வரதன் வந்த கதை 11-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 11-1

பிரமனையும், அவனுடைய வேள்வியையும் ரக்ஷிக்க, எம்பெருமான் , எட்டுத் திருக்கரங்களுடன் பல்வகை ஆயுதங்களைத் தாங்கினவனாய்த் தோன்றினான் !

மலர்ந்த முகத்துடன், காளியையும் அவளுடன் வந்த கொடிய அரக்கர்களையும் எதிர்கொண்டான். கணப்பொழுதில் வெற்றி இறைவன் வசமானது ! காளி விரட்டியடிக்கப்பட்டாள். அரக்கர்கள் மாய்ந்தொழிந்தனர் !

பிரமனுக்காக விரைந்து வந்தவன், வந்த காரியத்தையும் விரைவாக முடித்திட்டான் ! பிரமன் பகவானையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். எத்தனை அழகு !! ரசிக்காமல் இருக்க முடியுமா ?!

“பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” தன்னைக் கண்ட ஆடவரையும் பெண் தன்மை கொள்ளச் செய்யும் பேரழகன்றோ அது!

என் பால் எத்தனை அன்பு ! எட்டுத் திருக்கரங்களைக் கொண்டு என்னை ரக்ஷிக்க ஒடோடி வந்துள்ளானே !

சித்திரத்திலே வரையப்பட்டது போன்ற அவயவங்களை (உடல் உறுப்புகளை) கொண்டிருக்கிறானே ! மந்மதனுமன்றோ இவனிடம் தோற்றுப் போவான் ! அழியா அழகனை, நித்ய யுவாவை எத்தனை ஏத்தினாலும் தகும் !

ஓவியம் வரைவதிலே தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு வரையப்பட்ட ஓவியத்தைப் போலே , தாமரையையொத்த கண்ணும், கோல மேனியும், (எண்) தோளும், வாயும். நிறை கொண்டதென் நெஞ்சினையே என்றான் அயன் !

திருவரங்கக் கலம்பகத்திலே , பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஸ்வாமியின் அனுபவம் இவ்விடத்திலே நினைக்கத் தகுந்தது !

திருவரங்கனிடத்திலே அசஞ்சலமான பக்தியுடையவர் அவர் ! திருவரங்க நாதனை சித்திரமாக வரைய ஆசைப்பட்டார் ! வரைந்தும் முடித்தார் !

ஓவியம் அழகாகத் தான் இருந்தது .. அச்சு அசல் அரங்கனை அந்த ஓவியம் காட்டியது . ஆனாலும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிக்கு த்ருப்தியில்லை.. ஓவென அழுதேவிட்டார் !

காரணம் கேட்டபொழுது அவர் சொன்னது இது தான் ;

வாழும் மவுலித்துழாய் மணமும் மகரக் குழை தோய் விழியருளும்
மலர்ந்த பவளத் திருநகையும் மார்விலணிந்த மணிச்சுடரும்  தாழுமுளரித் திருநாபித் தடத்துளடங்குமனைத்துயிரும் சரண கமலத்துமை கேள்வன் சடையிற் புனலும் காணேனால் ஆழமுடைய கருங்கடலின் அகடு கிழியச் சுழித்தோடி
அலைக்கும் குடக்காவிரி நாப்பண் ஐவாயரவில் துயிலமுதை
ஏழுபிறப்பிலடியவரை யெழுதாப் பெரிய பெருமானை எழுதவரிய பெருமானென்றெண்ணாது எழுதியிருந்தேனே !!

படம் வரைந்தாயிற்று ! பார்க்கிறவர்களும் தத்ரூபமாக இருப்பதாகச் சொல்லுகின்றார்கள் !

பின்பு குறையென்ன; ஏன் ஐயங்கார் ஸ்வாமி அழுகிறார்; காரணம் இது தான் ..

படத்தில் இறைவனுக்குத் துழாய் மாலை சாற்றப் பட்டிருக்கிறது.. ஆனால் வாசனை வரமாட்டேன் என்கிறதே ! துழாய் முடியில் இருந்து நாற்றம் (வாசனை) வரவில்லையே என்று ஏங்குகிறார்..

படத்தில் பெருமானுடைய விழிகள் பேசுகின்றன ! வாஸ்தவம் தான்..ஆனால் விழி(களின்) அருள் வெள்ளமிடவில்லையே ! என் செய்கேன் நான் !!

விம்மி வெளி விழுகின்ற சிரிப்பினை, அவ்வனுபவத்தினை இப்படம் தரவில்லையே !

