ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – தவிர்க்கப்படவேண்டிய அபசாரங்கள்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<< அர்த்த பஞ்சகம்

சாண்டிலி-கருடன் சம்பவம் ……சாண்டிலி ஒரு திவ்ய தேசத்தில் வசிக்காமல் தனி இடத்தில இருப்பதைப் பற்றி நினைத்த மாத்திரத்தில் கருடாழ்வாரின் சிறகுகள் எரிந்து கருகி உதிர்ந்தன.

ஸ்ரீ வைஷ்ணவர்கள் தவிர்க்கவேண்டிய அபசாரங்கள் (க்ரூர செயல்கள், தவறான நடவடிக்கைகள்) பற்றிப் பார்ப்போம்.

ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சாஸ்த்ரமே  ஆதாரம். நம் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நாம் சாஸ்த்ரத்தையே நம்புகிறோம்.  சாஸ்த்ரம் என்பது செய் என்று விதிப்பதும், செய்யாதே என்று தடுப்பதும் ஆகும். அதாவது விதி, நிஷேதம். சாஸ்த்ரங்கள் நம்மை நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்ய விதிக்கின்றன, அவ்வப்போது விசேஷமாக நைமித்திக கர்மங்களையும் விதிக்கின்றன. பொய், களவு, பிறர் பொருள்மேல் ஆசை, ஹிம்ஸை இவற்றை நிஷேதிக்கின்றன. நம் பூர்வாசாரோர்கள் இவற்றைத் தொகுத்து நமக்கு வழங்கியுள்ளனர்.

ஸ்ரீ வசன பூஷண  திவ்ய சாஸ்த்ரத்தில் ஸூத்ரம் 300 முதல் 307 வரை பிள்ளை லோகாசார்யர் இந்த நான்கு விஷயங்களைச் செய்ய ஸ்ரீ வைஷ்ணவர் அசக்தராயிருக்க வேண்டும் என்கிறார்:

 • அக்ருத்ய கரணம் – சாஸ்த்ரம் கூடாதென்பதைச் செய்தல்.
 • பகவதபசாரம் – எம்பெருமான் விஷயமான அபசாரங்கள்
 • பாகவத அபசாரம் – அடியார்கள் விஷயமான அபசாரங்கள்
 • அஸஹ்ய அபசாரம் – ஒரு காரணமுமின்றி பகவான் பாகவதர் இருவர் திறத்தும் அபசாரப்படுதல்

இவை ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்ப்போம்:

சாஸ்த்ரம் பொதுவாக நம்மை வேண்டாவென்று தடுப்பன:

 • பர ஹிம்ஸை – தேவையின்றி புள் பூண்டாதி உயிர் வாழிகளைக் கூடத் துன்புறுத்தலாகாது
 • பரஸ்தோத்ரம் – எம்பெருமான் நமக்கு அவனையும் அடியாரையும் புகழவே பேச்சு ஆற்றல் தந்துளன்; அதை அவைஷ்ணவப் புகழ்ச்சியில் வீணாக்கக் கூடாது.
 • பரதார பரிக்ரஹம் – பிறர் மனைவியரை ஒருக்காலும் தவறான நினைவோடு மனதாலும் நினைக்கலாகாது.
 • பரத்ரவ்ய அபஹாரம்: தாமே மனமுவந்து பிறர் தருவதை ஏற்பதை விட்டு, பிறர் பொருளை ஒருபோதும் களவில் கொள்ளக் கூடாது.
 • அஸத்ய கதனம்: உண்மைக்கும்/வாஸ்தவத்துக்கும் புறம்பானதும், எவ்வுயிருக்கும் உதவாததுமான செயலைச் செய்யக் கூடாது.
 • அபக்ஷ்ய பக்ஷணம்: இயற்கையான தோஷம், கொடுப்பவர் குறை, விசேஷக் குறைபாடு எனும் ஸ்வாபாவிக/ஆச்ரயண/நிமித்த தோஷங்கள் உள்ள உணவை உண்ணக் கூடாது. (http://ponnadi.blogspot.in/2012/07/SrIvaishNava-AhAra-niyamam_28.html)
 • இதேபோல் மநு ஸ்ம்ருதி இத்யாதிகளில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் கவனித்துக் கைக்கொள்ள வேண்டும்.

