Monthly Archives: March 2018

காரேய் கருணை இராமாநுசன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருவரங்கத்து அமுதனார் தம் இராமாநுச நூற்றந்தாதி இருபத்தி ஐந்தாம் பாசுரத்தில் ஸ்வாமியை “காரேய் கருணை இராமாநுசா” என்று போற்றுகின்றார். இங்கு எம்பெருமானார் மேகங்களோடு ஒப்பிடப் படுகின்றார். மேகங்கள் பெருவள்ளல்களாகக் கருதப் படுகின்றன. ஏனெனில் :

  • அவை எவரும் கேளாமலே கடலிலிருந்து நீரை முகர்ந்து நிலத்தில் ஊற்றுகின்றன.
  • அவை நல்லவன்/கெட்டவன், ஏழை/செல்வன் என்று வேறுபாடு கருதாது நீரை மழையாய்ப் பொழிகின்றன
  • அவை கறுத்திருப்பதன் காரணம் அவைகள் நீரைச் சுமந்து யாவர்க்கும் வழங்க காத்திருக்கின்றன என்பதே

அதேபோல் எம்பெருமானாரும் சாஸ்த்ரார்த்தங்களை கற்றார் கல்லார் என்று வேறுபடுத்தாமல் ஜீவாத்மாக்களை உயர்த்த வேண்டுமென்னும் ஒரே நோக்கோடு தாராளமாக யாவர்க்கும் வழங்கினார்.

ஸ்ரீவசன பூஷணத்தில் பிள்ளை லோகாசார்யர் பெரியாழ்வார் எம்பெருமானார் இருவருடையவுமான ஓர் இயல்பை அழகாகச் சுட்டிக் காட்டுகிறார். அதை அநுபவிப்போம் :

மங்களாசாஸனத்தின் (எம்பெருமான் நன்றாய் இருக்கவேண்டுமே என்று பிரார்த்திப்பது) முக்யத்வத்தைப் பேசும்போது உலகாசிரியர் எப்போதும் மங்களாசாஸனத்திலேயே ஊறியும் ஊன்றியும் இருப்பவரான பெரியாழ்வாரைப் பற்றி சாதிக்கிறார். ஸூத்ரம் 255ல்  எம்பெருமானாரும் பெரியாழ்வாரும் எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வதிலேயே ஊற்றமாய் இருந்தனர் என்று காட்டுகிறார்.

“அல்லாதவர்களைப் போலே கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும் தனிமையைத் தவிர்க்கையன்றிக்கே, ஆளுமாளார் என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைக்காயிற்று பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது”

மாமுனிகள் தம் வ்யாக்யானத்தில் இதை வெகு அழகாக இந்தப் ப்ரகரணத்தில் சாதிக்கிறார்:

  • ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் ஜீவாத்மாக்களுக்கு உண்மை ஞானம் ஊட்டி மேலேற்ற விரும்பினார்கள்
  • அவர்கள் சிஷ்யர்களை உத்தரிப்பித்த போதே ஸத் ஸங்கத்தையும் பேணிக்கொண்டார்கள் ஸம்ஸாரத்தில் பரஸ்பர நன்மைக்காக
  • ஆனால் பெரியாழ்வாரும் எம்பெருமானாரும் எப்போதுமே எம்பெருமான் திருமேனி ஸம்ரக்ஷணத்திலேயே கண்ணாய் இருந்தார்கள்
  • மாமுனிகள் இவ்விஷயத்தை ஸாதிக்கும்போது லோகாசார்யர் ஸ்வாமியை எம்பெருமானார் என்னாதே பாஷ்யகாரர் என்றதன் ஸ்வாரஸ்யம் அவர் ஒரு ஸாதாரண வ்யக்தி அல்லர், சாஸ்த்ர வேதாந்தங்கள் ஸ்ரீபாஷ்யம் இயற்றுமளவுக்குக் கைவந்தவர் என்பதால் என்பது குறிக்கொள்ளத் தக்கது

ஆசார்ய ஹ்ருதயம் சூர்ணிகை 204ல் அழகிய மணவாள பெருமாள் நாயனார் சீதாப் பிராட்டி (ஸ்ரீ மஹாலக்ஷ்மி), ப்ரஹ்லாதாழ்வான், விபீஷணாழ்வான், நம்மாழ்வார், எம்பெருமானார் இவ்வைவரின் காருண்யத்தை மேன்மையாகச் சொல்கிறார்:

“தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவரடி பணிந்தவர்க்குமே இவையுள்ளது”

நாயனாரின் இந்தத் திருவாக்கை மாமுனிகள் விசதமாக வ்யாக்யானித்துள்ளார். இவை உள்ளது என்றது:

