி நாற்பத்து நான்காம் பாசுரத்தில் தன் அடியார் விழையும் எந்தத் திருக்கோலத்தையும் எம்பெருமான் ஏற்றுக்கொள்வதாக அருள்கிறார்.
 • மற்ற வடிவங்கள் போலன்றி அர்ச்சாவதாரம் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் எல்லார்க்கும்  உண்டு.
  • சில இடங்கள் (க்ஷீராப்தி, பரமபதம் போன்றன போல்வன)
  • சில காலங்கள் (த்ரேதா, துவாபர போன்ற யுகங்கள்)
  • சில அதிகாரிகள் (ராமாவதாரத்தில் தசரதன் போல்) என பர வ்யூஹ விபவ அவதாராதிகள் இருக்கும்
 • தன் நிர்ஹேதுக க்ருபையால் அடியார் பிழைகளைக் கணிசிப்பதில்லை
 • அவன் தன் செயல்கள் (ஸ்நானம் பானம் ஆஹாரம் சயனம்) அனைத்துக்கும் தன் அடியார்களையே நம்பியுள்ளான்
 • திவ்யதேசம், அபிமான க்ஷேத்ரம், கிராமக் கோயில்கள், மடங்கள், இல்லங்கள் யாவற்றிலும் குடி கொண்டுள்ளான்
 • அர்ச்சாவதாரத்தின் முழு இயல்புகள்
  • தன்  மீது ருசியும் பற்றும் விளைவிக்கிறான் .
  • எல்லாத் திருக்கல்யாண குணங்களின் இருப்பிடமாயும் இருந்து சௌசீல்யம், வாத்சல்யம், சௌலப்யம், ஆகியவற்றைக் கண்காணக் காட்டுகின்றான். பரமபதத்தில் அனைவரும் சுத்த ஸ்வரூபத்துடன் இருப்பதால் இக்குணங்கள் அடங்கி உள்ளன.
  • ஜன்மம் ஞானம் இவற்றைக் கருதாது யாவர்க்கும் புகல் ஆகிறான்
  • ஆழ்வார் ஆசார்யர்கள் கூறினாப்போல் அவனே மிகவும் விரும்பாத தக்கவன். இவ்விஷயத்தை நாம் ஏற்கனவே அனுபவித்துள்ளோம் –  http://ponnadi.blogspot.in/p/archavathara-anubhavam.html.
 • அர்ச்சையில் அவன் பெருந்தன்மை
  • அவனே எல்லார்க்கும் தலைவனாய் அவர்கள் அவனைச் சார்ந்திருப்பினும், தான் தன் பக்தர்கள் கையை எதிர்பார்த்திருக்கிறான்
  • விக்ரஹ வடிவில்
   • தான் எல்லாமும் அடியார் மூலமே அறிவதால் அஞ்ஞன்  போல் உள்ளான்
   • அன்ன பான சயனாதிகளுக்கு அடியாரையே எதிர் பார்ப்பதால் அசக்தன் போல் உள்ளான்
   • இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் அடியாரையே நம்பியுள்ளான்
  • ஆகிலும் அடியார் பால் கொண்ட நிர்ஹேதுக அளப்பரிய காதலால் அவர்கள் நன்மையையே கருதி அவர்களுக்கு வேண்டியது முடித்துத் தன் வாத்சல்யம் என்னும் குணத்தை ப்ரகாசமாக வெளியிடுகிறான்

முடிவுரை

சித் அசித் ஈச்வரன் என மூன்று தத்துவங்களையும் ஓரளவு கண்டோம். இது மிகவும் கடினமான விஷயம். நாம் கடலில் ஒரு துளியையே கண்டுள்ளோம் – குட்டி பாஷ்யம் எனப்படும் பிள்ளை லோகாசார்யரின் தத்வ த்ரயம், அதற்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யானம் – இவற்றில் அனுபவிக்கத்தக்க பல விஷயங்கள் உள்ளன. நாமும் நம் ஸ்ரீமந்நாராயணன் ஆழ்வார்கள்  ஆசார்யர்களை நமக்கு இப்படிப்பட்ட க்ரந்தங்களை அளித்ததற்குக் கொண்டாடுவோம்

ஸ்ரீ பெரும்பூதூர் – பிள்ளை லோகாசாரயர், மணவாளமாமுனிகள்

ஆழ்வார் எம்பெருமானார் லோகாசாரயர்  ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://ponnadi.blogspot.in/2013/03/thathva-thrayam-iswara-who-is-god.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

தத்வ த்ரயம் – அசித் – வஸ்து ஆவது எது?

