ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – பெருமைகளும் வழிமுறையும்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

wrp1

ebook: https://drive.google.com/file/d/0ByVemcKfGLucN2drVVhtdk1MQjg/edit?usp=sharing

ஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் நித்ய திருவாராதனம் செய்ய வேண்டியதின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது இந்த கட்டுரையின் குறிக்கோள். எம்பெருமானையே அடையத் தக்க பலனாகவும், ஸம்ஸ்க்ருத மற்றும் த்ராவிட வேதங்களை உயர்ந்த ப்ரமாணமாகவும் கொண்டவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில், தற்போது ஸந்த்யா வந்தனம், திருவாராதனம் போன்ற வைதீக அநுஷ்டானங்கள் குறைந்து வருகிறது.

ஸ்ரீமந் நாராயணன் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே ஐந்து ப்ரகாரமாக விளங்குகிறான். பரம் (ஸ்ரீவைகுண்டத்தில்), வ்யூஹம் (வாஸுதேவ, ப்ரத்யும்ந, அநிருத்த, ஸங்கர்ஷண, க்ஷீராப்திநாதன்), விபவம் (ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்), அந்தர்யாமி (அனைத்து பொருட்களிலும் பரமாத்மாவாக இருக்கும் நிலை) மற்றும் அர்ச்சா ரூபாமாகவும் ஐந்து நிலைகளில் உள்ளான் (http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-parathvadhi.html). இவற்றுள் அர்ச்சாவதார எம்பெருமான் எளிமையின் எல்லை நிலமாக விளங்குகிறான். இப்படிப்பட்ட அர்ச்சாவதாரங்களிலும், ஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் கருணையே வடிவெடுத்தவன். இப்படி க்ருஹங்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை முறையாக வழிபடுவது ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனின் கடமை ஆகும்.

ஒருவன் ஒரு ஆசார்யனிடத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் பெறுவதன் மூலமாக ஸ்ரீவைஷ்ணவன் ஆகிறான். ஸம்ஸ்காரம் என்றால் தயார் செய்தல் என்று பொருள். ஒரு செயல் செய்யத் தகுதி இல்லாத ஒன்றை ஸம்ஸ்காரத்தின் மூலமாக தகுதி உள்ளதாக மாற்றுவர்.

பெரிய நம்பி ராமாநுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தல்

 

நாம் பஞ்ச ஸம்ஸ்காரத்தை “தாப: புண்ட்ர: ததா நாம: மந்த்ரோ யாகச் ச பஞ்சம:” என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அறிகிறோம். பஞ்ச ஸம்ஸ்காரத்தின் பொழுது நடக்கும் ஐந்து செயல்களாவன:

 • தாபம் சூடேற்றப்பட்ட சக்கரம் மற்றும் சங்கால் தோள்களில் பெறும் முத்திரை
 • புண்ட்ரம் உடம்பில் பன்னிரு திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணம் சாற்றுதல்
 • நாமம் – எம்பெருமான் மற்றும் ஆசார்யனிடம் உள்ள தொடர்பை வெளியிடும் ஆசார்யன் இடும் தாஸ்ய நாமம் (ராமாநுஜ தாஸன், ஸ்ரீநிவாஸ தாஸன், ஸ்ரீவைஷ்ணவ தாஸன்)
 • மந்த்ரம் – ஆசார்யனிடத்தில் இருந்து பெறும் ரஹஸ்ய மந்த்ரங்கள் (மந்த்ரமாவது – தன்னை த்யானிப்பவரை க்லேசங்களில் இருந்து விடுவிப்பது – இங்கே நம்மை ஸம்ஸாரம் என்னும் துன்பத்தில் இருந்து விடுபடச்செய்யும் திருமந்திரம், த்வயம், சரம ச்லோகத்தில் நோக்கு)
 • யாகம் – தேவ பூஜை – திருவாராதன க்ரமத்தைக் கற்றறிதல்

நம் பூர்வாசார்யர்கள் விளக்கியுள்ளபடி, பஞ்ச ஸம்ஸ்காரத்தின் குறிக்கோள் இரண்டு பகுதியாக உள்ளது.:

 • தத்வ ஜ்ஞாநாந் மோக்ஷ லாப:” என்பதன்படி – உண்மை அறிவால் ஒருவன் மோக்ஷம் பெறுகிறான். சிஷ்யன் ஆசார்யனிடத்தில் இருந்து ரஹஸ்ய த்ரயத்தையும் கற்றுக்கொள்வதன் மூலம் அர்த்த பஞ்சகத்தை முழுமையாக அறிந்து நித்ய விபூதியில் ஸ்ரீமந் நாராயணனுக்குக் கைங்கர்யம் செய்யும் தகுதியைப் பெறுகிறான். அர்த்த பஞ்சகமாவது – ஜீவாத்ம ஸ்வரூபம், பரமாத்ம ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், பல ஸ்வரூபம் மற்றும் விரோதி ஸ்வரூபம்.
 • இருக்கும் காலத்தில், பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யத்தில் ஈடுபடுதல். நாம் இருக்கும் தற்போதைய நிலையில், திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான்களுக்கும் க்ருஹங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான்களுக்கும் கைங்கர்யம் செய்வதே எளிதானது.

இந்தக் கட்டுரையில், ஸ்ரீவைஷ்ணவ திருமாளிகை மற்றும் க்ருஹங்களில் நித்ய திருவாராதனம் செய்ய வேண்டியதின் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் ப்ரமாணங்களைக் காண்போம்.

தற்போதைய மற்றும் வருந்தத்தக்க நிலை, பல க்ருஹங்களில் நித்ய திருவாராதனம் நடப்பதில்லை. தீர்த்த நாயனார் எனப்படும் சாளக்ராம மூர்த்திகள் எழுந்தருளியிருந்தாலும் அவர்கள் கவனிக்கப்படுவதில்லை. எம்பெருமான் தன்னுடைய சௌலப்யத்தின் எல்லை நிலமாக க்ருஹங்களில் இருக்கும் ஆசார அநுஷ்டானங்களை கணிசிக்காமல் எழுந்தருளியிருந்தாலும் தங்களின் ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகளால் பலர் எம்பெருமானை மறந்து விடுகிறார்கள். பலர் திருவாராதனம் செய்யாமல் இருப்பதற்குக் காரணம், அதன் வழி முறைகள் மற்றும் முக்கியத்துவம் தெரியாததாலுமே.

வரும் பகுதிகளில் திருவாராதனத்தின் முக்கியத்துவத்தை வேதம், இதிஹாஸ புராணங்கள், பகவத் கீதை, திவ்ய ப்ரபந்தம், பூர்வாசார்ய அநுஷ்டானங்கள் உபதேசங்கள் மற்றும் ஐதிஹ்யங்கள், ரஹஸ்ய த்ரயம் ஆகியவை வெளியிட்டபடி காணலாம்.