ஸாமான்ய சாஸ்த்ர விதி நிஷேதங்களை அவசியம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் முதலில் கைக்கொள்ளவேண்டும்.

பகவத் அபசாரம்

பிள்ளை லோகாசார்யர் அடுத்த நிஷேத விஷயமாக பகவதபசாரத்தை விளக்குகிறார். இதை அவர் வெகு விரிவாக விளக்குகிறார், மாமுநிகளும் இதற்கு மிக விபுலமாக வ்யாக்யானம் சாதித்துள்ளார்.

 • எம்பெருமானை தேவதாந்தரங்களோடு நினைப்பது – பிரமன், சிவன், இந்த்ரன், வருணன், அக்நி ஆதிகளை நியமித்து நடத்தும் சர்வேச்வரனான எம்பெருமானை அவர்களுக்கு சமமானவனாக நினைப்பது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடுக்காது. அவனே அவர்தம் அந்தர்யாமி. அவனுக்கு இணையானவரோ ஒப்பானவரோ மிக்காரோ எவரும் இலர். எனவே நாம் அவர்களோடு எவ்வுறவும் கொள்ளலாகாது.
 • ஸ்ரீ ராம க்ருஷ்ணாத்யவதாரங்களை மானிடப் பிறவி என்றோ அல்லது உயர் மானிடர் என்றோ எண்ணுவது – எம்பெருமான் பரமபதத்தில் உள்ளபடியே அனைத்துக் கல்யாண குணங்களும் சக்தியும் கொண்டே அவதரிக்கிறான். தன் லீலையால் ஒரு கர்பத்தில்  வாசம் செய்து பிறக்கிறான், ஒரு நாளில் பிறக்கிறான், பிறந்து வனவாசம் முதலியன செய்து, நம்மை விபவத்தில் ரக்ஷிக்கிறான். ஆனால் அவனை எந்தக் கர்மமும் பாப புண்யமும்  தொடுவதில்லை. அவனுக்கு இவை கர்மமடியாக அன்று அவனது இச்சை அடியாக லோக ரக்ஷணார்த்தமாக அவனே ஏறிட்டுக்கொண்டவை. ஆகவே நாம் அவனையும் பிறர் போலக் கருதிவிடக் கூடாது.
 • வர்ணாச்ரமக் கட்டுகளை அவமதித்தல் – வர்ண, ஆச்ரம விதிகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். “ச்ருதி ஸ்ம்ருதிர் மமைவாக்ஞா ….. ஆக்ஞா சேதி மம த்ரோஹி மத்பக்தோபி ந வைஷ்ணவ” என எம்பெருமானே சொல்லியிருப்பதால். ச்ருதியும் ஸ்ம்ருதியும் சொன்னவை, என் ஆணைகள், அவற்றைமீறியோர் எனக்கு த்ரோஹம் செய்வோர், அவர்கள் என் அடியார் ஆயினும் வைஷ்ணவர் ஆகார் என்கிறான். இவ்விஷயத்தை விவரிக்கையில் மாமுநிகள்  நான்காம் வருணத்தோர் திருவாராதனம் செய்யும்போது வைதிக  மந்த்ரங்களைச் சொல்வது, சன்யாசிகள் பாக்கு உண்பது போன்றவற்றை உதாஹரிக்கிறார்.
 • அர்ச்சா மூர்த்திகளை மதிப்பிடுவது – அர்ச்சா மூர்த்திகளை அடியார் அன்பினால் சமர்ப்பிக்கிறார்கள்; அவற்றை எந்தப் பொருள் கொண்டு செய்தனர் என்று ஆய்வதும், இது தங்கத்தால் ஆனது எனவே மதிப்பு மிக்கது, வெறும் காகிதப் படம் எனவே மதிப்பற்றது என்பன போல் சொல்வது தகாது.
 • ஜீவாத்மாவை ஸ்வதந்த்ரனாக நினைத்தல் – பகவத் ஸங்கல்பத்தை நினையாதே நமக்கு ஸ்வாதந்த்ரியம் உண்டென்று நினைத்தல் மிகப் பெரிய அபசாரம், இதனாலேயே நமக்கு எல்லாப் பாபம்களும் வந்து சேர்கின்றன. சாஸ்த்ரம் இதையே மிகப் பெரிய திருட்டு/களவு என்று சொல்கிறது. ஜீவாத்மா பரமாத்வாவின் ஏவலில் இருப்பவன் என்று உணர வேண்டும்.
 • பகவத் த்ரவ்யம் அபஹரித்தல்: எம்பெருமானின் போகம்(பிரசாதம்), திருவாபரணம் போன்றவற்றைத் திருடுவது.
 • இப்படித் திருடுவோருக்கு உதவுவது.
 • திருடியவற்றைப் பெற்றுக்கொள்ளல்/திருட உதவுதல்/நாம் விரும்பிக் கேட்கவில்லை அவர்களே தந்தார்கள் என்று இவற்றைப் பெறுதல்/ இவை யாவுமே எம்பெருமானுக்கு உடன்பாடல்ல.
 • இதுபோல் சாஸ்த்ரம் மறுத்த பல செயல்கள்.

