ஐப்பசி மாத அநுபவம் – பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஐப்பசி மாத அநுபவம்

<< பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி அனுபவம்

பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி வ்யாக்யானத்துக்கு நம்பிள்ளை அருளிச்செய்த அவதாரிகையின் நேரடித் தமிழாக்கம் இது. நம்பிள்ளை அருளிய மிக ஆச்சர்யமான வ்யாக்யானங்களைத் தேடிப்பிடித்து மிக எளிய விளக்கங்களோடு வெளியிட்டுள்ள ஸ்ரீ உ வே வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமியின் அளப்பரிய பரிச்ரமம் மிகவும் போற்றத தக்கது.

நம்பிள்ளைதிருவல்லிக்கேணி

முதல் திருவந்தாதியில் பொய்கை ஆழ்வார் எம்பெருமான் உபய (நித்ய, லீலா) விபூதிகளுக்கும் நாதனென அருளிச் செய்தார்.  இது கண்டு பூதத்தாழ்வார்  அவனே உண்மை ரக்ஷகன், ஞானம் கனிந்த நலனே பக்தி என உணர்ந்தார். முதல் திருவந்தாதி ஞானத்தில் மையங்கொண்டுள்ளது, இரண்டாம் திருவந்தாதி பக்தியில் நோக்குள்ளது.  இது பக்தியின் ப்ரவாஹம். பொய்கை ஆழ்வார்க்கு  பக்தியில்  ஈடுபாடில்லையோ எனில், அவ்வாறன்று; அவரும் பக்தியில் ஊன்றியவரே. இது பக்தியின் வெவ்வேறு நிலைகள்; ஒன்றில் காரணம், மற்றத்தில் கார்யம். எம்பெருமானின் நித்ய லீலா விபூதிகளை த்யானித்து இருக்கும் ஞான நிலை பொய்கை ஆழ்வாரது. பூதத்தாழ்வாரின் நிலை முதல் திருவந்தாதியில் கண்ட எம்பெருமானின் விபூதிகளால் மயங்கி ப்ரமிப்புற்ற பக்தி ப்ரவாஹம் இரண்டாம் திருவந்தாதியாக உருவெடுத்தது.

முதல் திருவந்தாதியில் எம்பெருமானே உபய விபூதி நாதன், ப்ரபஞ்சம் அனைத்திலும் அவன் வ்யாபித்துள்ளான் என்ற ஞானம் விளக்கப் பட்டது. இந்த ஞானம் அவனை அடைய வழி என்றும் காட்டப்பட்டது.  பொதுவாக, மார்க்கமும் (வழி) சென்றடையும் இலக்கும் வேறுவேறாகவே இருக்கும். ஆகவே எம்பெருமானே இலக்கு அவனை அடைய அவனே வழி என்பது எப்படிப் பொருந்தும்?  அவனே ப்ராப்யமும், ப்ராபகமும். ஏனெனில் அவன் ஸர்வ வ்யாபி. எல்லாம் செய்ய வல்லவன். ஆகவே அவனே உபாயம், உபேயம்; காரணம் மூன்று விதங்களாக இருக்கும் :

  • உபாதான காரணம் – இறுதி பொருளாக மாறும் அடிப்படைக் மூலப்பொருள். எடுத்துக்காட்டு – மண், பானை ஆகிறது. இதில் மண் உபாதானம் (மூல காரணம்). பானை கார்யம் (விளைவு).
  • நிமித்த காரணம் – இந்த மாற்றத்தைக் கொணரும் நபர்(கள்). இவ்வுதாரணத்தில் குயவன்.
  • ஸஹகாரி காரணம் – மாற்றம் கொணர்வதில் உதவும் உபகரணங்கள். இதில் குயவன் பயன்படுத்தும் தண்டு, சக்கரம்  இரண்டும் மண்ணைப் பானை ஆக்குவதில் உதவுவன.

ஸ்ரீமந் நாராயணன் – எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணம்

பொதுவாக இவ்வுலகில் இம்மூன்று காரணங்களும் வேறு வேறாகவே இருக்கக் காண்கிறோம். பகவான் ஸர்வ சக்தன் ஆனபடியால் அவனே மூன்று காரணங்களாயும் இருக்கிறான். (குறிப்பு: உபாதான காரணங்களான சித் அசித் (அறிவுள்ளன, அற்றன) இரண்டுமே பகவானின் இயல்புகளே. நிமித்த காரணம் – அவனது ஸங்கல்பம், விருப்பம், முடிவு, தீர்மானம். ஸஹகாரி காரணம் அவனது ஞானம், ஆற்றல்). பகவான் அந்தர்யாமியாய் எல்லாவற்றிலும் உள்ளுறைவதால், பூதத்தாழ்வார் அவன் சொத்தில் ஒருவராதலால் பகவானே அவனை அடைய உபாயம் ஆகவும் உளன் என்று கருதுகிறார்.