வேதம்

வேதத்தை ப்ரமாணமாக ஒத்துக்கொள்பவர்கள் தம்மால் முடிந்தவரை அதை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்காலத்தில் பெரும்பாலான ஆசார அநுஷ்டானங்கள் குறைந்து விட்டன. அதன் வழி நடக்க ஓரிருவர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், வேதத்தில் கூறிய படி, வைதிகர்கள் பஞ்சகால பராயணர்கள் எனப்படுவர் – அதாவது ஒரு நாளை ஐந்தாகப் பகுத்து, ஒவ்வொரு வேளையிலும் ஒரு செயலைச் செய்வர். எல்லாச் செயலும் நாளின் நடுப்பகுதியில் செய்யப்படும் திருவாராதனத்தை நோக்காகக் கொண்டது.

ஐந்து வேளைகள்/செயல்கள்:

 • அபிகமநம் – ப்ரஹ்ம முஹூர்த்தத்திற்கு முன்பு எழுந்திருந்து நம்மைத் தயார் செய்து கொள்ளுதல் – மல ஜலம் கழித்தல், பல் விளக்குதல், நீராடுதல், ஸந்த்யா வந்தனம் செய்தல் முதலியன.
 • உபாதானம் – திருவாராதனத்திற்குத் தேவையான பொருட்களைச் சேகரித்தல்
 • இஜ்ஜா (யாகம்) – சேகரித்த பொருட்களைக் கொண்டு திருவாராதனம் செய்தல் – பொதுவாக மதிய நேரத்தில் செய்யப்படுவது
 • ஸ்வாத்யாயம் – அவரவருடைய வர்ணத்துக்குத் தகுந்தபடி வேதம், வேதாந்தம், திவ்ய ப்ரபந்தம் முதலியவற்றைக் கற்றல், கற்பித்தல்
 • யோகம் – ஆத்மாவை பரமாத்மாவில் ஒன்றவிடும் த்யானம் மற்றும் ஓய்வெடுத்தல்

இங்கே, இஜ்ஜா என்பது தேவ பூஜையைக் குறிக்கும். ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் க்ருஹத்தில் இருக்கும் எம்பெருமான்களுக்கு திருவாராதனம் செய்தல் வேண்டும். திருவாராதனத்துடன் பகவத் விஷயத்தைக் கற்றல், பகிர்தல் மற்றும் த்யானித்தலும் செய்வர்கள்.

இந்த பஞ்ச ஸம்ஸ்காரமே நம்மை இவ்வுலகத்தில் ஸ்ரீவைஷ்ணவனாக இருக்கத் தயார் செய்வதால், பஞ்ச ஸம்ஸ்காரத்திற்கு பிறகே முறையாகத் திருவாராதனம் செய்யும் அதிகாரம் கிடைக்கும்.

பெரியவாச்சான் பிள்ளை பெருமாள் திருமொழி 1.7 “மறம் திகழும்” பாசுர வ்யாக்யானத்தில், “இரு முப்பொழுது” என்பதற்கு “பஞ்ச காலங்கள்” என்று உரை அருளிச் செய்துள்ளார்.

இதிஹாஸ புராணங்கள் (உப ப்ருஹ்மணங்கள் – இவற்றைக் கொண்டே வேதங்களை தெளிவாக அறியலாம்)

ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ ராமன் தானே தன்னுடைய குல தனம் மற்றும் தெய்வமான ஸ்ரீ ரங்கநாதனை வழிபட்டான். இந்த ரங்கநாதன் முதலில் நாராயணன் என்ற திருநாமத்துடன் ப்ரஹ்மா மற்றும் இக்ஷ்வாகு வம்ச ராஜாக்களால் வழிபடப்பட்டான். “ஸஹ பத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணம் உபாகமது” என்ற ப்ரசித்தமான ச்லோகத்தின் படி, சீதாப் பிராட்டி ஸ்ரீ ராமனுடன் திருவாராதனத்தில் பங்கு பெற்றதையும் அறிகிறோம்.

ஸ்ரீ ராமன் ஸ்ரீ ரங்கநாதனை விபீஷணாழ்வானுக்குக் கொடுத்தல்

புராணங்களிலும் திருவாராதனத்தின் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ பாகவதத்தில் உள்ள ப்ரசித்தியான ச்லோகத்தில் ப்ரஹ்லாதாழ்வானின் அறிவுரையைக் காண்கிறோம்:

ச்ரவணம் கீர்த்தநம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவநம்
அர்ச்சநம் வந்தநம் தாஸ்யம் சக்யம் ஆத்மநிவேதநம்

இந்த ச்லோகம் எம்பெருமானை பக்தி செய்யும் ஒன்பது முறைகளைக் கூறுகிறது. இதில் கூறப்பட்ட விஷயங்கள் திருவாராதனத்தின் அங்கங்களாக உள்ளது. திருவாராதனத்தின் போது, பகவானின் திருநாமங்களைப் பாடுதல், அவனை அர்ச்சித்தல், அவன் பெருமைகளைக் கொண்டாடுதல், அவனுக்குக் கைங்கர்யம் செய்தல் போன்றவை செய்கின்றோம்.

கருட புராணத்தில் எம்பெருமான் தன்னுடைய பக்தர்களின் குணங்களை விவரிக்கும்போது, “மத் பக்த ஜந வாத்ஸல்யம், பூஜாயாம் அநுமோதநம், ஸ்வயம் அபி அர்ச்சனம் ச ஏவ…” என்று கூறுகிறான்.
இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள், பூஜாயாம் அநுமோதநம் – என்னுடைய திருவாராதனத்தை அநுமதிப்பவன் மற்றும் ஸ்வயம் அபி அர்ச்சநம் – தானே என்னை அர்ச்சிப்பவன். ஆசார்ய ஹ்ருதயத்தின் 85வது சூர்ணிகை வ்யாக்யானத்தில் மாமுனிகள் இந்த விஷயத்தை எடுத்துக் காட்டுகிறார். இது போன்ற பல விஷயங்கள் இதிஹாஸ புராணங்களில் உள்ளன.

பகவத் கீதை – கண்ணன் எம்பெருமான் தானே உரைத்தது:

எம்பெருமான் பல ச்லோகங்களில் திருவாராதனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளான்.

இரு முறை “மந் மநா பவ மத் பக்த: மத் யாஜி மாம் நமஸ்குரு” என்பதன் மூலம், அவனை எப்பொழுதும் த்யானித்தல், அவனிடம் பக்தி செய்தல் மற்றும் அவனை வணங்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளான்.

நம்முடைய பூர்வாசார்யர்கள் “யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாமி அஹம்” ச்லோகத்தை அர்ச்சாவதர விஷயமாக உரைப்பர்கள். இதே அர்த்தத்தை “தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே” (முதல் திருவந்தாதி) என்கிற பாசுரத்திலும் காணலாம் – அதாவது தன் அடியவர்கள் விரும்பும் உருவத்தில் எம்பெருமான் சேவை சாதிக்கிறான்.