பாகவத அபசாரம்

மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களைத் தன்னிலும் கீழாக நினைப்பது அடிப்படைக் குற்றம். தன்னைப் பிறர்க்கெல்லாம் தாழ்வாக நினைப்பதே நன்னெறி. இப்பகுதியில் பிள்ளை லோகாசார்யர், அர்த்த காமங்களால் நம் நெஞ்சில் எழும் ஸ்ரீ வைஷ்ணவ விரோதமே பாகவதாபசாரம் என்று வெகு சுருக்கமாகக் கூறினாலும், சூத்ரங்கள் 190 முதல் 207 வரை இதை வெகு விரிவாக விளக்கியருளுகிறார். இவற்றின் சாரம்:

பாகவதாபசாரம் நிகழ்வுகள் சில:

 • சில ஸ்ரீவைஷ்ணவ சின்னங்கள் ஊர்த்வ புண்ட்ரம், ஆடைகள் இருப்பினும் பாகவதாபசாரம் செய்பவர்கள் மடித்த புடைவை காற்றடித்தவாறே வெறும் சாம்பலாய்ப் பறப்பதுபோல வெறும் புறத் தோற்றம் மட்டும் காட்டியிருப்பர்கள்.
 • எம்பெருமானின் வராஹ ந்ருசிம்ஹ ராம க்ருஷ்ணாத்யவதாரங்கள் ப்ரதானமாக அவனால் தன் அடியார் படும் இன்னல்களைத் தாங்க முடியாமல் ஹிரண்யாக்ஷ ஹிரண்ய ராவணாதிகளை முடிக்கவே இந்நிலவுலகில்  தோன்றின. அவன் தானே கீதா சாஸ்திரத்தில் நான்காம் அத்யாயத்தில் “யதா யதா”, “பரித்ராணாய ஸாதூநாம்”, “பஹூனி மே வ்யதீதானி”, “அஜோபிஸந்”, ”ஜந்ம கர்ம ச மே திவ்யம்”  எனும் ச்லோகங்களில் அவதார ரஹஸ்யத்தை நாம் எம்பெருமானின் திருவாக்கிலேயே அறிகிறோம். எம்பெருமானார் தம் கீதா பாஷ்யத்திலும், வேதாந்தாசார்யர் தம் தாத்பர்ய சந்த்ரிகையிலும் இவற்றை விரிவாக வ்யாக்யாநித்துள்ளனர்.
 • பாகவதாபசாரமும் பிறப்பினால் பாகுபடுத்துவது/குலம் பிறப்பு அறிவு செல்வம் உணவு உறவினர் இருப்பிடம் செயல்கள் இவற்றிற்காக அவமதிப்புச் செய்வது எனப் பலவகையாகும்.