  • ஸம்பந்த ஞாநம் – ஸம்ஸாரத்திலும் பரமபதத்திலும் எல்லா ஜீவாத்மாக்களும் எம்பெருமானோடு ஒரே உறவையுடையன. முக்யமாக பிதா புத்ர (தகப்பன்/மகன்), சேஷ/சேஷி (ஆண்டான்/அடிமை). சிலர் இவ்வுறவை உணர்ந்துள்ளனர் பலர் உணர்ந்திலர்
  • ஜீவாத்மாக்களின் அபராதங்களைக் கண்டு பொறுக்க இயலாமை – அறியாமையால் அவர்கள் செய்யும் பிழைகள் எண்ணிறந்தவை.
  • பெருங்கருணை – இஜ்ஜீவர்கள் உலகியலில் மூழ்கிக் கிடக்கக் கண்டு எம்பெருமானே இவர்களை கடைத்தேற்ற இயலாதெனக் கைவாங்கியிருக்கும்போது இவர்களுக்காக‌ இரங்கி இவர்கள் வாழ்ச்சிக்காக மனம் கலங்குபவர்கள் ஆழ்வார்கள்/ஆசார்யர்களே.

சீதாப் பிராட்டி கொண்ட கருணை எவ்வளவெனில் தன்பால் தீமனங்கொண்ட இராவணனையும் உய்விக்க அவள் தான் தாயானபடியால் அவனை நீ பெருமாளை வணங்காவிடிலும் அவனோடு நட்பாவது பாராட்டி உய்ந்து போவாய் என்றாள்.

ப்ரஹ்லாதன் தான் பெருமாளிடம் கொண்ட பக்திக்காகத் தன்னைப் பலவாறு துன்புறுத்திய தன் தந்தையையும் தன்னோடிருந்த சிறார்களையும் அவர்கள் உணராவிடினும் எம்பெருமானிடம் ஈடுபடுத்தவே விரும்பினான்.

தன்னை எப்போதும் இழித்தும் பழித்தும் பேசி இகழ்ந்த இராவணனையும் விபீஷணன் திருத்தி வாழ்விக்கவே விரும்பி முயற்சி செய்தான்.

நம்மாழ்வார் பெருங்கருணையால் முற்றிலும் உலகியலில் ஆழ்ந்து எம்பெருமானை நினையாத ஜீவர்களுக்காகக் கலங்கினார்.

கடைசியாக ஆழ்வாரின் திருவடியாகவே கருதித் தொழப்படும் எம்பெருமானாரும் பரம ரஹஸ்யமான சாஸ்த்ரார்த்தங்களைத் தாம் மிகவும் பரிச்ரமப்பட்டுப் பயின்றாலும் அவற்றைக் கற்க ஆவலுடையோர்க்கு ஒரு தகுதியும் கருதாது கற்பித்தார். அப்படிக்கற்றோர் வழியாக இந்த பர ஞானம் எல்லார்க்கும் சென்று சேரவும் வழி வகுத்தார்.

நாயனார் ஆச்சான் பிள்ளை தமது “சரமோபாய நிர்ணயம்” (http://ponnadi.blogspot.com/p/charamopaya-nirnayam.html) எனும் திவ்ய க்ரந்தத்தில் மிக விபுலமாகக் காட்டியுள்ளார்.

உபதேச ரத்தின மாலையில் மணவாள மாமுனிகள் எம்பெருமானாரை எல்லாரும் ஏற்றுப் போற்ற ஒரு தலையாய காரணம் என்று இக்கருணையையே காட்டியருளுகிறார். எம்பெருமானார்க்கு  முன்பிருந்த ஆசார்யர்களுக்கு இல்லாத ஒரு குண விசேஷம் இக்கருணை என்பதை அவர்:

“ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் —பாருலகில்
ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று
பேசி வரம்பறுத்தார் பின்”

என்கிற பாசுரத்தில் காட்டியருளினார்.

