வரதன் வந்த கதை 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 4

 

ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் தலைவனாக தான் எம்பெருமானாலே நியமிக்கப்பட்டிருந்தும், தேவகுரு சாபத்தால் பூமியில் அலைந்தான் பிரமன்.

பதவி பறி போய்விடும் என்றால் யார் தான் விசனப்பட மாட்டார்கள். அதிலும் பிரம பதவி என்பது எத்தனை உயர்ந்தது .

ஆயிரங்கோடி யுகங்கள் பகவானைப் பூசித்து, பிரமன் இவ்வுலகங்களைப் படைக்கும் தகுதியை ( மீண்டும் ) அடைகின்றானாம் !!

அப்படி அரும்பாடுபட்டுப் பெற்ற பெருஞ்செல்வம் இப் பிரமபதவி !

ஆயிரம் அச்வமேதங்கள் செய்தால் தான் பதவி நிலைக்கும் ! சரி ! ஆயிரம் வேள்விகள் வளர்ப்பது நிச்சயமாகி விட்டது . பதவியைக் காப்பாற்றிக் கொள்வது இருக்கட்டும் ! நாம் ஏன் இறைவனை தரிசிப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது ?!

பாரத தேசம் வந்து, வேள்வி(களு)க்கான சரியான இடம் தேடி அலைந்து கொண்டிருந்தான் . வேள்வி விடை தெரியாக் கேள்வியாய் அவனை வாட்டிக் கொண்டிருந்தது !

முதலில் தன் பலத்தில் , தன் முயற்சியினால் இறையனுபவம் பெற விழைந்திட்ட பிரமனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது !

நிலவைப் பிடிக்க முயன்று , அது கை கூடாத வருத்தத்தில் அழும் குழந்தையைப் போல் ஓவென அழலானான் வாணீ நாதன் !

பிறகு தான் நம் முயற்சியினால் அவனை அடைவது சிரமம் என்பதனையும், அவனைக் கொண்டே அவனை அடைய வேண்டும் என்பதனையும் நன்கு புரிந்து கொண்டான் !

அவனை (பரமனை) நம்புவதொன்றே வழி ! அவனே வழி காட்டுவான் என்று உளமாற நம்பினான் ! ” நம்பிக்கையே பலம் ” என்று உணர்ந்தான் !

சிரமமான தருணத்திலும் மிகச் சரியான முடிவெடுத்தான் பத்மாஸனன் !

அப்போது தான் அசரீரி வார்த்தையைக் கேட்டான் !

என்ன பிரம தேவா !! நலமா ?

அசரீரி இப்படிக் கேட்கவும் , இது ; தான் தரிசிக்க விரும்பும் பரமாத்மாவின் குரல் தான் என்று (அயன்) புரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை !

பெருமானே ! நலமா என்றா தேவரீர் (நீங்கள்) வினவுவது!? என் நிலைமையை என்னை விட நன்கு அறிந்தவரன்றோ நீர் !!

உள்ளுவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிபவரன்றோ நீர் !

“யஸ் ஸர்வஜ்ஞ: ஸர்வ வித் ” என்று உம்மை அனைத்தும் அறிந்தவர் என்றன்றோ வேதாந்தம் அறைகின்றது !

மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸுஹ்ருத் கதி : நாராயண : என்கிறபடியே சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் எந்தமக்கு நீரே அன்றோ !

ஆனால் நாங்களோ உம்மை மறந்து , எங்களையே பெரியவர்களாகக் கருதிக் கொண்டு அஹங்கரித்துத் (நான் , எனது போன்ற தீய குணமுடையவர்களாய்) திரிபவர்களானோம்.

நீ கொடுத்த படைப்புத் தொழிலைச் செய்யும் நான் , நீ தான் என்னுள் இருந்து (அந்தர்யாமியாய்) அனைத்தையும் செய்கிறாய் என்பதனை மறந்து, என்னை விடப் பெரியவன் யாருமில்லை என்று எத்தனை ஆட்டம் போட்டிருக்கிறேன் தெரியுமா?

சாதாரண ஜீவனான நான் உனதருளால் அன்றோ பிரம பதவியில் இருக்கிறேன். ஆயினும் ஒரு நாளும் உனக்கு நான் நன்றி சொன்னதில்லையே !

தெய்வத்திடம் எதனையும் கேட்டுப் பெறாதே ! அவன் இதுவரை நமக்குத் தந்திருப்பவைகளுக்கு நன்றி சொல்ல மட்டும் அவனிடம் செல் என்று அற நூல்கள் சொல்லியிருப்பதை மறந்து , இது நாள் வரை நாங்கள் யாசிப்பதற்கு மட்டும் தானே உன்னைச் சேவித்திருக்கிறோம்.

இறைவா ! எங்கள் அறியாமை கண்டு உன் மனது எத்தனை வாட்டமடைந்திருக்கும் ! அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட்டதே இல்லையே !