இவற்றில் ஸ்ரீவைஷ்ணவர்களைப் பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்துவது/அவமதிப்பது மிகக் கொடூரமாகும். அர்ச்சா மூர்த்தி எம்பெருமானை எப்பொருளால் செய்யப்பட்டது என்று ஆய்வதைவிட இது மிகக் கொடுமை (இது தன தாயின் பாதிவ்ரத்யத்தை ஐயுறுவதோடொக்கும் என்பது முன்பே விளக்கப்பட்டுள்ளது).

இவற்றில் எந்த ஒரு குற்றம் நடந்தாலும் அதுவே பாகவதபசாரத்துக்குப் போதும். ஸ்ரீவைஷ்ணவர்களோடு நம் வ்யவஹாரங்கள் எப்படி இருத்தல் வேண்டுமென நம் பூர்வர்கள் உறுதியான நிலையை நியமித்துள்ளனர். அவர்கள் இவ்விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருந்தனர். ஆசார்யர்கள் தம் சிஷ்யர்களை மிக்க மதிப்போடு நடத்தினர். இன்று நாம் காண்பது முழுமொத்த  வீழ்ச்சியாக உள்ளது. சிஷ்யர்களே தம் ஆசார்யர்களுக்கு, “அவருக்கு என்ன தெரியும்?”, “அவருக்குப் பணம் போதும் என்றால் நான் எப்படி மதிப்பது?” என்றுள்ள விபரீதம் நாம் காண்பது. ஆத்மோஜ்ஜீவனத்தில் ஆசார்யர் சிஷ்யரையும்  ஆசார்யரை எம்பெருமானும் வழிநடத்தக் கடவர்கள்.

இவ்விடத்தில் பாகவத அபசாரத்தின் விளைவுகள் நன்கு விவரிக்கப்படுகின்றன.

 • இங்கு த்ரிசங்கு சரிதம் உதாஹரிக்கப்படுகிறது. அவன் சரீரத்தோடே ஸ்வர்காரோஹணம் செய்ய விரும்பித் தன ஆசார்யர் வசிஷ்டரையும் பின் அவர் புதல்வர்களையும் வேண்ட, அவர்கள் மறுக்கவும் வெகுண்டவனை வஸிஷ்ட குமாரர்கள் நாய் உண்ணும் சண்டாளனாகச் சபிக்கவும் அவன் ப்ரஹ்ம ஞாநத்துக்குக் குறிப்பாயிருந்த யக்ஞோபவீதமே  தோல் மாலை ஆயிற்று.  ஸ்ரீ வைஷ்ணவர்கள் உயர் நிலையில் இருப்பதால் அவர்கள் மிகத் தூய்மையாய் இருக்கவே எதிர்பார்க்கப்படுவதால், அவர்கள் பாகவதாபசாரம் செய்தால் தண்டனையும் மிகுதி. சாமாந்யன் லஞ்ச ஊழலில் பெறும் இழிவைவிடப் ப்ரதான மந்த்ரி பெறும் இழிவுபோலே.
 • தொண்டரடிப்பொடி ஆழ்வார், “தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும்” என்று, காயத்ரி ஜபாதிகள் செய்து வேதமோதுவோன் ஆகிலும் ஒருவன், பகவத் சம்பந்த ஞாநம் ஒன்றொழிய வேறு அறியாத ஒரு ஸ்ரீ வைஷ்ணவனிடம் அபசாரப்பட்டால் உடனே சண்டாளனாவான் என்றார்.  இங்கே நாம் ஒருவர் பல அபசாரங்கள் ஸ்ரீவைஷ்ணவர்களிடம் செய்தும், அவர்கள் உருவத்தில் எந்த மாற்றமும் இல்லையே என்று எண்ணக் கூடாது – இந்த மாற்றம் மனதளவைல் முதலில் ஆகி விடும்.
 • பரம பாகவதையான சாண்டிலி திவ்ய தேச வாசம் விடுத்து ஏகாந்தத்தில் இருப்பானேன் என அவளைப் பற்றிக் குறையாக நினைத்த மாத்திரத்தில் கருடாழ்வானின் சிறகுகள் எரிந்து, கருகிச் சாம்பலாயின.
 • பிள்ளைப் பிள்ளையாழ்வான் தொடர்ந்து பாகவதாபசாரம் செய்யவும். கூரத்தாழ்வான் அவரைப் பலகாலும் ஸதுபதேசத்தால் திருத்தினார்.

