த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 12

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 11

அவதார ப்ரயோஜனம்

பகவத்கீதையில் கண்ணனெம்பெருமான்,

“பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச  துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்றருளிச் செய்தான்.(அதாவது, நல்லோர்களைக் காக்கவும், தீயோர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் அவதாரம் செய்கிறேன் என்பதாம்.)

இந்நோக்கங்களை நிறைவேற்ற எம்பெருமான் அவதாரம் ஏன் செய்யவேண்டும் என்ற கேள்வி எழலாம். அவன் ஸர்வஞ்ஞன், ஸர்வவ்யாபி. அவன் தோற்பதே இல்லை. தன்  ஸங்கல்ப மாத்திரத்தாலேயே தன இஷ்டங்களை நிறைவேற்றிக்கொள்ளக் கூடியவன். அவன் ஏன் இந்நிலவுலகில் மக்களிடையே பிறப்பெடுக்க வேண்டும்? ஸர்வ ஸக்தனான எம்பெருமானுக்கு விபவாவதாரம் எடுப்பதன் நோக்கம் என்ன?

ஆதி சங்கரரின் உரை இக்கேள்வியைக் கணிசிக்கவே இல்லை. மத்வாசார்யர் , எம்பெருமான்  உண்மையில் அவதாரம் செய்ய வேண்டுவதில்லை, ஆயினும் “லோகவத்து லீலா கைவல்யம்” என்னும் பிரம்மஸூத்ரம்  தெரிவிப்பதுபோல் அவன் தன லீலையின் (திருவிளையாடல், அழகில்ல விளையாட்டு) பொருட்டே அவதாரம் செய்கிறான் என்றார் . கண்ணன் எம்பெருமான் ஸாது ஸம்ரக்ஷணம் முதலானவற்றைத் தெள்ளத் தெளியக் கூறியிருந்தும்,  அவர் இவ்வாறு அக்கருத்தை மறுப்பது (புறக்கணிப்பது) போல், லீலையே காரணம் என்று ஒரு மாற்றுக் காரணத்தைக் காட்டினார்.  இந்த கீதை ஸ்லோகம் ஒன்றே அவதாரத்தின் நோக்கம் லீலை மட்டுமே என்பதை மறுக்கப் போதுமானது என்பது வேடிக்கையான உண்மை. மேலும், உதாஹரிக்கப்பட்ட பிரம்ம ஸூத்ரம் லோக ஸ்ருஷ்டியின் நோக்கத்தைச் சொல்வதேயன்றி, இந்த கீதை ஸ்லோகம்போல் அவதார நோக்கத்தை விளக்குவதன்று. ஆகவே, இந்த ஸூத்ரம்  அவதார நோக்கத்தைப் புறந்தள்ளப் பயன்படுத்தப்படக்கூடாது.

ப்ரம்ம ஸூத்ரத்தில் அந்தரதிகரணத்தில் “அந்தஸ்தத் தர்மோபதேசாத்” (1-1-21) என்பதை விளக்கும்போது ஸ்வாமி இந்த கீதை ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியருளுகிறார். பிறகு, ஸ்வாமி “ஸாதவோஹி உபாசகா:, தத் பரித்ராண மேவோத்தேச்யம், ஆநுஷங்கிகஸ்து துஷ் க்ருதம் விநாச, ஸங்கல்ப மாத்ரேணாபி ததுப பத்தே” என்றருளிச் செய்கிறார்.

அவதாரத்தின் ப்ரதான நோக்கம் லக்ஷ்யம் உபாசகனை, பக்தியோடு வணங்குபவனைப் பாதுகாப்பதேயாம். தீயோரை அழிப்பது இரண்டாம்பக்ஷமே ஏனெனில் அவதாரம் செய்யாமல் எம்பெருமான் தன ஸங்கல்ப மாத்ரத்தாலேயே அதைச் செய்து முடிக்கவல்லவன்.

ஸ்வாமியின் இவ்விளக்கம் எம்பெருமான் அவதார லக்ஷ்யம் தீயோரை அழிப்பது மட்டுமெனில், அதை ஸங்கல்ப மாத்ரத்தாலேயே செய்வன், ஆனால் அடியார்களைக் காக்கும் பொருட்டு தானே அவதாரமே செய்கிறான் என்பதை உணர்த்துவது. ஸாது பரித்ராணம் என்பதே அவதார லக்ஷ்யம்.

