திருவாய்மொழியும் அர்த்தபஞ்சகமும்

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

ச்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதன் ஏற்றத்தை பரமாசார்யரான நம்பிள்ளை ஈட்டிலே “ஆழ்வாருக்குப் பின்பு நூறாயிரம் கவிகள் போறும் உண்டாய்த்து. அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியற அவற்றை விட்டு இவற்றைப் பற்றி துவளுக்கைக்கு அடி, இவருடைய பக்தி அபிநிவேஶம் வழிந்து புறப்பட்ட சொல் ஆகையிறே!” என்று கொண்டாடியருளுகிறார். கவி என்று பேர் கொண்டவர்கள் ஆழ்வார் திருவவதாரத்திற்குப் பின்பு தோன்றியுள்ளார்கள். ஆயினும், அவர்கள் கவிகளை நம் பூர்வர்கள் கைக்கொள்ளுவதில்லை.  ஆனால் இவ்வாழ்வார்களின் அருளிச் செயல்கள் இல்லை என்றால் உற்சவங்களும் விழாக்களும் பொலிவிழந்து போகும் என்று வியந்து கம்பர் தம்முடைய சடகோபர் அந்தாதியில் குறிக்கும் பொழுது – அந்தமிலா மறையாயிரத்தாழ்ந்தவரும் பொருளைச் செந்தமிழாகத் திருத்திலனேல் நிலத்தேவர்களுந் தந்தம்விழாவும் அழகும் என்னாம்? (சடகோபர் அந்தாதி – 14) [அழிவில்லாதனவும் அநேக ஆயிரம் சாகைகளாக உள்ளனவுமான வேதங்களின் சாரார்த்தத்தை தமிழ்த் திவ்ய ப்ரபந்தங்களாகச் சீர்திருத்தி அருளிச் செய்யாதிருந்தாரானால் அந்தணர்களும் அவர்கள் கொண்டாடும் உத்ஸவங்களும் எங்ஙனம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயும் யாதாய் முடியும்] என்று குறித்தருளுகிறார். ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில் இவ்வாழ்வாரின் திருவாய்மொழி அனுபவத்திற்குத் தடையாக எழுந்தருளினார் என்று கோஷ்டி கலைக்கும் பெருமாள் வந்தார் என்று செல்வர் புறப்பாடினை நிறுத்திக் கொண்டார்கள் என்றால் – அதன் மூலம் திருவாய்மொழியின் ஏற்றம் நன்கு விளங்கும்.

DSC01004.JPG

ஆழ்வார்களில் வேதம் தமிழ் செய்த மாறன், ஶடகோபன் – அஜ்ஞானத்திற்குக் காரணமான ஶடம் என்னும் வாயுவை நிரஸித்தவர், மற்றைய ஆழ்வார்களைத் தனக்குத் அங்கங்களாகக் கொண்டவர் என்ற பெருமைகள் உடையவர் நம்மாழ்வார். இவர் அருளிச் செய்த நான்கு ப்ரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழிக்கு மற்றைய ஆழ்வார்கள் அருளிச்செய்த செய்தவைகள் அங்கங்களாகவும் உபாங்கங்களாகும் உள்ளன. இது “வேத சதுஷ்டய அங்கோபாங்கங்கள் பதினாலும் போலே இந்நாலுக்கும் இருந்தமிழ் நூற்புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன்மாலைகளும்” (43) என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை கொண்டு உணரத்தக்கது. இவருடைய அருளிச்செயலான திருவாய்மொழிக்கு, கல்பந்தோறும் சதுர்முக ப்ரஹ்மாவிற்கு வேதத்தினைக் கொடுத்தவனான ஸ்ரீரங்கநாதன் வேதஸாம்யத்தைப் ப்ரஸாதித்தருளினான். இதுதன்னை கோயில் ஒழுகிலும், ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த கலியன் அருள்பாடு என்னும் க்ரந்தத்திலும் காணலாம். இதனை த்ராவிட வேத ஸாகரம் என்றார் ஸ்ரீமந் நாதமுனிகள். வேதத்தின் லக்ஷணங்கள் அனைத்தும் இத்திருவாய்மொழிக்கு உண்டு என்பதை வேத நூல், இருந்தமிழ்நூல் (45) என்னும் சூர்ணிகையினால் காண்பித்தருளுகிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். இந்த திவ்ய ப்ரபந்தத்திற்கு வேதத்தோடுள்ள ஸாம்யமானது ஆசார்ய ஹ்ருதயத்தில் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரால் நன்கு நிலை நாட்டப்பட்டது குறிக்கொள்ளத் தக்கது. இதற்கு த்ரமிடோபநிஷத் என்றே திருநாமம்.

இத்தகைய பெருமை வாய்ந்த திருவாய்மொழியின் ப்ரமேயம் (திருவாய்மொழியினால் அறிந்து கொள்வது) அர்த்த பஞ்சகம் ஆகும். மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்

என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார். அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும், மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும், தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும்,  வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று. ஆக (1) பரமாத்ம ஸ்வரூபம் , (2) ஜீவாத்ம ஸ்வரூபம் , (3) உபாயஸ்வரூபம், (4) விரோதி ஸ்வரூபம், (5) புருஷார்த்த ஸ்வரூபம் ஆகிய ஐந்து ஞானமே அர்த்த பஞ்சகம் என்பதாகும். இது தன்னை ஹாரீத ஸ்ம்ருதியில்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]

என்ற ஶ்லோகம் தெரிவிக்கிறது. இதன் திரண்ட பொருள் – அடையத்தக்க பரம்பொருளின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மை, அடையும் வழி, அடைந்து பெறும் பயன், அடைவதற்குத் தடை ஆகியவற்றை இதிஹாஸ புராணங்களோடு கூடிய வேதங்களும் வேதஶப்தார்த்தங்களையறியும் மஹாபுருஷர்களான முனிவர்களும் ஆழ்வார்களும் உரைக்கின்றனர். இந்த ஶ்லோகம் முமுக்ஷுப்படியில் வ்யாக்யானம் அருளிச்செய்யுமிடத்து பெரிய ஜீயர் காண்பித்தருளுகிறார். அதற்கு அரும்பதம் அருளிச்செய்த எம்பாவய்யங்கார் ஸ்வாமி முநயஶ்ச மஹாத்மந: என்பதற்கு மஹாத்மாக்களான முநிகள் என்பதால் – வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா என்று கீதாசார்யன் அருளிச் செய்தபடி இங்கு ஆழ்வார்களே குறிக்கப்படுகிறார்கள் என்று காட்டியுள்ளார் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது.

arththa panchakam

இதன் ஏற்றத்தை பூர்வாசார்யர்கள் பலபடிகளாலும் பேசியுள்ளார்கள்.