இறுதியாக ஒரு விஷயம் – அதாவது ஞானம் அநுஷ்டானம் எவ்வளவிருந்தாலும் ஆசார்ய சம்பந்தத்தாலேயே மோக்ஷம் வருமாபோலே, எவ்வளவு ஞாநம் அநுஷ்டானம் இருப்பினும் பாகவதாபசாரம் ஒன்றே நம்மை மிகக்கீழே தள்ளிவிடும்.

அஸஹ்யாபசாரம்

அஸஹ்ய எனில், காரணமற்ற என்று பொருள். எம்பெருமானிடமும் ஆசார்யரிடமும் ஸ்ரீவைஷ்ணவர்களிடமும் நாம் யாதொரு காரணமுமின்றி அபசாரப்படுகிறோம்.

 • பகவத் விஷயத்தில் – எம்பெருமான் அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாதிருந்தும், ஹிரண்ய கசிபு எம்பெருமானைப் பற்றிக் காதால் கேட்கவும் விரும்பிற்றிலன்.
 • ஆசார்ய விஷயத்தில் – அவர் ஆணைகளை அநுசரியாமை, அவர் கற்பித்த ஞானத்தைத் தகாதவர்க்குப் பொருள் புகழ் கருதிப் புகட்டல்.
 • பாகவதர் விஷயத்தில் – ஸ்ரீவைஷ்ணவர் திறத்தில் அஸூயையோடிருத்தல்.

இவ்வோவ்வோரபசாரமும் ஒன்றைவிட ஒன்று க்ரூரமாய் இருக்கும்…அதாவது பகவதபசாரம் (தடுக்கப்பட்ட) அக்ருத்ய கரணத்தைவிடக் க்ரூரம்; பாகவதாபசாரம் பகவதபசாரத்தைவிடக் க்ரூரம்; அஸஹ்யாபசாரம் பாகவதாபசாரத்தைவிடக் க்ரூரம்.

நம் பூர்வாசார்யர்கள் சாஸ்த்ர மர்யாதையோடு எந்த அபசாரமும் இராமல் அஞ்சியிருந்தனர். குரு பரம்பரை வைபவத்தில் ஒவ்வோர் ஆசார்யரும் தம் அந்திம தசையில் தம் சிஷ்யர்கள், ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரையும் அழைத்து தாம் செய்திருக்கக் கூடிய அபசாரங்களுக்கு, அவ்வாறு செய்யாதபோதும், க்ஷமை ப்ரார்த்தித்தார்கள் என்று காண்கிறோம். அது அவர்தம் சீரிய விநயம்.

இதை நாம் நன்குணர்ந்து நம்  வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டும். ஞானத்துக்கு ஏற்றம் அனுஷ்டானம். அநுஷ்டானம் இல்லாத ஞாநம் அஞ்ஞானமே.

ஞானத்தைப் பிறரோடு பகிர்ந்தால் அபசாரம் என்று பூர்வர்கள் இருந்தனர் என்று எண்ணலாகாது. அவ்வாறாயின் நமக்கு அவர்களிடமிருந்து கணக்கற்ற சாஸ்த்ர விளக்கமான நம் வாழ்சிக்கு வழிகாட்டும் திவ்ய க்ரந்தங்கள் கிடைத்திருக்குமா? அவற்றை வாசித்து அவர்தம் நல்லியல்புகள் நமக்கும் ஏற்பட அன்றோ அவை உள்ளன.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://ponnadi.blogspot.com/2015/12/simple-guide-to-srivaishnavam-apacharams.html

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thought on “ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – தவிர்க்கப்படவேண்டிய அபசாரங்கள்

 1. സൗരിരാജൻ

  “உய்யும் வகை உணர்ந்திடுமாறு என்னுள்ளத்தை உன்னருளால் சிக்ஷித்துத் திருத்துவாயே” என்று 59 ஆவது ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் வேண்டித் தலைக்கட்டுவது போல் வேண்டுவதல்லாமல் வேறு என்ன செய்ய முடியும்?

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s