எம்பெருமானார் காலத்துக்கு முன்பு, ஆசார்யர்கள் ஞானத்தை மிகவும் தேர்ந்தெடுத்தவர்களுக்கே அளித்தனர். முதலில் மாணாக்கர்களை நன்றாகப் பரிசோதித்து, அவர்களிடம் பல காலம் கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டு, தாங்கள் த்ருப்தி அடைந்த பின்பே உபதேசம் செய்தனர். எம்பெருமானாரோ ஸம்ஸாரத்தில் சேதனர்கள் உண்மை ஞானத்தைப் பெறப் படும் துன்பத்தைக் கண்டு, தன்னுடைய சிஷ்யர்களில் 74 ஸ்ரீவைஷ்ணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை ஸிம்ஹாஸனாதிபதிகளாக்கி, அவர்களை ஆசை உடையோர்க்கெல்லாம் பகவத் விஷயத்தைக் கற்பிக்கும்படி செய்தார். தானும் பல சமயங்களில் ஆசையுடையோர்க்கு விஷயங்களைக் கற்பித்தார். ஆசார்யர்களில், எம்பெருமானார் காலத்துக்கு முன்பிருந்தவர்கள் அனுவ்ருத்தி ப்ரஸன்னாசார்யர் (சிஷ்யர்களைப் பூர்ணமாகப் பரிசோதித்து ஞானத்தை அளித்தவர்கள்) என்று அழைக்கப் பட்டனர். ஆனால் எம்பெருமானாரே முதல் க்ருபா மாத்ர ப்ரஸன்னாசார்யர் (தன் பெருங்கருணையால் சிஷ்யர்களுக்கு உயர்ந்த ஞானத்தை அளிப்பவர்)

இவ்வாறாக திருவரங்கத்து அமுதனார், பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், நாயனார் ஆச்சான் பிள்ளை, மணவாள மாமுனிகள் யாவரும் எம்பெருமானாரின் ஈடு இணையற்ற கருணை எனும் பெரும் பண்பை நமக்குக் காட்டியருளினர். அவரே நமக்கு அரண்.

ஆழ்வார் எம்பெருமானார் அமுதனார் லோகாசார்யர் நாயனாராச்சான் பிள்ளை நாயனார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் : http://ponnadi.blogspot.in/2013/05/unlimited-mercy-of-sri-ramanuja.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 7

தாமரைக் கண்ணன் எம்பெருமான்

(1)புண்டரீகாக்ஷனே பரப்ரஹ்மம்

சாந்தோக்யோபநிஷத் தாமரைக் கண்ணன் ஆன புண்டரீகாக்ஷனே பரப்ரஹ்மம் என்றது.இது, “தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ” எனும் வாக்யத்தில் தெரிவிக்கப் படுகிறது. ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் பரப்ரஹ்மனின் வடிவைத் தெரிவிக்கக் காட்டும் பல வழிகளில் இதையும் ஒன்றாகக் கொண்டருளினார்:”க:புண்டரீக நயன:” என்பது அவர் திருவாக்கு. ஆகவே, கமல நயனனான எம்பெருமான் வாசுதேவனே பரப்ரஹ்மம் என்பது ஸ்ருதி சித்த மாயிற்று.

                    [திருவெள்ளறை – புண்டரிகாக்ஷன் எம்பெருமான்]

(ii)விளக்கத்தில் விளைந்த சர்ச்சைகள்

விளக்குவதில் உள்ள ச்ரமங்கள் காரணமாக இந்த சாந்தோக்ய உபநிஷத் ச்லோகம் சர்ச்சைகளுக்கு மூலமாய் விட்டது. யாதவப்ரகாசர் இதை மிக எளிதாக விளக்க முற்பட்டு நிரசமாக உரைத்தார்.அவர், பெருமானின் கண்கள் குரங்கின் பின்பாகம் போன்றுள்ளன என்றார், இவ்விளக்கம், ப்ரஹ்மத்தின் பெருமையைப் பகராததன்றியும், ப்ரஹ்மத்தைக் கேலிப்பொருள் ஆக்கிவிட்டது. தவறான இவ்விளக்கம் சுவாமி ராமாநுசருக்குப் பெரும் மனவருத்தம் ஏற்படுத்தியது என்பது வைஷ்ணவ சம்பிரதாய வரலாறு..

ஸ்ரீ சங்கரர் இவ்வொப்புவமையை மறைமுகமாக் கூறி இக்கஷ்டத்தைத் தவிர்க்க முயற்சி செய்தார். அவர், குரங்கின் பின்பாகம் பிரமத்தின் கண்களுக்கு நேர்பட ஒப்பாகாது என்றார், மாறாக, தாமரைக்கு(புண்டரீகம்) பிரஹ்மத்தின் கண்களுக்கு  உவமை ஆகும் என்றார். இவ்வாறு ஸ்ரீ சங்கரர் ப்ரஹ்மம் புண்டரீகாக்ஷனே என்று அறுதியிடுவதிலும் மிக உயர்ந்த ப்ரஹ்மத்தின் ஓர் அம்சத்தை மிகத்தாழ்ந்த குரங்கின் பின்பாகத்தோடு ஒப்பிடாததிலும் வெற்றி பெற்றவர், ஸ்ருதி இந்தக்கட்டத்தில் தாமரை பற்றிச் சொன்னாலே  போதுமாயிருக்க ஏன் குரங்கின் பின்பாகம் பற்றிப் பேசவேண்டும் என்பதைத் த்ருப்திகரமாக விளக்கவில்லை. கப்யாசத்தைத் தாமரைக்கு ஒப்பிடுவதும் எவ்விதத்திலும் ரசமானதன்றே.