 1. ஸ்ரீ பாஷ்யத்திலும் இவ்வர்த்த பஞ்சகம் சொல்லுகிறது என்று கொள்ள இடமுண்டு. முதல் இரண்டு அத்யாயங்களான ஸமந்வயம் மற்றும் அவிரோத அத்யாயாங்களாலே எம்பெருமானே ஜகத்காரணன் என்பதை சொல்வதினால் பரஸ்வரூபமும், ஆத்மாதிகரணம் முதலானவற்றில் ஜீவாத்மாவின் ஸ்வரூபமும், மூன்றாவது அத்யாயத்தில் முதல் பாதமான வைராக்ய பாதத்தினால் விரோதி ஸ்வரூபமும், அதற்கு மேல் உபாஸநம் சொல்லுவதால் உபாய ஸ்வரூபமும், அதற்கு மேல் புருஷார்த்தமான ப்ரஹ்ம ப்ராப்தியையும் சொல்லுவதால் அர்த்த பஞ்சகம் சொல்லியாயிற்று.
 2. அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதற்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்” என்கிறார் பிள்ளைலோகாசார்யர்.
 3. இதனை “ஞாதவ்ய பஞ்சகஜ்ஞானம்” என்கிறார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அதாவது அறிந்து கொள்ள வேண்டிய அர்த்தம் அர்த்தபஞ்சகம் என்கிறார். மேலும் அதனை அறிகையே பிறப்பு இறப்பு ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கும், அதனை அறிந்து கொள்ளாமையே பிறப்பு இறப்பு சுழியில் சிக்கிக் கொள்வத்ற்கும் காரணம் என்கிறார்.
 4. ஸப்தகாதையில் இதனை “அஞ்சுபொருள்” என்கிறார்.

இனி திருவாய்மொழியில் அர்த்த பஞ்சகம் அமைந்திருக்கும் படியை பார்க்கலாம். திருவாய்மொழி மொத்தம் 100 பதிகங்களால் ஆனது. அதில் இவ்வர்த்தத்தை மொத்தம் 20 பதிகங்களில் விசதமாக்கி மற்ற 80 பதிகங்களில் இது தன்னையே பரக்க அருளிச் செய்துள்ளார் ஆழ்வார். இப்பொழுது முக்கியமான 20 பதிகங்கள் (ஒவ்வொரு ஜ்ஞானத்திற்கும் 5 பதிகங்கள் ) – அவற்றைப் பார்க்கலாம்.

பர ஸ்வரூபம்:

பர ஸ்வரூபம் என்றால் ஸகல கல்யாண குணநிதியாய், அகில ஹேயப்ரத்யநீகநான (தோஷங்களுக்கு எதிர்த்தட்டான) பராத்பரனான ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்வரூபம். அதனைப் ப்ரதிபாதிக்கும் (சொல்லும்) திருவாய்மொழிகள்,

 1. உயர்வற உயர்நலம்
 2. திண்ணன்வீடு
 3. அணைவதரவணை
 4. ஒன்றுந்தேவும்

         உயர்வறயுயர்நலம் உடையவன் என்று தொடங்கும் 1ம் பத்து முதல் திருவாய்மொழி பரத்வத்தில் பரத்வம் சொல்லுகிறது என்பர் ஆசார்யர்கள். இதில் எம்பெருமான் “தம் ஈஶ்வராணாம் பரமேஶ்வரம்” (ஶ்வேதாஶ்வரோபநிஷத் ) என்கிறபடியே பரர்களுக்கு எல்லாம் பரனாய் ஸர்வஸ்மாத் பரனாய் இருக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்.

முதல் பாசுரம்  உயர்வறவுயர்நலம்  *உயர்வறவுயர்நலம் உடையவன்* என்பதினால் கல்யாணகுண யோகத்தையும், *அயர்வறும் அமரர்கள் அதிபதி* என்பதினால் நித்ய விபூதியோகத்தையும், *சுடரடி* என்பதினால் திவ்ய விக்ரஹத்தையும் அருளிச்செய்கிறார். திருவடியைச் சொன்னது திருமேனிக்கு உபலக்ஷணம்.

 

ஸர்வாதிகமான (எல்லாவற்றைக் காட்டிலும் மேலான) பரப்ரஹ்மத்திற்கு லக்ஷணம் (அஸாதாரணமான பண்பு) கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாயும் தோஷங்களுக்கு எதிர்த்தட்டாயும் இருக்கை. இதுவே உபயலிங்கம் எனும் அடையாளங்கள். இதனை அஸங்கேய (கணக்கற்ற) அநவதிக (அவதி – எல்லை – அநவதிக – எல்லையில்லாததான) திருக்கல்யாண குணங்களை உடையவன் என்பதை – உயர்வறவுயர்நலம் உடையவன் என்றார்.