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி …” (9.26) ச்லோகத்தில் எம்பெருமான் “ஒருவன் இலை (துளஸி), பூ, பழம் அல்லது நீரை அன்போடு சமர்ப்பித்தால் அதை ஏற்றுக் கொள்வேன்” என்று கூறுகிறான். இதன் அடுத்த ச்லோகத்தில் – “யத் கரோஷி … மத் அர்ப்பணம்” என்று, நாம் எதைச் செய்தாலும் அதை அவனுக்கு அர்ப்பணிக்குமாறு விதிக்கிறான். இவ்வாறு சமர்ப்பித்தல் திருவாராதனத்தில் காணப்படுகிறது. இது எம்பெருமானின் சௌலப்யம் என்கிற சிறந்த குணத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும், 3.13 “யக்ய சிஷ்டாசிந:…” என்கிற ச்லோகத்தில், ஒருவன் எம்பெருமானுக்கு சமர்ப்பிக்காமல் தனக்காக உணவைச் சமைத்து உண்பானாகில் அவன் பாவத்தையே உண்ணுகிறான் என்று கூறப்படுகிறது. எம்பெருமான், நாம் ப்ரசாதத்தை மட்டுமே உண்ணவேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறான். யாகம் என்பது திருவாராதனம், அநுயாகம் என்பது நாம் ப்ரசாதத்தை உண்ணுதல்.

அருளிச்செயல் (நமக்கு முக்கியத்துவம் வாய்ந்த திவ்ய ப்ரபந்தங்கள்):

அருளிசெயல்களில், பல பாசுரங்களில் திருவாராதனம் மற்றும் எம்பெருமானை வழிபடுவது உணர்த்தப்பட்டுள்ளன.

தமர் உகந்தது எவ்வுருவம்… (முதல் திருவந்தாதி)

எம்பெருமான் தன் அடியார்கள் விரும்பும் உருவத்தில் வருகிறான் என்பதை பொய்கை ஆழ்வார் மிக  அழகாகக் கூறுகிறார். இந்தப் பாசுர வ்யாக்யானத்தில் நம் பூர்வர்கள் விஷயமான பல ஐதிஹ்யங்கள் கூறப்பட்டுள்ளன.

சூட்டு நன் மாலைகள் – நித்யஸூரிகளின் திருவாராதனம் (திருவிருத்தம்)
திருவிருத்தத்தில், நம்மாழ்வார் எம்பெருமானுக்குப் பரமபதத்தில் நித்யஸூரிகள் செய்யும் திருவாராதனத்தை மிக அழகாக விவரிக்கிறார். நித்யஸூரிகள் தூபம் சமர்ப்பிக்கும்போது ஏற்படும் புகையில், எம்பெருமான் அங்கிருந்து கீழே இறங்கிவிடுகிறான்.

 • அந்த நேரத்தில் கண்ணன் எம்பெருமானாகப் பிறக்கிறான்
 • வெண்ணெய் திருடி உண்பதில் மிகவும் ஆநந்தத்துடன் ஈடுபடுகிறான்
 • ஏழு எருதுகளைக் கொன்று நப்பின்னைப் பிராட்டியை மணம் செய்கிறான்
 • தனக்கு மிகவும் பிடித்தமான குடக் கூத்து ஆடுகிறான்
 • புகை மறைவதற்குள் ஒன்றுமே நடவாததுபோல் பரமபதத்தில் தன்னுடைய ஆசனத்தில் வந்து அமர்ந்து விடுகிறான்

பரிவதில் ஈசனைப் பாடி (திருவாய்மொழி)

திருவாய்மொழியில், நம்மாழ்வார் எம்பெருமானின் ஸ்வாரதத்வத்தை (எளிமையாக வழிபடப்படும் தன்மை) விளக்குகிறார். ஈடு வ்யாக்யானத்தில், நம்பிள்ளை பட்டருக்கும் நஞ்ஜீயருக்கும் நடக்கும் ஒரு சம்வாதத்தை விளக்குகிறார். பட்டர் அனைத்து புஷ்பங்களையும் எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கலாம் என்கிறார். மேலும் நாம் சருகுகளைக் கொண்டு எரித்தாலும் அதை வாசம் மிகுந்த த்ரவ்யமாக எம்பெருமான் கருதுவான் என்று கூறுகிறார்.

மற்றொரு முக்கியமான கருத்தும் இங்கே தெரிகிறது. இதர தேவதைகள் தம்மை அண்டுபவர்களிடம் “ஆட்டை அறுத்துத் தா”, “பிள்ளைக் கறி தா” என்று கேட்பது போல் அல்லாமல் ஸ்ரீமந் நாராயணன் தன்னுடைய அடியார்களின் பக்தியையே எதிர்பார்க்கிறான்.

செய்ய தாமரைக் கண்ணன் பதிகம் (திருவாய்மொழி)

இந்தப் பதிகம் க்ருஹார்ச்சையின் பெருமையை கூறவே அவதரித்தது. நம்மாழ்வார் க்ருஹங்களில் அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் நிலையே மிக உயர்ந்ததென்று நிலை நாட்டுகிறார். மாமுனிகளும் ஆழ்வாரின் திருவுள்ளத்தைத்  திருவாய்மொழி நூற்றந்தாதி 27வது பாசுரத்தில் “எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது” என்று அழகாக வெளியிடுகிறார்.

தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது (நான்முகன் திருவந்தாதி)

இது திருமழிசை ஆழ்வாரின் தினசரி நெறிமுறையாகத் தானே காட்டுகிறார். நாம் நம்முடைய நாளை எப்படி எம்பெருமான் விஷயமாக நடத்த வேண்டும் என்று காண்பிக்கிறார்.

பூர்வாசார்ய அநுஷ்டானங்கள், உபதேசங்கள் மற்றும் ஐதிஹ்யங்கள்

அநுஷ்டானங்கள்

பல ஆசார்யர்கள் தங்களின் திருமாளிகைகளில் திருவாராதனம் செய்ததுடன் திவ்ய தேச எம்பெருமான் ஆழ்வார் ஆசார்யர்களுக்கும் திருவாராதனம் செய்துள்ளார்கள்.

 • நாதமுனிகள் – காட்டு மன்னார் கோயிலில் மன்னனாருக்குத் திருவாராதனம் செய்ததாகச் சொல்லப் படுகிறது.
 • அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – எம்பெருமானார் தன்னுடைய திருவாராதனமான பேரருளாளனுக்குத் திருவாராதனம் செய்யும்படி இவருக்கு நியமித்தார்.
 • திருவாய்மொழிப் பிள்ளை மற்றும் மணவாள மாமுனிகள் – ஆழ்வார் திருநகரி சதுர்வேதி மங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் பவிஷ்யதாசார்யனுக்கு (எம்பெருமானாருக்கு) திருவாராதனம் செய்தார்கள்.

