ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அர்த்த பஞ்சகம் – ஐந்து அடிப்படைக் கோட்பாடுகள்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< தத்வ த்ரயம்

இறுதிப் பொருளாக அடையப்படவேண்டிய பகவானின் ஆறு நிலைகள் – பரத்வம் (பரமபதத்தில் உள்ளபடி), வ்யூஹம் (திருப்பாற்கடலில் உள்ளபடி), விபவம் (ராம க்ருஷ்ணாத்யவதாரங்கள்), அந்தர்யாமி (ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் இருக்கும் நிலை), அர்ச்சை (இல்லங்களிலும் கோவில்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்தி), ஆசார்யன்.

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும்  வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்

……பட்டர் அருளிய திருவாய்மொழித் தனியன்

ஆழ்வார் திருநகரித் தலைவரான நம்மாழ்வார், இனிய இசையில் ஐந்து உறுதிப் பொருள்களை  அருளிச் செய்தார்: பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனின்  பரமாத்ம ஸ்வரூபம், நித்யமான ஜீவாத்ம ஸ்வரூபம், எம்பெருமானை ஜீவன் அடையத் தக்க வழியான  உபாய ஸ்வரூபம், அடைவதில் இருக்கும் கர்மம் முதலான தடைகளான விரோதி ஸ்வரூபம், அடையப்படும் இறுதிப் பலனான கைங்கர்யம் உபேய (பல) ஸ்வரூபம்.

சுருக்கமாக, அர்த்த பஞ்சகம் எனில் ஐந்து உறுதிப் பொருள்கள், அறிய வேண்டிய புருஷார்த்தங்கள் என்று பொருள். பிள்ளை லோகாசார்யர் இவற்றை நாம் எளிதில் அறிந்துகொள்ளும் வண்ணம்  அழகாக (ஆசார்யன் மூலமாக அறிய வேண்டிய) ரஹஸ்ய க்ரந்தமாக மிக்க கருணையோடு  அருளிச் செய்துள்ளார்.

அவர் திருவுள்ளப்படி இவை:

  • ஜீவாத்மா (ஆத்மா) ஐவகையினர்:
    • நித்ய ஸூரிகள் – ஸ்ரீ வைகுண்டம் ஆகிய பரமபதத்தில் எப்போதும் வசிக்கும் வைகுண்ட வாசிகள்
    • முக்தாத்மாக்கள் – வைகுண்டம் சென்று சேரும் தளைகள் நீங்கிய ஆத்மாக்கள்
    • பத்தாத்மாக்கள் – உலகியலில் ஸம்ஸாரத்தில் கட்டுண்டுழலும் ஆத்மாக்கள்
    • கேவலர்கள் – ஸம்ஸாரத் தளைகளிலிருந்து விடுபட்டு, பகவத் கைங்கர்யமாகிற பெரும் பேற்றில் ஆசையின்றி மிகத் தாழ்ந்ததான ஆத்மானுபவம் எனும் கைவல்ய மோக்ஷம் பெற்ற கேவலர்கள்
    • முமுக்ஷுக்கள் –  ஸம்ஸாரத்தில் இருக்கும், பகவத் கைங்கர்யப் பேற்றினை விரும்பி வேண்டிக் கிடக்கும் ஆத்மாக்கள்.
  • ப்ரஹ்மம், பரமாத்மா, இறைவன். இவனது ஐந்து நிலைகள்:
    • பரத்வம் – பரம பதத்திலுள்ள மிக உயர்ந்த நிலை
    • வ்யூஹம் – க்ஷீராப்தியில் உள்ள ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தாதி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் செய்யும் நிலைகள்
    • விபவம் – ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் (பல)
    • அந்தர்யாமித்வம் – அவனே உள்ளுறையும் பரமனாக ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும்  இருத்தல்
    • அர்ச்சை – எம்பெருமான் கோயில்களிலும், மடங்களிலும், க்ருஹங்களிலும் இருக்கும் நிலை
  • புருஷார்த்தம் – புருஷனால் விரும்பப்படுபவை:
   • தர்மம் – எல்லா ஜீவர்களின் மங்களம் பொருட்டும் செய்யப்படும் கர்மங்கள்
   • அர்த்தம் – சாஸ்த்ரம் விதித்தபடி பொருள் ஈட்டி அதை சாஸ்த்ரோக்தமாகச் செலவிடுவது
   • காமம் – உலக இன்பங்கள் அநுபவித்தல்
   • ஆத்மாநுபவம் – தன்னைத் தானே அனுபவிக்க ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்ட நிலை
   • பகவத் கைங்கர்யம்: இதுவே பரம புருஷார்த்தம். யாவச் சரீர பாதம் (சரீரம் இருக்கும் வரை) இங்கு எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து, சரீரம் வீழ்ந்தபின் பரமபதத்தில் சென்று அவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்தல்
  • உபாயம் – வழி –  ஐந்து வகை உண்டு:
   • கர்ம யோகம் – யாகம் (வேள்வி), தானம்(ஈகை), தபஸ் (தவம்) முதலியவற்றால் ஆத்ம ஞாநம் பெறல். இது ஞான யோகத்துக்கு உபாங்கம். உலகியலில் நோக்குள்ளது.
   • ஞான யோகம் – கர்ம யோகத்தால் பெற்ற ஞானத்தை உபயோகித்து ஹ்ருதய சுத்தியோடு பகவானை த்யானித்துத் தன ஹ்ருதயத்தினுள்ளே அவனையே சிந்தித்து எப்போதும் அவனுள் ஆழ்தல். இது கைவல்யத்தில் சேர்க்கும்.
   • பக்தி யோகம் – ஞான யோகத்தின் உதவியோடும் இடையறாத ஈச்வர த்யானத்தாலும் மலங்கள் அறுத்து எம்பெருமானின் உண்மை நிலையை அறிந்து இருத்தல்.
   • ப்ரபத்தி – எல்லாவற்றிலும் எளிதும், இனிமையானதும் எம்பெருமானிடம் சேர்ப்பது. ஒரு முறையே செய்யப்படுவது. பின் செய்வன எல்லாம் இதை நமக்கு நினைவுபடுத்திக் கொள்வதவ்வளவே. கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்ய அசக்தர்க்கும், அவற்றை அனுஷ்டிப்பது ஸ்வரூப விரோதம்/ஸ்வரூப நாசம் என்றிருப்போர்க்கும் எம்பெருமானே யாவும் என்றிருக்கும்  இதுவே நெறி.  இதில் இரு வகை: ஆர்த்த ப்ரபத்தி இனி ஒருக் கணமும் எம்பெருமானை விட்டிருக்கலாகாது என ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பு ஏற்பட்டுத் தவிப்பது; த்ருப்த ப்ரபத்தியாவது ஸம்ஸாரம் கொடிது ஆகிலும் எம்பெருமான் விட்ட வழி என அவன் அருளையே எதிர் நோக்கி பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் செய்து இருத்தல்.
   • ஆசார்ய அபிமாநம்:- இவ்வொன்றையும் அனுஷ்டிக்க இயலாதோர்க்குக் கருணையே வடிவெடுத்த ஆசார்யன், தம் கை தந்து, பூர்வாசார்யர்கள் காட்டிய நெறியில் சிஷ்யனைப் புருஷகாரம் செய்து மந்த்ரோபதேசம் முதலியவற்றால் வழி நடத்தி, பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொண்டருள்தல். குறிப்பு: இங்கே நாம் எம்பெருமானாரையே நம்மை ஸம்ஸாரத்தில் இருந்து மீட்டெடுத்து உஜ்ஜீவித்து அருளும் உத்தாரக ஆசார்யனாகவும், நம்முடைய ஸமாச்ரயண ஆசார்யனை எம்பெருமானாரிடம் நம்மைச் சேர்க்கும் உபகாரக ஆசார்யனாகவும் எண்ணுவது பொருந்தும். நம் ஸம்ப்ரதாயத்தில் பற்பல ஆசார்யர்கள் எம்பெருமானார் திருவடியே தஞ்சம் என்பதைப் பல இடத்திலும் எடுத்துக் காட்டியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html பார்க்கவும். மணவாள மாமுநிகள் ஆர்த்தி பிரபந்தத்திலே எம்பெருமானாரை ஸர்வவித பந்துவாகக் கொண்ட வடுக நம்பியை உதாஹரித்து இதைக் காட்டியுள்ளார்.
  • விரோதிகள் – உஜ்ஜீவனத்துக்குத் தடைகளாய் வருவன.இவை ஐந்து:
   • ஸ்வரூப விரோதி – சரீரத்தை ஆத்மா என மயங்குதல், எம்பெருமானை விட்டுப் பிறர்க்கும் அடியனாய் இருத்தல்.
   • பரத்வ விரோதி – தேவதாந்தரங்களையும் பெரிதாக எண்ணி அவற்றை எம்பெருமானொடொக்க நினைத்தல், வணங்கல்; அவதாரங்களை மானிடப் பிறப்பாய் மயங்குதல்; அர்ச்சாவதார எம்பெருமானுக்கு முழு சக்தி உண்டென்று நம்பாதிருத்தல்.
   • புருஷார்த்த விரோதி – பகவத் கைங்கர்யம் தவிர இதர விஷயங்களில் பற்றோடு ஏங்கி இருப்பது.
   • உபாய விரோதி – ப்ரபத்தி மிக எளிதாகையால் பேற்றுக்கு உதவ வல்லதன்று எனப் பிற சாதனங்களை உபாயம் என மயங்குதல்.
   • ப்ராப்தி விரோதி – ஆத்மாவின் அபிலாஷையாகிய ஈச்வர ப்ராப்தியை உடனே தடுக்கும் விரோதி நம் சரீரம். இது உள்ளவரை பகவத் ப்ராப்தி நடவாது. மேலும் பாபங்கள், பகவதபசாரம், பாகவதபசாரம், அஸஹ்யாபசாரம்  முதலியவை.