பொதுவானவற்றில் காணும் இயல்புகள் விசேஷமானத்திலும் காணலாகும். இதை எம்பெருமானார் கத்யத்தில் “அகில ஜகத் ஸ்வாமின்” என்று உலகங்கள் அனைத்துக்கும் ஸ்வாமியானவனே என்றவர், “அஸ்மத் ஸ்வாமின்!” என்ற விளி  வாயிலாக எனக்கு ஸ்வாமி ஆனவனே என்று விசேஷமாகக் குறித்தார். ஸாதனம் (வழி) பகவான் ஆனபடியால், அந்த ஞானம் முதிர்ந்ததும் அவன் தானே தன்னைத் தந்தருள்வான் எனும் பொறுமை அவசியம் வேண்டும். பரமேச்வர மங்களத்து ஆண்டான் நாதமுனிகள் சிஷ்யரான குருகைக் காவலப்பனிடம் சென்று, “ஜகத்துக்கும் ஈச்வரனுக்கும் உள்ள ஸம்பந்தம் யாது?” என்று வினவ, அப்பன்,” எந்த ஜகத்? எந்த உலகம்?” என்று திருப்பிக் கேட்க,  ஆண்டான் ஸமாஹிதராகிச் சென்றார்.  ப்ரபஞ்சம் எம்பெருமான் சரீரம், பகவான் அதில் உறையும் அந்தர்யாமி என்றதால் பொய்கை ஆழ்வார், “பதிம்  விச்வஸ்ய” என்ற ச்ருதி (தைத்திரீய உபநிஷத்) வாக்கியம் அறிந்தாராதலால் ஜீவனுக்குச் சரீரம் போல லோகத்துக்கு ஈச்வரன் என்றார்.  பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி இந்த ச்ருதி தத்வத்தைக் காட்டுகிறது.

ஞான பக்திகளின் வெவேறு நிலைகளின் வெளிப்பாடு இப்ரபந்தங்கள் எனில் இவற்றை அருளியவர் ஒருவரே ஆகக் கூடாதோ? முதல் திருவந்தாதி பொய்கையாரது, இரண்டாம் திருவந்தாதி பூதத்தாரது, மூன்றாம் திருவந்தாதி பேயாழ்வாரது என்பானேன் எனில், த்ரிமுனி வ்யாகரணம் பாணினி வரருசி பதஞ்ஜலி என மூவரால் ஆனாலும் ஒன்றெனப்படுகிறது. ஜைமினியின் உபாசனை பற்றிய  பூர்வ மீமாம்சை பன்னிரு (த்வாதச) அத்தியாயங்களும், வியாசரின் ப்ரஹ்ம விசாரம் பற்றிய  உத்தர மீமாம்சைநான்கு (சதுர்) அத்தியாயங்களும் சேர்ந்தே சாஸ்திரம் எனப்படுகிறது. அதுபோல் இப்ரபந்தங்களும்.

முதல் திருவந்தாதியில் எம்பெருமான் விசித்திர ஞான சக்தியுக்தனாகவும் ஜகத் காரணனாகவும் சங்க சக்ர கதாதரனாகவும் விளங்குகிறான். இதுவும் அவனிடத்தில் பக்தியாலேயே ஆயிற்று. அந்த பக்தி வித்தும் அவனே விதைத்தான். அவன் அகில ப்ரபஞ்சங்களையும் ஸ்ருஷ்டித்து நடத்தினாப்போலே இந்த பக்தியையும் தானே ஆழ்வார் ஹ்ருதயத்தில் நட்டான் என்னக் கடவது – இரண்டும் அற்புதமான விஷயங்கள்.

பொய்கை ஆழ்வார்க்கு மட்டுமே  எம்பெருமான் பற்றிய ஞானமும் பக்தியும்  உண்டோ எனில் அங்கனன்றே ஆழ்வார்கள் எல்லார்க்குமுண்டே. அவ்வவ்வாழ்வாரும் தம் தாமுக்குண்டான அனுபவ விசேஷத்தை அந்தந்த திவ்ய ப்ரபந்தத்தில் அருளிச் செய்தார். அனைத்து ஆழ்வார்களும் ஒரே விஷயத்தையே அருளி உள்ளனர். இது ஆதி சேஷனுக்கு ஒரு கழுத்து, பல தலைகள் உள்ளது போலாம். அவர்கள் ஏக கண்டராய் ஒரே கருத்தைப் பலராய்ப் பேசுவர்.

இப்படி நம்பிள்ளை அருளிய இரண்டாம் திருவந்தாதி அவதாரிகை (அறிமுகம்/முன்னுரை) அமைந்துள்ளது.

இனி இப்ரபந்தத்துக்குத் திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் விவரணம் சுருக்கமாகக் காணலாம்.

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி அளித்தானை
நன்புகழ் சேர் சீதத்தார் முத்துக்கள் சேரும்
கடல் மல்லைப் பூதத்தார் பொன்னங்கழல்

இந்த ஸம்ஸாரத்தில் என் பிறவி தீர அன்பே தகளியா என்று அமுதம் போன்ற இரண்டாம் திருவந்தாதி அருளிய புகழ்சேர் முத்துகள் சேரும் கடற்கரை நகராகிய திருக்கடல்மல்லையில் அவதரித்த பூதத்தாழ்வார் திருவடிகளை இறைஞ்சி வணங்கினேன்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் : http://ponnadi.blogspot.in/2013/10/aippasi-anubhavam-bhuthathazhwar.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s