உபதேசங்கள்

 • எம்பெருமானார் திருவாராதன க்ரமத்தை விரிவாக விளக்கும் நித்ய க்ரந்தம் என்கிற ஸம்ஸ்க்ருத க்ரந்தத்தை எழுதினார். எம்பெருமானார் செய்த நவ ரத்னமான ஒன்பது க்ரந்தங்களில் இது கடைசியாகக் கருதப்படுகிறது.

 • மணவாள மாமுனிகள் ஜீயர் படி என்கிற தமிழ் க்ரந்தத்தில் திருவாராதன க்ரமத்தைச் சுருக்கமாக அருளியுள்ளார்.

பூர்வாசார்யர்களின் அநுஷ்டானங்களும், உபதேசங்களும் ஸ்ரீவைஷ்ணவர்களான நாம் பின்பற்றுவதற்கே.

ஐதிஹ்யங்கள்

நம் பூர்வாசார்யர்கள் பல ஐதிஹ்யங்களில் திருவாராதனத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

எம்பெருமானார் – வங்கிப்புரத்து நம்பி

பெரிய திருமொழி 6.7.4 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில், திருமங்கை ஆழ்வார், கண்ணன் எம்பெருமான் வெண்ணெய் திருடி யசோதைப் பிராட்டியிடம் அகப்பட்டுக்கொண்ட பின் அஞ்சி அழுவதைக் கூறுகிறார். இவ்விஷயத்தில் ஒரு அழகான ஐதிஹ்யம் விளக்கப்பட்டுள்ளது. வங்கிப்புரத்து நம்பி எம்பெருமானாரிடம் திருவாராதன க்ரமம் சொல்லிக் கொடுக்கும்படி ப்ரார்த்திக்கிறார். ஏதோ காரணங்களால் எம்பெருமானாரால் அவருக்குச் சொல்லிக் கொடுக்க முடியவில்லை. ஒரு சமயம், நம்பி இல்லாத போது, எம்பெருமானார் ஆழ்வானுக்கும் மாருதி சிறியாண்டானுக்கும் திருவாராதன க்ரமம் சொல்லிக் கொடுக்கிறார். அப்போது எதிர்பாராமல் நம்பி அங்கே எழுந்தருளுகிறார். அதைக் கண்ட எம்பெருமானார் விதிர்த்துப் போகிறார். எம்பெருமானார் “எனக்குப் பல காலம் ஒரு சந்தேகம் இருந்தது. எம்பெருமான் ஸர்வேச்வரனாக இருந்தும் வெண்ணெய் திருடி யசோதைப் பிராட்டியிடம் அகப்பட்டபின் எதற்கு பயப்பட்டான் என்று. இப்போது நான் ஆசார்யனாய் நீர் சிஷ்யராய் இருந்தும், உமக்கு திருவாராதன க்ரமம் சொல்லிக் கொடுக்காமல் இவர்களுக்குச் சொல்லி கொடுப்பதால், உம்மைக் கண்டு அஞ்சுகிறேன், அப்போது எம்பெருமான் நடுங்கியதைப் போல” என்று கூறினார்.

பட்டர் – சோமாசியாண்டான்

சோமாசியாண்டான் பட்டரிடம் திருவாராதன க்ரமம் கேட்கிறார். பட்டரும் மிக விரிவாக விளக்குகிறார். ஆனால் ஒரு முறை, சோமாசியாண்டான் பட்டர் திருமாளிகைக்குச் செல்ல, அங்கே பட்டர் ப்ரசாதம் ஸ்வீகரிக்க இலை போட்டுத் தயாராக உள்ளார். பட்டர் தன் சிஷ்யர் ஒருவரை அனுப்பி திருவாராதன பெருமாளை எழுந்தருளப்பண்ண, அப்படியே எம்பெருமானுக்கு தளிகை கண்டருளப் பண்ணிப் பின்பு தான் ப்ரசாதத்தை உண்கிறார். சோமாசியாண்டான் ஆச்சர்யத்துடன் வினவ, பட்டர் “உமக்கு அதுவும் போதாது, எனக்கு இதுவும் மிகை” என்றார். இதன் உட்பொருள் பட்டரின் ஆழ்ந்த பக்தியைச் சேர்ந்த நிலைக்கு, திருவாராதனம் செய்யும் அளவுக்கு திடமாக இல்லாமல் உருகி விடுவார், சோமாசியாண்டான் நீண்ட சோம யாகம் செய்து பழகியவராதலால் அவருக்கு விரிவாகச் செய்தலே த்ருப்தி ஏற்படுத்தும்.

எறும்பி அப்பா – மணவாள மாமுனிகள்

 • எறும்பி அப்பா ஸ்ரீரங்கத்தில் மாமுனிகளை ஆச்ரயிக்கச் சென்று சேவித்து காலக்ஷேபங்கள் கேட்டு மாமுனிகளின் ப்ரசாதம் ஸ்வீகரிக்காமல் தன்னூருக்குத் திரும்பினார். தம்முடைய திருவாராதனப் பெருமாளான சக்கரவர்த்தித் திருமகன் கதவைத் திறக்க அனுமதிக்காமல் மாமுனிகளிடம் திரும்பச் செல்லும்படி நியமிக்கிறான்.
 • பூர்வ உத்தர தின சரியைகளில் எறும்பி அப்பா மாமுனிகளின் திருவாராதன க்ரமத்தை அழகாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.

ரஹஸ்ய க்ரந்தங்கள்

ரஹஸ்ய க்ரந்தங்களிலும் பல இடங்களில் க்ருஹ அர்ச்சையின் வைபவம் பரக்கப் பேசப்பட்டுள்ளது. அதில் சிலவற்றைக் காண்போம்.

முமுக்ஷுப்படி

த்வய ப்ரகரணம் – ஸூத்ரம் 141 – இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம் – மாமுனிகள் இதன் வ்யாக்யானத்தில், இந்த வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், சௌசீல்யம், சௌலப்யம் முதலான குணங்கள் நமக்கு நம்முடைய பெருமாள் பக்கலில் காணலாம் என்கிறார்.

குறிப்பு: நம்பெருமாள் என்பது பொதுவாக ஸ்ரீ ரங்கநாதனைக் குறித்தாலும், இந்த ப்ரகரணத்தில் எல்லா அர்ச்சாவதார எம்பெருமானையும் (க்ருஹார்ச்சையும்) குறிக்கும்.

ஆசார்ய ஹ்ருதயம்

சூர்ணிகை 75 – வீட்டின்ப இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண ஸமம் இன்பமாரியில் ஆராய்ச்சி – இதன் வ்யாக்யானத்தில், மாமுனிகள் வீட்டின்பம் என்றால் எம்பெருமானிடத்திலேயே நெஞ்சம் ஈடுபட்டவர்களின் க்ருஹங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான் என்று நிரூபிக்கிறார். இது க்ருஹார்ச்சையின் மேன்மையை வெளிப்படுத்தும் முக்கியப் ப்ரமாணமாகும்.