இரண்டாம் பாசுரம் மனனகமலமற எல்லாவித தாழ்வுகளுக்கும் எதிர்த்தட்டாகவும் எல்லையில்லாத திருக்குணங்களையும் உடையவனாய் இருக்கும் எம்பெருமான் – சேதனம் எனப்படும் அறிவுள்ள சித் மற்றும் அசேதனம் எனப்படும் அறிவில்லாத அசித் ஆகிய இரண்டு வஸ்துக்களைக் காட்டிலும் அத்யந்த விலக்ஷணன் என அவனது மேன்மையை அருளிச் செய்கிறார்
மூன்றாம் பாசுரம் இலனது நித்ய விபூதி (விபூதி என்பது ஐஶ்வர்யத்தைக் குறிக்கும்) போலே லீலா விபூதியும் அவனுக்கு சேஷம் – அவனுக்கு உரியது என்கிறார்
நான்காம் பாசுரம் ஆய் நின்ற அவரே இந்த லீலா விபூதியுனுடைய ஸ்வரூபம் பரமாத்மாவிற்கு அதீனம் என்கிறார். எப்படியென்னில், (1) ஸ்ருஷ்டியில் இதை உண்டாக்குவது பரமாத்மா தான், (2) வஸ்துக்கள் வஸ்துக்களாகும்படி அநுப்ரவேஶித்ததும் அவன்தான், (3) இது அழியும் பொழுது ஸூக்ஷ்மமாகத் தன்னிடம் ஒடுங்கும்படி செய்வதும் அவன்தான்.
ஐந்தாம் பாசுரம் அவரவர்  இனி ஸ்திதியும் (இருப்பு) அவனது அதீனம் என்கிறார். அதாவது ஸர்வர்க்கும் அந்தர்யாமியாய் நின்று ரக்ஷிப்பது எம்பெருமான் என்கிறார்.
ஆறாம் பாசுரம் நின்றனர் இருந்தனர் கிடந்தனர்  இங்கு ஶப்தங்கள் பன்மையாகப் படிக்கப்பட்டுள்ளன. அதனால் எம்பெருமானைத் தவிர்ந்த அனைத்தின் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி அவனது அதீனம் என்பது இங்கு தெளிவு.
ஏழாம் பாசுரம் உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே
ஏழாம் பாட்டில் ஜகத்துக்கும் ஈஶ்வரனுக்கும் உள்ள ஶரீராத்மபாவத்தை அருளிச்செய்கிறார். *சுடர் மிகு சுருதியுள் உளன்” என்பதினால் வேதத்தினால் சொல்லப்படும் பரம்பொருள் எம்பெருமான் என்கிறார். இங்கு “* சுடர்மிகு சுருதியுள் * என்கையாலே நாராயணாநுவாகாதிகளில் சொல்லுகிற பரத்வம் லக்ஷ்மீ ஸம்பந்தம் இவையெல்லாம் அங்கீகரித்தாகிறார் *” என்னும் ஈட்டு ஸ்ரீ ஸூக்தி அனுஸந்திக்கத்தக்கது.
எட்டாம் பாசுரம் பரபரன் பரபரன் என்பதே உயிரான பதம். ஸர்வஸம்ஹர்த்தாவாய் (உலகில் ஸம்ஹரிக்கிறவன் என்று பெயரெடுத்தவர்களையும் மஹாப்ரளயத்தில் ஸம்ஹரிக்கிறவனாய்), ஸர்வஸ்ரஷ்டாவாய் (ஸர்வத்தையும் படைப்பவனாய்) ஸர்வாந்தர்யாமியான (அனைவருக்கும் அந்தர்யாமியான), ஸர்வேஶ்வரனே பரபரன் என்கிறார்.
பரபரன் – பர:பராணாம் பரம: பரமாத்மாத்ம ஸம்ஸ்தித: | ரூபவர்ணாதி நிர்தேஶ விஶேஷண விவர்ஜித: || (ஸ்ரீ விஷ்ணுபுராணம் 1-2-10) (மேலானவற்றைக் காட்டிலும் மேலானவனும் தன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லாதவனும் தனக்குத்தானே ஆதாரமாய் இருப்பனுமான பரமாத்மா ரூபம் நிறம் முதலியவை, நாமம் ஆகிய ப்ராக்ருத விஶேஷணங்கள் அற்றவன்) என்கிறபடியே ப்ரஹ்மாதிகளுக்கும் பரனாகையாலே பராத்பரன் என்றபடி.
பத்தாம் பாசுரம் கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே * அணோரணீயாந் மஹதோ மஹீயாந் * என்று ஶ்ருதி ஓதியபடியே பரதத்த்வமானது அணுக்களிலும் அந்தர்யாமியாய் எங்கும் பரந்துளன் என்றருளிச் செய்தார். இதனால் அவனது வ்யாப்தியை அருளிச் செய்தாராயிற்று
பதினொன்றாம் பாட்டு. வரனவில் திறல்வலி அளிபொறையாய் நின்ற பரன்  பஞ்சபூதங்களுக்கும் அஸாதாரணமான ஶப்தாதி குணங்களுக்கு நிர்வாஹகனாய் பரனாய் நிற்பவன் ஸர்வேஶ்வரன்

இப்படிப் பரக்க எம்பெருமானின் பரத்வத்தை பேசினார் நம்மாழ்வார் “உயர்வற உயர்நலம் உடையவன்” பதிகத்தில். அதிலும் அவற்றைத் தான் மயர்வற மதிநலம் அருளப்பெற்றதால் நேரே அனுபவித்துப் பின்பு அவற்றைப் பேசினார். அதுவும் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்கிறார். இவ்வளவு அர்த்தங்களையும் சுருக்கி ஸ்ரீமத் வரவரமுனிகள் தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு
மயர்வேத நேர்கொண்டுரைத்து – மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு. (திரு. நூ. 1)  என்றருளினார். உயர்வே பரன்படியை என்பதினால் பரத்வே பரத்வமும், உள்ளதெல்லாம் தான் கண்டு என்பதினால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று ஆழ்வார் அவை அனைத்தையும் கண்டதையும், மயர்வேத நேர் கொண்டு உரைத்து என்பதினால் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்ததையும் இப்பாசுரத்தில் அருளினார் ஆயிற்று.

திண்ணன் வீடு என்னும் பதிகத்திலும் ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தை அருளினார் ஆழ்வார். முதலில் உயர்வற உயர்நலம் பதிகத்தில் ஶ்ருதியைக் கொண்டு பரத்வம் சொன்னாற்போலே, இந்தப் பதிகத்தில் இதிஹாஸ புராணங்களைக் கொண்டு அவனது பரத்வத்தைப் ப்ரதிபாதிக்கிறார் (சொல்லுகிறார்) இந்தப் பதிகத்தில். அப்படி அருளிச்செய்தவைகளாவன

 • மாபாவம் விட அரற்குப் பிச்சைபெய் * கோபாலகோளரி ஏறன்றியே. (2-2-2)
 • தேவனெம்பெருமானுக்கல்லால் * பூவும் பூசனையும்தகுமே (2-2-4)
 • தகுங்கோலத் தாமரைக்கண்ணனெம்மான் (2-2-5)
 • புள்ளூர்தி கழல்பணிந்தேத்துவரே (2-2-10)

இப்பதிகந்தன்னில் ஈட்டில் சில மேற்கோள்கள் இதிஹாஸத்தில் இருந்து காட்டப்பட்டுள்ளன. சிலவற்றை மட்டும் பரத்வம் சொல்லுவதைப் பார்க்கலாம்.

க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய: |
க்ருஷ்ணஸயஹி க்ருதே பூதமிதம் விச்வம்சராசரம் || (மஹாபாரதம் பீஷ்ம பர்வம்)
உலகங்களுடைய உத்பத்தியும் க்ருஷ்ணன் தான்; ப்ரளயமும் க்ருஷ்ணன் தான் என்பது ப்ரஸித்தம். ஜங்கம ஸ்தாவரமாயிருக்கிற ஸகலமான இந்த ப்ராணி ஸமூஹமானது க்ருஷ்ண நிமித்தமாக இருக்கிறது.

யச்ச கிஞ்சிந்மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவரஜங்கமம் |
தத் பச்யமஹம் ஸர்வம் தஸ்ய குக்ஷௌ மஹாத்மந: || (மஹாபாரதம் ஆரண்யம்)
உலகத்தில் சராசராத்மகமான யாதொன்று என்னால் பார்க்கப்பட்டதோ அவை எல்லாவற்றையும் நான் ஈச்வரனுடைய வயிற்றில் பார்த்தேன்

இதனை உட்கொண்டே ஸ்ரீமத் வரவரமுனிகள் * திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை – நண்ணி அவதாரத்தே நன்குரைத்த * என்றருளினார்.