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

தத்வ த்ரயம்

<< சித் – நான் யார்?

 • முந்தைய கட்டுரையில் நாம் சித் தத்வத்தின் இயல்பைப் பார்த்தோம் (https://srivaishnavagranthamstamil.wordpress.com/2017/09/26/thathva-thrayam-chith-who-am-i/) .
 • இப்போது நம் பயணத்தைத் தொடர்ந்து “தத்வத்ரயம்” எனும் பிள்ளை லோகாசார்யரின் சென்னூலின் மூலமாகவும் அதற்கு மணவாள மாமுனிகள் அருளிய சிறப்பான வ்யாக்யானம் மூலமாகவும் சித் அசித் ஈச்வரன் எனும் மூன்று தத்துவங்களை அறிவோம்.

ஆசார்யர்கள் உபதேசம் மூலம் அசித் (வஸ்து) தத்வம் அறிந்து கொள்ளுதல்

முகவுரை

 • அசித் அறிவற்றது. மாற்றம், பரிணாமத்துக்குரியது
 • அதற்கு ஞானம் இல்லாததால் அது பிறர் பயன்பாட்டுக்கே இருக்கிறது
 • அறிவுள்ள மாற்றங்களற்ற சித்தைப் போலன்றி அசித் மாற்றங்களுக்குட்பட்டதாய் இருக்கிறது
 • அசித் மூவகைப் படும்:
  • சுத்த ஸத்வம் – ராஜஸம் (கோபதாபங்கள்), தாமஸம் (அறியாமை/அஞ்ஞானம்) கலவாத நல்லியல்பு
  • மிச்ர ஸத்வம் ராஜசமும் தாமஸமும் கலந்த நல்லியல்பு
  • ஸத்வ சூந்யம் – கால தத்வம். இது ஸத்வம் ராஜஸம் தாமஸம் எதுவுமற்றது

சுத்த ஸத்வம் (தூய நல்லியல்பு)

பரம பதம்-திவ்ய வஸ்துக்களால் ஆன மண்டபங்களும் பொழில்களும் நிறைந்த, ஸ்ரீமந் நாராயணனின் திவ்ய ஆஸ்தாநம்

 

 • ரஜஸ்ஸும், தமஸ்ஸும் கலவாத தூய சுத்த ஸத்வம் இது. பரமபதத்தில் இருப்பவைகளைப் பற்றியே இப்பகுதி.
 • இயல்பாகவே இது
  • நித்யமானது
  • ஞானம் ஆனந்தம் இரண்டின் மூல ஆதாரம்
  • கர்ம வச்யரான மனிதர்களால் அல்லாமல் பகவானின் இச்சாதீனமாக நிர்மாணமான கோபுரங்கள்/மண்டபங்கள் நிறைந்தது
  • அளவற்ற ஒளி/தேஜஸ் கொண்டது
  • நித்யர், முக்தர்களாலும் ஏன் பகவானாலும் அளவிட முடியாதது. அவ்வாறெனில் எம்பெருமானின் ஸர்வஞத்வத்துக்குக் குறைவு வாராதோ எனும் ஸம்சயத்துக்கு மாமுனிகள் அழகாக ஸமாதானம் கூறுமுகமாக எம்பெருமானும் இதன்  மஹிமையை அளப்பரியது என அறிவான் என்றார்.
  • மிக அத்புதமானது
 • சிலர் இது ஸ்வயம் ப்ரகாசம் (தானே ஒளி விடக்கூடியது) என்பர், சிலர் அவ்வாறு அன்றென்பர். இப்படி இரு கருத்துகளுண்டு.
 • ஒளி விடக்கூடியதென்னும் கருத்து வலிது. ஆகில் அது தன்னை நித்யர் முக்தர் ஈச்வரனுக்கு காட்டிக் கொடுக்கும். ஸம்ஸாரிகளுக்குத் தெரியாது.
 • இது ஆத்மாவிலிருந்து வேறுபட்டது. ஏனெனில்
  • இதற்குத் தன்னைத் தெரியாது
  • இது பல வடிவுகளில் மாறும்
 • இது ஞானத்தினின்று வேறுபட்டது ஏனெனில்
  • பிறர் உதவியின்றி வெவ்வேறு வடிவங்களை மேற்கொள்கிறது (ஞானம் உருவம் மேற்கொள்வதில்லை)
  • தன்மாத்திரைகளை (ஒலி ஸ்பர்சம் வடிவம் ருசி/சுவை மணம்) கிரஹிக்கும் ஞானம் போலன்றி இது நுண் உணர்வுகளின் இருப்பிடம்