முடிவுரை

இதுவரை அநுபவித்ததில் இருந்து திருவாராதனத்துக்கு வேதம், இதிஹாஸ புராணங்கள், பகவத் கீதை, திவ்ய ப்ரபந்தம், பூர்வாசார்ய அநுஷ்டானங்கள் உபதேசங்கள் மற்றும் ஐதிஹ்யங்கள் மற்றும் ரஹஸ்ய க்ரந்தங்களின் மூலம் எடுத்துரைக்கப்பட்ட முக்கியத்துவத்தை தெளிவாக அறிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தினமும் சிறிது நேரமாவது திருவாராதனம் செய்த பின்பு அந்த எம்பெருமானின் ப்ரசாதத்தை மட்டுமே உண்ணுகை ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனுக்கும் செய்ய வேண்டியதாகும்.

நம் பெரியோர்களின் திருவுள்ளப்படி இந்தத் திருவாராதன க்ரமத்தை ஒரு ஆசார்யனிடம் முறையாகக் கற்றுகொள்ள வேண்டும். கற்றபின் மேலும் தெரிந்து கொள்வதற்கு, தற்போது திருவாராதன க்ரமத்தை எளிய முறையில் விளக்கும் பல புத்தகங்களும் உள்ளது.

எம்பெருமான் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அவனுடைய சௌலப்யத்தின் எல்லை நிலமாக க்ருஹங்களில் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ளான். அதற்குச் சிறு ப்ரதி உபகாரமாக நாமும் அவனுக்குப் பரிவுடன் திருவாராதனம் செய்தல் அவசியம்.

முற்காலங்களில், க்ருஹங்களில் திருவாராதனம் நிறைவடைந்தவுடன் பாகவத ததீயாராதனமும் செய்யப் பட்டு வந்தது. ஸ்ரீவைஷ்ணவர்கள் இப்படிப்பட்ட ததீயாராதனம் செய்ததால் யாத்ரீகர்கள் துணிந்து யாத்ரை மேற்கொள்வர்கள். இது ஒரு முக்கிய அங்கமாகவும் கருதப்பட்டது. தற்காலத்தில் இதைக் காண்பது மிக அரிதாக உள்ளது. நாமும் இதற்குச் சிறிது முயற்சிக்கலாம்.

இணைப்பு: திருவாராதனம் செய்யும் வழிமுறை

முதலில் தயார் செய்ய வேண்டியது

 • நீராட்டம் (தலை உள்பட)
 • த்வாதஸ ஊர்த்வ புண்ட்ர தாரணம் – 12 திருமண் ஸ்ரீசூர்ணம் அணிதல் (குருபரம்பரை ச்லோகம், ஆசார்யர்கள் தனியன்கள், பெருமாள் மற்றும் தாயாரின் த்வாதஸ நாம மந்த்ரங்களை ஜபித்துக் கொண்டு செய்தல்).
 • ஸந்த்யா வந்தனம்.
 • மாத்யாந்ஹிகம் (வேளையைப் பொறுத்து) – பொதுவாக திருவாராதனம் மதிய நேரத்திலேயே செய்யப்பட வேண்டும். ஆனால் வேலைக்குப் போகும் பலருக்கும் இது சாத்தியப்படாது. நாம் முடிந்தவரை சாஸ்த்ரத்தின் படி நடக்க முயல வேண்டும், முடியாத நேரத்தில் எம்பெருமானிடம் அபராத க்ஷாமணம் பண்ணிக்கொள்ள வேண்டும்.
 • பஞ்ச பாத்ரம் (வட்டில்கள்), தூபம், தீபம், திருவிளக்கு, புஷ்பம், தீர்த்தம், தீர்த்த பரிமளம் (ஏலம்/க்ராம்பு பொடி) போன்றவற்றைத் தயார் செய்து கொள்ளவும்.
 • ஆசார்யன் ஸ்ரீ பாத தீர்த்தம் – ஆசார்யனின் பாதுகைகளையோ திருவடிகளில் வைத்து எடுத்த வஸ்த்ரத்தையோ திருவாராதனத்தில் எழுந்தருளப் பண்ணிக்கொள்ளவும். குரு பரம்பரா மந்த்ரம் (அஸ்மத் குருப்யோ நம:, …) மற்றும் ஆசார்யர்களின் தனியன்களைச் சொல்லிக் கொண்டு தீர்த்தத்தைப் பாதுகையிலோ திருவடி வஸ்த்ரத்திலோ சேர்க்கவும். பின்பு தான் அதை ஸ்வீகரித்துக் கொள்ளவும். இது திருவாராதனத்தில் ஒரு முக்கியமான அங்கம்.
 • க்ருஹத்தில் இருப்பவர்கள், பெண்கள் உட்பட அனைவரும் திருவாராதனத்தில் பங்கு கொள்ளலாம் – புஷ்பம் தொடுத்தல், இடத்தைச் சுத்தம் செய்தல், போகம் (தளிகை) தயாரித்தல் முதலான கைங்கர்யத்தில் ஈடு படலாம்.

முறை

வட்டில்களும் அதன் உபயோகங்களும்

 • 1 – அர்க்க்யம் – எம்பெருமானின் திருக்கை விளக்கும் நீர்
 • 2 – பாத்யம் – எம்பெருமானின் திருவடி விளக்கும் நீர்
 • 3 – ஆசமனீயம் – எம்பெருமான் உட்கொள்ளும் நீர்
 • 4 – கண்டூஷம் (எம்பெருமான் திருவாய் கொப்பளிக்கும் நீர்), ஸ்நாநீயம், மதுவர்க்கம், பாநீயம், கண்டூஷம் – முறையே ஒவ்வொரு ஆஸனத்துக்கும்
 • 5 – சுத்த உதகம் – எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கும் வஸ்துக்களை சுத்தி செய்ய உதவும் நீர்
 • 6 – படிக்கம் – எம்பெருமானுக்கு சமர்ப்பித்து புனிதமான நீரைச் சேகரிக்கும் பாத்திரம்
 • 7 – ஆசார்யனுக்குச் சமர்ப்பிக்கும் தீர்த்தம்
 • 8 – திருக்காவேரி – திருவாராதனத்துக்கு உபயோகப்படுத்த வேண்டிய நீர் இருக்கும் பாத்திரம்

ஒருவர் திருவாராதனம் செய்யும்போது தம்முடைய ஆசார்யனே திருவாராதனம் செய்வதாகவும், தாம் தம்முடைய ஆசார்யனின் கரணமாக இருந்து எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்கிறோம் என்றும் எப்போதும் எண்ண வேண்டும்.