படத்திலிருக்கும் நீலநாயகம் ஒளி வீசவில்லையே ! ஞாலமேழுமுண்ட திருவயிரன்றோ ! அது காணக் கிடைக்கவில்லையே !!

அரங்கன் திருவடிகளே தஞ்சம் என்கிற நினைவோடு, அவனுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கியிருக்கும் பெருமையுடைய சிவன், அவன் சிரஸில் பாய்ந்தோடும் ஹரி பாதோதகமென்னும் கங்கையைக் காணவில்லையே படத்தில் !

உபய காவேரி மத்யத்தில், ஐந்தலை அரவில் (நாகத்தில்) துயில் கொள்ளும் எம்பெருமான், அடியவர்களுக்கு முக்தி தருபவன் !

பெரிய பெருமாள் என்று போற்றப்படுமவன் !

ஓவியத்தெழுதவொண்ணா (ஓவியத்தில் காட்டிட முடியாத பேரழகன்) உருவமுடையவன் , என்பதனை மறந்து அவனைச் சித்திரமாக வரைந்து விடலாம் என்று நினைத்திருந்தேனே ! என்னே என் அறியாமை என்று தம்மையே நொந்து கொள்கிறார் !

அட்டபுயகரத்தெம்பெருமானைக் கண்ட பிரமன் நிலையும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஸ்வாமி நிலையை ஒத்திருந்தது !

திருமுகமண்டலத்தைக் காண்பேனா ! திரு மூக்கு , மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் (கற்பக வ்ருக்ஷத்தின் கொடி, கொழுந்து போன்ற திருமூக்கு)! கோவைச் செவ்வாயைக் காண்பேனா ?!

எதனை இயம்புகேன். எதனை விடுகேன் ?!

திண் கைம்மா துயர் தீர்த்தவன் (கஜேந்த்ரன் என்கிற ஆனையைக் காத்தவன்) எண் கையனாய் என் முன் நிற்பதே ! என்று கதறினான் பிரமன் .

“ஸ பீட்யமாநோ பலிநா மகரேண கஜோத்தம:
ப்ரபேதே சரணம் தேவம் தத்ரைவ அஷ்டபுஜம் ஹரிம்”

என்று , அன்று ஆனைக்கு (இவன்) அருளையீந்த சரித்திரத்தினை புராணமும் பேசுகின்றது !

ஸத்துக்களுக்கு (நல்லவர்களுக்கு) என்றுமே ஆப்தன் (நம்பிக்கைக்குரியவன், வேண்டியவன்) நீ தானே !

எல்லை காண முடியாத நற்பண்புகள் கொண்டவனன்றோ நீ !

“ஆதி கேசவன்” என்கிற திருநாமத்தோடு நீர் இங்கு நித்திய வாஸம் செய்வது என் போல்வாரைக் காக்கத் தானே! என்று கடகடவெனத் துதிக்கலானான் பிரமன்!

புராணம் இத்தலத்தெம்பெருமானை (அஷ்டபுஜப் பெருமாளை) கஜேந்த்ரனைக் காத்தவனாகவும் போற்றுகின்றது !

தொட்டபடையெட்டும் என்கிற பேயாழ்வார் பாசுரம் இத்தலத்து எம்பெருமானின் கஜேந்த்ர ரக்ஷண வ்ருத்தாந்தத்தையே பேசுகின்றது !

தீய ஸ்வப்னங்களால் உண்டாகும் பயம் நீங்க கஜேந்த்ர வரதனான “அஷ்டபுஜப் பெருமாளே” புகல் என்பதறிவீர்களா ??

அப்படியா என்று நீங்கள் புருவங்களை உயர்த்தியிருப்பின், அந்நிலையிலேயே அடுத்த பகுதிக்காகத் காத்திருங்கள் !!!!!

******************************************************************************

வரதன் வந்த கதை (வரவிருக்கும்) பகுதி 11-ல் 3, அஷ்டபுஜப் பெருமானையே பேசும் !

அடுத்து பீஜகிரி க்ஷேத்ர மஹிமை, திருப்பாற்கடல் க்ஷேத்ரப் பெருமை, முக்யமான திருவெஃகா மஹிமை..இவைகள் வெளிவரும் !!

அதன் பின்பு தான் அத்திகிரியப்பனின் அருட்பார்வை வெள்ளமிடும் !!

வாசகர்களின் பொறுமைக்கும் , ஆதரவிற்கும் நன்றிகள் !! தாஸன்

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thought on “வரதன் வந்த கதை 11-2

  1. Pingback: Story of varadha’s emergence 11-2 | SrIvaishNava granthams

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s