மிச்ர ஸத்வம் (தூய்மையற்ற நல்லியல்பு)

 • ஸ்வாபாவிகமாகவே இது
  • ஸத்வம் ரஜஸ் தமஸ்ஸுகளின் கலவை ஆகும்
  • ஜீவாத்மா முழு ஞானமும் ஆனந்தமும் உறாமல் தடுக்கும் திரை
  • ஜீவாத்மாவுக்கு முரண்பட்ட ஞானம் ஏற்படும் மூலாதாரம்
  • நித்யம்
  • ஈச்வரனின் லீலைகளில் ஓர் உபகரணம்
  • தனக்குள்ளும், பிரவற்றோடும் வேறுபட்டு தன் ஸ்வரூபத்துக்கேற்ப  (அவ்யக்தமாயும் வ்யக்தமாயும் ச்ருஷ்டி ஸம்ஹார காலங்களில்) இருக்கும்.
  • ப்ரசித்தமான பெயர்கள்
   • ப்ரக்ருதி – மாறுதல்கள் மூலமாய் இருப்பதால்
   • அவித்யை – உண்மை ஞானத்துக்கு மாறுபட்டிருப்பதால்
   • மாயா – மாறுபட்ட வேறுபட்ட விசித்ர விஷயங்களாக இருப்பதால்
 • நம்மாழ்வார் திருவாய்மொழி 10.7.10ல் அருளிச் செய்தவாறு அசித் தத்துவங்கள் உள்ளன
  • பஞ்ச தன்மாத்திரைகள் –  சப்த (ஒலி), ஸ்பர்ச (தொடுவுணர்வு), ரூப (பார்வை), ரஸ (சுவை), கந்தம் (நாற்றம்)
  • பஞ்ச ஞானேந்த்ரியங்கள் – அவற்றை அறியும் ச்ரோத்ர (செவி), த்வக் (சருமம்), சக்ஷுர் (கண்கள்), ஜிஹ்வா (நாக்கு), க்ராண(காதுகள்) எனும் அறிவுப் புலன்கள்
  • பஞ்ச கர்மேந்த்ரியங்கள் – வாக் (வாய்), பாணி (கைகள்), பாத(கால்கள்), பாயு (மலத்துவாரங்கள்), உபஸ்த (இனப்பெருக்க உறுப்புகள்)
  • பஞ்ச பூதங்கள் – ஆகாசம் (வெளி), வாயு (காற்று), அக்னி (நெருப்பு), ஆப/ஜலம் (நீர்), ப்ருத்வி (நிலம்)
  • மனஸ் – மனம்
  • அஹங்காரம்
  • மஹான் – வஸ்துவின் திரண்ட உரு நிலை
  • மூலப்ரக்ருதி – வஸ்துவின் உருவிலா நிலை
 • இவற்றுள் அடிப்படைப் பொருளான மூலப்ரக்ருதி குணங்களின் கூட்டரவால் வெவ்வேறு நிலைகளை எய்தும்
 • குணங்கள் ஸத்வம் (நல்லியல்பு), ரஜஸ் (உணர்ச்சிப்பெருக்கு), தமஸ் (அறியாமை) என மூவகை
 • ஸத்வம் ஆனந்தம் மகிழ்ச்சிகளைத் தூண்டும்
 • ரஜஸ் பற்றுதல், பொருளாசைகளை விளைக்கும்
 • தமஸ் முரண்பட்ட ஞானம், அறியாமை, மறதி , சோம்பலை விளைக்கும்
 • இம்மூன்று இயல்புகளும் ஸமமாய் உள்ளபோது வஸ்து உருவற்ற நிலையில் இருக்கும்
 • இம்மூன்று இயல்புகளும் ஸமமற்ற நிலையில் உள்ளபோது வஸ்து உருவ நிலையில் இருக்கும்
 • வஸ்துவின் முதல் உருவான நிலை மஹான்
 • மஹானிலிருந்து அஹங்காரம் பிறக்கிறது
 • பின்னர் மஹான், அஹங்காரங்களிலிருந்து தன்மாத்ரைகள், ஞானேந்த்ரியங்கள், கர்மேந்த்ரியங்கள் தோன்றும்.
 • பஞ்ச தன்மாத்ரைகள் பஞ்ச பூதங்களின் ஸூக்ஷ்ம நிலை
 • எம்பெருமான் இவ்வேறுபட்ட மூலகங்களைக் கலந்து ப்ரபஞ்சத்தை சிருஷ்டி செய்கிறான்
 • பகவான் தன் ஸங்கல்பத்தால் ப்ரபஞ்சம் ஆகிய கார்யத்தை இம்மூலகங்களாகிய காரணத்தை இட்டு மாற்றுவதாகிய ஸ்ருஷ்டியைச் செய்கிறான்
 • ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிர்வாழிகளையும் பகவான் ப்ரஹ்மா ப்ரஜாபதி போன்ற பிற உயிர் வாழிகளுக்குத் தான் அந்தர்யாமியாக இருந்து கொண்டு ஸ்ருஷ்டி செய்கிறான்
 • கணக்கற்ற ப்ரபஞ்சங்கள் உள
 • இவை யாவும் ஒரு சேரவும் அநாயாஸமாகவும் அவன் ஸங்கல்பத்தால் ஸ்ருஷ்டி செய்யப்படுகின்றன
 • பல்வேறு பிரமாணங்களை உதாஹரித்து மாமுனிகள் பதினான்கு தளங்களாக, அண்ட கோளங்கள் உள எனக் காட்டுகிறார்