நம் பெரியோர்கள் எம்பெருமானுக்கும் பிராட்டிகளுக்கும் திருவாராதனம் செய்வதற்குமுன் தன்னுடைய ஆசார்யன், மாமுனிகள், எம்பெருமானார், பராங்குச பரகாலாதி ஆழ்வார்கள், விஷ்வக்ஸேனர் மற்றும் திருவநந்தாழ்வான், கருடாழ்வார், ஸுதர்சனாழ்வார், பாஞ்சஜந்யாழ்வார் ஆகிய நித்யஸூரிகளுக்கும் திருவாராதனம் செய்யவேண்டும் என்று பணித்துள்ளார்கள். ஆசார்யன் திருவாராதனத்துக்கு தனி வட்டில் வைத்துக் கொள்ள வேன்டும். போகம், புஷ்பம், சந்தனம் முதலியவை முதலில் எம்பெருமானுக்கு சமர்ப்பித்து அவன் சேஷத்தை விஷ்வக்ஸேனர் மற்றும் நித்யஸூரிகள், நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்கள், ஆசார்யர்கள் இறுதியில் தன்னுடைய ஆசார்யனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

பின்வரும் பகுதியில் திருவாராதன முறையைச் சுருக்கமாகக் காணலாம். இது முழுமையானது அல்ல. மேலும் திவ்ய தேசம், திருமாளிகை, குடும்பம் போன்றதற்கு ஏற்ப மாறுபாடும் இருக்கலாம். பெரியோர்களிடம் கேட்டு அறியவும். திருவாராதனத்துக்கு அதிகாரம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய முறையைச் சுருக்கமாக மேலே காண்போம்.

 • “துளஸ்யம்ருத ஜந்மாஸி” ச்லோகத்தைச் சொல்லி வணங்கி, திருத்துழாயைப் பறிக்கவும்
 • பொதுத் தனியன்கள், வையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன் பாசுரங்கள் சொல்லிக்கொண்டு திருவிளக்கு ஏற்றவும்
 • பஞ்ச பாத்ரங்களை வரிசைப்படி வைக்கவும்.
 • திருக்காவேரியில் தீர்த்தம் சேர்க்கவும்.
 • திருக்காவேரியிலிருந்து தீர்த்தத்தை எடுத்து திருத்துழாயைக் கையில் த்வயத்தின் உத்தர வாக்யத்தைச் (ஸ்ரீமதே நாராயணாய நம:) சொல்லிக்கொண்டு எல்லா வஸ்துக்களிலும் ப்ரோக்ஷிக்கவும்.
 • வட்டில்களில் தீர்த்தத்தைச் சேர்க்கவும்.
 • “ஜிதந்தே” முதல் இரண்டு ஸ்தோத்ரங்களும், “கௌசல்யா ஸுப்ரஜா “, “கூர்மாதீந் திவ்ய லோகாந்” ச்லோகங்களும், “நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய“, “மாரி மலை முழைஞ்சில்“, “அன்று இவ்வுலகம் அளந்தாய்” மற்றும் “அங்கண்மா ஞாலத்து அரசர்” பாசுரங்களைச் சொல்லிக் கொண்டு, கையால் ஓசைப் படுத்தி விட்டு, கோயில் ஆழ்வார் திருக்காப்பு  நீக்கவும் (கதவைத் திறக்கவும்).
 • ஸாஷ்டாங்கமாக விழுந்து சேவிக்கவும்.

ஒவ்வொரு ஆஸனத்திலும், முதலில், அர்க்க்ய பாத்ய ஆசமனீயம் முதலியவைகளை திருக்காவேரியில் இருந்து வட்டில்களில் சேர்த்து ஸங்கல்ப்பிக்கவும் (மனதால் இருப்பதாக நினைக்கவும்). அர்க்க்ய பாத்ய ஆசமனீயம் முதலியவைகள் ஸமர்ப்பித்தபின் திருவொத்துவாடை ஸமர்ப்பிக்கவும் (ஒரு வஸ்த்ரத்தால் ஈரத்தைத் துடைத்தல் செய்யவும்).

மந்த்ராஸனம் – எம்பெருமானை திருவாராதனம் ஏற்றுக்கொள்ள அழைத்தல்

 • உடுத்துக் களைந்த” பாசுரத்தைச் சொல்லிக் கொண்டு முந்தைய நாள் சூட்டிய மலர்களைக் களையவும்.
 • அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும். ஓம் அர்க்ஹ்யம் ஸமர்ப்பயாமி, ஓம் பாத்யம் ஸமர்ப்பயாமி, ஓம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி என்றோ திருக்கைகள் விளக்கியருள வேண்டும், திருவடிகள் விளக்கியருள வேண்டும், ஆசமனம் கண்டருள வேண்டும் என்றோ கூறிக்கொண்டு ஸமர்ப்பிக்கவும்.
 • 108 திவ்ய தேச எம்பெருமான்களை திருவாராதனம் கண்டருள அழைக்கவும்.
 • எம்பெருமானிடம் இந்த திருவாராதனம் தன்னுடைய ஆசார்யன் செய்வதாகவும், தான் அவன் கரணங்களாக இருந்து செய்வதாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஸ்நாநாஸனம் – எம்பெருமானை நீராட்டுதல்

 • எம்பெருமான்களை திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளப்பண்ணவும்
 • அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.
 • ஓம் ஸ்நாநீயம் ஸமர்ப்பயாமி என்றோ ஸ்நாநீயம் கண்டருள வேண்டும் என்றோ கூறிக்கொண்டு ஸ்நாநீயம் சமர்ப்பிக்கவும்.
 • புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், ஸ்ரீ ஸுக்தம், பூ ஸூக்தம், நீளா ஸூக்தம் (நேரத்திற்கு ஏற்றார் போல்) சேவித்துக் கொண்டு திருமஞ்சனம் செய்யவும். “வெண்ணெய் அளைந்த குணுங்கும்” பதிகமும் திருமஞ்சன கால பாசுரங்களையும் சேவித்து முடிக்கவும்.
 • அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களையும் தூபம், தீபம், பால், பழங்கள் போன்றவற்றையும் சமர்ப்பிக்கவும்.
 • வட்டில்களில் இருக்கும் தீர்த்தத்தை படிக்கத்தில் சேர்க்கவும்

