வேதார்த்த ஸங்க்ரஹம் 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

பகுதி 7

வேதங்களின் உட்பொருள் அறிதல்

அத்வைத விமர்சம்

பத்தி 21

எல்லார்க்கும் தான் ஆத்மாவாய் ப்ரஹ்மம் இருப்பதன் பொருள் என்ன? ப்ரஹ்மம் மற்றெல்லாவற்றோடும் சேர்த்துப் பார்க்கப் படுகிறதா (ஐக்யம்) அல்லது உயிருக்கும் உடலுக்கும் போல் தொடர்புடையதா?

அது ஐக்யம் எனில், “ ‘நான் பல ஆவேன்’ என அது முடிவெடுத்தது” என்பன போன்ற பல வாக்கியங்கள் பொருளற்றது ஆகிப் போகும், ஏனெனில் ஸத்ய ஸங்கல்பத்தைச் சொல்லும்  இவ்வாக்கியங்கள் ப்ரஹ்மத்தைத் தவிர வேறெதற்கும் ஒட்டா.

ஆகவே, இத்தொடர்பு உடலுக்கும் ஆத்மாவுக்கும் உள்ளது போன்றதே, எல்லா ஆத்மாவுக்கும் அது ஆத்மாவாய் உள்ளது. “எல்லா ஆத்மாவுக்கும் ஆத்மாவானது ப்ரஜைகளின் ஆள்வோனாய் நுழைந்தது” என்பதால் இது உறுதி ஆகிறது, இப்பொருளிலேயே, ப்ரஹ்மம் எல்லாவற்றிலும் ஆத்மாவாய் நுழைகிறது, அவற்றினுள் இருந்து ஆட்சி செய்கிறது. அவற்றினுள் நுழைவதால், அவற்றின் செயல்பாடுகள் யாவற்றுக்கும் அவற்றின் ஆத்மா போல் ஆகிறது. அதுவே எல்லார்க்கும் ஆத்மா, அவற்றின் ஆத்மாவாய் இருத்தலால் அதுவே அவற்றின் எல்லா இருப்பும் தன் உடலாய் உடையதாகிறது.

“அவனே ஒவ்வோர் ஆத்மாவினுள்ளும் உறைகிறான், அவனே அவற்றை இயக்குகிறான், அவனே உன் ஆத்மா, அவனே அந்தர்யாமி = உள் உறைந்து இயக்குமவன், அவன் மரணத்துக்கு அப்பாற்பட்டவன்” என்பதால் இது தெரிகிறது.

பத்தி 22

எல்லாச் சேதன அசேதனர்களையும் ப்ரஹ்மம் தன உடலாக உடையது ஆதலால், அதுவே எல்லாச் சொற்களாலும் குறிக்கப் படுகிறது,இதுவே “தத் த்வமஸி” என்பதைப் புரிந்து கொள்ளும் வழி ஆகும்.

ஜீவாத்மா, “த்வம்” என்று குறிக்கப் படுவது ஏற்கெனவே ஓர் உடலில் உள்ளது, அதை ப்ரஹ்மத்தின் ஓர் ப்ரகாரமாக இயக்குகிறது. ஏனெனில் அதுவே ப்ரஹ்மத்தின் சரீரம். ஜீவாத்மாவால் தனித்து இருக்கவோ செயல் படவோ இயலாது என்பதால், “த்வம் “ என்பது ப்ரஹ்மம் வரை சென்று சுட்டிக் காட்டுகிறது. ச்ருதி இவ்விஷயத்தை, “ஓர் ஆத்மாவில் நுழைந்து ப்ரஹ்மம் அதற்கு நாமங்கள் ரூபங்களைத் தருகிறது” என்று குறிப்பிடுகிறது.      

”தத்”, “த்வம்“ இரு சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன. “தத்” என்பது ஜகத் காரணமான , எல்லா மங்களங்களும் நிறைந்த எக்குறைகளுமற்ற மாறுபாடுகளற்ற ப்ரஹ்மத்தைக் குறிக்கிறது. “த்வம் “ என்பது அந்த ப்ரஹ்மம் ஒரு தனி ஆத்மாவின் உள்ளுறைந்து இயக்கும் நிலையைக் குறிக்கிறது.