லீலா விபூதி அமைப்பு (ஸம்ஸாரம் – இவ்வுலகு)

 • கீழ் ஏழு நிலைகள்
  • மேலிருந்து அவை அதலம், விதலம், நிதலம், கபஸ்திமத்(தலாதலம்), மஹாதலம், சுதலம், பாதாலம் எனப்படும்
  • இவற்றில் ராக்ஷஸர், பாம்புகள், பறவைகள் முதலியன உள
  • ஸ்வர்கத்தினும் அதிகமாக இன்பம் பயக்கும் மண்டப மாட கூட கோபுரங்கள் இங்கு உள
 • ஏழு மேல் நிலைகள்
  • பூலோகம் – மனிதர் விலங்கினம் பறவைகள் வாழிடம். இவை ஏழு த்வீபங்களாய் உள. நாம் இருப்பது ஜம்பூ த்வீபம்.
  • புவர் லோகம் – கந்தர்வர் (தேவ இசைக்கலைஞர்) வாழிடம்
  • ஸ்வர்க லோகம் – பூலோகம் புவர்லோகம் ஸ்வர்க்க லோகம் மூன்றையும் இயக்கும் இந்த்ரன் தன் மக்களோடுள்ள இடம்
  • மஹர்  லோகம் – ஏற்கெனவே இந்த்ர பதம் வகித்தோரும் இனி வகிக்க இருப்போரும் இருக்குமிடம்
  • ஜன லோகம் – ஸனக ஸநந்தன ஸநத்குமார ஸநாதனாதி ப்ரஹ்ம குமாரர்கள் இருக்குமிடம்
  • தப லோகம் – ப்ரஜாபதிகள் எனும் ஆதி மூல புருஷர்கள் இருக்குமிடம்
  • ஸத்ய லோகம் – ப்ரஹ்மா விஷ்ணு சிவன் தம் அடியார்களோடு வாழுமிடம்
 • ஒவ்வொரு ப்ரபஞ்சமும் பதினான்கு அடுக்குகளால் ஆகி ஏழு ஆவரணங்களால் சூழப்பட்டுள்ளது
 • ஞானேந்த்ரியங்கள் ஸூக்ஷ்மங்களை உணர்கின்றன, கர்மேந்த்ரியங்கள்  ஸ்தூலங்களை உற்றுணர்ந்து செயல்பாடுகளில் இழிகின்றன.
 • மனம் இவை எல்லாவற்றிலும் உடன் இருந்து பொதுவாய் உதவுகிறது.