*அணைவது அரவணை மேல்* என்பது இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி ஆகும். ஈட்டில் இதன் அவதாரிகையில் பரத்வம் சொல்லுகிறது என்பதற்கு இரண்டு யோஜனைகள் காட்டப்பட்டுள்ளன. முதலாவது “தீர்த்தன் உலகளந்த சேவடி மேல்” என்கிற 6வது பாசுரத்தில் உள்ள * பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை” என்பது கொண்டு இங்கு பரத்வம் பேசப்படுகிறது என்பது ஒரு நிர்வாஹம். அர்ஜுனன் தினமும் பரமஶிவனுக்கு ஒரு புஷ்பம் ஸம்ர்பிப்பது வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு தினம் ஸமர்ப்பிக்க முடியாமல் போகவே – அன்று கண்ணன் எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கவே மறுநாள் பரமஶிவனின் முடியில் அந்த புஷ்பத்தைக் கண்டான். இனி பராஶர பட்டர் – முதல் பாசுரமான * அணைவது அரவணை மேல் * என்பதினால் எம்பெருமான் நித்ய சூரிகள் அனுபவிப்பது போன்று மோக்ஷம் அருளக் கூடியவன் என்று கொண்டு – அதனால் பரத்வம் சொல்லுகிறது என்று நிச்சயித்தார். ஆழ்வார் இப்படி மோக்ஷப்ரதத்வத்தை (மோக்ஷம் கொடுக்க வல்லவனாயிருக்கை) தனியாக அருளிச் செய்ததை அடியொற்றியே யாமுநமுனியான ஆளவந்தாரும் தம்முடைய ஸ்தோத்ரரத்னத்தில் – “த்வாதாஶ்ரிதாநாம்” என்கிற ஶ்லோகத்தில் மோக்ஷப்ரதத்வத்தையும் சேர்த்து அனுபவித்தார். இப்படி பட்டர் நிர்வாஹத்தையே முக்கியமாகக் கொண்டார்கள் நம் பூர்வர்கள்.

1

அடுத்ததாக 4ம் பத்து கடைசி தஶகம் – * ஒன்றுந்தேவுமுலகுமுயிரும் * என்கிற பதிகத்தால் அர்ச்சையில் பரத்வம் சொல்லுகிறது. * ஸதேவ ஸௌம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம் * – என்று ஶ்ருதி சொன்னபடியே ஶ்ருஷ்டிக்கு முன்பு வேறு ஒருவரும் இல்லாத நிலைமையில், அனைத்தையும் தன்னுடன் ஒட்டி வைத்துக் காப்பாற்றி, அனுப்ரவேஶம் பண்ணியருளி அனைவரையும் படைத்ததைக் கொண்டு இங்கு அர்ச்சையில் பரத்தவத்தை ஸாதித்தருளுகிறார்

 • நான்முகன் தன்னோடு தேவருலகோடுயிர் படைத்தான்- ஆதிப்பிரான்
 • நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் – புகழாதிப்பிரான்

ஈட்டில் இந்த பதிகத்தின் ப்ரவேஶத்தில் அத்புதமாக எம்பெருமானின் பரத்வம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு ராமானுஜபதாச்சாயரான ஸ்வாமி எம்பார் வார்த்தையாக ஒன்று ஈட்டில் காட்டப்பட்டுள்ளது – “ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை அடுப்பிடு கல்லாக பாவிப்பர்கள்”. ஆழ்வார் இத்திருவாய்மொழி அருளிச் செய்தபின்பு, அதை உணர்ந்ததனால் எம்பெருமானின் பரத்வத்தை அறிந்து கொண்டு – மற்றைய தேவர்கள் அடுப்பில் வைக்கும் கல் போன்று கொள்வர்கள் என்று – அதாவது மோக்ஷம் பராத்பரனாலேயே கொடுக்க முடியும். எனவே மற்றவர்களால் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆவது ஒன்றுமில்லை என்றபடி.

ஜீவாத்ம ஸ்வரூபம்:

பரமாத்ம ஸ்வரூபத்தைப் பார்த்த அநந்தரம் ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லும் திருவாய்மொழிகளைப் பார்க்கலாம். ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லும் திருவாய்மொழிகள்

 1. பயிலுஞ் சுடரொளி (3-7)
 2. ஏறாளும் இறையோனும் (4-8)
 3. கண்கள் சிவந்து (8-8)
 4. கருமாணிக்க மலைமேல் (8-9)

          ஸ்ரீவசனபூஷணதிவ்ய ஶாஸ்த்ரத்தில் ஆசார்ய அக்ரேஸரரான பிள்ளை லோகாசார்யர் * அஹங்காரமாகிற ஆர்ப்பைத் ஆத்மாவிற்கு அழியாத பேர் அடியான் என்றிரே *  என்றருளுகிறார். அதாவது தேஹமே ஆத்மா, மற்றும் நான் ஸ்வதந்த்ரன் என்னும் இரு வகையான அஹங்காரம், மமகாரம் என்னும் அழுக்கு – ஆசார்ய உபதேசத்தால் நீங்கும் போது – ஆத்மா உள்ளவரை இருக்குமது தாஸத்வம் என்பதாகும். ஆத்மா நித்யமாகையாலே தாஸத்வமும் நித்யம் என்பது கருத்து. அந்த தாஸத்வமும் ஹரியின் அடியார்கள் வரை செல்லும் என்பதை * உற்றதும் உன்னடியார்க்கடிமை * என்பதாக, அடியார்களுக்கு அடியவனாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபத்தை * பயிலுஞ் சுடரொளி * திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார். இத்திருவாய்மொழியில்

 • எம்மையாளும் பரமர் (3-7-1)
 • எம்மையாளுடை நாதரே (3-7-2)
 • எம்மையாளுடையார்களே(3-7-3)
 • சன்மசன்மாந்தரம் காப்பரே (3-7-6)
 • எம்தொழுகுலம் தாங்களே (3-7-8)

என்றும் அருளிச்செய்து, முடிவில் * இவைபத்து அவன் தொண்டர்மேல் முடிவு * என்றது குறிக்கொள்ளத்தக்கது. இந்தப் பதிகத்தில் உள்ள பத்து பாசுரங்களுக்கும் விஷயம் அவன் தொண்டர்கள் என்றாராயிற்று.