லோகாசார்யர், அர்த்த பஞ்சக ஞானம் பெற்றபின் ஒரு முமுக்ஷுவின் அன்றாட வாழ்வியல் எப்படி இருக்க வேண்டும் என அத்புதமாக ஸாதித்துள்ளார்:-

எம்பெருமான் முன்பே வினயமும், ஆசார்யன் முன்பே அறியாமையும், ஸ்ரீவைஷ்ணவர் முனே அவரையே நம்பியுள்ள சார்பு விச்வாசமும், தன் உடைமை யாவும் ஆசார்ய ஸமர்ப்பணையாயும், தன் உடலைப் பாதுகாக்கும் அளவுக்குத் தேவையான செல்வத்தை மட்டும் கொண்டவனாகவும், தனக்கு உய்வளித்த ஆசார்யன் பால் பக்தியும் நன்றியுமுள்ளவனாயும் இருக்க வேண்டும்.

இஹலோக ஐச்வர்யங்கலில் நிரபேக்ஷையும் ஈச்வர விஷயத்தில் அபேக்ஷையும் ஆசார்ய விஷயத்தில் ஆசையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் அன்பும் ஸம்ஸாரிகள்  பால் வ்யாவ்ருத்தியும் (அவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்கும் நிலை) வேண்டும்.

பேற்றில் ஆசையும், உபாயத்தில் விசுவாசமும், விரோதிகள் விஷயத்தில் பயமும், சரீரத்தில் வெறுப்பும் பற்றின்மையும், சரீரம் அநித்யம் என்னும் உறுதியும், பாகவதர்பால் பக்தியும் வேண்டும்.

இப்படி இவற்றை அறிந்து அனுஷ்டானத்தில் நிலையாய்  இருக்கும் ப்ரபன்னனை எம்பெருமான் தன் தேவியர்களையும்விட நேசிக்கிறான்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://ponnadi.blogspot.com/2015/12/artha-panchakam.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s