இன்று பார் , என் செயல்களுக்குத் தகுந்த தண்டனை அடைந்து விட்டேன் !

மனைவி விட்டுப் பிரிந்தாள். ப்ருஹஸ்பதி சாபம் தந்தார் . என் நாற்காலி நழுவியது ! ஆயிரம் அச்வமேத யாகங்கள் செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானேன் !

வேள்வி செய்ய சித்த சுத்தி முக்கியம்! தபஸ்ஸினால் தான் சித்த சுத்தி உண்டாகும்! தபஸ் செய்ய சமம் தமம் (உட்புலன் மற்றும் வெளிப்புலனடக்கம்) முதலான குணங்கள் தேவை ! அவைகள் உண்டாக ஒரு காலாலே நின்று, கைகளைக் குவித்துக் கொண்டும் , மூச்சடக்கிப் பார்த்தும், அந்தர்யாமியான உன்னைக் காண மனம் பக்குவப்படவேயில்லை !

நான் மொத்தமாகத் தோற்றுப் போனேன் ! கானல் நீர் தேடியோடும் சிறுமானைப் போலே ஆகி நிற்கிறேன் இப்பொழுது என்று கதறித் தீர்த்தான் பிரமன் !

சிரித்தது அசரீரி !

மனிதர்களில் சிலரைப் போலே , ஒரு முறை நலமா என்று கேட்டதற்கு மொத்தப் புராணத்தையும் சொல்லி விட்டாயே !!

கவலை வேண்டாம் !! உன் துயர் தீர்க்கவே யாம் பேசுவது !! மனத்தினை ஒருமுகப் படுத்த முடியாமல் நீ தவிப்பது புரிகிறது ! பதவி அதிகாரத்தில் பன்னெடுங்காலம் நீ ஆனந்தங்களை மட்டுமே தொடர்ச்சியாக அனுபவித்து வந்தபடியாலும், உன்னுடைய கர்மாவின் காரணமாகவும் நீ தற்சமயம் சிரமப்படுகிறாய் !!

ப்ருஹஸ்பதி ஆயிரம் அச்வமேதங்கள் உன்னால் செய்யப்படவேண்டும் என்று சரியாகத் தான் சொல்லியிருக்கிறார் !

ஏனெனில் அப்போது தான் உனக்கு மனத்தெளிவு ஏற்படும் என்றது அசரீரி !!

வாய் பிளந்து நின்றான் வாணீசன் !!

அவன் நெஞ்சம் இரு பிளவாக போகாமல் நின்றதில் அவனுக்கே வியப்பு தான் !

அவன் கலக்கம் கண்டு ஆகாச வாக்கு அவனுக்கு விரைவாக இதமுரைக்கத் ( நன்மை உரைக்க ) தொடங்கியது !

நான்முகனே ! உன் கவலை புரிகிறது ! அச்வமேத வேள்வி செய்வதும் கடினம். அதுவும் ஆயிரம் வேள்விகள் !! சொல்லவே வேண்டாம் எத்தனை சிரமமென்பதை ! கால தாமதத்தாலும் நீ அல்லலுறுவாய் !

அஞ்சாதே ! உனக்கு ஒரு சுலபமான வழி சொல்கிறேன் ..கேள் .. ஒரு வேள்வி செய்தாலே , ஆயிரமல்ல ..கோடி வேள்விகள் செய்த பலனை நமக்குப் பெற்றுத் தரக் கூடிய ஒரு இடம் இருக்கிறது ! அதனை உனக்குச் சொல்லட்டுமா? என்று வான் குரல் வினவவும் ;

கரங்களை குவித்தவனாய் , மண்டியிட்டு ஆகாசத்தை நோக்கினவனாய் , பெருகி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பிரமன் பேசலானான் !

ப்ரபோ ! உடனே அவ்விடம் யாதென்று சொல்லுக ! செல்வதற்கு அடியேன் சித்தமாயிருக்கிறேன் என்றான்..

அசரீரியும் சற்றே மௌனமாயிருந்து , பின்பு இன்னமும் உரத்த குரலினால் ” ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் செல் ” “ஸ்ரீ ஹஸ்திகிரியே ” உனக்குப் புகல்; அங்கு வேள்வி செய் என்றது !

பிரமன் ஆனந்தமடைந்தவனாய் , உடனே தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினான்!

ஒரு முறை சொல்லிப் பார்த்தான்

“ஸத்யவ்ரத க்ஷேத்ரம் – ஸ்ரீ ஹஸ்திகிரி”

சொன்னதும் அவனுக்கு அது” தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகத் தித்தித்தது ”

நாமும் ஸத்யவ்ரத க்ஷேத்ரம் – ஸ்ரீ ஹஸ்திகிரி என்று சொல்லிக் கொண்டே அடுத்த பகுதிக்குக் காத்திருப்போம் !

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thought on “வரதன் வந்த கதை 5

  1. Pingback: Story of varadha’s emergence 5 | SrIvaishNava granthams

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s