     இனி * ஏறாளும் இறையோனும் * பதிகத்தில், அவனது திருவுள்ளத்திற்கு வேறுபடில் ஆத்மாவும் வேண்டா என்பது தேறிய கருத்தாகும். இங்கு ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு வேண்டா எனில் எனக்கும் வேண்டா என்றருளிச் செய்கிறார். ஆத்மீயம் என்றால் – ஆத்மாவுடையது என்றபடி. இதனால் தேறுவது என் என்னில் – எம்பெருமானுக்காக என்றால் தான் ஆத்மாவும் கைக்கொள்ளத்தக்கது என்பதை எதிர்மறையாக உணர்த்தியருளுகிறார் ஆழ்வார். இதனை அடியொற்றியே ஸ்ரீ ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ரரத்னத்தில் * ந தேஹம் ந ப்ராணாந் * [ஆத்மா என்று அபிமானம் கொள்ளாம்படி இருக்கும் தேஹம், ப்ராணன், தேவர்களும் ஆசைப்படும் ஸுகம், பிள்ளைகள், நண்பர்கள், ஆத்மா – இவையனைத்தும் உனக்கு புறம்பாகில் ஒரு க்ஷணகாலமும் ஸகிக்கமாட்டேன். இதைப் பொய்யாக விண்ணப்பித்தேனாகில் – உன்னிடத்தில் மது என்னும் அரக்கன் பட்டது படுகிறேன்] என்கிற ஶ்லோகத்தில் இவ்விஷயத்தையே அருளினார்.  இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகளும் * ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்கவுயிர் – தேறுங்கால் என்றனக்கும் வேண்டாவெனுமாறன்றாளை * என்றருளினார். – இதன் தேறின அர்த்தம் – “பெரிய பிராட்டியாரை தன் திருமார்பில் கொண்ட ஈசன் திருவுள்ளவுகப்புக்கு வேறுபட்டால் உடைமையும், ஆத்மாவும் ஆராயுங்கால் எனக்கு வேண்டியதில்லை” என்பதாகும்.

      அடுத்து *கண்கள் சிவந்து* என்னும் பதிகத்தினால் ஆத்மவஸ்து எம்பெருமானுக்கு சேஷம் என்றும், ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறாய் (தேஹாதிகளைக் காட்டிலும் வேறாய்) ஜ்ஞாநம் ஆநந்தங்கள் இரண்டையும் கொண்டிருப்பது என்று ஆத்ம தத்வத்தினைத் தெரிவித்தருளுகிறார். அதாவது * அடியேனுள்ளான் உடலுள்ளான் * என்று ஆத்ம தத்த்வத்தை தெரிவித்தருளும் பொழுது அடியேன் என்று அது பரமாத்மாவிற்கு தாஸன் என்பதை அறிவிக்கும் முகமாக அடியேன் என்ற சப்தத்தை உபயோகப்படுத்தியருளினார். இது * தாஸபூதா ஸ்வதஸ்ஸர்வே ஆத்மாஹி பரமாத்மந: * (இயற்கையாகவே ஆத்மாவானது பரமாத்விற்கு அடிமைப்பட்டவன் ) என்பது முதலான ப்ரமாண வசனங்கள் இங்கு விவக்ஷிதம். * சென்று சென்று பரம்பரமாய் * என்பதினால் தேஹம், ப்ராணன், மனஸ் ஆகியவை ஒன்றுக்கொன்று மேம்பட்டதாய் அவைகளில் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்) ஆத்மா என்று ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறானவன் என்று தெரிவித்தருளினார். *  நன்றாய் ஜ்ஞாநம் கடந்ததே * – ஆத்ம ஸ்வரூபமானது ஜ்ஞாநம் மற்றும் ஆநந்தம் இவை கொண்டே அறிய வேண்டியது; நன்றாய் ஜ்ஞாநம் என்றதால் ஆநந்தமாயிருப்பதும் – ஆநந்தமென்பது அநுகூல ஜ்ஞாநமாகையாலே அதனால் ஜ்ஞாநம் சொன்னதாயிற்று. இதனால் ஆத்மா ஜ்ஞாந ஆநந்தங்கள் உடையவன் என்பதாயிற்று.

    ஆத்மாவானது பகவானுக்கு அடிமைப்பட்டிருக்கும் என்பது கீழேயே சொல்லப்பட்டது. அந்த விலக்ஷணமான ஆத்ம ஸ்வரூபம் தானும் தனக்கு என்றில்லாமல் எம்பெருமானுக்கே அநந்யார்ஹ சேஷமாயிருக்கும் (பிறர்க்கு அர்ஹமாகாமல் அவனுக்கே சேஷமாயிருக்கும்) என்பதனை *கருமாணிக்க மலை மேல் * (8-9) என்னும் திருவாய்மொழியில் தோழிப் பேச்சாக ஆழ்வார் அருளிச் செய்கிறார். இது தானும் அறிதியிடுவது * படவரவணையான் நாமமல்லால் பரவாளிவள் *, * திருப்புலியூர் புகழன்றிமற்று – பரவாளிவள் * *திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே – அன்றி மற்றோருபாயம் என் இவளந்தண்டுழாய் கமழ்தல் * இவை கொண்டு .  ஸ்ரீமத் வரவரமுனிகள் இதனை – * திரமாக அந்நியருக்காகாது அவன்றனக்கேயாகுமுயிர் அந்நிலையையோரு நெடிதா * (திரு. நூ – 79) என்றருளிச் செய்தார் – ஸ்ரீ க்ருஷ்ண பகவான் விஷயத்தில் ஒரு கன்னிகையின் அவஸ்தையை அடைந்து – அத்விதீயமாய் விலக்ஷணமான ஸம்ஸ்லேஷ லக்ஷணங்களைத் தோழிப் பேச்சாலே அருளிச் செய்யப் புகுகையாலே ஸ்திரமாக ப்ராப்த ஶேஷி (ஶேஷி – கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்பவன்; ப்ராப்த ஶேஷி – ஒரு காரணமன்றிக்கே இயல்பாக அமைந்த ஶேஷி) சேஷமாகிற ஆத்ம ஸ்வரூபம் பிறருக்கு சேஷமாகாமல் அவனுக்கே சேஷமாகும் நிலைமையை தீர்க்கமாக ஆராயுங்கோள் – என்பது அந்தப் பாசுரத்தின் தேறின அர்த்தம்.

விரோதி ஸ்வரூபம்:

விரோதியானது – கீழ்ச்சொன்னபடி பகவானுக்கே அடிமையான ஆத்ம வஸ்து அவனைக் கிட்டி வாழ்ச்சி பெறாது தடை செய்யுமவையாம். இந்த விரோதி வர்க்கத்தைச் சொல்லும் திருவாய்மொழிகள்

 • வீடுமின் முற்றவும் (1-2)
 • சொன்னால் விரோதம் (3-9)
 • ஒருநாயகமாய் (4-1)
 • கொண்ட பெண்டிர் (9-1)

இவற்றுள்  * வீடுமின் * பதிகத்தில் எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களின் தோஷங்களை அறிவித்து அதை விட, நாடு நலத்தால் அடைய நன்கு உரைக்கிறார் ஆழ்வார். மேலும் அவற்றைப் பற்றுவதற்கு அஹங்காரம் (நான் நான் என்று நினைப்பது), மமகாரம் (என்னுடையது என்று நினைப்பது) ஆகிய இரண்டுமே ப்ரதான காரணம் ஆதலால் அவற்றை * நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து * என அவற்றை அடியோடு விடச் சொல்கிறார் இத்திருவாய்மொழியில்.  இங்கு * அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யா மதி: | அவித்யா தருஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் * (6-7-11) என்கிற ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் நினைக்கத்தக்கது. [தான் அல்லாத தேஹத்தில் தான் என்கிற நினைவும், தன்னுடையதல்லாத பொருள்களில் தன்னுடையது என்கிற நினைவும் ஸம்ஸாரத்தில் அவித்யையாகிற காம்யகர்மங்களெனும் மரம் வளர்வதற்குறுப்பான விதைகளாகும்] .