 

(iii)ஸ்வாமி ராமானுசரின் விளக்கம்

கப்யாசம் என்பது தாமரைக்கு எவ்வாறு பொருந்தும் என்பதைத் தக்கபடி காட்டி எம்பெருமானார் இந்த ஸ்ருதி வாக்யத்தைச் சூழ்ந்துள்ள சர்ச்சையை நிறைவு செய்தார். அதாவது, ப்ரஹ்மம் தாமரைக் கண்ணன் என்பதை நேர்படச் சொல்வதிலேயே வேதாந்தத்தின் நோக்கு. ”குரங்கின் பின்பாகம்” எனும் விரசத்துக்கு மாறாக, உபநிஷத் எம்பெருமானின் திருக்கண்களின் அழகை வியந்து பேசுகிறது.சுவாமி ராமானுசரின் இந்த நேர்த்தியான விளக்கத்தால் விரசமான ஒப்புவமைகளிளிருந்து வேதாந்தம் தப்பியது.

 

இராமானுசர் அருளிய மூன்று அர்த்தங்கள்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன  அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்

நீரைக் குடிப்பது கபி.சூர்யன் நீரை வற்றடிப்பதால் கபி எனப்படுகிறான்.கப்யாசம் என்பது சூர்யனால் அலற்த்தப்படுவது. தாமரைக்கு அடைமொழி ஆகி இது சூர்யனால்அப்பொழுது  அலர்த்தப்படும் தாமரையைக் குறிக்கிறது.

  

[ சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை ]

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்

கபி நீரைக் குடிப்பது எதுவோ அதைக் குறிக்கும். தாமரையின் நாளம் நீரைக் கு டிப்பதால் அது கபி. எனவே, கப்யாசம் புண்டரீகம் என்பது, நீரில் நாளத்தால் சுமக்கப்படும் தாமரையைக் குறிக்கிறது.

[கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்]

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம்  

கம் என்பது ஜலம்.நீரில் நிற்பது கப்யாசம்.இவ்விடத்தில் கப்யாசம் புண்டரீகம் என்பது ஓர் அழகிய, நீரில் தோன்றி வளர்ந்து நிற்கிற தாமரையைக் குறிக்கிறது.

[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

ச்ருதப்ரகாசிகை மூலமாக திரமிடாசார்யர் தம் உரையில் ஆறு அர்த்தங்கள் சொன்னதாக அறிகிறோம். இவற்றில் மூன்று குரங்குக் குறிப்போடுள்ளதால் அவற்றின் கசடு கருதி பூர்வ பக்ஷமாகக் கருதப் படுகின்றன.மற்ற மூன்றும் ப்ரஹ்மத்தினைக் கமலக் கண்ணனாகச் சொல்வதால் அவை யுக்தமாகக் கொள்ளப் படுகின்றன. இவ்வர்த்தங்கள்  ராமானுசரால் மிக நன்றாகவும் ஸ்ருதி வாக்யத்துக்குச் சேரவும் இனிமையாக பொருத்தமாக விளக்கப் பட்டுள்ளன.

வேதார்த்த சங்க்ரஹத்தில் ஸ்வாமியால் மிகத் தெளிவாக இவ்வேதாந்தப் பொருள் இவ்வாறு விளக்கப் பட்டுள்ளது:-.

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”

கப்யாசம் எனும் சொல் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இவ்விரிவான பொருள் தரவே தராது. ஸ்வாமியால் எவ்வாறு இவ்வர்த்தத்தை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது?

ஆழ்வார்களின் அருளிச்செயல்களை அனுபவித்தவர்களால் மட்டுமே இவ்வர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆழ்வார்களின் இத்தொடர்புள்ள சொற்களை அறிந்த மாத்திரத்தில் எவ்வாறு இந்த விளக்கம் அவதரித்தது என்பது விளங்கும்.

ஸ்வாமியின்  இவ்விளக்கம் ஆழ்வார்களின் எந்தத் திருவாக்குகளிலிருந்து பெறப் பட்டது என்பது இனி இத்தொடரில் மேல் வரும் விஷயங்களில் பெறப்படும்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/02/06/dramidopanishat-prabhava-sarvasvam-8/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org