 • பஞ்சீ கரணம் எனும் வழியால் பகவான் வெவ்வேறு மூலப் பொருள்களை இயக்கி நாம் காணும் ப்ரபஞ்சத்தை நாம் இப்போது காணும் வகையில் சமைக்கிறான்

ஸத்வ சூன்யம் – காலம்

 • இயற்கையில், காலம்
  • வஸ்துக்களை ஸூக்ஷ்ம தசையிலிருந்து ஸ்தூல தசைக்கு  நிலை மாற்றுவதில் ஒரு க்ரியா ஊக்கியாய் உள்ளது
  • வெவ்வேறு அளவுகளில் நாள் கிழமை பக்ஷம் திங்கள் என அமைகிறது
  • நித்யம். இதற்கு ஆரம்பம் முடிவு இல்லை
  • எம்பெருமானின் லீலைகளில் உதவுகிறது
  • இது எம்பெருமானின் திருமேனியின் ஒரு வடிவும் ஆகும்
 • மாமுனிகள் நடுவில் திருவீதி பிள்ளை பட்டரை உதாஹரித்து கால அளவைகளின் விவரங்கள் தந்தருள்கிறார்
  • நிமிஷம் – க்ஷணம் – ஒரு வினாடி – கண்ணை ஒரு முறை இமைக்கும் நேரம்
  • பதினைந்து நிமேஷங்கள் – ஒரு காஷ்டா
  • முப்பது காஷ்டா- ஒரு காலம்
  • முப்பது காலம் – ஒரு முஹூர்த்தம்
  • முப்பது முஹூர்த்தம் – ஒரு திவசம் (நாள்)
  • முப்பது திவசங்கள் – இரண்டு பக்ஷங்கள் – ஒரு மாஸம்
  • இரண்டு மாஸங்கள் – ஒரு ருது ஒரு பருவம்
  • மூன்று ருதுகள் – ஓர் அயனம் – 6 மாஸங்கள் உத்தராயணம், 6 மாஸங்கள் தக்ஷிணாயனம்
  • இரண்டு அயனங்கள் – ஒரு ஸம்வத்ஸரம், வருஷம், ஆண்டு
  • முந்நூற்றறுபது மானிட ஸம்வத்ஸரங்கள் – ஒரு தேவ ஸம்வத்ஸரம்
 • சுத்த ஸத்வம் மிச்ர ஸத்வம் ஆகியவை இரண்டும் இன்புறத்தக்க விஷயங்களாகவும் இன்பத்துக்கு இருப்பிடமாகவும் இன்பத்தத்தைத் தருவிக்கும் உபகரணங்களாகவும் உள்ளன.
 • சுத்த ஸத்வம் (தெய்வீக வஸ்து) மேலும் . பக்கங்களிலும்   எல்லையற்றது, கீழ்ப்புறம் எல்லையுள்ளது, பரமபதம் முழுதும் வ்யாபித்துள்ளது
 • மிச்ர தத்வம் மேற்புறம் எல்லையுள்ளது கீழும் பக்கங்களும் எல்லையின்றி ஸம்ஸாரமாய் விரிந்துள்ளது.
 • கால தத்வம் எங்கும் (பரமபதம், பிரபஞ்சம் இரண்டிலும்) வ்யாபித்துள்ளது
 • காலம் பரமபதத்தில் நித்யம், ஸம்ஸாரத்தில் தாற்காலிகம் என்பர். மாமுனிகள் “தத்வ த்ரய விவரணம்” எனும் நூலில்  பெரியவாச்சான் பிள்ளை ஸாதித்ததை  உதாஹரித்து “காலம் பரமபதம் ஸம்ஸாரம் இரண்டிலும் நித்யம்” என்பர். ஆசார்யர்கள் சிலர் வேறுபட ஸாதிப்பதுண்டு. ஸம்ஸாரம் ஸதா மாறுபடுவதால் காலமும் தாற்காலிகம் என்பர்.
 • சிலர் காலம் இல்லை என்பர். அது ஏற்புடைத்தன்று.

முடிவுரை

இவ்வாறு ஓரளவு அசித் (வஸ்து ) தத்வம் மூவகை – சுத்த ஸத்வம் – பரமபதம். மிச்ர தத்வம் – ஸம்ஸாரம் – இவ்வுலக வஸ்துகள், ஸத்வ சூன்யம் – காலம் எனக் கண்டோம். இவ்விஷயங்களை மிகவும் ஆழ்ந்த அர்த்தங்களை உட்கொண்டவை. இவற்றை ஆசார்யர் திருவடியில் மேலும் கேட்டு உஜ்ஜீவிப்பது. க்ரந்த காலக்ஷேபமாக ஆசார்யரிடம் கேட்டாலே தெளிந்த ஞானம் உண்டாம்.

அடுத்து ஈச்வர தத்வம் அநுபவிப்போம்.

பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://ponnadi.blogspot.in/2013/03/thathva-thrayam-achith-what-is-matter.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org