          இனி ஸேவை செய்வது எம்பெருமானுக்கே என்றும் – மற்றவர்களுக்கு ஸேவை செய்வது அஸேவ்ய ஸேவையாகும் (செய்யத் தகாததாகும்) என்பதனை * சொன்னால் விரோதமிது * என்னும் திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார். * என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள் * – முதலான இப்பதிகத்தில் உள்ள பாசுரங்கள் இதனைத் தெரிவிப்பன. இப்படி அஸேவ்ய ஸேவை செய்தால் த்ருஷ்டமும் (கண்ணால் தெரியும் பலனும்), அத்ருஷ்டமும் (ஐஹிஹ லோக பலங்களும்) கிடைக்காது – மாறாக அநர்த்தமே ஸித்திக்கும் என்பது இப்பதிகத்தில் அறிய வேண்டியது.

      ஒரு புருஷனால் வேண்டப்படுவது புருஷார்த்தமாகும். அது நான்கு வகைப்படும். ஐச்வர்யம் (இது இரு பிரிவு – இழந்த செல்வம், புதிதாக வேண்டும் செல்வம்), கைவல்யம் (ப்ரக்ருதி ஸம்பந்தம் ஒழித்து பகவானை அனுபவிக்காமல் தன்னைத் தானே அனுபவித்தல்) மற்றும் பகவல்லாபம். இவற்றுள் ஐச்வர்யம், கைவல்யம் இரண்டும் அல்பம் அஸ்திரம் ஆகையால் விட வேண்டியது. இதனை * மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே இனிதாம் * என்று மாமுனிகள் அருளிச் செய்கிறார். அதனையும் * ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் * என்பதால் இவ்வுலகம் அனைத்தையும் தன் ஆட்சியின் கீழ் என்னும்படி வாழ்ந்தாலும், அது நிரந்தரமில்லை – * பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் * என்றுரைத்தார். இனி ஸ்வர்க்க லோகாநுபவமோ என்னில் * க்ஷீணே புண்யேமர்த்த்யலோகம் விஶந்தி * (புண்யம் அழிந்தவாறே அங்கிருந்து விழுகிறார்கள்) என்பதை * குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தி மீள்வர்கள் * என்றார். இது ப்ரஹ்மலோகானுபவம் வரை உபலக்ஷணம். இவை போல் அஸ்திரமாக இல்லாமல் இருந்தாலும் தன்னைத் தான் அனுபவிப்பதாகிற கைவல்யம் – * இறுகலிறப்பு * என பகவதனுபவத்தைப் பார்த்தால் தோஷமாயிருக்கும்.

       ஆர்க்கும் ஹிதம் தன்னையே பார்க்கும் கீர்த்தியுடைய மாறன் * கொண்ட பெண்டிர் * பதிகந் தன்னில் சரீர ஸம்பந்தத்தினால் வரும் அனைத்தும் த்யாஜ்யம் (விட வேண்டும்) என்பதை தெளிவாக உரைத்தருளினார். சரீர ஸம்பந்தங்கள் அனைத்தும் கர்மமடியாக வருபவை. * கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை * என்கிறார் ஆழ்வார். நிருபாதிக (ஒரு காரணம் பற்றி இல்லாமல்) ஸம்பந்தியான ஈஶ்வரனைப் பற்றினால் அவன் * அடியார்க்கென்னை ஆட்படுத்தும் * என்றபடி அவனது அடியவர்களுடன் சேர்த்து விடுகிறான். அதுவே ஆத்மவிற்கு ஹிதம்.

உபாயஸ்வரூபம்:

உபாயமாவது இவ்வாத்ம வஸ்துவின் ஸ்வரூபத்திற்குச் சேர செய்ய வேண்டியது ஆகும். இது தெரிவிக்கும் திருவாய்மொழிகள்

 • நோற்ற நோன்பிலேன் (5-7)
 • ஆராவமுதே (5-8)
 • மானேய் நோக்கு நல்லீர் (5-9)
 • பிறந்தவாறும் (5-10)

திருவாய்மொழி

தெரிவிக்கும் கருத்து

நோற்ற நோன்பிலேன்

கைமுதலில்லாமை – பேறு பெற்றுத் தருவதற்கு – வேறு உபாயங்கள் ஒன்றும் செய்யாமை. ஶரணாகதி அநுஷ்டிக்கும் பொழுது வேறு உபாயங்கள் ஒன்றும் நம் கைகளில் இல்லை என்றும் – நமது தீய வ்ருத்தங்களையும் சொல்லிக் கொண்டே அநுஷ்டிக்க வேணும், இதனை * நோற்ற நோன்பிலேன் * என்றார். சரி பேற்றுக்கு என்ன உபாயம் என்னில் – * ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * என எம்பெருமானே உபாயம் என்றபடி. மற்றைய உபாயங்கள் ஸாத்யோபாயங்கள் (சேதனனுடைய செயலாலே ஸாதிக்க வேண்டுபவை). எம்பெருமானோ என்னில் ஸித்தோபாயம் (ஸித்தமாக இருக்கிறான்)

ஆராவமுதே

கீழே ஆகிஞ்சன்யம் அருளிச் செய்தார். இங்கு எம்பெருமானை விட்டால் வேறு கதியில்லை என்பது தோன்றும்படி * களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன் * (எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி, களையாவிட்டாலும் சரி வேறு சரணமுடையேனல்லேன்) என அநந்யகதித்வத்தை அருளிச் செய்கிறார். ப்ரபந்நர்களுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக வேண்டும் 1) ஆகிஞ்சன்யம் – எம்பெருமானைத் தவிந்தவை உபாயாந்தரங்கள் எனப்படும் – கர்ம ஜ்ஞான பக்தியோகங்கள். இவைகளில் கை வைக்காமல் இருக்கை ஆகிஞ்சன்யம் ஆகும். 2) அநந்யகதித்வம் – உன்காரியமாகிற மோக்ஷம் அளிப்பதில் நீ எப்படியிருந்தாலும், என் காரியத்தில் நான் என்னுடைய  * நம்மேல் வினைகடிவான்- எப்போதும் கைகழலாநேமியான் *  என்னும் நிஷ்டை (இருப்பு) குலையமாட்டேன். இப்படி அநந்யகதிவம் முன்னாக * கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன் *  – கண்ணபிரானுடைய திருவடிகளையே தஞ்சமாகக் கொள்ளுகை என்பதை இந்தப் பதிகத்தால் வெளியிட்டார்.