“தத்” ப்ரஹ்மம் காரணமாய் இருப்பதையும், “த்வம்” ப்ரஹ்மம் கார்யமாய்  இருப்பதையும் ஆக இரு வேறு நிலைகளில் இரு வேறு தொழில்களைக் காட்டுகிறது. ப்ரஹ்மம் தனி ஆத்மாவில் இருப்பதால் அதன் காரணத்வம், மங்கள குணங்கள், குற்றங்களற்ற தன்மை, மாறுபாடுகளின்மை ஆகியன பாதிக்கப் படுவது இல்லை எனும் கருத்தைத் தெரிவிக்கிறது. இவ்விளக்கம், தனி ஆத்மா ஓர் உடலில் இருந்து நியமிக்கும் நிலையிலும் ப்ரஹ்மத்தின் நிலை  வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

பத்தி 23

ச்ருதிகளைப் பயிலாதவர்களுக்கு ப்ரஹ்மமே எல்லா ஆத்மாக்கள், பொருள்களுக்கும் உள்ளுறைவது என்பது புரிந்துகொள்ள இயலாது, அவர்கள் சொற்கள் சொல்லும் குறுகிய எல்லைக்குட்பட்ட விஷயங்களை புரிந்து கொள்கிறார்கள், ச்ருதியை அறிந்தோர் ப்ரஹ்மமே எல்லார்க்கும் உள்ளுறை ஆத்மா, ஜகத் காரணம், ஸர்வ நியாமகன் என அறிகிறார்கள். எல்லாப் பொருள்களும் ப்ரஹ்மத்தையே சரீரமாக உடையனவாதலால் எல்லாச் சொற்களாலும் குறிக்கப்படும் பொருள்கள் யாவும் ப்ரஹ்மத்தின் வெவ்வேறு நிலைகளே என உணர்கிறார்கள்.

பத்தி 24

ஆனால் இது எல்லாச் சொற்களுக்குமுள்ள அர்த்தத்தைக் குலைத்துவிடாதோ? “பசு” என்பதும்  “மான்” என்பதும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் ஆயின் ஆச்சொற்களின் சிறப்பு என்ன?

இல்லை, அங்ஙனமன்று. எல்லாச் சொற்களின் பொருளும் அவ்வவற்றில் உள்ள ப்ரஹ்மத்தைக் குறித்தே பொருள் நிறைவை அடைகின்றன என்பதே காட்டப்படுகிறது. “நான் அவற்றைப் பெயர்களாலும் வடிவங்களாலும் பகுப்பேன்” என்றதன்  தாத்பர்யம் இதுவே.

எளிய காட்சிகள், அளவைகளால் உயர்ந்த பரமாத்மா அறியப்படுவதில்லை ஆதலால் இச்சொற்கள் வெவ்வேறு பொருள்களைக் குறிக்கும்போது ப்ரஹ்மத்தின் இருப்பினாலேயே நிறைவுறுகின்றன  என்று உணராது அவ்வச்சொற்களின் மேலோட்டமான பொருள்களால் குறிக்கப் படுவதை உணர்ந்தே திருப்தி அடைந்துவிடுகிறார்கள். வேதத்தின் அறிவு எப்பொருளும் தனிப் பொருள் அல்ல, அனைத்தும் ப்ரஹ்மத்தால் விளங்குகின்றன என்றும், அவற்றைக் குறிக்கும் சொற்கள் ப்ரஹ்மத்தில் நிறைவு பெறுகின்றன என்றும் உணர்த்துகின்றன.

பத்தி 25

இவ்வாறாக எல்லாச் சொற்களும் இறுதியில் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன. ப்ரஹ்மமே ஜகத்தையும் பொருள்களையும் (முந்தைய ச்ருஷ்டியில் போன்றே) படைக்கிறது, இச்சொற்கள் யாவும் வேதத்தினின்றே வருகின்றன. இவை ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன.

மநு, “வேதங்களிலிருந்து ப்ரஹ்மம் சொற்கள்,வெவ்வேறு  செயல்பாடுகள், வடிவங்களைப் படைத்தார்” என்கிறார்.

பராசரர், “ப்ரஹ்மம் பெயர்கள், எல்லாவற்றினுடைய வடிவங்கள், தேவ திர்யக் ஆதி யாவற்றையும் வேத சொற்களிலிருந்தே படைத்தது” என்கிறார்,

வேதமே, “அவனே ஸூர்யனையும் சந்த்ரனையும் முன்போன்றே படைத்து அவற்றுக்குப் பெயர்களும் தந்தான்” என்கிறது.