அலங்காராஸனம் – எம்பெருமானை அலங்கரித்தல்

 • எம்பெருமான்களை ஆஸ்தானத்தில் எழுந்தருளப்பண்ணவும்
 • அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.
 • சாத்துப்படி (சந்தனம்) மற்றும் புஷ்பம் சமர்ப்பிக்கவும் – “கந்தத்வாராம் துராதர்ஷாம்” ச்லோகத்தையும் “பூசும் சாந்து என் நெஞ்சமே” பாசுரத்தையும் விண்ணப்பிக்கவும். குறிப்பு: பொதுவாக சாளக்ராம எம்பெருமான்களுக்கு திருமண் காப்பு சாற்றுவதில்லை, சந்தனக்காப்பு சாற்றுவதே வழக்கம்.
 • தூர்வஸ்ய” ச்லோகத்தைச் சொல்லிக்கொண்டு தூபம் சமர்ப்பிக்கவும், “உத் தீப்யஸ்ய” ச்லோகத்தைச் சொல்லிக்கொண்டு தீபம் சமர்ப்பிக்கவும்.
 • மந்த்ர புஷ்பம், வேதாரம்பம்.
 • த்வாதஸ நாம அர்ச்சனை.
 • திவ்ய ப்ரபந்தம் சேவித்தல்
  • ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” தொடக்கமான பொது தனியன்கள்.
  • திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், ஸ்தலப் பாசுரம் (நாம் பிறந்த மற்றும் இருக்கும் திவ்ய தேசப் பாசுரம்), கண்ணிநுண் சிறுத்தாம்பு, கோயில் திருவாய்மொழி, இராமானுச நூற்றந்தாதி, உபதேச ரத்தின மாலை, முதலியன.
  • குறிப்புகள்:
   • இருக்கும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேவிக்கலாம்
   • இராமானுச நூற்றந்தாதி ப்ரபந்ந காயத்ரி/ஸாவித்ரி என்று கூறப்படுகிறது – மாமுனிகள் எப்படி ப்ராஹ்மணன் தினமும் காயத்ரி மந்திரத்தைச் சொல்லுகிறானோ அது போல ப்ரபந்நன் இத்தை தினமும் அநுஸந்திக்க வேண்டும் என்கிறார்.
   • 4000 திவ்ய ப்ரபந்த பாசுரங்களையும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் சேவிக்கும் வழக்கமும் உள்ளது. விவரங்களுக்கு  http://kaarimaaran.com/sevakalam.html காணவும்.

இந்நேரத்தில் போகம் (தளிகை) தயார் செய்யலாம். எம்பெருமானின் தளிகைக்குத் தனியாக பாத்திரங்கள் வைத்துக் கொள்ளவும். மேலும், தளிகை சமைத்த பாத்திரத்திலேயே வைத்து எம்பெருமானுக்குக் கண்டருளப் பண்ணக் கூடாது. வேறு பாத்திரங்களில் மாற்றியே கண்டருளப் பண்ண வேண்டும். இந்தப் பாத்திரங்களை நாம் உபயோகப்படுத்தாமல் எம்பெருமானுக்கு என்றே வைத்துக் கொள்ள வேண்டும்.

போஜ்யாஸனம் – தளிகை சமர்ப்பித்தல்

 • அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.
 • போகத்தை எம்பெருமான் முன்பு வைக்கவும்.
 • போகத்தின் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷித்து, திருத்துழாய் சேர்க்கவும்.
 • கூடாரை வெல்லும் சீர், நாறு நறும்பொழில், உலகமுண்ட பெருவாயா பாசுரங்களையும் யா ப்ரீதிர் விதுரார்பிதே ச்லோகத்தையும் சொல்லிக் கொண்டு எம்பெருமானுக்கு போகத்தை கண்டருளப் பண்ணவும்.
 • எம்பெருமானுக்கு சுருளமுது (வெற்றிலை பாக்கு), சாத்துப்படி (சந்தனம்) சமர்ப்பிக்கவும்.
 • எம்பெருமானின் ப்ரசாதத்தை ஆழ்வார் ஆசார்யர்களுக்குக் கண்டருளப் பண்ணவும்.
 • இப்போது போகம் ப்ரசாதமாகிவிட்டது – இவற்றை வேறு இடத்திற்கு மாற்றிவிடவும்.

புநர் மந்த்ராஸனம் – மங்களாசாஸனம்/சாற்றுமுறை

 • அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.
 • தத் விஷ்ணோர் பரமம் பதம்…” சொல்லிக் கொண்டு ஆரத்தி சமர்ப்பிக்கவும்.
 • கோயில், திருமலை, பெருமாள் கோயில், திருநாராயணபுரம் எம்பெருமான்கள், ஜகந்நாதன், பெருமாள் (ஸ்ரீ ராமன்), பார்த்தஸாரதி எம்பெருமான்கள், ஆண்டாள், நம்மாழ்வார், கலியன், எம்பெருமானார், மணவாள மாமுனிகள், ஸர்வ ஆசார்யர்களுக்கும் மங்களம் ஸ்தோத்ரங்களைச் சேவிக்கவும்.
 • சாற்றுமுறை பாசுரங்கள், திருப்பல்லாண்டு பாசுரம், வாழி திருநாமங்கள் ஆகியவற்றைச் சேவிக்கவும்.
 • திருவாராதனம் செய்பவர், தீர்த்தம் ஸ்வீகரித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் வழங்கவும்.
 • ஸ்ரீ பாத தீர்த்தத்தை மற்றவர்களுக்கு வழங்கவும்.
 • திருவாராதனத்தின் போது பெருமாள் திருவடிகளில் சேர்த்த திருத்துழாயைத் தானும் ஸ்வீகரித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் வழங்கவும்.
 • ஒவ்வொரு நாளும், அந்நாளின் திருநக்ஷத்ரத்தில் அவதரித்த ஆழ்வார் ஆசார்யர்களின் வாழி திருநாமத்தைச் சேவிக்கவும்.

பர்யங்காஸனம் – எம்பெருமானை ஓய்வெடுக்கச் செல்லும்படி ப்ரார்த்தித்தல்

 • பந்நகாதீச பர்யங்கே“, “க்ஷீர ஸாகர” ஸ்லோகங்களை சேவிக்கவும்
 • ஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்து, “உபசாராபதேசேந” ஸ்லோகத்தை சேவிக்கவும். இந்த ச்லோகத்தால், திருவாராதனத்தின் போது நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிறோம்.
 • உறகல் உறகல் உறகல்“, “பனிக்கடலில் பள்ளி கோளை பழகவிட்டு” பாசுரங்களைச் சொல்லிக் கொண்டு கோயில் ஆழ்வார் திருக்காப்பு சேர்க்கவும் (கதவை மூடவும்).