மானேய் நோக்குநல்லீர்

* நாமங்களாயிரமுடைய நம்பெருமானடிமேல் சேமங்கொள் * என்னும்படி ஆயிரம் திருநாமங்களையுடைய ஸர்வேச்வரன் திருடிகளிலேயே தம்முடைய க்ஷேமபாரங்களையெல்லாம் வைக்கையும், அவைகளின் மேல் அத்யவஸாயம் உடையவராய் இருக்கையும்.

பிறந்த வாறும் வளர்ந்த வாறும்

* நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று, * , எம்பெருமான் திருக்குணங்கள் *எனதாவியை நின்றுநின்று உருக்கியுண்கின்ற*,  *என்னையுன் செய்கை நைவிக்கும்*  *வந்தென்னெஞ்சையுருக்குங்களே* என சிதிலப் பண்ணினாலும், சரணம் புகுந்தவர்களை எம்பெருமான் கைகொள்ள வேண்டாம் என நினைத்தாலும் அப்படி உபேக்ஷிக்க விடாதே கைகொள்ளப்பண்ணும் இயல்வினன் திருவனந்தாழ்வான்; அவர்மீது கண் வளர்ந்து அடியார்களுக்கு உபகாரகனாயிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று இடையறாத அத்யவஸாயம் கொள்ளுகை ஆழ்வார் இத்திருவாய்மொழியில் உபதேஸிக்கும் அர்த்தம் ஆகும்.

2

புருஷார்த்த ஸ்வரூபம்:

புருஷார்த்தம் என்பது – புருஷனால் அர்த்திக்கப்படுவது. இதுவும் கீழே நிருபித்த அத்யந்த பாரதந்த்ரயனான ஜீவாத்மாவின் தன்மைக்குச் சேர இருக்க வேண்டும். இதனை நிருபித்த திருவாய்மொழிகள்

எம்மாவீட்டுத் திறமும் செப்பம் (2 – 9)
ஒழிவில் காலமெல்லாம் (3 – 1)
நெடுமாற்கடிமை (8-10)
வேய்மருதோளிணை (10 – 3)

* எம்மா வீட்டுத் திறமும் * என்கிற திருவாய்மொழி அருளும் அர்த்தம் மிகவும் சீர்மையானது. நம் பூர்வாசார்யர்கள் மிகவும் சீர்மையான அர்த்தங்களை * எம்மா வீடு * என்றே குறிப்பிடுவர்கள். இனி இதில் இருக்கும் அர்த்தத்தைப் பார்க்கலாம். ஆழ்வார் அனைவருக்கும் எம்பெருமான் மோக்ஷப்ரதன் (மோக்ஷத்தை அளிக்க வல்லவன்) என்று உபதேசித்ததைப் பார்த்த எம்பெருமான் – ஆழ்வாருக்கு மோக்ஷத்தில் ஆசையுள்ளது என்று கொண்டு, ஆழ்வாருக்கு மோக்ஷத்தைப் ப்ரஸாதிக்க திருவுள்ளமானான். அதைப் பார்த்த ஆழ்வார் – ” எம்பெருமானே! எனக்காகக் கொடுப்பதனால் மோக்ஷமும் புருஷார்த்தம் அன்று என்று நிர்த்தாரணம் பண்ணியருளி, எம்பெருமானே! நீ பரமபதத்தில் என்னை வைக்கவுமாம், அல்லது ஸம்ஸாரமாகிற மருகாந்தாரத்திலே வைக்கவுமாம் – எனக்கு ஒன்றுமில்லை. உனக்கு திருவுள்ளமே எனக்கு வேண்டுவது ” என்று புருஷார்த்த ஸ்வரூபத்தை அருளிச் செய்தார். கைங்கர்யத்தில் தனக்காகப் பண்ணுவது என்பது ஸ்வார்த்தமாகும். அதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

இந்த கைங்கர்யமும் ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் செய்ய வேண்டும் என்பதை * ஒழிவில் காலமெல்லாம் * என்ற திருவாய்மொழியினால் உண்ர்த்துகிறார்.

 • * சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து* (3-3-2) அதாவது – “எம்பெருமானுடைய ஸௌசீல்ய குணத்திலே ஈடுபட்டவர்களாய் ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமான நித்தியஸூரிகள் அனைவரும் *சென்னியோங்கு தண் * திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி திவ்யபுஷ்பங்களை எடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்; அந்தப் புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பூவார்கழல்களில் யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க முடியாதவர்களாய் சீலகுணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றன;” என்பதினால் உடம்பினால் செய்யும் கைங்கர்யத்தையும்,
 • * தெண்ணிறைச்சுனை நீர்த்திருவேங்கடத்து * (3-3-3) என்பதினால் தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய மனஸ்ஸு இருக்கும்படியையும் அதனால் செய்யும் கைங்கர்யத்தையும்,
 • * ஈசன் வானவர்க்கென்பன் * (3-3-4) என்பதினால் நித்யர்களைச் சொல்லி அவர்கள் இருக்கும்படியான * நம இத்யேவ வாதிந* என்று அவர்கள் எம்பெருமானால் போகம் அனுபவிப்பர்களாய் அந்த போகத்தினால் வரும் ஆனந்தமும் எங்களதன்று என்பதற்காக நம: நம: என்று உரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதினால் வாசிகமான கைங்கர்யத்தையும் காட்டியருளினாராயிற்று,

இதனால் அனைத்து வகையான கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் என்பதை அருளிச் செய்தாராயிற்று. இதனையும் * வேங்கடத்துறைவார்க்கு நம* (ஸ்ரீவைகுண்ட வாஸத்தை விட்டு திருமலையிலே நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு நம:) என்பதினால் தன் போகத்திற்காக என்னும் புத்தி நிவ்ருத்தியும், * சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே * (பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை அளிக்கும்) என்பதினால் அக்கைங்கர்யத்தை அளிப்பதும் திருமலையாழ்வாரே என்றதாயிற்று. இதனால் அந்த கைங்கர்யம் தானும் * வழுவிலா அடிமையாயிருக்கும் * என்பதனை அருளிச் செய்தாராயிற்று.