ஸ்வாமியின் இவ்விளக்கம், துஷ்க்ருத விநாசநம் போன்றே சாது பரித்ராணமும் அதே ஸங்கல்பத்தாலேயே ஆகாதோ எனும் ஐயத்தைக் கிளப்பும். திருவாய்மொழி அறியாதோர் ஸ்வாமியின் இவ்வாக்யத்தை எவ்வளவு நேரம் ஆழ் சிந்தையோடு உற்று நோக்கினாலும் இக்கேள்விக்கு விடை தரவல்லாரல்லர்.ஸ்ரீ பாஷ்யத்தின் சொற்பொருள் மட்டும் சொல்லும் ஆசிரியரின் வேலை எளிது. அவர் இந்த மருமங்களில் ஆழ வேண்டியதில்லை.ஒரு மாணவன் சடக்கென  இக்கேள்வியைக் கேட்டால், “ஸ்வாமியே அறிவித்தாரானார். அவரது திருவாக்கை வினவ நீ யார்?” என்று மட்டும் சொல்லிவிடுவார். இக்கண்டனத்தோடு ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் இனிதாகவும் திறம்படவும் முடிந்ததாகவே கருதப்படும்.

திருவாய்மொழி பயின்று, ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவருளுக்குப் பாத்திரரானோர் மட்டுமே  இக்கேள்விக்கு விடை அறிய வல்லார்.அவர்களின் திருவருளாலேயே தாம் இவ்வுண்மைப் பொருளை உணர்ந்ததாகக் குறிப்பிடும் காஞ்சீ ஸ்வாமியின்  அருளாலேயே நாமும் இதை உணரப் பெறுகிறோம். ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் என்றும், காஞ்சீ ஸ்வாமி திருவடிகளே சரணம் என்றும் முதலில் நம் நன்றியைச் சொல்லிவிட்டுத் தொடங்குவோமாக.
திருவாய்மொழி  3-1-9 பாசுரம் இப்படிச் செல்கின்றது:

“மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே”


இதில் மூன்றாம் அடியில் வரும் “மழுங்காத ஞானம்” எப்போதும் தோற்காத அவனது சங்கல்ப ஞானம் = எம்பெருமானின் திருவுள்ளம். ஆழ்வார், சாது பரித்ராணத்துக்கு எம்பெருமான் அவதாரம் செய்ய வேண்டுவதன்  ஆவச்யகதை என்ன என்பதை விளக்குகிறார்.”தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே”=நீ நேரே வந்து அல்லது அவதாரம் செய்து அடியார்களைக் காவாயாகில் உன் தேசுக்கு தேஜசுக்கு புகழுக்கு மாசு வந்தே தீரும். நீ நேர்பட வந்து அவர்களிக் காத்தாலே உன் புகழ் தேசு ஒளிரும்” என்கிறார்.

அவன் தன் அரவணையிலேயே பள்ளிகொண்டிருந்து வெறும் ஸங்கல்ப மாத்ரத்தாலே அவர்களைக் காப்பானாகில் அவன் புகழுக்குக் கேடு சேரும்.தன் அடியார்களைக் காக்க அவன் அன்போடு இரங்கி/இறங்கி வருவதென்பது அவன் திவ்ய குணங்களோடு சேர்ந்தது. ஆகவேதான் ஸாது பரித்ராணம் ஸங்கல்ப மாத்ரத்தால் நடவாது, நடவாதது. அப்படி ஸங்கல்ப மாத்ரத்தாலே நடக்குமாகில் அவன் புகழுக்கு மாசே. ஆனால் அவன் மாசுகளற்றவன். எனவே எப்போதுமே ஸாது பரித்ராணம் செய்ய அவதரிக்கிறான். யுகே யுகே ஸாது பரித்ராணாய ஸம்பவாமி. இது உறுதி.

இன்னமும் ஒரு கேள்வி உள்ளது. இவ்விளக்கங்கள் யாவும் மிக இனிதாயிருந்துள்ளன ஆகிலும்  எம்பெருமான் இவ்வாறுதான் ரக்ஷிக்கிறான் என்று காட்டவல்ல ப்ரமாணம் உண்டோ? எனில்: நம் ஆழ்வாரே  ப்ராமாணிகர்களில் மஹா ரத்னம் போன்றவராதலால் ப்ரமாணம் இன்றி அவர் ஒரு சொல்லும் சொல்லமாட்டார். இப்பாசுரத்தின் முதற்பாதி ப்ரமாணம் காட்டுகிறது. “தொழுங்காதல் களிரளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே “ என்பதே ப்ரமாணம் . ஸ்ரீ கஜேந்த்ராழ்வானைக் காக்க எம்பெருமான் கருடன் மேலேறி தொல்லைவானாகிய தன் நித்ய விபூதியிலிருந்து வந்தான். ஒரு முதலையை அவன் தன்  தாமத்திலிருந்தே மிக எளிதாகக் கொன்றிருக்கலாமே, ஆனால் பக்தனான கஜேந்த்ரனைக் காக்க இது அவன் குணத்தோடு சேராது. எனவே இரங்கி/இறங்கி வந்து அவதரித்துக் காத்தான்.

கஜேந்திர மோக்ஷத்து விரிவான சூக்ஷ்மங்களைக் காண்போம் இனி.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://srivaishnavagranthams.wordpress.com/2018/02/10/dramidopanishat-prabhava-sarvasvam-12/

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s