இவ்வாறு ஜகத், ப்ரஹ்மம் இரண்டின் பிரிக்க முடியாத தன்மை விளக்கப் படுகிறது. ஆகவே ஒரு ப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானம் ஏன் மற்றெல்லாப் பொருள்களைப் பற்றிய ஞானத்தையும் தருகிறது என்பதும் தெரளிவாகிறது. “தத் ஸத்யம்” என்பது யாவும் உண்மையே ஏனெனில் யாவற்றிலும் ப்ரஹ்மமே உள்ளது, அவை அதன் கார்யமே, ப்ரஹ்மமே அவற்றின் ஆத்மா என்பது தெரிகிறது. மண்ணால் ஆன எல்லாப் பொருள்களும் அவற்றில் மண் இருப்பதாலேயே தம் இருப்பைப் பெற்று உள ஆகின்றன அன்றோ!

பத்தி 26

ப்ரஹ்மத்தைப் பற்றிய சோதக வாக்கியங்கள் ப்ரஹ்மம் மங்கள குணங்களின் இருப்பிடம்,  எனவும் அது குறைகளற்றது எனவும் காட்டும்.

பத்தி 27

ச்ருதி வாக்யங்கள் எதெது ப்ரஹ்மம் இல்லை  என்று விவரித்து ப்ரஹ்மத்தைச் சொல்வன என்றாலும், ப்ரஹ்மம் உயர்ந்த விஷயம் என்றே ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு உயர்ந்த விஷயத்தை மற்றவையினின்ரும் வேறுபடுத்தி வேதம் உணர்த்துகிறது என்றே அறிய வேண்டும். “இது இல்லை” என்று சொல்ல வேண்டிய கட்டாயம் பிரமத்தின் விஷயத்தில் உள்ளது, ஏனெனில் அது தனிச் சிறப்புடையது, மற்றெதுவும் போல் அல்லாதது.

வேதம் மிக உயர்ந்த விஷயத்தைப் பற்றி பேசுகின்றன. ஒருகுணமும் இல்லாத நிர்குண வஸ்துவை அல்ல.

விவரணம்

அத்வைதி வேதம் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே விளக்கி, ப்ரஹ்மம் பண்புகளற்றது என்கிறார். இது விமர்சிக்கப்படுகிறது. முதலில், ‘ஞானம்’ என்பதை ‘அறிவற்றது அன்று’ என்றோ, ‘உண்மை’ என்பதை பொய் அல்லாதது என்றோ சொல்ல வேண்டிய தேவை இல்லையே. இவை நேர்பட விளக்கப் படக் கூடிய சொற்கள். எதிர்மறை விளக்கம் தேவை இல்லை, இது குழந்தைத் தனமான வெறும் சொல் விளையாட்டு. இதன்படி, அறிவற்றது என்பதையும் அறிவு இல்லாதது எனலாமா அல்லது ‘அறிவுள்ளது என்று சொல்ல முடியாதது’ எனலாமா? அஸத்யம் என்பதைப் பொய் என்பதா, சத்யம் ஸல்லாதது என்பதா? இச்சொற் சிக்கலில் நாம் மாட்டிக் கொண்டால் வேத வாக்கியங்களின் மெய்ப் பொருள் விட்டு விலகிப் போவோம்.

சொற்களின் எதிர்மறைப் பொருள்களை விடலாகாது என்றே சாதித்தாலும், நாம் உடன்பாடான பொருளுள்ள விஷயத்தை விட்டிடுவோம். ப்ரஹ்மம் எல்லா நல் இயல்புகளும் நிறைந்தது என்றே சித்திக்குமே ஒழிய அத்வைதி அவசரமாக முடிவெடுப்பது போல இயல்புகள் அற்றதாகாது. ப்ரஹ்மத்தின் உயர்ந்த குணங்களைச் சொல்ல சொற்கள் இல்லாமல் வேதம் தடுமாறுகிறது – அவ்வளவே !

ஓர் உலகியல் உதாஹரணம் காண்போம். அளவையியல் பௌதிக சாஸ்த்ரத்தில் ஓர் துகளின் பண்பை அதன் துளி இயல்பிலோ அல்லது அலை இயல்பிலோ காணலாம். துளி இயல்பில் மட்டும் அல்லது அலை இயல்பில் மட்டும் காணலாகாது என்று அறிந்தே இவ்வாறு பேசுகிறோம்.  நமக்குத் தெரிந்த சொற்களைக்கொண்டு நம் நேர் புலன்களுக்கு அப்பாற்பட்ட இவற்றை விவரிக்கிறோம். இவை பண்புகள் அற்றவை – துளியும் இல்லை, அலையும் இல்லை – என்று சொல்லி புத்தகத்தை மூடி விடுவது இல்லையே!

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/03/07/vedartha-sangraham-8/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

Leave a comment