இந்த கைங்கர்யம் தானும் எம்பெருமானோடு மட்டும் இல்லாமல், அவனது அடியார்கள் வரை போக வேண்டும் என்பதை * நெடுமாற்க்கடிமை * (8-10) பதிகத்தால் அருளிச் செய்தார். இதுவே பரம புருஷார்த்தம். அதிலும் இப்பதிகந்தன்னில் அவனது * தனிமாத் தெய்வமான * எம்பெருமானின் அடியார்கள் திறத்தில் அடிமையாம் அளவன்றிக்கே அவ்வடிமை நிலையில் எல்லை நிலம் என்று அனுஸந்தித்துக் காட்டுகிறார். *சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் * (ஸ்வயம் பிரயோஜநமாக கைங்கர்யத்தின் எல்லையிலே நிலை நின்ற அடியவர்களுடைய திருத்தாள்கள் வணங்கி) * அவனடியார் நனிமாக்கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே * (ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சேர்க்கையே எப்பொழுதும் வாய்க்க வேண்டும்) * கோதில் அடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே! * (கோதற்ற அடியார்க்கு அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே அடியேனுக்கு வாய்க்கவேணும்) இங்கு குறிக்கொள்ளத் தக்கது.

இறுதியாக * வேய்மருதோளிணை * பதிகத்தில் புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லப்படுகிறது. இதனை “ பரஸம்ருத்த்யேக ப்ரயோஜனத்வத்தைச் சொன்ன ” (அவனுடைய திருமுகமலர்த்தியே பேறாக) என்கிறார் ஸ்ரீமத் வரவரமுனிகள். இப்பதிகந்தன்னில் * உகக்கு நல்லவரொடுமுழிதந்து உன்தன் திருவுள்ளமிடர் கெடுந்தொறும் நாங்கள் வியக்கவின்புறுதும் எம்பெண்மையாற்றோரும் * என்கிற பாசுரம் தன்னில் இவ்வர்த்தம் சொல்லப்பட்டது. ஆழ்வார் இப்பதிகந்தன்னில் கண்ணன் எம்பெருமான் நம்மை விட்டு பசு மேய்க்கப் போனான் என்று இடைப் பெண்கள் பேசும் பேச்சாகப் பேசினார். க்ருஷ்ணனை என்னை விட்டுவிட்டு பசு மேய்க்கிறேன் என்று போகாதே எனப் பல காரணங்களைச் சொன்னார். அதில் இப்பாசுரத்தின் முந்தைய பாசுரத்தில் * நீ உகக்குநல்லவரொடும் உழிதராயே * (உனக்குப் பிடித்த ஸ்த்ரீகளுடன் இங்கேயே இரு) என்றார். இதனைக் கேட்ட கண்ணபிரான் “இப்படி நீங்கள் சொல்லுகிறது உண்மை தானோ? நான் போகாமைக்காகச் சொல்லுகிற வார்த்தையே தவிர, உங்களருகே நான் வேறு சில பெண்களோடே இருந்தல் அதை நீங்கள் பொறுத்துக் கொள்வீகளோ?” என்று கேட்டான். அதற்கு பதில் கூறுவதாக இருந்து கொண்டு நம் ஸ்வரூபத்திற்குத் தக்க புருஷார்த்தத்தைத் தெரிவிப்பது இப்பாசுரம்; உன்னோடு நாங்கள் இருப்பதைக் காட்டிலும், நீ உன் திருவுள்ளத்தில் உகப்பாக இருப்பவர்களோடு இரு, அதனால் நாங்களடையும் உகப்பே எங்களுக்கு உயர்ந்தது என்கிறார் இப்பாட்டில்.
* எம் பெண்மையாற்றோம்* – உன் சந்தோஷத்திற்கு வேறாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு வேண்டோம்; உன் சந்தோஷமே முக்கியம் எனும் ஸ்வரூபஜ்ஞானமில்லாத பெண்களின் படி எங்களுக்கில்லை என்றபடி.

ஆக இதுவரையில், கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாய், அனைத்து தோஷங்களுக்கும் எதிர்த்தட்டாய், ஸர்வஶேஷியாய், அனைவரையும் ரக்ஷிக்கிறவனாய், இருக்கும் பரமாத்ம ஸ்வரூபம் (1), தேஹம் இந்திரியம் முதலானவற்றைக் காட்டிலும் வேறாய் ஜ்ஞானானந்தங்களை லக்ஷணமாக உடையவனாய், பகவானுக்கே ஶேஷமாய் இருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபம் (2), அஹங்கார மமகாரங்களை விளைக்கடவதாயும், ஜீவனுடைய ஸ்வரூபத்தை மறைக்கக் கடவதாய் இருக்கும் ப்ரக்ருதி ஸம்பந்தம், எம்பெருமானைத் தவிர மற்ற பலன்களில் ஆசை வைக்கை, எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்குச் செய்யும் சேவை, எம்பெருமானைத் தவிர மற்றவர்களை பந்துக்கள் என நினைத்தல் ஆகிற விரோதி ஸ்வரூபமும் (3), ஜீவாத்மாவின் ஸ்வரூபத்திற்குத் தக்கதான உபாய ஸ்வரூபமும் (4), * ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித: * என்று அவனுடைய முக மலர்த்தியே பேறான புருஷார்த்த ஸ்வருபமும் (5) ஆகிய ஐந்தினையும் விரிவாகத் தெரிவிக்கும் திருவாய்மொழிகளைப் பார்த்தோம். மற்றுமுள்ள 80 பதிகங்களிலே இவ்வர்த்தமே கிடக்கிறது. 

பணவாளரவணைப் பள்ளி பயில்பவர்க்கு எவ்வுயிரும் குணபோகம் என்று குருகைக்கதிபன் உரைத்தது உய்ய தவத்தோர் தவப்பயனாய் வந்த முடும்பை மணவாளரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் – இவ்வர்த்தங்கள் அனைத்தையும் ஒரு சூர்ணிகையிலே அடக்கி அருளியுள்ளார்.

“மூன்றில் சுருக்கிய ஐந்தினையும் உயர் திண் அணை ஒன்று பயில் ஏறு கண் கரு வீடு சொன்னால் ஒருக்கொண்ட நோற்ற நாலும் எம்மாவொழிவில் நெடுவேய் என்கிற இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (211)

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஜயதுயஶஸாதுங்கம்ரங்கம் ஜகத்த்ரயமங்களம்
ஜயதுஸுசிரம் தஸ்மிந்பூமா ரமாமணிபூஷணம்
வரதகுருணாஸார்த்தம் தஸ்மை ஶுபாந்யபிவர்த்தயந்
வரவரமுநி: ஸ்ரீமாந்ராமாநுஜோ ஜயதுக்ஷிதௌ

பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான திருவரங்கமானது பெருமையுற்று விளங்கவேணும்; அத்திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ கௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாக உடைய எம்பெருமான் பல்லாண்டு பல்லாண்டாக விளங்க வேண்டும்; அந்த ஸ்ரீ ரங்கநாதனுக்காக ஸ்ரீ வரதகுருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும் மேலும் உண்டாக்குபவரான ராமாநுஜரின் அபராவதாரரான ஸ்ரீ மணவாளமாமுனிகள் இப்புவிதனில் விளங்க வேண்டும்.

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s