அநுயாகம் – யாகம்/திருவாராதனத்தை நிறைவு செய்தல்

 • அவரவர் ஆசார்யன் மடம்/திருமாளிகை வழக்கப்படி தேவராஜ அஷ்டகமோ வரவரமுனி பூர்வ/உத்தர தின சர்யைகளோ வானமாமலை ஜீயர் ப்ரபத்தி/மங்களாசாஸனங்களோ சேவிக்கவும்.
 • ஸ்ரீவைஷ்ணவ அதிதிகளுக்கு ப்ரசாதம் அளிக்கவும்
 • தாங்களும் ப்ரசாதம் ஸ்வீகரிக்கவும்

அதிகப்படி விஷயங்கள்:

 • அநத்யயன காலம்
  • அநத்யயன காலத்தில் நாம் ஆழ்வார் பாசுரங்களைச் சேவிப்பதில்லை. கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கும்போது ஜிதந்தே ஸ்தோத்ரம் (முதல் 2 ச்லோகங்கள்), கௌசல்யா ஸுப்ரஜா ச்லோகம், கூர்மாதீந் ச்லோகம் ஆகியவற்றைச் சொல்லி கதவைத் திறக்கலாம். ஆழ்வார் பாசுரங்களை வாயால் கூறுவதில்லையே தவிர மனதால் நினைக்கலாம்.
  • திருமஞ்சன காலங்களில், ஸூக்தங்களுடன் நிறுத்திக் கொள்ளவும்.
  • மந்த்ர புஷ்பத்தில், “சென்றால் குடையாம்” சேவிக்கும் இடத்தில் “எம்பெருமானார் தரிசனம் என்றே” சேவிக்கவும்.
  • சாற்றுமுறையில், உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி பாசுரங்களைச் சேவித்து, “ஸர்வ தேச ஸதா காலே...” தொடங்கி வாழி திருநாமங்கள் வரை சேவிக்கவும்.
 • லகு திருவாராதனம் (30 நிமிடங்களுக்கும் குறைவு)
  • கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கவும்
  • அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.
  • திருமஞ்சனம்
  • திருப்பல்லாண்டு, திருப்பாவை, முதலியன – இருக்கும் நேரத்தில் முடிந்த வரை. அநத்யயன காலத்தில், திவ்ய ப்ரபந்த தனியன்கள், உபதேச ரத்தின மாலை, முதலியன.
  • எம்பெருமான் ஆழ்வார் ஆசார்யர்களுக்கு போகம் கண்டருளப்பண்ணவும்.
  • சாற்றுமுறை
  • ஸ்ரீ பாத தீர்த்தம்
  • கோயில் ஆழ்வார் திருக்காப்பு மூடவும்
 • முக்கியக் குறிப்புகள்:
  • பூர்வ/உத்தர தினசர்யைகளில் காண்பித்தபடி மூன்று வேளை திருவாராதனம் செய்தல் வேண்டும். நாமும் முடிந்த வரை செய்யலாம்.
   • காலை ஸந்த்யாவந்தனத்திற்குப் பிறகு சுருக்கமான திருவாராதனம்
   • மாத்யாஹ்நிகத்திற்குப் பிறகு விரிவான திருவாராதனம்
   • ஸாயம் ஸந்த்யாவந்தனத்திற்குப் பிறகு சுருக்கமான திருவாராதனம்
  • ஏகாதசி அன்று பொதுவாக விரிவான தளிகை செய்வதில்லை. குழந்தைகள், வயதானவர்களின் இருப்பு போன்ற குடும்ப நிலைமையைப் பொறுத்து பழங்கள் மற்றும் சுருக்கமான போகம் செய்து சமர்ப்பிக்கலாம்.
  • த்வாதசி அன்று திருவாராதனம் சீக்கிரமாக செய்து தீர்த்தம், திருத்துழாய் மற்றும் ப்ரசாதம் ஸ்வீகரித்து, பாரணம் (வ்ரதத்தை முடித்தல்) செய்யவும்.
  • அநத்யயன காலத்தில், 4000 திவ்ய ப்ரபந்தங்கள் சேவிப்பதில்லை. பூர்வாசார்ய ஸ்தோத்ரங்கள், உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆழ்வார்/ஆசார்யர்கள் தனியன்கள், வாழி திருநாமங்கள் முதலியன சேவிக்கவும். மார்கழி மாதம் பிறந்த பின், திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை தினமும் சேவிக்கவும்.
  • யாத்ரைகள் செல்லும்போது, எம்பெருமானையும் உடன் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு செல்லுதல் உசிதம். அல்லது நம் க்ருஹத்தில் வேறு ஸ்ரீவைஷ்ணவர் திருவாராதனம் செய்ய ஏற்பாடு செய்யலாம். அதுவும் இல்லாமல் போனால், எம்பெருமானை, திருவாராதனம் செய்யும் வேறு ஸ்ரீவைஷ்ணவர் க்ருஹங்களில் எழுந்தருளப் பண்ணலாம்.
  • தீட்டு காலங்களில் எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
  • முடிவாக, எம்பெருமான் நம் க்ருஹத்தில் எழுந்தருளியிருக்க நாம் திருவாராதனம் செய்யாமல் இருத்தல், வீட்டிற்கு வந்த விருந்தாளியை நாம் கவனியாமல் இருப்பது போன்றது.

சாஸ்த்ரத்தில் விதித்தபடியும், நம் பூர்வாசார்யர்களின் திருவுள்ளப் படியும் எம்பெருமானிடம் ஈடுபாட்டுடன் திருவாராதனம் செய்பவர், பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யத்தில் முழுமையாகவும் இயற்கையாகவும் ஈடுபடுவதன் மூலம் எம்பெருமானுக்கும், ஆழ்வார் ஆசார்யர்களுக்கும் தன்னுடைய ஆசார்யனுக்கும் மிகவும் விரும்பத்தக்கவராக ஆவர்.

ப்ரமாணத் திரட்டு – https://srivaishnavagranthamstamil.wordpress.com/2014/12/29/srivaishnava-thiruvaradhanam-pramanams/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

மூலம்: விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள் அருளிய ஜீயர் படி, காஞ்சீபுரம் ப்ர. ப. அண்ணங்கராசார்யர் ஸ்வாமியின் நித்யானுஷ்டான பத்ததி, http://ponnadi.blogspot.in/2012/07/srivaishnava-thiruvaaraadhanam.html

archived in https://srivaishnavagranthamstamil.wordpress.com/,

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) –http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – https://guruparamparai.wordpress.com
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Advertisements

11 thoughts on “ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – பெருமைகளும் வழிமுறையும்

 1. vadagaraiSudarsanam

  This will be useful to youngsters ( srivaishnavas) and others, who are not performing nithya thiruvaarathanam at home. very good useful write-up swamy.

  Adiyen,

  Reply
 2. p s partha sarathy

  thanks.It is prized possessiiontreasure..Shall be obliged if u can send a hard copy by post.address is ;P.S.Parthasarathy,Block-C,Flat-1,A K S Gardens,Velachery, Chennai-600 042.Mob.98403 78785.
  Adiyen Ramanuja Dasan.

  Reply
 3. Pingback: శ్రీవైష్ణవ తిరువారాధనము | srIvaishNava granthams – Telugu

 4. Pingback: ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – ப்ரமாணத் திரட்டு | srIvaishNava granthams in thamizh

 5. ராமானுஜம் அட்வகேட்

  அருமையான தகவல்கள் நன்றி தாள்கள் பணிகின்றேன்

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s